உடமையாக்குதல்

உடமையாக்குதல்
Published on

நம் தலைமுறைக்கு முன்பிருந்தே, பெண் மீதான ஒடுக்குமுறை சிந்தனை தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதை பெண்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது இருக்கின்ற பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் வளர்ந்து வருவதால் சுதந்தரமாக செயல்பட வேண்டும் என நினைக்கிறார்கள். பெண்கள் இப்படி யோசிப்பதை அவர்களுடைய இணையர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இது சார்ந்த பிரச்சனைதான் இப்போது அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன். அதேபோல், பாலியல் குறித்த புரிதலும் இங்கு சிக்கல் நிறைந்ததாக உள்ளது.

அன்பு என்பது இங்கு என்னவாகப் பார்க்கப்படுகிறது என்பதில் சிக்கல் இருக்கின்றது. உடைமையாக்கிக் கொள்வதைத்தான் அன்பு என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அன்பு என்பது, இணையரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான்.

பெண்களுக்கான விஷயங்களைப் பெண்களே தன்னிச்சையாக செய்ய முற்படும்போது, அதை ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதில் தான் பிரச்சனை ஏற்படுகிறது. பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்தாமலும், ஒடுக்காமலும் இருக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கிறோம். பெண்களுக்கு ஆண்கள் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்பது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், அதில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது.

ஆண் பெண் உறவில் இருவருக்குமான சிந்தனை உயர்ந்த அளவில் இருக்க வேண்டும். பெண்ணுக்கான வெளி உறுதிசெய்யப்பட வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கும் போது தான் பெண்கள் விட்டுச்செல்ல வேண்டும் என நினைப்பார்கள். 

 -செம்மலர் அன்னம்

உழைப்பு சுரண்டல்

கண்மணி பாண்டியன்

ஆண்கள் பெண்களுடைய வாழ்க்கையில் பல பரிணாமத்தில் இருக்கிறார்கள். அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக, நண்பனாக, மேல் அதிகாரியாக, உறவினராக இருக்கின்றனர். இப்படி எத்தனையோ விதத்தில் ஆணும் பெண்ணும் இந்த உலகத்தில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக ஆண்களிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் அன்பு, மரியாதை, நம்பிக்கை, சமத்துவம் போன்ற இந்த  நான்கையும் தான். உறவிற்கு இந்த நான்கு மதிப்பீடுகளும் மிக அடிப்படையானவை. யாரிடம் எந்தளவிற்கு நெருக்கம் இருக்கின்றதோ, அதற்கு ஏற்றார்போல், அவர்கள் மீதான மதிப்பீடுகளின் அளவு மாறும் என்று நினைக்கிறேன்.

உறவில் பெண்களுக்கு மிக அதிக அளவில் நம்பிக்கை தேவைப்படுகிறது. இதில் தான் நிறைய உறவுகள் முறிந்து விழுகின்றன. அதேபோல், ரொம்ப முக்கியமான விஷயம் மரியாதை. நிறையப் பெண்கள் தங்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று நினைத்து அமைதியாக இருந்துவிடுவார்கள். அது ரொம்பவே பாவம். பெண்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது மிகவும் அடிப்படையான விஷயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆண்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.

அலுவலகங்களில் குறைவான அனுபவம் கொண்ட ஆண்  பெரிய உயரங்களை எட்டுவதைப் பார்க்கிறேன். ஆனால் அதே இடத்தை பெண்கள் அடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. கிட்டதட்ட அதுவும் ஓர் உழைப்புசுரண்டல் தான். பெண்களை சமமாக நடத்துவதற்கு நாம் தயாராக வேண்டும்.

பெண்கள்  தாம்  எதிர்பார்க்கின்ற அன்பு, மரியாதை, நம்பிக்கை, சமத்துவம் ஆகிய நான்கு மதிப்பீடுகளையும் அவர்கள் ஆண்களுக்கும் அளிக்க வேண்டும். இது இரு பாலருக்குமானது.

நட்பும் நம்பிக்கையும்

சுமித்ரா பிரசாத்

வித்தியாசங்கள் இருப்பதால் தான் ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் இருக்கின்றனர். இரு பாலினத்துக்கும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றும் உணர்வு ரீதியாகவும் வித்தியாசங்கள் உள்ளன. இதுமட்டுமில்லாமல், பல்வேறு வித்தியாசங்களை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆண்கள் என்றால் அழக்கூடாது, பெண்கள் என்றால் சத்தமாகப் பேசக் கூடாது, கத்திச் சிரிக்கக் கூடாது.

இன்றைக்கு ஆண்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் இந்த சமூகக் கட்டமைப்பு தானே. அதை நாம் தானே உருவாக்கியிருக்கிறோம். ஆணுக்கு ஒரு விதமாகவும், பெண்ணுக்கு மற்றொரு வித- மாகவும். இந்த கட்டமைப்பில் ஆணுக்கும் ஆபத்து இருக்கின்றது. பெண்ணுக்கும் ஆபத்து இருக்கின்றது. பிற்போக்குத்தனமான இந்த கட்டமைப்பிலிருந்து பெண்கள் வெளிவரும் போது தான் இந்த சமூகம் பதற்றமடைகிறது. அப்படி வெளிவரும் பெண்கள் மீது பட்டம் கட்டுகிறது.

அதேபோல், இந்த சமூகம் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பிலிருந்து வெளிவரும் ஆண்கள், பெண்களை சமமாக மதிக்கின்றனர். அவர்கள் நல்ல நண்பனாகவும் தோழனாகவும் இருக்கக் கூடிய அளவுக்குப் புரிதல் இருக்கின்றது. பெண்களை சமமாக நடத்தக் கூடிய ஆண்களையும் இந்த சமூகம் மோசமான பட்டம் கட்டத் தவறியதில்லை.

சமூகத்தின் மற்றும் தனிமனிதர்களின் உறவு பற்றிய பார்வை, நோக்கம் மாறவேண்டி-யிருக்கிறது. உறவு பற்றிய விழிப்புணர்வு ஆண் பெண் இருவருக்கும் வேண்டும். இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் வேலைப்பளு என்பது அதிகரித்திருக்கிறது. அதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன தொழில் நுட்ப உலகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனாலும் நம்முடைய சமூக அமைப்பு அப்படியே இருக்கின்றது. குடும்பத்திற்கு ஆண்களின் பொறுப்பு என்பது அதிகரிக்க வேண்டும். என்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தே

சொல்கிறேன். என் கணவர் நல்ல நண்பர். அவர் நண்பராக இருப்பதால் தான் என்னால் இவ்வளவு தூரம் வளர்ந்து வர முடிந்திருக்கிறது. இந்தியா முழுவதும் இன்று தனியாகப் பயணிக்கிறேன். அவர் என்னை நம்புகிறார். உறவில் அன்பு மட்டும் போதுமானது கிடையாது. ஒருவரை புரிந்து கொண்டு, ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் உதவ வேண்டும். இரண்டு பேரும் புரிதலுடன் வாழ்க்கையை முன் நகர்த்த வேண்டும்.

நவம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com