’தம்பி, நான் கோவையில சாதாரண பஞ்சு ஆலைத் தொழிலாளியாக பகலில் கல்லூரி, இரவில் வேலை என்று இருந்தவன். புலவர் பட்டம் பெற்று, தமிழ் படித்து சென்னை வந்தேன். நான் கற்ற தமிழும், பெற்ற தமிழ் அறிவும் அந்த மாமனிதர் மூலம்தான் வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்தது. நான் யாரென்று தெரியாத காலத்தில், ’குடியிருந்த கோயில்’ படத்தில் ’நான் யார், நான் யார்’ என்ற பாடல் மூலம் அவர் நான் யாரென்று தெரிந்து கொள்கிற வாய்ப்பை ஏற்படுத்தியவர்‘ - அத்தனை உடல்சோர்விலும் எம்.ஜி.ஆர் பற்றி என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்து நினைவுகளை நெகிழ்ந்து பேசுகிறார் கவிஞர் புலமைப்பித்தன். சுமார் 22 ஆண்டுகளாக எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.
“அரசியலிலும், கலைத்துறையிலும் அவருடன் பல பேர் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், நான் இந்த இரண்டு துறையிலும் நீண்டகால நண்பனாக இருந்தவன். அது என் தமிழுக்குக் கிடைத்த பெருமை. இந்தச் சமுதாயத்தில் சம்பாதிப்பது என்பது அவரவருக்காக என்று கருதுகின்றனர். ஆனால், வருமானம் தேடுவதே கொடுப்பதற்காகத்தான் என்று வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அதை வைத்துதான், ’ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என்ற பாடலை எழுதினேன். அப்படி ஓடி ஓடி உழைத்தார். ஊருக்கெல்லாம் கொடுத்தார்.
வாழும் போது வள்ளலாக வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் கடைசி காலத்தில் வறுமையில் இருந்தார். அந்தக் காலத்தில் அவருக்கே போய் உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். யாருக்காவது கஷ்டம் எனத் தன் காதில் விழுந்தால் உடனே உதவி செய்துவிடுவார். உதாரணத்திற்கு அவர் முதல்வராக இருந்த போது நடந்த ஒரு சம்பவமே அவர் எந்தளவுக்கு கருணை உள்ளம் கொண்டவர் என்பது விளங்கும்.
வேலூரில் வறுமையில் வாடிய ஒரு தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவர் தலைவருக்கு இன்லேண்ட் லெட்டரில் தன் நிலையைப் பற்றி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு தலைமைச் செயலகம் வந்தவர், வேலூர் கலெக்டருக்குப் போன் செய்து, இந்த முகவரியில் இப்படியொருவர் இருக்கிறாரா என்று பாருங்கள் என்றார். வருவாய் துறையினர் போய் பார்த்துவிட்டு, ஆம். அப்படி ஒருவர் இருக்கிறார் என்றார்கள். உடனே, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொண்டு போய் கொடுங்கள் என உத்தரவிட்டார். அன்று அது பெரிய தொகை. பழகியவர்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் கொடுப்பது வேறு. ஆனால், முகமே தெரியாத ஒருவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்தான்.
ஒருமுறை பாடலாசிரியர் அண்ணன் மருதகாசி மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க எம்.ஜி.ஆரைப் பார்க்க சத்யா ஸ்டூடியோ போயிருக்கிறார். ‘ஓ பையன், திருமண செய்யும் அளவுக்கு பெரியவனாகி விட்டனா?’ எனக் கேட்டவர், அலுவலகத்தில் உட்காரச் சொல்லியிருக்கிறார். அங்கே அவரே எதிர்பார்க்காத ஒரு தொகையைத் தந்தனுப்பி இருக்கிறார்கள். அவர் நேரே என்னிடம் வந்து இதைச் சொல்லி கண்கலங்கி நெகிழ்ந்துவிட்டு போனார்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, தமிழுக்காக தமிழ் இனத்துக்காக உண்மையாக உதவியவர் எம்.ஜி.ஆர் மட்டுமே என்பது. 1980ல் இருந்து விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் என் வீட்டில் தங்கியிருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கிறார். நான் சட்டமன்ற மேலவை துணைத் தலைவராக இருக்கிறேன்.
தீவிரவாதி, பயங்கரவாதி எனச் சித்தரிக்கப்பட்ட ஒருவர் ஆளுங்கட்சியின் பொறுப்பில் இருக்கிற ஒருவருடைய வீட்டில் இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அதனால், என் மீது எம்.ஜி.ஆருக்கு கோபதாபங்கள் இருந்தது. பிறகு, என்னையும், பிரபாகரனையும் புரிந்து கொண்டார். ஒருநாள் இரவு 12 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் பிரபாகரனை அனுப்பி வையுங்கள். நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்றார். நான் மறுநாள் பிரபாகரனைத் தோட்டத்துக்கு அழைத்துப் போனேன். நீண்ட நேரம் பேசிவிட்டு 2 கோடி ரூபாய் கொடுத்தார். அதற்குப்பிறகு அரசாங்கத்தின் காசோலையாக ரூ.4 கோடி கொடுத்தார். நிறைய விமர்சனங்கள் வந்தது. அதனால், அந்தக் காசோலைக்குப் பதிலாக தன்னுடைய கையில் இருந்து 4 கோடி ரூபாய் கொடுத்தார். மொத்தம் ஆறு கோடி ரூபாய். ஆனால், அதற்குப் பின்னாலும் நிறைய பணஉதவிகள் செய்தார். எனக்குத் தெரிந்து பத்து பதினைந்து கோடிகள் இருக்கும்.
அதன்மூலமாகதான் விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியளவில் போனது. தமிழ் மக்களுக்கென்று தனி தேசம் அமைய வேண்டுமென ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். ஒருநாள் ஆயுதப் புரட்சி மூலமாக தமிழீழத்தை வென்றெடுக்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்று பிரபாகரனிடம் கேட்டார். பிரபாகரன் சிறிது நேரம் யோசித்துவிட்டு நூறு கோடி ரூபாய் ஆகும் என்றார். உடனே, நான் தருகிறேன் என்றார்.
அதேபோல் எல்லோருக்கும் உணவிட்டு மகிழ்ந்தவர். ‘உண்டு பசியாற, கண்டு பசியாறியவர்’ என்று அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். அவர் என்றும் தனித்து உணவு சாப்பிட்டதில்லை. எப்போதும் இருபது பேராவது அவருடன் சேர்ந்து மதிய உணவு உண்பார்கள். அதுதான் அவருக்குப் பிடிக்கும்.
நான் வாரத்தில் ஐந்து நாட்கள் அவருடன் சேர்ந்து உணவு அருந்துவேன். செவ்வாய், வெள்ளிக்கிழமை எம்.ஜி.ஆர் சைவம் மட்டுமே சாப்பிடுவார். ஆனால், எனக்கு சைவம் பிடிக்காது. அதனால் அந்த நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன். எம்.ஜி.ஆரும், ‘ஓ,
செவ்வாய் கிழமையா? இன்னைக்கு சைவம்ல, அதான் புலவர் தப்பிச்சு போயிட்டாரு’ எனக் கிண்டல் பண்ணுவார்.
என்னுடைய, ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அவர் நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே...’ பாடல் அவருக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. அந்த வரிகளை குடும்ப நலத்துறையிடம் சாலையோர போர்டுகளில் எழுதி வைக்கச் சொன்னார். அவர் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த சமுதாயத்தில் என்றும் நிலைத்து நிற்கிற மாமனிதர்.
(சந்திப்பு: செண்பா)
டிசம்பர், 2017.