ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்

ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்
Published on

கிராமத்தின் காலை நேர பரபரப்பு அடங்கும் பதினோரு மணிக்கு மேல் தெருக்களில் வியாபாரிகளின் கூப்பாடுகளைக் கேட்கலாம். உப்பு, புளி, மிளகாய் தொடங்கி ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம் என பழைய இரும்புப் பொருட்களை வாங்குபவர் வரையில் வந்துபோவார்கள். எல்லா பொருட்களுக்கும் பணத்திற்கு ஈடாக நெல் பரிமாறப்படும். “அறுப்பு முடியட்டும். கல்யாணத்தை  வைச்சுக்கலாம்” என்பார்கள். “குறுவை வெள்ளாமை சரியா இல்லை. தாளடியில பார்க்கலாம்” என்று கடன்காரர்களிடம் சொல்லிவைப்பார்கள். நெல்தான் வாழ்வின் ஆதாரமாக இருந்தது.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்று நினைவில்லை. ஆனால் தெருவில் உப்பு மூட்டை சுமந்துவரும் கழுதையை அடிக்கடி பார்க்கலாம். மிகத் தளர்வாக கட்டப்பட்ட உப்பு மூட்டை கழுதையின் மேல் இருபக்கமும் கிடக்கும். வேகுவேகுவென நடைபோடும் அதன் பின்னே உப்பு... உப்பேய்.. என்று கூவிக்கொண்டே உப்பு வியாபாரி வருவார். படி, மரக்கால் கணக்கில் உப்புத் தருவார். எதுவும் பேசாத பிள்ளையைப் போல வீடு வீடாகப் போய் நிற்கும் அந்த ஜீவன். வாங்கும் உப்புக்கு இணையாக நெல்லைக் கொடுப்பார்கள். சிலநேரங்களில் கடனுக்கு வாங்கிக்கொண்டு, அறுவடை முடிந்ததும் நெல் தருவார்கள். உப்பு வியாபாரி ஊர்க்காரர் என்பதால் வாங்குவதும் கொடுப்பதும் எதார்த்தமாக இருக்கும்.

உப்பு விற்ற நேரம் போக அவர், வீட்டில் கயிறு திரிக்கும் வேலையைப் பார்ப்பார். தேங்காய் மட்டைகளை நீரில் ஊறவைத்து, அதில் இருந்து நாரெடுத்து கயிறு தயாரிப்பார்கள். அதுவும் ஒரு வருமானம். இன்று அதே கிராமத்துத் தெருக்களில் உப்பு வியாபாரி வருவதில்லை. கழுதையும் இல்லை. மளிகைக் கடைகளில் உப்பு பாக்கெட்டாக வந்துவிட்டது.  சிறுபிராயத்தில் அரணாக்கயிறு கட்டாமல் இருக்கமுடியாது. அம்மாவும் பாட்டியும் திட்டுவார்கள். வீட்டுக்கே வந்து அரணாக்கயிறு அளந்து கொடுத்துவிட்டுப்போகும் அந்த மனிதரை மறக்கமுடியாது. இரு தோள்கள் முழுக்க கருப்பு, சிவப்பு என பலவண்ணங்களில் நூற்றுக்கணக்கான அரணாக்கயிறுகளை போட்டுக்கொண்டு வருபவர் பால்ய காலத்தின் நினைவுத்தடங்களில் நடந்தபடியே இருக்கிறார்.

ஓ...மத்... திராவகம்... என்று ஒருவிதமான ராகத்தில் குரல் மீட்டிவருபவரைப் பார்த்திருக்கிறீர்களா? ஊரில் குழந்தைகள், சிறுவர்களுக்கு வயது உப்புசமாக இருக்கு, வலிக்குது என்றால் ஓமத் திராவகம் கொடுப்பார்கள். வயிறு பிரச்சினை தீர்ந்துவிடும். வீட்டில் பெண்கள் பெரிய பாட்டிலில் ஓமத்திராவகத்தை வாங்கி வைத்துக்கொள்வார்கள். அது பாட்டி வைத்திய மருந்துகளில் ஒன்றாக கிராமங்களில் இருந்துவந்தது. மரப்பெட்டியிலும் பைகளிலும் ஓமத்திராவகம் நிரப்பிய பாட்டில்களுடன் சைக்கிளில் வந்துபோவார். அந்தக் குரல் இன்றும் மனதில் கேட்கிறது. ஓ..மத்... திராவகம்.

 திருவிடைவாசல் கிராமத்தில் இருந்து செட்டியார் ஒருவர், கூண்டுவண்டியில் ஊருக்குள் எண்ணெய் விற்க மாதத்தில் ஒரு நாள் வருவார். அந்த வண்டியும் வருகிற ஸ்டைலே தனிதான். தேர்போல அசைந்தாடி அவ்வளவு மெதுவாக வரும். வரும். அதில் வேறு சக்கரத்தில் கரக் முரக் சத்தம் வரும். கருகருவென இருப்பார். ஒருகால் தாங்கலாக நடப்பார். கொஞ்சம் குண்டாக இருப்பார். அவர் நடந்து அதிகமாக பார்த்ததில்லை. வண்டியை ஒருவர் ஓட்ட, இவர் பின்னால் உட்கார்ந்து எண்ணெய் விற்பார். கை வைத்த காலரில்லாத கதர்ச் சட்டை அணிந்திருப்பார். காவனூரிலிருந்து வளையல்காரர் வருவார். சைக்கிள்தான் வாகனம். கற்கள் தாறுமாறாக விரவிக்கிடக்கும் சாலைகளைக் கடந்துவருவது மலையேறுவதுபோலத்தான். அந்தச் சூழலில்தான் வளையல்காரர் போன்ற சிறு வியாபாரிகள் கிராமத்துத் தெருக்களில் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

வளையல்கள் அழகாக அடுக்கப்பட்ட பெரிய பெட்டி கேரியரில் இருக்கும். அதனை பழைய ட்யூப்பை வைத்து இறுக்கமாக கட்டியிருப்பார். பெண்களை தங்கச்சி.. என்று அன்பாக அழைப்பார். அவருக்கு உயரம் ரொம்ப கம்மி. ஊர்ப்  பெண்களுக்கு அவர்களது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி  உரிமையுடன் கையைப் பிடித்து ரப்பர் வளையல்கள் போட்டுவிடுவார். வாரத்தில் ஒரு நாள் வளையல்காரரை ஊரில் பார்க்கலாம். சிலர் மழைக்கு ஒரு தொழிலும், வெயிலுக்கு வேறு தொழிலும் பார்ப்பார்கள். அவர் அப்படியல்ல. நாளும் பொழுதும் வளையல் விற்பனைதான் பிரதானம்.

பள்ளியில் படிக்கும் காலங்களில் கொரடாச்சேரியில் இருந்து தினமும் வந்துபோன ஐஸ்காரர் பற்றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. ராமநாதபுரத்துக்காரர். பஞ்சம் பிழைக்க வந்தவர். நெடுநெடுவென உயரம். சிரித்த முகம். தலைமுடியை தூக்கிவாரி சீவியிருப்பார். பேச்சில் வட்டார வழக்கு. பால் ஐஸ், திராட்சை ஐஸ், குச்சி ஐஸ் என விதவிதமாக வைத்திருப்பார். பணத்திற்குப் பதிலாக நெல்கூட வாங்கிக்கொள்வார். ஐஸ் பெட்டிக்கு வெளியே நெல் பை தொங்கும். சின்ன டப்பாவில் எடுத்துவரும் உணவை கிடைக்கும் இடத்தில் வைத்து சாப்பிடுவார்.

ஊரில் ஒருத்தர் விடாமல் எல்லோரையும் தெரிந்துவைத்திருப்பார். வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வார். பையன்கள் வம்பு செய்தால், இன்னார் பையன்தானே நீ. அப்பாக்கிட்ட சொல்றேன் என்பார். நான் கல்லூரிக்குச் சென்றபோது ஐஸ் வியாபாரத்தை அவர் விட்டிருந்தார். இன்று வெண்ணிலாவா, ஸ்ட்ராபெரியா என்று பார்லர்களில் கேட்கும்போது, அவருடைய ஐஸ் பெட்டி சத்தம் காதோரம் ஒலிக்கிறது.

மன்னார்குடி பக்கத்தில் இருந்து மாட்டுவண்டிகளில் மரவள்ளிக்கிழங்கை விற்க வருவார்கள். திருவிழாக் காலங்கள் தவிர சாதாரண நாட்களிலும் ஊரில் பலூன்காரரைப் பார்க்கமுடியும். பலூனை ஊதி கடுகுகள் போட்டுக் கொடுப்பார். அதை ஆட்டினால் ஒருவிதமான ஒலி எழுந்து கலகலப்பூட்டும்.

பழைய அலுமினிய, இரும்புப் பொருட்களை வாங்கிப்போகும் மனிதர், உச்சிவெயில் நேரத்தில் வந்துபோகிறவர். உழைத்து உருக்குலைந்த தேகத்துடன் சைக்கிளை உந்தி மிதித்துவருவார். “பழைய இரும்பு, அலுமினியப் பாத்திரங்கள் எடுக்குறதேய்ய்ய்” என்ற குரல் கேட்கும் திசையில் அவர் இருப்பார். ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம் என்பது கிராமத்தில் பொதுவழக்காக இருக்கிறது. அப்படி யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. வீட்டில் உடைந்து நசுங்கிக் கிடக்கும் அலுமினியப் பாத்திரங்கள், இரும்புக் கம்பிகளைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வெங்காயம் வாங்கிக்கொள்வார்கள்.

இவர்கள்தான் சிற்றூர்கள்தோறும் வீட்டு வாசல்களில் நகரும் ஷாப்பிங் மால்களை கொண்டுவந்தவர்கள். இப்போது அந்த முகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என் தலைமுறையுடன் இவர்களும் விடை பெற்றுக்கொள்கிறார்கள். 

ஆகஸ்ட், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com