பாக்யராஜ் சார் எனக்குக் குருவாக அமைந்தது கொடுப்பினை, பாக்கியம், கடவுளின் ஆசிர்வாதம் என்றுதான் சொல்வேன். தூயவன் சார் அலுவலகத்தில் ஆபிஸ்பாய் வேலை செய்துகொண்டிருந்தேன், அந்தக் கம்பெனியில் விடியும்வரை காத்திரு படம் இயக்க வந்தார் என் குருநாதர். அப்போது அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது என் வேலை. சுண்டல், டீ, பஜ்ஜி எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பேன். அப்போது அறைக்குள் கதை விவாதம் நடக்கும். என்னை உள்ளே இருக்கவிடமாட்டார்கள். டீ கொண்டுபோனால் வைத்துவிட்டு உடனே வெளியே போய்விடவேண்டும். அந்த விவாதங்களைக் கேட்கவேண்டும் என்பதற்காக கதவுக்கருகில் சின்னதாக ஒரு கல் வைத்து முழுதாகக் கதவை மூடமுடியாதபடி செய்துவிடுவேன். அந்தச் சின்ன இடைவெளியில் உள்ளே நடக்கிற விவாதங்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.
ஒருநாள் சீன் எழுதி நகலெடுக்க ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அப்போது நான் எழுதுகிறேன் என்று சொல்லி எழுதிக்கொடுத்தேன். நான் எழுதியிருந்தது இயக்குநருக்குப் பிடித்திருந்தது. உடனே என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன். இன்னொரு உதவி இயக்குநர் சுப்பிரமணி, இவன் நல்லபையனாக இருக்கிறான், சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்போதும் இயக்குநர் ஏற்கெனவே நிறையப்பேர் இருக்கிறார்களே என்று சொல்லி சேர்த்துக்கொள்ளவில்லை.
விடியும் வரை காத்திரு படத்தில் கம்பெனிஅஸிஸ்டென்ட்டாக வேலை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பத்து நாட்கள் தான் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் பத்து நாட்களும் நான் சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பத்து நாட்கள் முடிந்தவுடனும் இயக்குநரிடம் வாயப்புக் கேட்டேன். அப்போதும் மறுத்துவிட்டார். அதேநேரம் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த எல்லோருடனும் நன்றாகப் பழகிவிட்டேன்.
விடியும் வரை காத்திரு படப்பிடிப்பு முடிந்ததும் உடனே மௌன கீதங்கள் படப்பிடிப்பு தொடங்கியது. கூட இருந்த எல்லோரும் நாளையிலிருந்து ஷூட்டிங் வந்துவிடு என்று சொல்லிவிட்டார்கள். நானும் போய்விட்டேன். அங்கு இயக்குநரின் கண்களில் படாமல் பதுங்கிக்கொண்டிருந்தேன். இப்படியே சிலநாட்கள் போய்விட்டது. அதன்பின்னர் அவரைக் கேட்காமலேயே கிளாப் அடிக்கவும் செய்தேன். இயக்குநர் நடிக்கவேண்டிய ஒருகாட்சியில் அவர் கேமிராவுக்கு முதுகைக்காட்டியபடி பேசவேண்டும். அந்தக்காட்சிக்கு கிளாப் போர்டை வாங்கி நான் கிளாப்அடித்துவிட்டேன். என் குரல் அவருக்குத் தெரிந்துவிட்டது. ஷாட் முடிந்ததும், யாரைக்கேட்டு கிளாப் அடித்தாய் என்று கோபமாகக் கேட்டார். சரிதா உட்பட படப்பிடிப்பில் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் சட்டென்று அவர் காலில் விழுந்து இரண்டுகால்களையம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நான் அப்பா இல்லாத பையன், எனக்கு நீங்கள்தான் வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்று கதறிவிட்டேன். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொஞ்சநேரம் அமைதியாக இருந்துவிட்டு சரி இங்கேயே வேலை செய் என்று சொல்லிவிட்டார்.
அவரைப் பொருத்தவரை தொழிலை மறைக்கமாட்டார். எல்லாவற்றையும் கற்றுத்தருவார். அதெல்லாம் உனக்குத் தெரியாது என்று சொல்லி ஒதுக்கிவைக்காமல் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வார். எனக்கும் நகைக்சுவை உணர்வு இருந்ததது பெரியபலமாக இருந்தது மட்டுமின்றி அவருக்குப் பிடித்தமானவனாக இருக்க அதுவே காரணமாக இருந்தது. ஒரு ஆக்ஷன் படஇயக்குநரிடம் சேர்ந்திருந்தால் இந்த அளவு ஒத்து வேலை செய்திருக்கமுடியுமா என்பது தெரியவில்லை.
நான் உதவிஇயக்குநராக இருந்த காலகட்டங்களில் ஒரு குருகுலத்தில் இருப்பதுபோல இருப்போம். படப்பிடிப்பு முடிவடைந்தபின்பும் இயக்குநருடைய அறைக்குப் போய் அடுத்தநாள் எடுக்கவேண்டிய காட்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவருக்கு கால் அமுக்கிவிட்டுவிட்டு அவர் தூங்கியதும் எங்கள் அறைக்குப் போவோம். அவரும் எங்களை மகன்போலப் பார்த்துக்கொண்டார்.
அப்போது நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவத்தைச் சொல்கிறேன். மௌனகீதங்கள் படப்பிடிப்பு விட்டு விட்டு சுமார் ஒருவருடம் நடந்தது. அப்போது நான் கிளாப் அடிப்பேன். படப்பிடிப்பு முடிவடைந்து எடிட்டிங்கில் இருக்கும்போது ஒருநாள் நானும் அருகில் இருந்தேன். ஒரு சீனைப் பார்ப்பதும் என்னைப்பார்ப்பதுமாக இருந்தார். எனக்கும் மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. படப்பிடிப்பின் போது கிளாப் அடிப்பதையும் சேர்த்துத்தான் எடுப்பார்கள். அந்த சீனில் ஆறுமாதங்களுக்கு முன்பு எடுத்த ஒரு காட்சி, மூன்றுமாதங்களுக்கு முன்பு எடுத்த ஒருகாட்சி அதன்பின்னர் எடுத்தகாட்சி ஆகிய எல்லாவற்றிலும் மட்டுமல்ல அந்த சீனை எடிட் செய்கிற அந்தநாளிலும் நான் போட்டிருந்தது ஒரே சட்டை. அதைப்பார்த்தும் உன்னிடம் எத்தனை சட்டை இருக்கு என்று கேட்டார். இரண்டுசட்டைகள் என்று நான் சொன்னேன். உடனே என்னைக் கூட்டிப்போய் ஆறு சட்டைகள் எடுத்துக்கொடுத்தார். எடிட்டிங்கில் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று படபடப்பாகப் பார்க்கிற நேரத்திலும் அஸிஸ்டென்ட் போட்டிருக்கிற சட்டையைக் கவனித்த உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் அவர்.
மௌன கீதங்கள், இன்று போய் நாளைவா, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு ஆகிய படங்களில் என் பெயரை உதவி இயக்குநர்கள் வரிசையில் கடைசியில்தான் போடுவார். அதற்கடுத்த டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில், கம்பெனி பெயர், எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அசோசியேட் டைரக்டர் ஆர்.பாண்டியன் என்று என் பெயரைப் போட்டிருந்தார். அதற்கடுத்துத்தான் அவர் பெயர் வந்தது. பார்த்ததும் பயங்கர ஷாக்காகி சார்.. என்றேன். நல்லா வேலை செய்யறே இருக்கட்டும் என்று சொன்னார். அஸிஸ்டென்ட் டைரக்டராக இருந்தாலும் அசோசியேட் டைரக்டராக இருந்தாலும் நான் அவரிடம் ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொள்வேன். அவரிடம் அதிகமாகத் திட்டுவாங்குவதும் நான்தான். இயக்குநர் இவனைத்தான் அதிகம் திட்டுகிறார்; இவன்கிட்ட விசயம் இருக்குபோல என்று நினைத்துக்கொண்டார்கள். அதனாலேயே எனக்கு அந்தக்கம்பெனியிலேயே முதல்படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அந்தக் கம்பெனியில் எனக்குப் படம் இயக்கும் வாய்ப்புக்கிடைத்ததும் அவரிடம் போய், சார் நீங்க இந்தக்கம்பெனிக்கு அடுத்து எப்ப படம்; பண்ணப்போறீங்க என்று கேட்டேன். அப்போது முந்தானை முடிச்சு உட்பட சில படங்கள் அவர் செய்ய ஒப்புக்கொண்டிருந்த நேரம். எனவே, அது இன்னும் ஒரிரு வருடம் ஆகிவிடும் என்று சொன்னார். அதனால்தான் அதுக்கு முன்னாடி என்னை ஒரு படம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் என்று சொன்னேன். உடனே, அசோசியேட் ஆகிட்டா உடனே படம் செய்துடணும் உனக்கு இதுதான் சரியான நேரம் நன்றாகச் செய் என்று சொன்னவர், கூடவே, டைரக்ட் பண்ணு எக்காரணத்தைக் கொண்டும் டைரக்ட் பண்ணுற மாதிரி நடிக்காதே என்று சொன்னார்.
உதவி இயக்குநர் இடம் என்பது பலவற்றைக் கற்றுக்கொள்கிற இடம். நம்முடைய இடம், கடமை, சமுதாயப்பொறுப்பு ஆகியனவற்றை நன்றாகக் கற்றுணருகிற இடம் என்றுதான் நான் சொல்வேன். நமக்குத் தெரிந்ததையெல்லாம் சினிமாவாக எடுப்பது என்பது சரியல்ல, மக்களுக்குப் பிடித்தது; சரியானது ஆகியவற்றை எடுப்பதே சினிமா. இதை உதவி இயக்குநராக இருந்தபோதுதான் நான் தெரிந்துகொண்டேன்.
எங்கள் இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்கள் என்னையும் இயக்கியிருக்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டி படத்தை இயக்கிய கோவிந்தராஜ், தாயக்குலமே தாய்க்குலமே படத்தை இயக்கிய முருகேசன் ஆகியோர் உதவி இயக்குநராக இருந்தபோது எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர்கள். என்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி முதலில் இயக்குநரிடம் பரிந்துரைத்த சுப்பிரமணியன் இயக்கத்தில் புதுமாப்பிள்ளை படத்தில் நடித்தேன். நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல இருந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவற்றைச் சொல்கிறேன்.
என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பலர் இயக்குநராகிவிட்டார்கள். என்னிடம் இருந்தவர்களைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது. என்னைப் பற்றி அவர்கள்தாம் சொல்லவேண்டும். ஒன்றே ஒன்றைச் சொல்லலாம். கன்னிராசி நான் இயக்கிய முதல் படம். அந்தப்படத்தில் என்னிடம் வேலை செய்தவர்கள் முதல் இப்போது வேலை செய்கிறவர்கள் வரை எல்லோரும் வந்து என் மகன் திருமணத்தை சிறப்பாக நடத்த உதவிசெய்தார்கள். அவர்களே தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து ஆளுக்கொரு வேலையாக எடுத்துக்கொண்டு செய்தார்கள். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
இப்போதெல்லாம் ஒரு ஷாட் தொடங்கும்போது கிளாப் போர்டை வைத்துக்கொண்டு, ஸ்டார்ட், சவுண்ட், நம்பர், கேமிரா, ஆக்ஷன் என்று வரிசையாகச் சொல்கிற வழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமானதன் விளைவுதான் இது.
எங்கள் காலத்தில் இயக்குநரை குருவாகப் பார்த்தோம், தொழில்பக்தி அதிகம் இருந்தது நாம் சாப்பிடுகிற சாப்பாடு அவர் கொடுத்தது என்கிற எண்ணம் இருந்தது. இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்றிருந்தேன். என்னுடன் அனுமோகன் மதன்பாப் போன்றோரும் இருந்தார்கள். அப்போது எஸ்பிஎம் சார் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் அருகில் போய் காலைத் தொட்டு வணங்கினேன். அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், சார் உங்களோடு அதெல்லாம் முடிஞ்சுபோச்சு சார் என்றார்கள். ஒருவரிடம் எதையாவது எதிர்பார்த்து காலில் விழுவது தவறாக இருக்கலாம். ஆனால் மூத்தவர்களை மதிப்பது, அவர்களுடைய திறமையை வணங்குவது அவர்களுடைய உயர்நத மனதை மதித்துக் காலில் விழுவது தவறு என்று சொல்லமுடியாது.
இப்போது, கதைவிவாதங்களே இல்லாத நிலையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை விவாதம் என்பது அவசியத்தேவை.
சினிமாவைக் கொண்டாடும் இந்தச் சமுதாயத்துக்கு நாம் ஒரு கருத்தைச் சொல்லும்போது அதில் எதும் தவறு வந்துவிடக்கூடாது, அதற்காக அதை முன்கூட்டியே பலரோடு சேர்ந்து விவாதித்தால் சரியானவற்றைப் படமாக எடுக்கலாம். யாருமே இல்லாவிட்டால் சுவரிடமாவது பேசிவிடவேண்டும்.
இப்போதும் நான் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அந்தப்படங்களின் படப்பிடிப்புக்குப் போகும்போது நடக்கின்றவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொள்வேன். இந்த ஸ்கூல் வேறு நம்ம ஸ்கூல் வேறு என்கிற எண்ணம் மட்டும் மனதில் இருக்கும்.
இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பதற்காக நான் மாறிவிடவில்லை. டிரெண்ட் மாறிவிட்டது, ஜெனரேஷன் கேப் ஆகிவிட்டது, அப்டேட் செய்துகொள்ளவேண்டும் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை. எனக்கு இப்போதும் பாசம் தெரியும்; அன்பு தெரியும்; காதல் தெரியும்; அதை எப்படி பிலிமில் காட்டவேண்டும் என்பதும் தெரியும். காலையில் ஏழுமணிக்கு முதல் ஷாட் எடுத்துவிட வேண்டும் என்று நான் கற்ற பாடத்தை இன்னும் மறக்கவில்லை. என் மகனை வைத்து இயக்கப்போகும் படத்தின் கதைவிவாதம் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நிறைவடைந்ததும் படப்பிடிப்புக்குப் போவோம். காலை ஏழுமணிக்கு முதல்ஷாட் எடுத்துவிடுவேன்!
(சந்திப்பும் எழுத்தும்: அ.தமிழன்பன்)
மார்ச், 2015.