எங்களுடையது உறவுகளும் நட்பும் நிறைந்த பெரிய குடும்பம். அதில் வந்து இணைந்தவர் என் துணைவியார். மிகவும் அழகாக எல்லாவற்றையும் பெரும்பாலும் என் கவனத்துக்கே வராத அளவுக்கு சமாளிக்கும் திறன் உள்ளவர் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். நெடுநாள் பழகிய நண்பர்களும் அன்றுதான் இல்லத்துக்கு வருகிறவர்களும் இயல்பாகக் கருதிப் பழகக்கூடிய சூழலை என் இல்லத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். அப்புறம் எனக்கு எப்படி வாழணும் என்பதற்கு ரோல் மாடலாக இருந்தவங்க என்னுடைய பெற்றோர். குடும்பத்துக்குள்ளேயும் சரி வெளியேயும் சரி உண்மைத்தன்மையுடன் இருக்கணும் என்பதற்கு அவங்கதான் உதாரணம். நாங்களும் இதைப் பின்பற்றி வீட்டிலும் சரி; வெளியிலும் சரி ஓர் உண்மைத்தன்மையை கவசமாக அணிந்திருப்பதால் எங்களுக்குள் உரசல்கள் கிடையாது. நேர்மையின்மையைக் காணும்போது மட்டுமே கோபப்படுபவன், மற்றபடி எல்லாவற்றையும் மிக லேசாக எடுத்துக்கொள்பவன் என்பதால் குடும்பத்துக்குள் எல்லாம் மிகச் சுலபமாகச்
சென்றது. எல்லா நேரமும், பணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஒரே மாதிரி இருக்கக்கூடிய பண்புதான் ஒரு தம்பதியராக எங்களைப் பிணைத்து வைத்துள்ளது என சொல்லலாம். ஓர் ஓவியராக எண்பதுகளில் பத்திரிகைகளுக்குப் படம் வரைந்துகொண்டிந்த காலகட்டங்களில், எனக்கு வரும் கதைகளை எல்லாம் முதலில் வாசிக்கக்கூடியவராக அவர்தான் இருந்தார். நான் சுதந்தரமான கலைஞனாக செயல்படுவதற்காக வெளியைத் தருவதற்கான அவசியத்தை அவர் உணர்ந்திருந்தார் என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆகஸ்ட், 2022