உனக்காக எல்லாம் உனக்காக

Published on

அப்பாதான் அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.  “சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா...” என நான் சிறுவனாய் இருக்கையில். நான் என்றைக்குத்தான் அப்பா பேச்சைக் கேட்டிருக்கிறேன்? அப்போது கேட்பதற்கு?. காலங்கள் கடந்த பிறகு... அப்பாவும் என்னிடமிருந்து பிய்த்துக் கொண்ட பிறகு கேட்டேன் ஒரு நாள். அப்போதுதான் தெரிந்தது அதை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று. பிற்பாடு தெரிந்தது நான் என்னையறியாமல் ரசித்துக் கொண்டிருந்த பல பாடல்கள் அவர் எழுதியதுதான் என்பது. 

ஒருநாள்  சென்னையில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரியும் சாரோனிடமிருந்து அழைப்பு... ‘அண்ணே நம்ம பட்டுக்கோட்டையார் பத்தி ஒரு படம் ஒன்னு பண்ணீருக்கேன் உங்க கிட்ட குடுக்கணுமே’ என்றார். அன்றோ எனக்கு ஏதோ பணி. ‘தம்பி அதை நீங்க இருக்கிற லாட்ஜ் ரிசப்ஷன்ல குடுத்துட்டுப் போங்க... நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கிறேன்’ என்றேன்.

அவ்வளவுதான்... அதன் பிற்பாடு நான் வழக்கம்போல் ஊர் ஊராகப் பரதேசம் போக ஓடிப்போயிற்று ஒரு மாதம். மீண்டும் அழைப்பு சாரோனிடமிருந்து. அப்போதுதான் உறைக்கிறது நான் லாட்ஜுக்குப் போய் டி.வி.டி யே வாங்காதது.

அவர் தங்கியிருந்த லாட்ஜுக்குப் போய் நான் யாரென்பதை விளக்கி...

பட்டுக்கோட்டை யாரென்பதை விளக்கி....

சாரோன் கொடுத்துவிட்டுப் போன மேலாளரின் அங்க அடையாளங்களைச் சொல்லி....

வாங்குவதற்குள் பட்டுக்கோட்டையே போய் வந்திருக்கலாம். எங்களது அறை மாற்றும் படலத்தால் வாங்கி வந்த பிறகும் அதைப் பார்க்கவில்லை. அதென்ன நமீதா படமா? அப்பொழுதே பார்ப்பதற்கு? அடுத்த அழைப்பும் சாரோனிடமிருந்து வர...அலைபேசியை அணைத்து விட்டுப் பார்க்க உட்காருகிறேன்...

கவிஞரின் உருவத்தை தூரிகையில் தீட்டுவதோடு தொடங்குகிறது படம். பட்டுக்கோட்டையாரின் உருவத்தைத் திரையில் தீட்டுபவர்தான் ஓவியர் ராமச்சந்திரன். அவர்தான் சிறுவயதிலிருந்தே கவிஞரை நிழலாய்த் தொடர்ந்தவர். அவரது கால்கள் சென்று நிற்கும் இடம்தான் செங்கப்படுத்தான் காடு. தஞ்சைத் தரணியிலுள்ள இந்த குக்கிராமத்தில்தான் கவிஞர் கல்யாணசுந்தரம் 1930 இல் பிறக்கிறார். அவரோடு சேர்ந்து திரிந்த இடங்கள்... தாமரையும் அல்லியும் பூத்துக் கிடந்த குளங்களில் முங்கி எழுந்த காலங்கள்... சென்று வந்த சந்தைகள்.... என ஓவியர் ராமச்சந்திரனின் வர்ணிப்பில் நாம் விரல் பிடித்து நடக்கிறோம். அவரது ஏக்கத்தின் பின்ணணியில் மெலிதாக ஒலிக்கிறது துயரம் ததும்பிய ‘வீடு நோக்கி ஓடி வந்த என்னையே’ பாடல். அந்தச் சின்னஞ்சிறு கண்மலர் பிறந்த, தவழ்ந்த வீடு நம் முன்னே விரிகிறது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பார்க்காத தொழிலை வேண்டுமானால் விரல் விட்டு எண்ணிவிடலாம். மாடு மேய்ப்பவர், விவசாயி, மாம்பழ வியாபாரி, தேங்காய் வியாபாரி, மீன்/நண்டு பிடிக்கும் தொழிலாளி, பாடகர், நடிகர் என நீளும் அப்பட்டியல். இந்த வாழ்வுதான் அவரை உழைக்கும் மக்களைப் பற்றி ஓயாது சிந்திக்க வைத்தது.

பண்ணையார்களும் நிலப்பிரபுக்களும் எப்படியெல்லாம் ஏழை விவசாயப் பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள்...

சாணிப்பால் கரைத்து வாயில் ஊற்றினார்கள்... முழங்கால் வரைக்கும்தான் சேலை அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.... என்கிற கொடுமைகளைப் பட்டியலிடுகிறார் ஐ.மாயாண்டி பாரதி.

இதையெல்லாம் மனதில் வைத்துத் தான்...

‘விதவிதமான பொய்களை வைத்து புரட்டும் உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா’ என்கிற பாடல் பிறக்கிறது பட்டுக்கோட்டையிடமிருந்து.

சரி... இப்படியே புகழ்ந்து கொண்டே போனால் எப்படி? ஆவணப்படம் என்றால் சொதப்பலே இருக்காது என்று அர்த்தமா என்ன ? அதுவும் இருக்கிறது இதில். 

‘1938 - பொதுவுடமை இயக்கத்தின் முயற்சியில் தஞ்சையில் விவசாய தொழிலாளர் மாநாடு...

1943 - நில உரிமையாளர்கள் சங்கம்... இப்போராட்டத்தோடும் போராளிகளோடும் கல்யாணசுந்தரத்திற்கு நெருங்கிய தொடர்பு இருந்தது’ என்கிறது பின்னணிக் குரல்.

1930 இல் பிறந்த பட்டுக்கோட்டையார் எட்டு வயதிலும் பதினோரு வயதிலும் எப்படிப் பங்கெடுத்திருக்க முடியும் ? ஒருவேளை அப்போது க்Nஐஇஉஊ உருவாகவில்லை என்பதால் இருக்குமோ ?

சரி... பட்டுக்கோட்டையாருக்கு நெருக்கமாய் நின்றது ‘கம்யூனிஸ்ட்’ இயக்கம் மட்டும்தானா?

அவருக்கு வேறு எவரோடும் தொடர்பு இருக்கவில்லையா?

குறிப்பாக திராவிட இயக்கத்தவர்கள் காற்றே அவர்மீது படவில்லையா...?

நமது சந்தேகங்களுக்கான தெளிவுகள் அய்யா நல்லகண்ணுவின் நேர்காணலிலேயே கிடைக்கிறது ‘பட்டுக்கோட்டைன்னா.... பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும் உண்டு. கம்யூனிச இயக்கங்களும் உண்டு, பிற முற்போக்கு இயக்கங்களும் உண்டு. அத்தனையையும் இவர் ஜீரணித்து உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.’ என்கிறார் தோழர். அவரது இந்த வார்த்தைகள் நமக்கு பட்டுக்கோட்டை என்கிற ஊரின் பாரம்பரியத்தைச் சில வரிகளிலேயே விளக்கி விடுகிறது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து வந்த பெரும்பாலான ஆவணங்களில் ‘கம்யூனிஸ்ட்’ கட்சி உறவுகளே சிலாகிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர அவருக்கும் திராவிட இயக்கத்தவருக்குமான உறவு அவ்வளவாகச் சொல்லப்பட்டதில்லை. இக்குறையைக் களைகிறது இந்த ஆவணப்படம்.

ஊரே காங்கிரசாய் இருந்த வேளையில் தந்தை பெரியாருக்கு தாமரங்கோட்டையிலுள்ள தீப்பாய்ந்த அம்மன் கோயிலருகே பட்டுக்கோட்டையாரும் அவரது தோழர்களும் நிறுத்தி மாலை போட்டதையும்... அதற்காக ஒட்டுமொத்த ஊரின் எதிர்ப்பையும் எதிர்கொண்டதையும்...

தஞ்சை மாவட்ட பகுத்தறிவுச் சிங்கம் என்றழைக்கப்பட்ட அணைக்காடு டேவிஸ் அய்யாவின் தொடர்பு ஏற்பட்டதையும்... பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளில் உச்சிக்குடுமிகள் பட்டுக்கோட்டையாரது குழுவால் பட்ட பாட்டையும் நயமாகச் சொல்கிறது படம்.

பட்டுக்கோட்டையாருக்கு தொல்காப்பியமும் இலக்கணமும் கற்றுத் தந்த அணைக்காடு டேவிஸ் அவர்களது வாயிலாகவே பெரியாரும் பட்டுக்கோட்டை அழகிரியும் பாவேந்தர் பாரதிதாசனும் அறிமுகமாகிறார்கள்.

பாரதிதாசனின் உறவால் மதுரையிலுள்ள சக்தி நாடக சபாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது கவிஞருக்கு. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாடல் எழுதிக் கொண்டிருந்த புரட்சிக்கவிஞரிடம் இருந்து பரிந்துரைக் கடிதம் கொண்டுவந்த கல்யாணசுந்தரத்தை தனது நாடக சபாவில் சேர்த்துக் கொள்கிறார் சக்தி கிருஷ்ண சாமி. கவிஞராய்ப் போனவர் வாழ்வு நடிகராய் திசை மாறுகிறது.

1950 - ‘கவியின் கனவு’ நாடகத்தில் பட்டுக்கோட்டையாருக்கு ராஜகுரு வேடம். மதுரை, விழுப்புரம், திண்டிவனம், புதுவை எனத் தொடரும் பயணத்தில் எதிர்பாரா திருப்பம். போதிய வரவேற்பின்றி 1952-இல் சக்தி நாடக மன்றம் கலைக்கப்படுகிறது. மீண்டும் தனது ஞானகுரு பாரதிதாசனிடம் வருகிறார் பட்டுக்கோட்டையார். தனது சீடனாக உடன் அழைத்துச் சென்ற பாரதிதாசனுக்கு இந்தி வடிவில் வருகிறது சிக்கல் (அன்றும்). சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இந்தி டியூன் ஒன்றுக்கு அவரைப் பாட்டெழுதச் சொல்ல... போங்கப்பா நீங்களாச்சு... உங்க படமாச்சு... எனத் துண்டை உதறித் தோளில் போட்டு விட்டு பாரதிதாசன் கிளம்ப...

“உங்களை நம்பித்தானே கூட்டிகிட்டு வந்தேன்... இப்ப திடீர்ன்னு எழுதலேன்னா எப்படி?” என சிறீராமுலு நாயுடு கெஞ்ச.....

“இதோ... என்னோட சிஷ்யன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இனி இவன் எழுதுவான்” என்கிறார் பாரதிதாசன்.

அப்புறம் என்ன? சேலம் டு சென்னைதான்.

பட்டுக்கோட்டையாரின் பாடல் வெளியான முதல்படம் 1955 இல் வந்த ‘மஹேஸ்வரி’.

அனைத்து பாடல்களையும் பட்டுக்கோட்டையார் எழுதிய ‘பாசவலை’ தமிழ்த் திரை உலகினையே திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்  எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

ஆரவல்லியில் வரும்.... ‘சின்னப் பெண்ணான போதிலே’, சௌபாக்கியவதியின் ‘தில்லையம்பல நடராசா’

நாடோடி மன்னனின் ‘காடு வௌஞ்

சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’

பி.பி.ஸ்ரீனிவாஸின் குரலில் ‘அன்பு மனம் கனிந்த பின்னே அச்சமாகுமா?’

கல்யாணப்பரிசின் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’

சந்திரபாபுவின் அசத்தலில் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ எனப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆனால் இதற்கே கத்திரியோடு காத்திருப்பார் ஆசிரியர்.

பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் மனதை வருடியவை ஏராளம். ஆனால் நெருடியவையும் இருக்கத்தான் செய்கிறது.

விஞ்ஞான சோசலிசத்தையே மறுக்கும் ‘கடவுள் உண்டென்பதும் இல்லையென்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு’ என்கிற பாடலாகட்டும்....

‘கொடுக்குற காலம் நெருங்குவதாலே எடுக்குற அவசியம் இருக்காது’ என்று சமரச அரசியலைப் போதிக்கும் வரிகளாகட்டும்... (ஒருவேளை அந்தக் காலகட்டத்தைய சேர்க்கையோ?....) இன்னமும் உறுத்தக் கூடிய வரிகள்தான். 

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அக்கவிஞன் இம்மக்கள்பால் கொண்ட அன்பு... அடித்தள மக்களின் வாழ்வையே பெரும்பாலும் எதிரொலித்த அவரது அக்கறைமிகுந்த பாடல் வரிகள்.... வாழ்ந்த காலம் மிக மிகக் குறுகியதென்றாலும்(29 வயது) திரையுலகையே அண்ணாந்து பார்க்க வைத்த சுயமரியாதைமிக்க கம்பீரம்.... கொடிகட்டிப் பறந்த பாடலாசிரியனாய் இருந்த போதும் ஜெகதாம்பாள் காலனியில் கட்டில்கூட இன்றி ஓலைப்பாயில் சுருண்டு கிடந்த அப்பழுக்கற்ற எளிமை.... இதுதான் பட்டுக்கோட்டை.

இவரைப் பற்றிய நினைவுகளையும்.... வரலாற்றையும்.... வரலாறு நெடுக உடன் வந்து கொண்டிருக்கும் அவரது அற்புத வரிகளையும் எப்படி ஒரே ஒரு ஒளிப்பேழையுள் அடக்க முடியும்? ஆனால் முடிந்தவரை முயன்றிருக்கிறார் தம்பி சாரோன். அதுவும் மிக மிக சுவாரசியமாக.

கவிஞரது துணைவியார் கவுரம்மாளின் நினைவுகள்... நடிகர் எஸ்.எஸ். ராசேந்திரன் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரது அவதானிப்புகள்...

பொன்னுசாமி ஓட்டல் சுவாரசியங்கள்...இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்ணணிப் பாடகர்கள் பி.சுசீலா, கமலா சத்யம் போன்றோரது நினைவலைகள்... என எழுதிக் கொண்டே போகலாம்...

அதுவுமன்றி கவிஞர் அறிவுமதி, விகேடி.பாலன், பி.லெனின், கார்ட்டூனிஸ்ட் பாலா, மரிய மனோகர், ஜெரால்ட் எனப் பெரும்பட்டாளமே இதைச் செழுமைப் படுத்த உழைத்திருக்கிறது

எல்லாவற்றையும் விட.... இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஒரு ஆவணப்படத்தை ஒரு நிமிடம் கூடத் தொய்வின்றி நேர்த்தியோடும், அழகியலோடும் எடுத்திருப்பதற்காக இதன் இயக்குநர் சாரோனை நள்ளிரவில்  09444285103 என்ற எண்ணுக்குக் கூப்பிட்டு....

‘சார் நீங்க வெறும் சாரோனா? இல்லே லாடு லபக்கு

சாரோனா?’ என்று கூடக் கேட்கலாம்.

தப்பே கிடையாது.

அக்டோபர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com