ஏறக்குறைய 32 ஆண்டுகள். 1986லிருந்து, அவரின் இறுதி மூச்சு அடங்கும் வரை எனக்கொரு அப்பாவாகவும் தலைவராகவும் இருந்தவர் கலைஞர். பதினேழு வயதில் சினிமா கனவுகளுடன் சென்னை வந்தேன். கவிதை எழுதுவேன். எழுதியதையெல்லாம் தொகுத்து, புத்தகமாக்கினேன். அதற்கு ‘சூரியனைப் பார்க்காத சூரிய காந்திகள்' என தலைப்பு வைத்தேன். இந்தப் புத்தகத்தை கலைஞர் வெளியிட்டால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, சின்னக்குத்தூசியிடம் சொன்னேன். அவர் எங்க மாவட்டத்துக்காரர் என்பதால் நன்கு பழக்கம். அவர் என்னை, ஆற்காடு வீராசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பிறகு கலைஞரின் அறிமுகம் கிடைத்தது. நான் விரும்பியபடியே, கலைஞர் புத்தகத்தை வெளியிட, அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது, கலைஞரின் கதை, வசனத்தில் மு.க.ஸ்டாலின் ‘ஒரே ரத்தம்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்புக் கொடுத்தார் கலைஞர். ஆனால், தயாரிப்பாளருக்கு அது பிடிக்கவில்லை. பாடல் எழுதியதற்கு அவர் பணம் கூட தரவில்லை.
ஒரே ரத்தம் படம் வெளியான அன்று, கலைஞர் என்னை வீட்டுக்கு அழைத்தார். அதில் நடித்திருந்தவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, ‘உன் படத்துக்கு பாட்டு எழுதியிருக்கான். உன் கையால கொடு. இன்னும் அவன் நல்லா வரணும்' என்றார்.
அந்தசமயத்தில், நண்பர்கள் சிலர் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருந்தனர். கலைஞர் கதை வசனம் எழுதிக் கொடுத்தால், படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். இதை ஆற்காடு வீராசாமியிடம் சொன்னேன். அவர் கலைஞரிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டார். அப்படித்தான் ‘காவலுக்கு கெட்டிக்காரன்' உருவானது. இளையராஜா இசையமைத்த அந்தப் படத்திற்கு எல்லா பாடலையும் நான்தான் எழுதினேன்.
பின்னர், கவிஞர் கனிமொழியின் முயற்சியால், கலைஞரின் ‘தென்பாண்டி சிங்கம்' நாவலை தொலைக்காட்சித் தொடராக எடுப்பதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது. அந்த சீரியலின் மூலமாகத்தான் நாசர், கீதா, மு.ராம
சாமி, பாண்டிச்சேரி ராஜீவ், கூத்துப்பட்டறை பசுபதி போன்றவர்கள் எல்லாம் அறிமுகமானார்கள். அந்த தொடர் கலைஞருக்குப் பிடித்துப் போனதால், அதை மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். ‘தென்பாண்டி சிங்கம்' கதையை கொஞ்சம் சமூக அக்கறை கொண்ட கதையாக மாற்றி ‘பாசக் கிளிகள்' திரைப்படமாக வெளிவந்தது. கலைஞர் கதை, வசனம் எழுத, அமிர்தம் இயக்கினார். நான் இணை இயக்குநராக பணியாற்றினேன்.
பாசக் கிளிகள் படத்தில் வேலை பார்த்ததன் மூலம் கலைஞருடன் மேலும் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். ஒன்றரை ஆண்டுகள், தினமும் பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் அவருடன் சேர்ந்து பணியாற்றினேன்.
அந்தப் படத்தின் கதை விவாதத்திற்காக கலைஞர், இராம. நாராயணன், அமிர்தம் ஆகியோருடன் நானும் பெங்களூர் சென்றேன். கலைஞரின் மூத்த மகள் செல்வி வீட்டில் பதினைந்து நாட்கள் தங்கி படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதினோம்.
ஒருநாள், கலைஞர் பால்கனியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் எழுதிய பச்சைக் கிளி என்ற கவிதையை அவரிடம் சொன்னேன்.
‘நீ போய் அந்த புத்தகத்தை எடுத்து வா' என்றார்.
கலைஞர் தங்கியிருந்த செல்வி அக்கா அறையில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்து வந்தேன். அப்போது இராம நாராயணனும் அமிர்தமும் மேலே வந்துவிட்டனர். கவிதையை சத்தமாகப் படித்துக் காட்டச் சொன்னார். படித்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர், ‘யோவ் உனக்கு ஒண்ணு தெரியுமா...? நான் உயிரோடு இருக்கும் வரை பாராட்டமாட்டாங்கயா...! இறந்தபிறகுதான்யா பாராட்டுவாங்க' என்றார்.
பிறகு, பாசக்கிளிகள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கலைஞர், “இந்த திரைப்படத்திற்காக என்று இல்லாமல்; சுமார் இருபது ஆண்டுகளாக, எப்போதும் என் உணர்வுகளைப் புரிந்து கொண்ட தம்பி இளையபாரதி' என பாராட்டிப் பேசினார். இப்படி என் மீது மிகுந்த அன்பு.
ஒருமுறை, பாடல் எழுதுவதற்கு அவரிடம் டியூன் கொடுத்துவிட்டு, பேசிக் கொண்டே இருந்தேன். ‘உனக்கு லேட்டாகிடுச்சி, வீட்டுக்குக் கிளம்பு' என்றார். அவரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள ஹோட்டலில் பரோட்டாவும் சிக்கனும் ஆர்டர் பண்ணிவிட்டு,
சாப்பிட உட்காருகிறேன். கலைஞரிடமிருந்து அழைப்பு. ‘ஒரு இருபது நிமிடத்தில் உன்னால் திரும்பி வர முடியுமா? டியூனுக்கு ரெண்டு லைன் எழுதியிருக்கேன். அப்படியே சொல்றேன், எழுதிக்கிறியா' என்றார்.
கல்லாவிலிருந்து டிஷ்யூ பேப்பரை எடுத்து அவர் சொன்ன ரெண்டு வரிகளையும் எழுதிக் கொண்டேன். ஆர்டர் பண்ணிய சாப்பாட்டை அப்படியேவிட்டு விட்டு அவரின் வீட்டுக்கு சென்றேன். குழந்தை மாதிரி, ‘நீ சொன்ன டியூனுக்கு நான்கு வரி எழுதிட்டேன் யா... இது டியூனுக்கு வருகிறதா..? பாடிக் காட்டு...' என்றார். பாடினேன்.
மறுநாள் காலையில், கோபாலபுரம் செல்கிறேன், ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி என எல்லோரும் இருக்கிறார்கள். இரவு நடந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லி கிண்டல் செய்தார்.
2006 தேர்தலில் திமுக வென்றது. வாழ்த்து தெரிவிக்க பலரும் வர, அன்று ஒருநாள் முழுவதும் அவர் பின்னாடியே நின்றிருந்தேன். மாலை வாழ்த்து சொல்லிவிட்டு வந்தவன், பிறகு அவரிடம் பேசவே இல்லை. நான்கு நாள் கழித்து, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இராம. நாராயணன் அறிவிக்கப்படுகிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்றேன்.
‘தலைவரை நீங்க மூணு நாளா பாக்கலயாமே?' என்று கேட்டார்.
‘அவர் முதலமைச்சராகிட்டாரு. அவரைப் போய் எதுக்கு தொந்தரவு பண்ணனும்?' என்றேன்.
‘இல்லை...இல்லை அவர் உங்க மேல கோபமா இருக்கார். நீங்க இப்பவே போய் பாருங்க' என்றார்.
அமிர்தம் சாரை சென்று சந்தித்தேன்.
‘தலைவர் உங்களை தேடிக்கிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க' என்றார். இருவரும் புறப்பட்டு, கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றோம். வீட்டின் உள்பகுதியில் உள்ள ஹாலில் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு தேர்தல் பிரச்சார வேன் வந்து நின்றது. கலைஞர் கீழே இறங்குகிறார். உச்சி வெயிலில், ரோட்டில் நின்றுகொண்டு வீட்டின் உள்ளே பார்த்தவர், ‘நான் தேடிக்கொண்டிருந்த ஆள் இதோ இருக்கிறார்' என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.
‘என்னையா உன்னை மூணு நாளா ஆள காணோம். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராக உன்னை நியமிக்கிறேன்' என்றார்.
ஆச்சர்யப்பட்டுப்போன நான், ‘நீங்க எது சொன்னாலும் செய்கிறேன்' என்றேன்.
அவரின் நேர்காணல் எல்லாம் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளிவர இருந்த நிலையில் என்னை அழைத்தார். ‘நீ தான் ரொம்ப வித்தியாசமா யோசிப்பியே...இந்த நேர்காணல் தொகுப்புக்கு ஒரு தலைப்பு சொல்!' என்றார்.
‘மாலை சொல்கிறேன்' என கூறிவிட்டு, வீட்டிற்கு வந்து நூறு தலைப்புகளை எழுதி எடுத்துச் சென்றேன். அதில் எனக்கு பிடித்த தலைப்பைச் சொல்லி, ‘நீங்கள் கடல் மாதிரி ஐயா, உங்களை அள்ளவும் முடியாது அளக்கவும் முடியாது, இந்த புத்தகத்திற்கு ‘கையில் அள்ளிய கடல்' என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்' என்றேன். அவருக்கும் பிடித்திருந்தது. எவ்வளவு பெரிய தலைவர். பாசமலர் படத்துக்குப் பெயர் வைத்தவர். தமிழ்நாட்டின் பல அடையாள சின்னங்களை உருவாக்கியவரின் புத்தகத்திற்கு நான் தலைப்பு வைத்ததை என்னவென்று சொல்வது.
கலைஞரைப் பற்றி ஏறக்குறைய ஐந்நூறு கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லா கவிதைகளையும் அவரே படித்து, முரசொலியில் வெளியிட்டிருக்கிறார். அவர் இருந்தபோதே புத்தகமாக வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், இப்போதுதான் வெளிவர இருக்கிறது.
ஒருமுறை கலைஞரின் முழு வாழ்க்கையும் பேசும் கவிதை ஒன்று எழுதியிருந்தேன். கலைஞரிடம் ஒரு பிரதியும் மற்றொரு பிரதியை முரசொலி ஆசிரியராக இருந்த பஷீரிடமும் கொடுத்தேன். கலைஞரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்த்தோம், வரவில்லை. அதன் பிறகும் வரவில்லை. கலைஞர், உடனே பஷீரை அழைத்து சத்தம் போட்டார். மறுநாள் முழுபக்க அளவில் அந்த கவிதை வெளிவந்தது.
நான் எழுதிய கவிதையைப் பலரிடம் காட்டி படித்துப் பார்க்க சொல்வார். சின்னத்திரை கலைஞர்கள் எல்லாம் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த அழைப்பிதழின் பின் அட்டையில், கவிதையொன்று போடுவதற்கு நண்பர் விடுதலை கேட்டிருந்தார். கொடுத்தேன். அழைப்பிதழில் கவிதையை மட்டும் போட்டிருந்தார்கள், என் பெயரைப் போடவில்லை.
நிகழ்வு நடந்த நாள் அன்று, கலைஞர் அந்த அழைப்பிதழை அமிர்தம் சார் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். கவிதையை அவரிடம் படித்துகாட்டி, இது இளையபாரதி எழுதியது என்று
சொல்லியிருக்கிறார். அதேபோல், என்னை திராவிட இயக்க கவிஞர் என பிரகடனப்படுத்தியிருக்கிறார். இது மிகப்பெரிய அங்கீகாரம்.
கலைஞர் கிரிக்கெட் அபிமானி என்பது போல், செல்லப்பிராணிகள் அபிமானியும் கூட. பலவிதமான நாய்களை வளர்த்தவர்.
ஒருமுறை அவரை சந்திக்கச் சென்றேன். வீட்டின் வாயிற்படியில் சடையுடன் நாய் ஒன்று உட்கார்ந்து இருக்கிறது. கலைஞர் காரிலிருந்து இறங்கி வந்து, அந்த நாயிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்கிறார். ‘பாரதி, இந்த நாய் பெயர் கண்ணா. நான் சாப்பிட்டால் தான் இந்த நாய் சாப்பிடும். என் கார் சத்தம் கேட்டால் ஓடிவந்திடும்' என்றார்.
வீட்டிற்குள் அவர் முதலில் போக, அவருக்குப் பின்னால் நாயும், அதற்குப் பின்னால் நானும் சென்றேன். உள்ளே சென்றதும் ‘தென்பாண்டி சிங்கம்' சீரியலை பார்க்கத் தொடங்கினார். சீரியல் தொடங்குவதற்கு முன்னர், கலைஞர் பேசுவார். தொலைக்காட்சியில் கலைஞர் பேசுவதைப் பார்த்த அந்த நாய் பக்கத்திலிருந்த கலைஞரையும் பார்க்கிறது. தொலைக்காட்சியையும் பார்க்கிறது. நாயின் தலையை கோதிவிட்டு, ‘அப்பாவைப் பாரு...அப்பாவைப் பாரு' என்றார்.
இளகிய மனம் கொண்ட மனிதர். அவரின் முன்னால் யாராவது அழுதுவிட்டால், மனம் இரங்கிவிடுவார். கலைஞரிடம் இறுதிவரை அந்த ஈர இதயம் இருந்தது.