உப்புத் துளி உற்பத்தி மையம்!

உப்புத் துளி உற்பத்தி மையம்!

Published on

தனியறை வாங்கி, தன்னோடு தானே கடுமையான விவாதங்களில் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு வருபவர்.

* வீட்டில் பெண்பார்க்கும், முப்பத்தொன்பது வயது முடிந்து நூற்றிருபது மாதங்களானவர்.

* எம்மெஸ்வீயின் அறுபத்தொரு வருட ஆயிரம் பாட்டுகள் மனப்பாடம் ஆனவர். (எம்மெஸ்வீ, கேவியெம் எல்லாம் ஒன்றுதான், டீயெம்மெஸ்ஸாக இருந்தால் சரி)

* உங்களுக்கு எந்தத் துறையில் என்ன வேண்டுமென்றாலும் செய்துதரும் செல்வாக்கு உள்ளதாக - பொய் சொல்பவர் அல்ல - தானே நம்புபவர்.

* மாவட்டமே மயங்கிப் பின்தொடரும் மஞ்சள் அழகிகள் ஆயிரத்தொருவரை மஞ்சத்தில் சரித்த மதனகாமராஜர்.

* வழக்கில் இருக்கும் இருபது கோடி தென்னந்தோப்பு தன் பக்கம் தீர்ப்பாவதற்காகக் காத்திருப்பவர்...

இப்படி ஒருவரை நீங்கள் தங்கியிருந்த எந்த மேன்ஷனிலும் பார்த்திருப்பீர்கள். நான் அதிகாரபூர்வ மேன்ஷன்வாசி அல்லன் என்பதால் இன்னும் அதிகமாகவே பார்க்க முடியும்.

இது ஒரு விசேஷக் குறிப்பு. நான் வாடகை செலுத்தி மேன்ஷனில் தங்கியதில்லை. மேன்ஷன் நண்பர்களின் அறைகளில் பல முறை தொற்றிக்கொண்டிருந்திருக்கிறேன். பின்னாளில் தமிழின் முழுநீள நகைச்சுவையும் மிக அதிக மீம் கன்டென்ட் சப்ளை செய்ததுமான

சினிமாவைத் தரப்போகிற இயக்குநர் அவர்களில் ஒருவர் (ஆனால், அப்போது அவர் சினிமாவைப் பற்றி ஒரு சொல்லும் என்னோடு பேசியவரில்லை.) நாங்கள் இசை தொடர்பாகப் பேசியதன் தொடர்ச்சியாக, பத்து ஆடியோ கேசட்டுகள் அவருக்குப் பரிந்துரைத்துக் கொடுத்தேன். அதை அவர் கேட்ட இரவில் நான் அவரோடில்லை. மறுநாள், அந்த

கேசட்டுகளில் இருந்து நுஸ்ரத் ஃபதே அலிகானின்

 சங்கம் கேசட்டைத் திரும்பக் கொண்டுவந்து என் முன்னால் எறிந்தார். ‘‘ஏங்க, ஏதோ செய்யணும்னு மதுரையிலருந்து பொறப்பட்டு வந்து மேன்ஷன்ல உலர்ந்துட்டிருக்கோம். இப்பிடிப் பாட்டுகளைக் குடுத்து எங்களை அழுகையிலயே கொன்னுருவீங்க போலயே...'' என்றார்.

இன்னொரு நண்பர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகளில் தொடங்கி எழுத்தாளராகப் பரிணமித்திருக்கும் இளைஞர். அவரது அறையில் நான் தங்கப் போவதாகச் சொன்னதும் அகமகிழ்ந்து வரவேற்றார். உபசரித்தார். மறுநாள் நான் போகையில், எதற்கோ தர்மசங்கடப்பட்டுக்கொண்டிருந்தார். அறைக்கு மூட்டைப் பூச்சி மருந்து அடிக்க ஏற்பாடு செய்திருந்திருக்கிறார். ‘மூட்டைப்பூச்சி மருந்தா, கொசு மருந்தா?' என்றேன். ‘சேச்சே...' என்றவர், என்னை வேறு ஒருவரின் அறையில் அமைத்துவைத்துவிட மிகவும் பாடுபட்டார். நான்தான் வந்துவிட்டேன்.

விஐபிக்களின் அறைக்கு மட்டும்தான் விருந்தினனாகப் போவேன் என்று விரதமா எனக்கு? சாதா நண்பன் ஒருவனின் அறைக்கு, இரண்டாம் ஷோ பார்த்துவிட்டு வருவேன் என்று சொல்லிவைத்திருந்தேன். மிகுந்த சந்தோஷம் அவனுக்கு. நான் போய்க் கதவைத் தட்டுகிறேன் தட்டுகிறேன், திறக்கவேயில்லை. பிற்பாடு ‘என்னடா' என்றால், ‘முழிச்சுட்டேன். கனவுலதான் யாரோ கதவத் தட்டுறாங்கன்னு நினைச்சு, ரூமுக்குள்ளயே சுத்திச் சுத்தி வந்துட்டு மறுபடி தூங்கிட்டேன்' என்றான். கனவில் தட்டப்பட்ட கதவை நனவில் திறக்க முடியாது என்கிற தத்துவத்தை எனக்குத் தந்துவிட்டு அவன் அந்த மேன்ஷனைக் காலி செய்துவிட்டான்.

பொட்டுத் தெறித்தாற் போன்ற அவதானம், மேன்ஷன்வாசிகள் இந்த சமூகத்தில் இல்லை. அதனால், இந்த சமூகத்தை அவர்களால் விலகி இருந்து பார்க்க முடியும். அதே தர்க்கத்தில் சமூகவாசிகள் மேன்ஷனர்களைத் துல்லியமாக அறிந்துகொண்டுவிட முடியும். அப்படியான கவனிப்பில்தான் அநேக குணச்சித்திரங்கள் தெரியவந்தன.

ஒருவர். அந்தி மயங்கிவிட்டால் அறை நண்பர் இருவரோடு உரையாடல் தொடங்குவார். அவர் பேச, ஓராள் அதைக் கேட்க, பேசுபவரின் பின்னால் இருப்பவர், அந்தப் பேச்சுக்கு ஏற்ப வாயசைத்துக் கொண்டிருப்பார். அடுத்தடுத்த

சொற்களாக அவர் எதைச் சொல்வார் என்பது இந்த வாயசைப்பாளருக்குத் துல்லியமாகத் தெரியும். அதே பேச்சை மேற்படியார் ஆறு வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்னொருவர் அறையைப் பார்த்தேன். எல்ஐசி கட்டடத்தில் ஒரு ஜன்னல் வழியாக சந்தனத் தூண் தெரிந்தால் எப்படி இருக்கும்... அது போல, மிகவும் சுத்தமாக இருந்தது. அது மேன்ஷன் அறையே இல்லை. ஒரு குப்பை இல்லை, ஒரு அழுக்கு ஜட்டி வீசிக் கிடக்கவில்லை. விசாரித்தால், குடித்தனம் ஆகிப் போய்விட்ட அவர் குடிப்பதற்காக மட்டும் அந்த அறையை மெயின்டெயின் செய்கிறார்.

அவர் கல்யாணம் ஆகிப்போனது ஓர் அபூர்வம். மேன்ஷன்களில் தொழிற்படும் ராசிகள் அப்படி. குறிப்பிட்ட மேன்ஷனில் தங்குபவர்களுக்கு கல்யாணம் ஆகாது என்று ஐதிகம் உண்டு.

பிறப்பிலேயே அப்படி இல்லை... வாய்ப்பில்லாமற் போனது, இனி வாய்க்கும் என்ற நம்பிக்கையும் அவிந்தது போன்ற காரணங்களால் தன்பாற்காமிகள் பெரும்பான்மை வகிக்கும் மேன்ஷன் உண்டு. பெண்ணுடலுக்கான மதிப்பை அழித்து ஆணினத்துக்கான காமச் சமத்துவம் பேணும் தன்மையது.

இனங்கள் வெவ்வேறு வகையினால் பிரிக்கப்படு

மானாலும், மேன்ஷன்களில் ஊர் கொண்டும் பிரிவு அமையும். ராமநாதபுரத்தின் சுற்றுப்பட்டு பதினெட்டு பட்டிகளையும் சேர்ந்தவர்கள் ஒரு மேன்ஷனில் குழுமியிருப்பதைப் பார்க்கலாம். இதெல்லாம் பேசிவைத்து வருவதல்ல, ஒருவரைத் தொட்டு ஒருவராக வந்து சேர்வது.

கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக ஏற்புத் தருவது போன்ற அமைப்புகளை சில மேன்ஷன்கள் கொண்டிருக்கும். இரு கதவுகள் கொண்ட கக்கூஸ் பார்த்திருக்கிறீர்களா? அதுக்கு எதுக்குடா ரெண்டு கதவு என்றால், ஒரே கதவாக இருந்தால் உள்பக்கமாகத் திறப்பதற்கு நீளம் இல்லை. குத்தவைக்கலாம் அவ்வளவுதான்.

‘இது பரவால்ல சார், நா மின்ன இருந்த மேன்ஷன்ல கக்கூஸ் கதவு கீழ்ப்பாதி கெடையாது. ஆளிருக்கான்னு குனிஞ்சா பாக்க முடியும்? வெளிய நின்னுக்கிட்டு காலை உள்ள விடுவோம்.'

உள்ளே ஆளிருப்பதைக் கண்டறிவதில் பாகம் பிரிக்குமளவுக்கும் சண்டைகள் வந்ததுண்டு. காலைப் பரபரப்பின் குளியல் வேளை. ஏற்கெனவே கதவில் போடப்பட்டிருந்த துண்டைப் பார்த்து வெறியோடு காத்துக்கொண்டிருந்தார் ஒருவர். ரொம்ப நேரமாகியும் ஆள் வருவதாகத் தெரியவில்லை. ஒராள் துண்டைப் போட்டுவிட்டு மறந்தவாக்கில் போனது தெரியவரும்போது எவ்வளவு கொந்தளிப்புக் கிளம்பும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால், அதெல்லாம், நமக்கான வேலை முடியும்போது மறந்துபோய்விடும். மேன்ஷன் வாழ்க்கையில் வன்மம் வளர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கல்யாணம் போல அங்கு யாரும் கட்டிவைக்கப்படுவதில்லை. ஆனால், பிரிவு தொடர்பான பதிவுகள் அங்கு காணக்கிடைப்பதுமில்லை. மேன்ஷனே தன் மனம் இளைப்பாறும் ஸ்தலம் என்கிற கணக்குக்கு ஏதோ ஒரு கட்டத்தில் மனங்கள் வந்துவிடுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரு மேன்ஷனில் ஓர் அறை பூட்டியே இருந்தது. சம்பந்தப்பட்டவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டது. இந்த அறைக்கு வாடகை கொடுத்துப் பூட்டிவைத்திருக்கிறார். என்ன ஆனாலும் நம்ம அனுபவ பாத்தியதையை விட்டுக்குடுத்துறக் கூடாதில்லீங்களா? வந்தாப் போனா நம்ம எடத்துல நிம்மதியாக் கொஞ்சம் கிடந்துட்டுப் போலாமில்ல?

அப்படியொரு எண்ணத்தை எந்தக் கணத்தில் இந்த மேன்ஷன்கள் கொடுக்கின்றன என்பதை ஆராயவேண்டும். அல்லது காலப்போக்கில் அங்குலம் அங்குலமாக ஒரு வழக்கமாக நுழைந்துவிடுகிறது போலும் மேன்ஷன். தொடக்கத்தில் வந்த முப்பத்தொன்பது வயதுக்காரர் கல்யாணமாகாமல் இருப்பதற்கு சமூக அமைப்பைச் சொல்லலாம். அவருக்கே தெரியாமல் அவரது மன அமைப்பும் காரணமாக இருக்கலாம். அவரால் தெளிவாகச் சொல்ல முடியாது. இன்னோர் ஆள் சொன்னார், ‘‘இனிமே போய்க் கல்யாணம் பண்ணி குடித்தனத்துல எறங்க முடியுமான்னு தெரியல. இந்த மேன்ஷன் வாழ்க்கையில அட்ஜஸ்ட் பண்ணிப் பழகியாச்சு. இனி ஒருத்திக்கு இதே மாதிரி அட்ஜஸ்ட் பண்றது கஷ்டம்.''

கட்டற்ற சுதந்திரம், களிப்பின் ஆட்டம், கனவுகளின் பெருக்கம் எல்லாம் அங்கே இருந்தாலும், கண்ணீரின் வாடையை எப்போதும் நான் உணர்வேன். கானல் நீரின் தன்மைக்கு எதிர்விதமானது இந்நீர். இல்லாமல் இருப்பதாகத் தெரிவது கானல் நீர். இருக்கும் ஆனால் தெரியாது மேன்ஷன் கண்ணீர். தினசரி சிந்தி வற்றிப் போய்விடுவது. அதனால்தான், கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடிபம்ப்பை அடிப்பது போல், மாலையானால், பீரையோ ரம்மையோ உள்ளே செலுத்தி கண் வழியாகவும் சொற்கள் வழியாகவும் அவர்கள் வெளியே எடுக்கும் காட்சியைத் தவறாமல் காணலாம். கண்ணீர், வியர்வை, இந்திரியம் என்று துளித் துளியாய்த் துயரங்கள். பார்லி வாட்டர் அடிச்சுப்புட்டுப் படுக்குறோம். ஏதோ டார்லிங் பத்தி கனவுகண்டு கெடக்குறோம். பாதி நைட்டு தூக்கம் கெட்டு பாயப் போட்டு பிறாண்டிக்கிட்டு ஏர்லி மார்னிங் ஏழு மணிக்கு முழிக்கிறோம்.

நிராசைகளின் கூடாரமாகத் தென்பட்டாலும் அதற்குப் பிரதியாக மேன்ஷன் ஏதோ கொடுக்கிறது. அதுவே மேன்ஷன்வாசிகளை அங்கேயே நிறுத்துகிறது.

செப்டம்பர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com