ஆள்கடத்தல்’ என்ற வகையைச் சேர்ந்த படங்கள் உலகெங்கும் அவசியம் நன்றாக ஓடக்கூடிய வகையைச் சேர்ந்தவை. எந்த மொழியாக இருந்தாலும் சரி - ஒரு கதாபாத்திரத்தைக் கடத்தியதும் திரையில் ஏற்படும் பரபரப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் தவிப்பு, அதனைக் காப்பாற்ற நினைக்கும் பிற கதாபாத்திரங்களின் முயற்சி ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து படம் பார்க்கும் பார்வையாளர்களின் நாடித்துடிப்பை எகிறவைக்கக்கூடியவை. அந்த வகையில் சில சிறந்த ஆள்கடத்தல் படங்களை எந்தவித வரிசையும் இல்லாமல் கொஞ்சம் கவனிப்போம்.
1981ல் அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் ஹேரிஸ் ஒரு புதிய கதாபாத்திரத்தைப் படைத்தார். பதினெட்டு மாதங்கள் ஒரு மிகச்சிறிய வீட்டில் (Short House) தனியாக வாழ்ந்து அவர் உருவாக்கிய கதாபாத்திரம்தான் டாக்டர் ஹானிபல் லெக்டர். உலகின் கொடூரமான வில்லன்களில் ஒருவர். கொலைசெய்யும் நபர்களை உண்ணும் இயல்புடையவர். அந்த ஆண்டு ஹேனிபல் லெக்டர் இடம்பெற்ற முதல் நாவல் – Red Dragon - எழுதப்பட்டது. நாவல் பிரபலம் அடைந்தாலும், அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான Manhunter வெற்றியடையவில்லை. இதன்பின் 1988ல் தாமஸ் ஹேரிஸ் எழுதிய நாவல்தான் Silence of the Lambs. இதுவரை எழுதப்பட்ட த்ரில்லர் கதைகளில் முதல் சில இடங்களில் எப்போதும் இடம்பெறும் நாவல். இதிலும் ஹானிபல் லெக்டர் இடம்பெற்றிருப்பார். ஆனால் நாயகனாக அல்ல. பெண்களைக் கடத்திக் கொன்று, அவர்களின் தோலை உரிக்கும் ‘பஃபல்லோ பில்’ என்ற கொடூரமான மனநிலை பிறழ்ந்த கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு க்ளாரீஸ் ஸ்டார்லிங் என்ற போலீஸ் அதிகாரியிடம் வருகிறது. ஆனால் அந்தக் கொலைகாரனைப் பற்றிய எந்த விபரங்களும் தெரியாததால், மனநோய் விடுதியில் உள்ள ஹானிபல் லெக்டரிடம் உதவிக்கு வருகிறார் ஸ்டார்லிங். அங்கே ஸ்டார்லிங்கை நன்றாகக் கவனித்து அவளது இயல்புகளைக் கிரகிக்கும் லெக்டர், ஸ்டார்லிங்கின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொன்றாகப் பல கேள்விகளைக் கேட்கிறார். அப்படியே கொலைகளின் இயல்பிலிருந்து அந்தக் கொலைகாரனைப் பற்றி ஒவ்வொரு விஷயமாகச் சொல்கிறார். இறுதியில் ஸ்டார்லிங்கால் அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடிவது மிகவும் அருமையான வகையில் சொல்லப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தில் கொலைகாரன் பஃபல்லோ பில், பெண்களைக் கடத்துவதுதான் மையப்புள்ளி. அவன் ஏன் கடத்துகிறான்? கடத்தியவர்களின் தோலை ஏன் உரிக்கிறான்? காரணம் அவன் ஏற்கெனவே பால்மாற்று அறுவைசிகிச்சைக்கு விண்ணப்பித்திருக்கிறான். அது நிராகரிக்கப்படுகிறது. எனவே பெண்களின் தோலை உரித்து, அவற்றை இணைத்து ஒரு பெண் தோல்களினால் ஆன ‘ஆடை’யை அணிந்துகொண்டால் பெண்ணாக ஆகிவிடலாம் என்பது அவனது நோக்கம். ஆள் கடத்தல் படங்களில் உளவியல் ரீதியான பாதிப்பைக் கொடுக்கும் படம் இது.
Fargo
அமெரிக்கத் திரைப்படங்களில் கோயன் சகோதரர்களின் இடம் அசைக்கமுடியாதது. The Big Lebowski, No country for old men, Millers Crossing, O Brother, where aart thou?, True grit போன்ற மறக்கமுடியாத படங்களின் இயக்குநர்கள் மற்றும் திரைக்கதையாசிரியர்கள். இவர்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கிடைத்த படம்தான் Fargo. 1996-ல் வெளியானது. ஆள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தில் தோல்வியடைந்த கார் விற்பனையாளர் ஜெர்ரி, தனது மனைவியைக் கடத்தி, அதன்மூலம் மனைவியின் தந்தை வேட் என்பவரிடம் பணயத்தொகை வாங்கலாம் என்று திட்டமிடுவார். இதற்கு இரண்டு ரவுடிகளையும் எற்பாடு செய்வார். அந்த இருவரும் கிளம்பிய பின்னர் திடீரென்று தனது மனைவியின் தந்தை ஒரு வியாபாரத்தில் தனக்குப் பணம் அளிக்கப்போகிறார் என்று நம்பும் ஜெர்ரி இரண்டு ரவுடிகளுக்கும் தொலைபேசி வழியாக இந்த ஆள்கடத்தலை நிறுத்தச் சொல்லி முயற்சிக்க, அதற்குள் இருவரும் கிளம்பிவிடுவார்கள். ஜெர்ரியின் மனைவி கடத்தப்படுவாள். ஆனால் திரும்பிச்செல்லும்போது தங்களை வழியில் தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை இருவரும் கொன்றுவிடுவார்கள். அதேபோல் அந்த வழியே செல்லும் ஒரு காரில் இருக்கும் இருவரும் இவர்களைப் பார்த்துவிடுவதால் அவர்களையும் கொல்வார்கள்.
இந்தக் கொலைகளைத் துப்பறிய வருவது அந்தப் பிராந்தியத்தின் பெண் போலீஸ் அதிகாரி மார்ஜ். அவள் ஏழு மாத கர்ப்பம். ஒவ்வொரு தடயமாக சேகரித்து ஜெர்ரியின் மனைவியைக் கடத்தியவர்களை அவள் நெருங்குவாள். இதற்கிடையே ஏற்படும் பல பிரச்னைகள். Dark Comedy எனப்படும் பகடியான நகைச்சுவை இதன் சிறப்பம்சம். டார்க் காமெடியின் சிறப்பம்சம் - ஒரு குழுவைக் காண்பித்து அவர்களுக்குள்ளான சூழல்களையும் செயல்பாடுகளையும் பகடிக்குள்ளாக்கும் இயல்பு. அது இந்தப் படத்தில் இருக்கும். அதேபோல் மிகவும் தீவிரமான நிமிடங்களில் அந்தக் கதாபாத்திரங்கள் செய்வதைப் பார்த்து நமக்குச் சிரிப்பு வரும் தருணங்கள் இதில் ஏராளம். இந்த வகையான படங்களில் கோயன் சகோதரர்கள் கில்லாடிகள்.
Gone Baby Gone
நடிகர் பென் ஆஃப்லெக் இயக்கிய முதல் படம் இது. ஹாலிவுட்டில் இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் (இப்போதும்கூடத்தான்) இவரை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தனது திரைப்பட நாட்களைத் துவங்கிய சில வருடங்களிலேயே Good Will Hunting படத்தின் திரைக்கதையை பால்யகால நண்பர் நடிகர் மாட் டேமனுடன் எழுதி ஆஸ்கர் விருது வென்றவர்.
கான் பேபி கான் படம், அமெரிக்க எழுத்தாளர் டென்னிஸ் லெஹானே எழுதிய நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. Shutter Island, Mystic River ஆகிய வெற்றிப்படங்கள் லெஹானேவின் நாவல்களிலிருந்தே எடுக்கப்பட்டவை. இந்தக் கதை நிகழ்வது பாஸ்டன் நகரில். அந்த இடத்தின் இயற்கையான மனிதர்களை உலவவிட்டு இயல்பாக எடுக்கப்பட்ட படம். இதில் நாயகனும் நாயகியும் தனியார் துப்பறிவாளர்கள். ஒரு சிறுமி கடத்தப்பட்டுவிட, இவர்களை அந்தக் குழந்தையின் சார்பாக நியமிக்கின்றனர். இருவரும் சேர்ந்து துப்பறிந்து பல உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். குழந்தையின் தாய் ஒரு போதை மருந்து அடிமை. அவளும் அவளது ஆண் நண்பனும் அந்த இடத்தின் போதை மருந்து தாதா ஒருவனிடம் இருந்து பணத்தைத் திருடியிருக்கின்றனர். எனவே அவன் தான் இதைச் செய்திருக்கவேண்டும் என்பது இவர்கள் அனுமானம். இப்படித் துவங்கும் கதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக முடிகிறது.
இவைகளைத்தவிரவும் அமெரிக்காவில் ஏராளமான ஆள்கடத்தல் படங்கள் உள்ளன. Ransom, A life Less ordinary, Misery (தமிழில் ஜூலி கணபதி என்ற பெயரில் அப்படியே நகல் எடுக்கப்பட்டது), Taken (தமிழில் விருதகிரி என்று நகல் எடுக்கப்பட்டது), Blue Velvet (இயக்குநர் டேவிட் லிஞ்ச்), Buffalo, Prisioners, Man on Fire, Along came a spider, Slumdog Millionaire போன்ற பல நல்ல படங்கள் உண்டு.
அதேபோல் உலகப்படங்களிலும் அகிரா குரஸவாவின் High and Low, தென்கொரியாவின் Chaser மற்றும் Old boy ஆகிய அருமையான படங்கள், ஜெர்மனியின் Edukators போன்ற சில படங்களைச் சொல்லலாம்.
தமிழை எடுத்துக்கொண்டால், ஆள்கடத்தல் படங்கள் குறைவுதான். இருந்தாலும் அவற்றில் முக்கியமான படங்கள் குறித்து சற்றே பார்ப்போம்.
தமிழில் வந்த முதல் ஆள்கடத்தல் படமாக சம்பூர்ண ராமாயணத்தையோ அல்லது ராமாயணத்தை மையமாக வைத்து வந்த முதல் படங்களையோதான் சொல்லமுடியும். காரணம் நான் சொல்லாமலேயே புரிகிறதல்லவா? ராமாயணத்தின் பெரும்பாலான காட்சிகள், கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்கும் கதாநாயகன் என்ற முறையில் ராமனைச் சுற்றியே தான் சுழல்கின்றன.
தமிழில் வந்த ஆரம்பகால ஆள்கடத்தல் படங்களில் ‘மலைக்கள்ளன்’ முக்கியமானது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கருணாநிதியின் வசனத்தில் ஆறு மொழிகளில் வெளியாகிப் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம். எம்.ஜி.ஆரின் திரைவாழ்க்கையின் முதல் அட்டகாச வெற்றிப்படம். இதன்பின்னர் சில படங்கள் வந்திருந்தாலும், தமிழின் சில முக்கியமான ஆள்கடத் தல் படங்களைப் பற்றி இனி பார்ப்போம்.
கமல்ஹாஸன் நடித்து 1991ல் சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த படம் - ’குணா’. படத்தின் மைய இழை- கடத்தப்படும் பெண் மற்றும் அவளைக் கடத்திய மனநலம் குன்றிய நபர் இருவருக்கிடையேயும் ஏற்படும் காதல். 1990ல் பெத்ரோ அல்மதோவார் இயக்கிய Tie me Up! Tie me Down என்ற ஸ்பானிஷ் படத்தின் சாயல் கொண்டது. ஸ்பானிஷ் படத்தில் இதேபோன்று மனநலம் குன்றிய - மனநோய் விடுதியில் இருந்து விடுவிக்கப்படும் கதாநாயகனின் லட்சியம், அவனது மனமெங்கும் நிறைந்திருக்கும் நடிகை ஒருத்தியுடன் எப்படியாவது வாழ்ந்துவிடவேண்டும் என்பதே. அந்த நடிகையை அவளது வீட்டில் கட்டிப்போட்டு விடுவான். மெல்ல மெல்ல அந்த நடிகைக்கு அவன்மேல் காதல் வரும். இரண்டு படங்களையும் கவனித்தால் அவற்றின் ஒற்றுமைகளைக் கவனிக்கலாம்.
1992ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம்- ‘ரோஜா’. ரஹ்மான் அறிமுகமான படம். மணி ரத்னம் இந்திய அளவில் அடையாளப்படுத்தப்பட்ட படம். பாலசந்தர் தயாரிப்பு. தமிழ்நாட்டில் இருந்து தேநிலவுக்குக் காஷ்மீர் செல்லும் இளைஞன் ஒருவன் தீவிரவாதிகளால் கடத்தப்படுவதையும் அவனது மனைவி அனுபவிக்கும் துயரத்தையும் தீவிரவாதிகளின் பக்க நியாயத்தையும் சுவாரஸ்யமான திரைக்கதையில் காட்டிய படம். பல விருதுகளை வென்றது.
2005ல் கமல்ஹாஸன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘மும்பை எக்ஸ்ப்ரஸ்’. இந்தப் படத்திலும் ஆள்கடத்தலே மையக்கரு. நாம் முன்னர் பார்த்த டார்க் ஹ்யூமர் என்ற வகை, இதில் நன்றாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும். கமல்ஹாஸன், வையாபுரி மற்றும் பசுபதி ஆகியோர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வசனங்கள் பகடியின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்.
2007ல் வசந்த்தின் இயக்கத்தில் ‘சத்தம் போடாதே’ வெளிவந்தது. கணவன் குடிகாரன், ஆண்மையற்றவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஒரு அமைதியான மனைவி, ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்கிறாள். ஆனால் அந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் தனக்கு ஆண்மையில்லை என்பது அந்தக் கணவனுக்கு நினைவு வருகிறது. இருவருக்கும் பிரச்னைகள் நேர்கின்றன. கணவன் இந்த விபரங்களைத் தனக்குத் தெரியாமல் மறைத்தது மனைவிக்குத் தெரியவருகிறது. விவாகரத்து நடக்கிறது. அப்போது அவளது வாழ்வில் அறிமுகமாகும் இளைஞன் ஒருவனைத் திருமணமும் செய்துகொள்கிறாள். முன்னாள் கணவன் இவளைக் கடத்துகிறான். யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய இடத்தில் சிறை வைக்கிறான். இதன்பின் எப்படியெல்லாம் அவளது கணவன் அந்தப் பெண்ணைத் தேடுகிறான், கண்டுபிடிக்கிறான் என்பதை ஒரு விறுவிறுப்பான படமாகத் தந்திருப்பார் வஸந்த். படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம்.
மிஷ்கின் இயக்கத்தில் 2008ல் வெளிவந்த படம் - ‘அஞ்சாதே’. மிஷ்கினின் இரண்டாவது படம். இரண்டு நண்பர்களுக்குள் ஏற்படும் விரோதத்தையும், அதனால் அவர்களின் பாதைகள் முற்றிலும் மாறுவதையும் சித்தரிக்கும் படம். இதில் படத்தின் ஆரம்பத்தில் நல்லவனாக, எல்லா சட்டதிட்டங்க்களுக்கும் உட்பட்டுப் போலீஸ் வேலைக்குத் தன்னைத் தயார் செய்யும் கதாபாத்திரம் கிருபா. அவனுக்கு நேர் எதிராக ரௌடித்தனமாக வாழும் பாத்திரம் சத்யா. ஒரு கட்டத்தில் தனக்குத் தெரிந்த ஆட்களை வைத்துத் தில்லுமுல்லு செய்து அதே வேலையில் சத்யா சேர்ந்துவிடுகிறான். ஆனால் கிருபாவோ நேர்மையாகத் தயார் செய்ததால் தோற்றுவிடுகிறான். அப்போது அவன் வெறுப்பில் போய்ச் சேரும் ஒரு கும்பல், குழந்தைகளை ஆள் கடத்தல் செய்து சம்பாதிக்கிறது. இவர்களோடு சேர்ந்து கிருபாவும் ஆள்கடத்தலில் ஈடுபடுகிறான். இவர்களை சத்யா எப்படி முறியடிக்கிறான் என்பது விறுவிறுப்பான திரைக்கதையோடு வழங்கப்பட்டிருக்கும்.
2009-ல் முதல் பட இயக்குநர் அருண் வைத்யநாதனின் இயக்கத்தில் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் -‘அச்சமுண்டு அச்சமுண்டு’. பிரசன்னாவும் ஸ்நேஹாவும் நடித்த படம். வெளிநாட்டில் வாழும் இவர்களின் குடும்பத்தில் இவர்களின் பத்து வயதுப் பெண்ணை அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட்ஸன் என்ற நபர் கடத்திவிடுகிறான். அவன், குழந்தைகளுடன் உறவு கொள்ளும் ஒரு பெடோஃபைல். இவனிடமிருந்து எப்படி அந்தத் தம்பதியர் தங்களது குழந்தையைக் காக்கிறார்கள் என்பதுதான் படம்.
இதன்பின்னர் 2013ல் புதியவரான நலன் குமரசாமியின் எழுத்திலும் இயக்கத்திலும் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் ஆள்கடத்தல் வகையான படங்களில் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் முயற்சி. இதில் குழு சார்ந்த டார்க் ஹ்யூமர் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். தங்களுக்குள் மிகவும் தீவிரமாகப் பேசிக்கொள்ளும் அந்தக் கதாபாத்திரங்களைப் பார்த்தால் யாருக்குமே சிரிப்பு வராமல் போகாது. திரைக்கதை அமைப்பு என்பதை எடுத்துக்கொண்டாலும் சூது கவ்வும் அவசியம் ஒரு நல்ல முயற்சிதான். ஆரம்பத்தில் கதாபாத்திர அறிமுகங்களில் இருந்து ஆங்காங்கே கதையில் வரும் திருப்பங்கள், அவை எப்படி முடித்து வைக்கப்படுகின்றன என்பது, இறுதியில் படம் முடியும் பாணி என்று எல்லா வகையிலும் இது ஒரு முழுநீள டார்க் ஹ்யூமர் படம். பார்வையாளர்களுக்கு இது மிகவும் பிடித்த படமும் கூட.
இவற்றைத் தவிரப் பிற படங்களில் பேசும் படம், ரமணா, சிட்டிஸன், மகாநதி, சிங்கம், யுத்தம் செய், செல்லமே, ராவணன், ஆறு மெழுகுவர்த்திகள், உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களும் வெளியாயின. தமிழில் வெளிவந்திருக்கும் அத்தனை ஆள்கடத்தல் படங்களையும் பட்டியலிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. முக்கியமான சில படங்களைப் பார்ப்பதன் மூலம் பிற படங்களையும் நினைவூட்டுவதே நோக்கம்.
உலகெங்கும் வெளியாகியிருக்கும் பல திரைப்பட வகைகள் இன்னும் தமிழில் முயற்சிக்கப்படாமலேயே இருக்கின்றன. அந்த வகையில் எப்போதாவது முயற்சிக்கப்படும் ஆள் கடத்தல் படங்கள் இன்னும் நன்றாக வருங்காலத்தில் வெளியாகலாம். உலகத் தரத்தில் அப்படிச் சில படங்கள் வெளியானால் தமிழுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நல்லது.
ஆகஸ்ட், 2014.