உன் நெனப்பே போதும் மச்சான்

காதல் சிறப்பிதழ்
உன் நெனப்பே போதும் மச்சான்
Published on

திரைப்படத்தில் பாடலாசிரியர்களின் பணி என்பது கதாபாத்திரத்தின் உள் உணர்வுகளை கவித்துவமாக வெளிப்படுத்துவதாகும். திரைக்கதை விரும்புவதை வரிகளில் வெளிப்படுத்துவது அதாவது சூழலின் தன்மையை பாட்டின் வரிகளில் வெளிப்படுத்துவது. அதையும் தாண்டி பாடலாசிரியர்கள் சமூகத்துக்கு தாங்கள் ஒரு படைப்பாளியாகச் சொல்ல விரும்புவதை  தங்கள் சுயகருத்து சார்ந்து வெளிப்படுத்துகிறார்கள். நான் மதிக்கும் இந்த தலைமுறையைச் சார்ந்த மற்றும் முந்தைய தலைமுறையைச் சார்ந்த பல்வேறு பாடலாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தைக் கையாண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் பிறருடைய சாயல் இல்லாமல் தனித்துவத்துவத்தை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அதன் மூலமாக படம் நினைவில் மறைந்துபோனாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. அதன்மூலம் படமும் அதன் இயக்குநரும் நினைவுகூரப்படுகிறார்கள்.

கொடுக்கப்படும் சந்தத்தில் எழுதுவது, எழுதப்படும் பாடல்களுக்கு இசை அமைத்தல் என்று இருவகை உண்டு. ஆனால் இன்று தொண்ணூறு சத பாடல்கள் கொடுக்கப்படும் சந்தத்துக்கு ஏற்ப எழுதப்படுகின்றன. சந்த ஞானம், இசை அறிவு தேவைப்படுகிறது. எழுதுகையில் இசைச்சொற்கள் பயன்படுத்தவேண்டியிக்கிறது. இரைச்சல்களைத்  தாண்டி இனிமையான வரிகளைக்கேட்டு மகிழ்பவன் நான். என் படங்களில் வரும் பாடல்கள்,

இசைக்கருவிகளுக்கு மேலே ஒரு படி இருக்கவேண்டும் என விரும்புகிறவன் நான். நாளைக்கு இசைகூட பழைமை ஆகிவிடலாம். ஆனல் மொழி புதிதாக இருக்கும். காலம் கடந்து நிற்பது மொழியே. அதனால்தான் திருக்குறள் இன்றைக்கும் புதிதாக இருக்கிறது. ஒரு இயக்குநராக பல பாடலாசிரியர்களுடன் பணிபுரிந்துள்ளேன். கதையின் சூழல், பாட்டின் தொனி, தேவையென்றால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இவற்றை பாடலாசிரியர், இசையமைப்பளரிடம் முன்னிறுத்தி விலகிவிடுவேன். முழுசுதந்திரம் கொடுப்பேன். தமிழ்நாட்டில் பாடல் எழுதுகிறவர்கள் தங்கள் கவித்துவமான வரிகள் வெளியாக இசை அமைப்பாளர்கள் இயக்குநர்களிடம் போராடவேண்டிய நிலைதான் இருக்கிறது.

இந்த கட்டுரையில் மூத்த பாடலாசிரியர்கள் தவிர்த்து  மற்ற பாடலாசிரியர்கள் பற்றி அவர்கள் எழுதிய காதல்பாடல்களில் எனகுப்  பிடித்த வரிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நான் விமர்சனபூர்மாக அணுகவில்லை. ரசிகன் என்ற கோணத்திலேயே அணுகுகிறேன்.

ஏராளமான இளம் கவிஞர்களுக்கு ஆதரவு அளித் தவரும் அவர்களால் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் கவிஞர் அறிவுமதி. 73, ஹபிபுல்லா சாலை அலுவலகத்தை இளம் கவிஞர்களுக்குப் பயிற்சிக்களமாகத் தந்தவர். சிறைச்சாலை படத்தின் மூலமாக தமிழ்ச்சாலை எங்கும் ஒரு மொழிமாற்றுப்படத்தின் பாடல்களை தன் தீந்தமிழில் உலவ விட்டவர். இவரது காதல் பாடல்களில் முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன என்ற ராமன் அப்துல்லா படப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இளையராஜா இசையில் எஸ்பிபியும் சித்ராவும் பாடும் பாடல். இப்பாடலில் என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன? என்ற வரி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் காவியம்!

மனசு  ரெண்டும்  பார்க்க

கண்கள்  ரெண்டும்  தீண்ட

உதடு  ரெண்டும்  உரச

காதல்  வெள்ளம்  இங்கு  பொங்குதே- இது கவிஞர் பழநிபாரதி, இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல்கொண்டேன் படத்தில் எழுதிய பாடல். யுவன் சங்கர் ராஜா இசை.  தத்துவ எளிமையும் இளமைத் ததும்பலும், காதலின் தூய்மையான பரிதவிப்பும் ஆழ்மனதின் தாக்கங்களும் நீரோடைபோல நீந்திச்செல்லும் தமிழும் கவிஞர் பழநிபாரதியின் பெருமைக்குக் காரணம். இசை யுவன்சங்கர் ராஜா. கல்லூரிப்பருவத்தில் இருக்கும்  ஓர் இளைஞனின் வீரியமிக்க ஆண்மை குரலாக இந்த பாடலைப் பார்க்கிறேன்.

உன்  பார்வையில்  என்னை  கொன்றுவிடு  பெண்ணே

உன் கூந்தலில்  என்னை  புதைத்துவிடு  பெண்ணே

கொல்வதற்கு  முன்னே  ஒரு  முத்தமிடு  பெண்ணே

அதை  மறைக்காதே ...

இந்த வரிகளைக் கேட்டபோது குளிர்பிரதேசத்துக்குக் கொண்டுபோன தேங்காய் எண்ணெய்போல நான் உறைந்துபோனேன்.

கவிஞர் யுகபாரதியின் பாடல்களில் கும்கி படத்தில் வரும் சொய்ங்... சொய்ங் பாட்டை எடுத்துக்கொள்வோம். கும்கியில் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் குத்துப்பாட்டு இது. வழக்கமான தமிழ் சினிமா குத்துப்பாட்டுகளில் பெண்களின் அங்கங்களையும் கொச்சையான அசைவுகளை நாட்டுப்புற இசையுடனான ஆரோக்கியமற்ற நையாண்டிகளைக் கண்டு நான் வருந்துவது உண்டு. கவிஞர் யுகபாரதி எழுதிய பாடலை நான் மிகவும் விரும்புகிறேன். கதைப்படி யானையுடன் வருகிற ஒருவன் அந்த மலைக்கிராமத்தில் இருக்கக்கூடிய பெண் மீது காதல் கொள்கிறான். அவர்களின் மன வலிகளை மிக நெகிழ்வாக வெளிப்படுத்தும் ஒரு காதல்பாடலாக கவித்துவத்துடன் எழுதி உள்ளார்.

கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆச மச்சான்

அளவு ஏதுமில்ல அதுதான் காதல் மச்சான்

நாம ஜோரா மண்மேல சேரா விட்டாலும்

நெனைப்பே போதும்  மச்சான்...

இந்த ‘நெனைப்பே போதும் மச்சான்’ என்கிற சொற்கள் நம் தமிழ்ப்பண்பாட்டுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்று. வேறெந்த மொழியிலும் இதை எழுதமுடியுமா? இந்த பல்லவியும் அதன்பின் வரும் சரணங்களும் மிக அழகாக அமைந்துள்ளன.

ராஜுமுருகன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயண் இசையில் வெளியான குக்கூ படத்தில்

ஆகாசத்த நான் பாக்குறேன்

ஆறுகடல் நான் பாக்குறேன்

என்ற பாடலை கல்யாணி நாயரும் பிரதீப் குமாரும் பாடினார்கள். கண் தெரியாத இருவர். கண் தெரியாதவர்கள் காதலால் தான் நிறைய விஷயங்கள் பார்ப்பதாகச் சொல்லும் இப்பாடல்,

கண்ணால எதையும் பாக்காத இவதான் கண்ணீரை பாத்தேனே

இனி என்னோட அழகை பொன்னான உலக உன்னாலே பார்ப்பேனே - உள்ளிட்ட சிறந்த வரிகளைக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பாட்டு நினைவுக்கு வருகிறது. நீலமலர்கள் படத்தில் ஸ்ரீதேவி- கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் டூயட். நாயகிக்கு கண் தெரியாது. நாயகனுக்குத் தெரியும்.

இது இரவா பகலா? என்று நாயகி கேட்க

நீ நிலவா கதிரா? என்று நாயகன் கேட்டுப்பாடுவார். எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல். வாணி ஜெயராமும் ஜேசுதாசும் பாடிய பாடல்.

நீ நிலவு என்றால் இரவு; கதிர் என்றால் பகல் எனப் புரிந்துகொள் எனப் பொருள்வரும்படியான இந்தப் பாட்டுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது குக்கூ படத்தில் வரும் யுகபாரதியின் மேலே சொன்ன பாடல்.

நடிகரும் பாடலாசிரியருமான பா.விஜய் சமீபத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் வந்த காவியத்தலைவன் படத்தில் எழுதியிருக்கும் பாடல் இது:

யாருமில்லா தனியரங்கில்

ஒரு குரல் போலே,

நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ

என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்

ஏஆர் ரஹ்மான் இசையில் ஸ்வேதா மோகனும் ஸ்ரீநிவாசும் பாடியிருக்கிறார்கள். மிக அருமையான காதல் பாடல். நாடகத்துறை சிறந்து விளங்கிய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் இப்பாடலில் நாடக நடிகனான காதலனுக்கும் நடிகையான காதலிக்கும் இடையிலான ஏக்க உணர்வுகள் இடம்பெற்றுள்ளன. காவியத் தலைவனில் காவியமான ஒரு பாட்டு.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. இது பா.விஜயின் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற வரிகள். ஆட்டோகிராப் படத்தில் நாயகன் காதலில் தோல்வியுற்று சோகத்தில் இருக்கும்போது பார்வையற்றவர்கள் நிகழ்ச்சியில் கேட்கும் தன்னம்பிக்கைப் பாடல். தமிழகம் முழுவதும் காதலில் தோற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய பாடலாக இதைக் கருதுவதால் காதல் பாடல்கள் வரிசையில் சேர்க்கிறேன். ஜூலி கணபதி, பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான படம். இதில் நாயகன் ஒரு மலைப்பிரதேசத்துக்கு காரில் செல்கிறான். அப்போது காரில் ஒலிக்கும் பாடலாக இது எழுதப்பட்டுள்ளது. கதையின் சூழல் எதையும் கேட்காத தருணத்தில் ஒரு உருக்கமான காதல் பாட்டாக இது எழுதப்பட்டுள்ளது. எழுதியவர் நா.முத்துக்குமார். இசை இளையராஜா. ஸ்ரேயா கோஷலின் குரலில் அந்த பாடல்வரிகள்:

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

அதில் இடையில் இந்த வரிகள் வரும்:

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!

விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!! என்றொரு வரி உண்டு. மனதின் வினோதமான இந்த நிகழ்வுக்கு இப்போதும் என்னிடம் பதில் இல்லை.

பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படத்தில் ஒரு சாதாரண மெக்கானிக் இளைஞன், நகரப்பிரமுகர் ஒருவரின் மகளைக் காதலிப்பான். இந்த தருணத்தில் வரும் நா. முத்துக்குமாரின் இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. ஹரிசரணும் ஹரிணி சுதாகரும் பாடும் பாடல். இசை ஜோஷுவா ஸ்ரீதர்.

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்

உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே

மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து

உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே என்ற இப்பாடலில் இருக்கும் உருக்கம் மிகவும் அரிதானது.

தொட்டுத் தொட்டு என்னை

வெற்றுக்களி மண்ணை

சிற்பமாக யார் செய்ததோ.. என்று செல்லும் வரிகள் அந்த இளைஞனின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.

கவிஞர் விவேகா ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். அதில் ராமன் தேடிய சீதை படத்தில் அவர் எழுதிய பாடலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கேட்கும்போது கிறக்கத்தை ஏற்படுத்திய வரிகள்.

வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்

உள்ளச்சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது? என்று அழகாக எழுதியிருக்கிறார். வித்யாசாகர் இசையில்  ஹரிணியும் மது பாலகிருஷ்ணனும் உருகிப்பாடி உள்ளனர்.

கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞன் ரயில் பயணத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து காதல் வயப்பட்டு அவன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக எழுதிய நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என்ற கவிஞர் தாமரையின் பாடலும் எனக்குப் பிடித்த  காதல் பாடல் என்று சொல்வேன். நவீன தமிழுக்கு மிகவும் புதிதான சொற்களில் தீட்டிய பாடல்.

என்னோடுவா வீடு வரைக்கும்

என் வீட்டைப்பார் என்னைப் பிடிக்கும் என்ற இப்பாடலில் வரும் வரிகள் மிகவும் ஈர்த்தன.

சிறு நகரத்தில் பிறந்து வளர்ந்து படித்த என்னை ஆட்கொண்ட வரி இது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கவிஞர் கபிலன்  எழுதிய என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்ற சமீபத்திய பாடல் மிகவும் கவனத்தை ஈர்த்தது.

சின்மயியும் சித் ஸ்ரீராமும் பாடிய பாடல்.

பூவின் காம்பில் பூத்த பூமிப்பந்து நான்

சுத்திசுத்தி வாழ்வேன் உன்னை மட்டும்தான்- என்ற இதன் இடையில் வரும் வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

என் சமையலறையில் நீ உப்பா சர்க்கரையா? என்ற கபிலனின் பாடல் மிகவும் புகழ்பெற்றது. லைலாவும் விக்ரமும் தரணி இயக்கத்தில் தில் படத்தில் பாடுவதாக வரும் இப்பாடல்வரிகள் ஒரு காதலன் காதலியிடம் தன்னைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்பதுபோல் வருகின்றன. இதை தமிழ்சினிமாவில் இவ்வளவு கவித்துவமாக யாரும் எழுதியதே இல்லை என்று நினைக்கிறேன்.

மதுரை நகரில் ரயில்வே குடியிருப்பில் வாழும் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் மீது அந்த மண்ணுக்கே உரிய சேவல் சண்டையில் ஈடுபடும் முரட்டு இளைஞனுக்கு காதல். அப்போது அவன் பாடும் பாடல்தான் யாத்தே. யாத்தே. என்னாச்சோ.. ஜிவி பிரகாஷ் இசை. வெற்றிமாறன் இயக்குநர். அதில் வரும் வரி: வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா.. உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா?  மிகப் புதுமையானது. இது கவிஞர் சினேகனின் பாடல். கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போகலாமா? என்று பட்டிதொட்டியெல்லாம் அதிரவைத்த  கவிஞர்.

உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என்றொரு மிக அழகான வரியை யுவன்யுவதி படத்தில் கவிஞர் அண்ணாமலை எழுதியிருக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைத்து பாடியிருக்கிறார். ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் வந்த இந்த பாடல் அதன் வரிகளுக்காக எனக்கும் மிகவும் பிடித்தமானது. வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு கதாபாத்திரத்தின் காதல் உணர்வுகள் வெளிப்படும் பாடல் இது.

நீ கண்ணில் விழுந்த நாள்  முதல் என் தூக்கம் கலைந்ததடி

மனம் கல்லை அறிந்த குளமாய்

அதில் அலைவந்து எழுந்ததடி என அசலான காதல்வரிகளை எழுதியிருக்கிறார்.

மதன்கார்க்கி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எழுதிய அடியே என்னை நீ எங்க கூட்டிப்போறே என்று தொடங்கும் பாடல் மிகவும் கவித்துவமான காதல்பாடல்.

பல்லாங்குழி பாத புரியலை

ஒன்னை நம்பி வாரேனே

இந்த காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல

உன்பின்ன சுத்துரனே

கடற்கரையோரத்தில் ஒரு கிறிஸ்துவப் பெண்ணுக்கும் இளைஞனுக்குமான காதலைச் சொல்லும் பாடல்வரிகள்.இன்றைய இளைஞர்களின் ஆழ்மனதில்குடியிருக்கும் சொற்களால் எழுதப்பட்டுள்ளது. கார்க்கியும் இளைஞர் என்ற காரணத்தால் இந்த பாடல்வரிகள் சாத்தியமானது என்று கருதுகிறேன்.

ஆடுகளம் படத்தில் இன்னொரு பாடல், ‘ஒத்த

சொல்லால என் உசிர எடுத்து வச்சிகிட்டா’ என்று தொடங்கும் மிக அட்டகாசமான காதல்பாடல். டாப்ஸி இவனை என்று தனுஷைப் பார்த்துக் காதலிப்பதாகச் சொலிவிட அவர் உலகையே மறந்து பாடும் பாடல். ஏகாதசி எழுதிய பாடல் இது. முற்போக்கு மேடைகளை தன் பாடல்களால் அலங்கரித்துவரும் ஏகாதசியின் இப்பாடல் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

நான் கடைசியில் சொல்லவிரும்பும் பாடல் ஏக்நாத் எழுதியது. உத்தமபுத்திரன் படத்தில் ’கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே, காரணம் இன்றியே நான் சிரித்தேனே- என்ற பாடல். முழுநிலவின் ஒளியில் சலசலக்கும் ஓடையின் அருகில் காதலனும் காதலியும் பாடி ஆடும் பாடல். காதலன் தயக்கத்துடன் தன் காதல் உணர்வை வெளிப்படுத்துகிறான்.  ஒரு பெண்ணோடு தனியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தின் போது அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பாடுகிற பாடல் இது.

திரைப்படத்துக்கு பாடல் என்பது தேவையில்லை என்ற கட்சிக்குள்ளிருக்கும் கையை உயர்த்துகிறவன் நான். ஆனாலும் பாடல் என்பது தொப்புள்கொடியாக, மரபு வழியாக நம்முடன் தங்கிவிட்ட காரணத்தாலும் ஒரு பாடல் நம் நினைவின் கதவுகளை சடாரெனத் திறக்கும் வல்லமை உடையது என்ற காரணத்தாலும் தமிழ் சினிமா பாடல்களுக்கு நானும் ரசிகன்.  இங்கே இடப்பிரச்னையால் பெரும்பாலான பாடல்களைச் சொல்ல இயலவில்லை. நான் மிகவும் ரசித்து கூர்ந்து கவனிக்கும் இந்த பாடலாசிரியர்களின் வரிகளை இக்கட்டுரையில் பதிவு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. அத்துடன் காலம் கடந்து நிற்கும் வரிகளை இவர்கள் மேலும் மேலும் எழுதிச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.

பிப்ரவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com