உங்கள் அர்த்தக் கற்பிதங்கள் வேறு!

உங்கள் அர்த்தக் கற்பிதங்கள் வேறு!
Published on

வேதனையுடன்,  அதிருப்தியுடன், பேருவகை-யுடன், தீராத குறையுணர்ச்சியுடன், கசப்புணர்ச்சி-யுடன், பழையபடி துளிர்க்கும் நம்பிக்கைகளுடன், சிலுவை சுமக்கப் பிறந்தவன் கலைஞன். கைக்கு எட்டாது நிற்கும் கனவும், எட்டிய மறுகணம் புளிப்பதும் இத்தொழிலின் விதிபோலும்.' & சுந்தர ராமசாமி.

அர்ப்பணிப்புடன் கலைக்குள் கிறங்கிக்கரைகிற தேர்ந்த நல்கலைஞர்களுக்கு அதென்ன ஏழாம் பொருத்தமோ... அவனுக்கு எந்த நிதியமும் ஒட்டுவதேயில்லை. சல்லடையில் ஊற்றிய தண்ணீராய் அது ஓடிவிடுகிறது. பின்பு மறுபடியும் பரிசில் வாழ்க்கை பாணனாய் அலைந்து திரிகிறான். இது பணம் சார்ந்தது கூட அல்ல. அவன் வாத்சல்யமாய் வரித்துக்கொண்ட கலை சார்ந்தது. அவனது ஈர மனம் சார்ந்தது.

அக்மார்க் ஒரிஜினல் கவிஞன் கண்ணதாசன், ‘நான் ஜனாதிபதியைப் போல் சம்பளம் வாங்குகிறேன். ஆனால், இந்தியாவைப் போல் கடன் வாங்குகிறேன்' என்று அதனால்தானே சொல்லும்படி நேர்ந்தது. தானாய்த் தேடியதும், வலிந்து வந்து சேர்ந்ததுமாய் கர்ப்பம் தரித்த அவனது பல கவலைகள் பனிக்குடம் உடையாமலே ஆண்டு பலவாய் அவனுள் கனத்துக்கிடப்பது ஒரு பக்கம். எல்லாவித லௌகீகக் கணக்குகளுக்கும் அப்பால், அவனது கலை அவனை எப்பவும் தள்ளியே வைத்திருப்பது இன்னொரு பக்கம். அதனால் தான் அவன் இப்படி எழுதினான்.

‘போட்ட கணக்கிலொரு

புள்ளி தவறாமல் கூட்டிக் கழித்துக்

குறையாப் பொருள் வளர்க்கும்

நாட்டுக்கோட்டை மரபில்

நானும் பிறந்தவன்தான்

ஆனாலும் என் கணக்கோ

அத்தனையும் தவறாகும்.

கூட்டுகின்ற நேரத்தில்

கழிப்பேன். குறையென்று

கழிக்கின்ற நண்பர்களைக்

கூட்டுவேன். கற்பனையைப்

பெருக்குவேன். பின் அத்தனையும்

பிழையென்று துடைப்பத்தால்

பெருக்குவேன். ஏதேதோ

பெரும் பெரிய திட்டங்கள்

வகுப்பேன். வகுத்ததெலாம்

வடிகட்டிப் பார்த்தபின்பு

சிரிப்பேன்.

அடடா.. ஓ..

நான் தெய்வத்தின் கைப்பொம்மை.'

ஒரு நிஜக்கலைஞனின் வாழ்வைச் சொல்லும் அரிய கவிதை இது. பொதுவாக கற்பனை ஏகாந்தத்தில் பறந்து திரிந்து சேகரித்து கலைக்கும் மானுட வாழ்வுக்கும் கையளிக்கிற கலைஞன் சுய வாழ்வில் வீட்டுக்கணக்கில் பற்று வரவில் கவனமற்றுப் போகிறான். அவனுக்கு அதை நிர்வகித்து காப்பாற்றித்தர ஆதுரமும் அக்கறையும் மிகுந்த இன்னொரு பாசக் கை தேவைப்படுகிறது. அப்படி அது அமையாத கலைஞனுக்கு, நித்திய கண்டம் பூரண ஆயுசுதான். அப்படி பூரண ஆயுசு என்றுகூட சொல்லிவிட முடியாது. கலையில் மட்டும் ஒருமித்து மற்றதிலெல்லாம் சிதறும் கலைஞனை மரணமும் ப்ரிய நிழலாய் தொடரத்தான் செய்கிறது. அதற்கு அவனும் ஏதுவாகவே இருக்கிறான். அப்படி இல்லாவிட்டால், ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? அதிலும் இந்த நாற்பதையொட்டிய வயதுகள், விசேஷமாக வறுமை பிடுங்கும் இந்தியாவில், எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்திருக்கின்றன. தமிழிலும் பாரதி, புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, மு. தளையசிங்கம் என்று எத்தனை இழப்புகள்' - இப்படி இன்னொரு கலைஞன் ‘ஜே ஜே சில குறிப்புகளில்' சொல்ல நேர்ந்திருக்குமா..?

பணம் கலைஞனுக்குத் தேவைதான். வாழ்வின் தேவைகளுக்காக ஓரளவு அவன் அதை விரும்பவும் செய்கிறான். கலைக்கு ஆயுளைத் தின்னக் கொடுத்து, எளிய சன்மானத்தை கலைஞன் சம்பாதிக்கவும் செய்கிறான். ஆனால், அந்தச் சொற்பப் பணத்தையும் நிர்வகிக்கத் தெரியாத அலைக்கழிப்பே அவனை ஆயுள் வரை அல்லல்பட வைக்கிறது. ஆடம்பரங்களுக்கல்ல; அத்தியாவசியங்களுக்குக்கூடச் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரியாமல் துயர்படும் ஜீவன் அது. இது ஏன் நிகழ்கிறது..? திரிகால வர்த்தமானமின்றி ஓர்மித்து கலையில் மூழ்குவதால் நிகழும் மனச்சமனநிலையின்மை அது. ஒன்று வசப்பட்டால் இன்னொன்று அஸ்தமிக்குமென்ற மாறா சாபத்தின் விளைவு.

சரி, பொருளாதாரத்தில் வெற்றியும் பெற்ற கலைஞர்களே இல்லையா என்றால், அது மிக மிக அபூர்வம். அவன் இயல்பில் அது கூடி வரும் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை. அப்படி அவன் எதைப் பெற்றாலும் பெற்றதையெல்லாம் இந்தச் சமூகத்துக்கு அவன் திரும்ப அளித்துவிடுபவனாகவே வாழ்ந்து மறைகிறான். அவனைப் பொதுப் புத்தி அழைக்கும் பெயர் லூஸு.

பொதுவாக கலையென்ற சாரமான கேக்கின் க்ரீமை மட்டும் நாக்கால் நக்கிவிட்டு, அந்தச் சிறு ருசியாலேயே தனக்குக் கலை முழுக்க வசப்பட்டதாய் நம்பி, தனக்குத் தானே வித வித நாமகரணங்கள் சூட்டிக்கொண்டு, அதன்பின் அஜீரணத்தில் தான் கக்குவதையெல்லாம் தந்திரமாக பல கோணத்தில் வியாபாரம் செய்து, பொருளாதாரத்தில் வெற்றி பெற்று, தனக்கும் கலைஞன் என்ற ஒப்பனையைப் பூசிக்கொண்டு எக்களிக்கும் கீழ்மைக் கழிசடைகள் கலைஞன் என்ற வரையறைக்குள் வாரா. அவை கலைக்குச் சத்ரு. அவற்றின் வேலைகள் வேறு. பணம், பதவி, பவிஷு, விருதுகள், அதிகாரத்தை நத்தி நத்தி அதிகாரம் பெறுதல், அதீதமாய்ப் புகழ்ந்து புகழ்ந்து வேண்டியதை அடைதல் இப்படிப் பலப்பல மறைமுக நிரல்கள் அவைகளிடம். நிஜமான அர்த்தத்தில் கலைஞன் என்ற சொல் இவற்றால்தான் சூறையாடப்பட்டிருக்கிறது. பத்தும் பத்தாதற்கு கலைஞன் என்ற சொல்லுக்கு மூலப்பாடம், பதவுரை, பொழிப்புரை எல்லாம் சொல்லி முழங்கும் கூச்ச நாச்சமற்றவை அவை.

அசல் கலைஞனுக்கு நியாயமாய் சேர வேண்டியவற்றையும் கலைஞன் என்ற பெயரால் ஆக்ரமிக்கும் போலிகள். இந்தப் பீடைகளின் உற்சவ உலாக்களாலேயே எல்லாவற்றிலும் நாலாந்தரமே முதலிடத்தில் நிற்கிறது.

லௌகீகச் சிரமங்களுக்குப் பயப்படுபவன் ஒரு போதும் கலைஞன் ஆகிவிட முடியாது. அவன் வாழ்வின் கிராஃப் எப்போது ஏறும் எப்போது சமநிலைக்கு வரும், எப்போது கீழிறங்கும் என்று யாராலும் கணிக்க இயலாது. இவ்வளவு நாள் வாழ்ந்த கலை வாழ்வை, ஓர் அற்பப் பயனுக்காக ஒரு கலைஞன் தூக்கித் தந்துவிட முடியாது. அதிகாரம் மிரட்டுகிறபோதும், அல்ப சபலங்களுக்காக ‘காசு பணம் துட்டு மணி மணி' என்று ஆதாய இனிப்பை நீட்டுகிறபோதும் ஒரு நல் கலைஞன் ஒருபோதும் சோரம் போய்விடமாட்டான்.

கலைஞன் என்ற தலைப்பில் கொரோனா காலத்தில் இப்படி ஒரு கவிதை எழுதினேன். மொழிபெயர்ப்பாளர்கள், கே. எஸ், லதா ராமகிருஷ்ணன், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் இளங்கோ மூவரும் அதை உடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்னை நெகிழ வைத்தனர். கே. எஸ், டிஸ்கவரி பேலஸ் வெளியிட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பிலும் இந்தக் கவிதையைச் சேர்த்துள்ளார்.

கலைஞன்

கோவில்களும் திறக்காமல்

உலகியக்கம் ஸ்தம்பித்து

சப்தமொடுங்கிய நேரத்தில்

சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து

நாதஸ்வரக் கலைஞன்

நாத ஆலாபனையில் உருக்குகிறான்

பச்சைக்கிளிகளும் புறாக்களும்

ராகவழி திரிந்தலைந்து

கோபுரங்களுக்குப் பறக்கின்றன

தீர்த்தக்குளத்தின் சொற்ப நீரில்

மீன்கள் சிலிர்த்து

வான் நோக்கி இதழ் குவிக்கின்றன

கோசாலை பசுக்கள் மேயாது வெறிக்க

நாக மண்டபத்து உயிரினங்கள் சுருண்டுகிடக்க

கடவுளும் மெல்ல நடந்து

திட்டி வாசலை நெருங்கிவிட்டார்

வளி மண்டலத்தையே

சுநாதத்தால் நிரப்பிக்கொண்டிருந்த கலைஞன்

வாசிப்பை நிறுத்த வேண்டியிருந்தது

இலவசமாய் பெறுவதற்கான வரிசையில் இடம் பிடித்து வயிற்றையும் நிரப்ப வேண்டி. வளி மண்டலத்தையே நாதத்தால் நிரப்புபவனாயிருந்தாலும் அவனின் யதார்த்த விதி இதுதான்.

என் வாழ்வையே எடுத்துக்கொள்ளுங்கள்... சொந்த ஊரில் கோடிக்கணக்கான சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு கலைக்காக விட்டேத்தியாய் பட்டணம் வர எது என்னைத் துரத்தியிருக்கும்..? சொத்து பணம் எதுவும் வேண்டாமென எது உதற வைத்திருக்கும்..? மூணு டஜன் பேருக்கு சாப்பாடு போட்டவன் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு யார் வீட்டுக் கல்யாணத்திலேயோ அழைக்காமல் ஓடிப்போய் சாப்பிட ஆரம்பித்து, பாதியில் பசி மறைந்ததும் வெட்கம் பிடுங்கித் தின்ன எது என்னை அழ வைத்திருக்கும்..? கொரோனா காலத்திலும் யாரிடமும் கையேந்தாமல் சில நாட்கள் கேழ்வரகுக் கூழை எது - என்னை, என் குடும்பத்தை குடிக்க வைத்திருக்கும். கொரோனோ சிகிச்சைக்கு அடிப்படைப் பணமின்றிப் பொது மருத்துவனையில் நூற்றுக்கணக்கான மக்களோடு மக்களாக, தரையில் படுத்து இருமி இருமி எது என்னை உயிருக்குப் போராட வைத்திருக்கும்..? என் பாடே பல பிரச்சனையில் இருக்கையில் கொரோனாவில் தந்தையை இழந்த இரு குழந்தைகளைத் தத்தெடுத்து என் குழந்தைகளாக வளர்க்கும் பொறுப்பை எது என்னை ஏற்க வைத்திருக்கும்..? என்ன ஏன் எப்படி என்றெல்லாம் எதுவும் எனக்கு யோசனை இல்லை. நிர்கதியாய் பாதியில் படிப்பு நிற்கும் நிலையில் இருந்த இரு குழந்தைகள் மட்டுமே எனக்குக் கண்களில் நின்றது. தர்ஷிணி என்ற திருநங்கை அவர்கள் பெங்களூரில் வாழ்ந்த கஷ்டமான வாழ்வு சொல்லும் தரமன்று. தங்கையும் கவிஞருமான கார்த்திகா முகுந்த் அவரைப்பற்றிச் சொன்னதும் அவருக்காகத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் பேச, அவர் உதவி செய்தார். சிறப்பு அனுமதி பெற்று அவரைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். என்னைப் போன்ற பல்கலைக்கழக காமராஜ் போன்ற நண்பர்கள் சிலரின் எளிய உதவிகள் மூலம் அவர் இப்போது முதுகலை தமிழ் முடித்துள்ளார். அவருக்காக தமிழியன் என்ற நண்பர் அவரது ஐ.ஏ.எஸ் படிப்புக்கு இப்போது உதவ முன்வந்துள்ளார். இப்படி என் பத்தொன்பது வயது தொடங்கி இயங்கிவரும் விதத்தைச் சொல்வது தற்பெருமையென கூசி நாணுகிறேன். இதையே நான் வேறு வழியின்றிதான் சொல்ல நேர்ந்தது. கலை என்பது ஆரவார அலங்கார மேடை முழக்கமோ, உள்ளீடற்ற வெறும் சொற்களால் ஆன எழுத்தோ அல்ல. பணமோ புகழோ அல்ல. அது வேறுவிதமான ஒரு வாழ்வு. கலையும் மேன்மை மிகு கலைஞர்களின் ஆக்கமும் அவர்கள் வாழ்வுமே எனக்கு இவற்றைச் சொல்லித் தந்தன. இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றால், இதையெல்லாம் செய்வதே திரும்ப திரும்ப செய்வதே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கலைஞனும் பைத்தியக்காரனும் ஒன்றுதான். என்ன, அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாது... கலைஞனுக்குத் தெரியும்... அவ்வளவுதான் வித்யாசம்.

கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி சார் ஒரு முறை சொன்னார் : ‘ரவி, ஒவ்வொரு ஜீவனும் அததற்கான பாதையை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. அதை மாற்ற யாராலும் முடியாது என்று வேதத்தில் ஒரு வரி வருகிறது. அது நமக்கெல்லாம் பொருந்தும் என்றார்.' அது எந்த வேதமோ யார் சொன்னதோ, எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வாசகம்தான் எவ்வளவு சத்தியமானது.

சிரமங்கள் யாருக்கு இல்லை. அவரவர் அளவில் எல்லோர்க்குமிருக்கிறது. அதற்கெல்லாம் யாரும் காரணமில்லை. யார் மீதும் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. இது நான் தேர்ந்துகொண்ட வாழ்வு. அது இப்படித்தான். இந்தத் தெளிவையும் கலைதான் எனக்குத் தந்திருக்கிறது. உன்னதக் கலையும் உத்தமக் கலைஞர்களும் அவர்கள் செம்மாந்த வாழ்வும் - பணம், பணம் மட்டுமே வாழ்வு அல்ல என்பதைத்தான் எனக்கு மறுபடி மறுபடி சொல்லித் தந்தபடியே இருக்கின்றன. காதிருப்பவன் கேட்கக் கடவன்.

பிப்ரவரி, 2023.

logo
Andhimazhai
www.andhimazhai.com