துப்பாக்கிச்சூடு, என்னுடைய குழந்தைகளின் முன்னிலையில் தெருவில் அடி, உதை, 10 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் மாற்றம் என்று எல்லாவிதமான தொல்லைகளையும் பார்துவிட்டேன்' என்று சொல்பவர் ஐரிஷ் புலனாய்வு பத்திரிகையாளர் டெனால்மேக்கின்டையர்.
புலனாய்வு பத்திரிகையாளரின் பணி சாகசம் நிறைந்தது மட்டுமல்ல அதிக ஆபத்துகளும் கொண்டது. தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து பத்திரிகையாளர்கள் வெளிக் கொணர்ந்த ரகசியங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. அப்படியான மாறுவேடம் பூண்டு செய்தி சேகரிக்கும் ஒரு சில சர்வதேச பத்திரிகையாளர்களைப் பற்றி இங்கு:
ஜெர்மனியின் கண்டர் வால்ராப் புலனாய்வுக்கு பயன்படுத்திய வழிமுறைகள் 1960 களில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது. உண்மையை அறிய பத்திரிகையாளனாக இருந்தால் மட்டும் போதாது அந்த பிரச்னைகளை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவர் வால்ராப். குடிகாரராக, நாடோடியாக, ரசாயன தொழிற்சாலை பணியாளராக தன்னுடைய அடையாளத்தை மறைத்து வேலை செய்து 1966 ல் '13 விரும்பப்படாத தகவல்கள்' என்ற கட்டுரைகளை வெளியிட்டார். பிறகு கிரீஸ் நாட்டில் ராணுவ அடக்குமுறையில் அரசியல் கைதிகள் படும் கொடுமைகளை கண்டறிய போராட்டம் செய்து அடி உதைபட்டு 14 மாதங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறகு அங்குள்ள அரசியல் கைதிகளின் நிலையை பத்திரிகையில் எழுதினார். கால் செண்டர் பணியாளர், கறுப்பினத்தவர் என்று தசாவதாரம் கமலஹாசனை விட அதிகமான வேடங்களை தரித்து புலனாய்வு செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் மார்வெல் குக் 1940 களில் முதல் பெண் பத்திரிகையாளர் மட்டுமல்ல வெள்ளையர்கள் நடத்திய பத்திரிகையில் முதன் முதலில் நுழைந்த ஆப்பிரிக்க அமெரிக்கரும் கூட. நியூயார்க் நகரில் வீட்டு வேலைகளில் அடிமைத் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுவதை, சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றப்படுவதை விரிவாக ஆய்வு செய்து எழுதி அவர்களை அடிமை முறையிலிருந்து விடுவித்தவர்.
கார்மெலோ அபாட்டோ என்ற இத்தாலி பத்திரிகையாளர் 2010ல் வாட்டிகன் சிட்டியை அதிர வைத்தவர். வாட்டிகன் தேவாலயத்தில் மதகுரு ஒருவரின் நண்பராக உள்ளே நுழைந்து தேவாலயங்களில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள், சிறார்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பது என்று அங்கு நடக்கும் அத்தனை அட்டூழியங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். வாட்டிகன் தேவாலயங்களில் நடந்த செக்ஸ் குற்றங்களை வைத்து எழுதிய ‘செக்ஸ் அண்ட் வாட்டிகன்' புத்தகம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மன நல மருத்துவமனையில் உள்ள அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர 1935 ல் பிராங்க் ஸ்மித் செய்த காரியம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அமெரிக்காவில் இலினோஸில் உள்ள கன்காக்கி மன நல மருத்துவமனையில் நோயாளிகளை சித்ரவதை செய்கிறார்கள், இடம் மருத்துவமனை போலவே இல்லாமல் அத்தனை சுகாதார சீர்கேடுகளுடன் இருக்கிறது என்பதை அறிந்த ஸ்மித கள நிலவரத்தை அறிய மன நலம் குன்றியவராக நடித்து அங்கே அனுமதிக்கப்படுகிறார். ஒரு வார காலம் அவருக்கு மருத்துவம் என்ற பெயரில் கொடுமை நடக்கிறது. பத்திரிகையாள நண்பர் மூலமாக இந்த அவலத்தை உலகிற்கு தெரியப்படுத்துகிறார். 1974 ல் அந்த மருத்துவமனை மூடப்படுகிறது.
கண்ணாடி வீட்டுக்குள்ளிலிருந்து கல்லெறிந்தவர் அமெரிக்காவின் ஸ்டூவர்ட் கோல்ட்மேன். மூன்றாண்டுகள் தலைமறைவாக இருந்து நியூயார்க்கில் டேப்லாயிட் வடிவிலான பத்திரிகைகள் தகவல் சேகரிப்புக்காக செய்யும் தில்லு முல்லுகளை தோலுரித்துக் காட்டினார். மருத்துவர்கள், பாதுகாவலர்கள் என்று பிரபலங்களைப் பற்றிய செய்தியை சேகரிப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி எந்த எல்லை வரை போகிறார்கள், திரைமறைவில் அதற்காக நடக்கும் பேரங்கள் என்று அத்தனையையும் புட்டு புட்டு வைத்ததனால் அவரது துறையில் அதிகமான எதிரிகளை சந்தித்தவர்.
அமெரிக்காவில் நிறவெறி உச்சத்திலிருந்த 1960 களில் அதைப்பற்றி செய்தி சேகரிப்பில் மட்டும் பிரச்னையை முழுமையாக உணர முடியாது என்றுணர்ந்தார் ஜான் கிரிப்பின். தென் பகுதிகளில் நிற வேறுபாடு என்பது அனுமதிக்கப்பட்டிருந்த காலம். கிரிப்பின், தோல் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் மருந்துகளை உட்கொண்டு கறுப்பாக மாறினார். கறுப்பினத்தவராக அமெரிக்காவின் தென் பிரதேசமெங்கும் சுற்றித்திரிந்தார். கறுப்பின மக்களுக்கு நடக்கும் அநீதிகளை, நிற வெறுப்பை அவர்களின் அவலமான வாழ்க்கையை கிரிப்பின் வாழ்ந்து அனுபவித்து எழுதினார். நிறவெறி பற்றிய விழிப்புணர்சிக்கு கிரிப்பின் எழுதிய 'பிளாக் லைக் மீ (Black like me) புத்தகம் மிகப் பெரிய வழிகாட்டியது.
ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சார்ந்த அனாஸ் புலனாய்வு பத்திரிகையாளராக உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்றவர். அனாஸின் முக்கிய நோக்கம் ஊழலை வெளிப்படுத்துவது. அது அரசாக இருந்தாலும் சரி, கால்பந்தாட்ட குழுக்கள் மாதிரி தனியார் அமைப்பாக இருந்தாலும் சரி, அனாஸ் கண்ணுக்குத் தெரியாமல் நுழைந்து அத்தனை ஆவணங்களையும் வெளியே கொண்டு வந்து விடுவார். 1998 ல் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கியவர் 2015 ல் பிபிசிக்கு பேட்டி அளிக்கும் வரை முகத்தை வெளியே காட்டியதே இல்லை. அனாஸ் என்ற பெயரை மட்டுமே அனைவரும் அறிந்திருந்தனர். 2015 ல் கானா நீதித்துறையில் நிலவிய ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியதன் மூலம் 13 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 100 க்கு மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தவர். ஊழல் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் அனாஸ் தொடர்ந்து புலனாய்வை நடத்திக் கொண்டே இருக்கிறார்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை தன்னுடைய புலனாய்வு கட்டுரை மூலமாக நிரபராதி என்று நிரூபித்து 23 ஆண்டுக்குப் பிறகு மில்கார்ட் என்பவருக்கு விடுதலை வாங்கித் தந்திருக்கிறார் கனடாவின் பீட்டர் வாரன்.
இங்கிலாந்தில் ஆவணப்படமெடுப்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய கிரிஸ் டெரில் சாகச விரும்பி. உர்ராங்குட்டான் உட்பட பல அறிய வகை உயிரினங்களை சட்டத்திற்குப் புறம்பாக கடத்தலில் ஈடுபடும் குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கிறது டெரிலுக்கு. அவரே அந்த வியாபாரத்தில் இருப்பவராக மாறி மொத்த தகவல்களையும் சேகரித்து வெளியிடுகிறார். இதே போல் பெண்களை கடத்தி விற்கும் கும்பல்கள் பற்றிய தகவல்கள், போதைபொருளை கடத்திச் செல்லும் கடற்படை வீரர்கள் என்று கரணம் தப்பினால் மரணம் என்கிற விபரீதமான குழுக்களைப் பற்றி ஆவணங்களை தொடர்ச்சியாக வெளியிட்டிக் கொண்டேயிருக்கிறார் டெரில்.
இறுதியாக அண்டோனியா சலாஸ். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சலாஸின் உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. கடத்தல், தீவிரவாதிகள் என்று சலாஸ் ஊடுருவி தகவல் சேகரிக்கும் இடங்கள் அத்தனையும் ஆபத்தானவை. ஆறு வருட காலம் தீவிரவாதிகளுடன் இருந்து தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தினம் தினம் பயணிக்கும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் நம் நிஜ கதா நாயகர்கள்.
டிசம்பர், 2018.