காதல் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் அந்த உணர்வுகளை மனதிற்கு கடத்தும் அழகிய திரைப்படம் தான் ‘அழகி‘.
பள்ளிப்பருவ காலத்து இனக்கவர்ச்சியை நடனம், பாடல் என்று விலாவாரியான காதல் கதையாக காட்சிப்படுத்துவது தான் தமிழ்த் திரையுலகின் இலக்கணம். ஆனால் அப்படி ஒரு டூயட் இல்லாமல், நடனம் இல்லாமல் தமிழில் காதல் படம் எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் தங்கர் பச்சான்.
சண்முகம், தனம் ஆகிய பாத்திரங்களின் மென் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் தங்கர். எல்லோருடைய பள்ளி பருவத்திலும் தனக்கோ, நண்பர்களுக்கோ நிகழும் நிகழ்வுகளை, அனுபவங்களை துல்லியமாக சொல்வதால், எளிதில் வயப்படுத்தி விடுகிறார். பள்ளிக் காலம், திருமணத்திற்கு பிந்தைய காலம் என்று பயணிக்கும் திரைப்படத்திற்கு பலம் ராஜாவின் இசை. ‘பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி‘, காலகாலத்திற்கும் மனதில் இழைந்தோடும் மெலடி. ‘ஒளியிலே தெரிவது‘, புலன்களை லயிக்க வைக்கிறது.
காதல் என்ற வார்த்தையை உணராமலே இருவரும் காதல் வயப்படுவதும், புரிந்த வயதில் காதல் இருப்பதை சொல்லிக் கொள்ளாமலே இருப்பதுமாக கதையை பின்னி, காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே ஒரு காதல் படத்தை எடுத்து, பார்ப்போர் மனதில் காதலை கடத்தி சிறப்பானதொரு ‘ காதல்‘ படத்தை எடுத்திருக்கிறார் தங்கர்பச்சன்.
பதினைந்து வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும் போதும், முதன்முறை பார்த்த அதே உணர்வு தான். நூறு வருடங்கள் கழித்து பார்த்தாலும் அதே உணர்வு இருக்கும் என்றே தோன்றுகிறது.
நவம்பர், 2018.