பாளையங்கோட்டையில் பி.யூ.சி. படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரைப்பட ஆசையில் சென்னைக்கு ஓடிவந்தேன். சென்னையில் சாப்பாட்டுக்கு வழி? அதற்காக மத்திய அரசின் பொதுசுகாதாரத் துறையில் கிடைத்த வேலையில் சேர்ந்துகொண்டேன். சாப்பாட்டுக்குச் சிக்கலில்லை என்றாலும், நாடகங்கள் போடத் தொடங்கினேன். லலிதாஞ்சலி குழுவின் மூலம் என்னுடைய நாடகங்கள் மேடையேறின.‘பிஞ்சுமனம்’,‘சுக்கிரதிசை’, ‘வரப்பிரசாதம்’ போன்ற நாடகங்கள் புகழ்பெற்றன..” கால எந்திரத்தில் பின்னகர்ந்து பழைய ஞாபகங்களை மீட்டியபடி தொடர்ந்தார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
“லலிதாஞ்சலி நாடகக் குழுவை நடத்திய நீலகண்டன்- லலிதா தம்பதியினரின் வீட்டின் ஓர் அறையில்தான் வாசம். என்னுடைய கதைகளையும் நடவடிக்கைகளையும் பார்த்து அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதனால் தம் குடும்பத்தின் நபராகவே என்னை நடத்தினார்கள். 1967 ஆம் ஆண்டிலிருந்து 72 வரை அங்குதான் இருந்தேன்.
72ஆம் வருடம் எனக்கு வீட்டில் வரன் பார்த்தனர். அப்போது நான் உதவி இயக்குநர். வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கியபோதுதான் லலிதா அக்காவின் மகள் ஷோபா மீதுள்ள காதலை நான் புரிந்துகொண்டேன். என்னையறியாமல் எனக்கும் ஷோபா மீது காதல் இருந்திருக்கிறது. முன்பு அதே வீட்டில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசினோம். அவர்கள் குடும்பத்தோடு பலமுறை வெளியில் சென்றோம். ஆனால் அப்போதெல்லாம் காதல் தெரியவில்லை. என் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றவுடன் ஷோபாவைக் காதலிக்கும் விஷயத்தை வெளிப்படுத்தினேன்.
நாங்கள் கிறிஸ்துவர்கள். அவர்களோ இந்து. இதனால் எங்கள் வீட்டில் என் காதலுக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் பிடிவாதமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் என் அம்மா, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். கோடம்பாக்கத்திலுள்ள தேவாலயத்துக்கு ஷோபாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்த அருட்தந்தையிடம் விஷயத்தை விளக்கினேன். அவரோ, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்கவேண்டும் என்றால், பெண் மட்டுமின்றி அவருடைய பெற்றோரும் கிறிஸ்துவமதத்தைத் தழுவவேண்டும் என்றார். எனக்கு உடன்பாடில்லை. என்னைக் காதலித்த பாவத்துக்கு ஷோபா வேண்டுமானால் மதம் மாறலாம். அதுவே சரியானதல்ல, அவர்கள் குடும்பத்தையும் மதம் மாறச் சொல்வது சரியே அல்ல என்று நினைத்து அங்கிருந்து வந்துவிட்டேன்.
அப்போது நான் சிவாஜி சார் நடித்த உத்தமன் படத்தில் உதவி இயக்குநர். நேராக அவரிடம் விசயத்தைச் சொல்லி நீங்கள்தான் என் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் என்று கேட்டேன். சம்மதித்தார். கமலா அம்மாளோடு திருமணத்துக்கு வந்து தலைமையேற்று நடத்திவைத்தார். மங்களகரமான அந்தத் தாயாரின் கரங்களால் வாங்கி ஷோபாவுக்கு தாலி கட்டினேன்.
திருமணத்துக்கு என் அப்பாவும் ஒரு அண்ணனும் வரவில்லை. அம்மா, ஒரு அண்ணன், தங்கை ஆகியோர் வந்திருந்தனர். 73 -ல் திருமணம். 74-ல் விஜய் பிறந்தான். அப்போது கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் சிறிய அறையில் குடியிருந்தோம். பதினைந்து ரூபாய் வாடகை. அந்த ஒற்றை அறையில்தான் குளிப்பது, சமைப்பது எல்லாம். நான்கு குடும்பங்களுக்கும்
சேர்த்து ஒரு பொதுக்கழிப்பறை. அப்படிப்பட்ட இடத்தில் வசித்தபோதும் என் மீது அன்போடும் பாசத்தோடும் ஷோபா இருந்ததை நான் என்றும் மறக்கமுடியாது. அப்போது ஷோபா, என்னிடம் கேட்ட ஒரே ஒரு விஷயம், ‘நீங்க பெரிய டைரக்டரா வருவீங்க, அப்ப எனக்கு பாத் அட்டாச்சோட ஒரு பெட்ரூம் கட்டிக்குடுங்க’ என்பதுதான். சாலிகிராமத்தில் நான் கட்டிய வீட்டில், நாங்கள் முதன்முதல் குடியிருந்த வீட்டின் அளவுக்குக் குளியலறை கட்டினோம். அந்த அறையைக் கட்டிமுடித்த பிறகு ஷோபாவைக் கூட்டி வந்து காட்டி, இப்ப சந்தோசமா? என்று கேட்டேன்.
உதவி இயக்குநர் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஓராண்டு வருமானம்; அடுத்தாண்டு வறுமை. இளையராஜா, கங்கைஅமரன் ஆகியோருடைய கச்சேரிகளில் பாடுவேன். ஒரு கச்சேரிக்குப் போனால் இருநூறு ரூபாய் கிடைக்கும். அந்த வருமானம் எங்களுக்குப் பெரிய உதவி. எந்தக் காரணம் கொண்டும் கடன்வாங்கி வாழ்க்கை நடத்தக்கூடாது, எங்கள் பெற்றோரிடம் உதவி என்று போய் நிற்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். அதை முழுமையாக எற்றுக்கொண்டு எனக்கு முழுஒத்துழைப்புக் கொடுத்து வாழ்க்கை நடத்தியதையும் மறக்கமுடியாது.
இன்றைக்கு முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய்க்குப் பால் கொடுக்க அமுல் டின் வாங்கவேண்டும். அதன் விலை பத்து ரூபாய். அதை வாங்கக் காசில்லாமல் ஒருநாள் அலைந்தேன். நான் அப்போது பத்து படங்களில் உதவிஇயக்குநராக வேலைசெய்துவிட்டேன். பத்து நடிகர்களை எனக்குத் தெரியும். அவர்களில் பலரிடம் பத்து ரூபாய் கேட்டேன். யாரும் தரவில்லை. காலையிலிருந்து நாங்கள் இருவரும் சாப்பிடவும் இல்லை. அந்த நேரத்தில் உதவி இயக்குநராக இருந்த நண்பன் அழகப்பன்- பின்னாட்களில் ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ உட்பட பல படங்களை இயக்கியவர்- பணம் கொடுத்தார். என் வாழ்க்கையில் கஷ்டத்தின் உச்சத்தை அன்று நான் பார்த்தேன். அந்த நேரத்திலும் என் மீது கோபம்கொள்ளாமல் என் மீது ஷோபா வைத்த அன்பும் நம்பிக்கையும்தான் இவ்வளவு வளர்ச்சிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.
இரண்டு படகுகளில் பயணம் செய்தால் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர முடியாது என்று பைபிளில் இருக்கிறது. அதன்படி நம்முடைய வாழ்க்கை சினிமாதான் என்று முடிவெடுத்து 325 ரூபாய் மத்திய அரசு நிறுவனத்தின் சம்பளத்தைவிட்டுவிட்டு நூறு ரூபாய் சம்பளத்துக்காக உதவி இயக்குநர் வேலையில் சேர்ந்தேன். அப்போது என் குடும்பத்தார் என்னைத் திட்டித் தீர்த்தார்கள். அம்மா என்னை உதவாக்கரை என்று சொன்னார். திருமணத்துக்குப் பிறகு அம்மாதிரி நெருக்கடியான நேரங்களில் நான் எடுத்த எல்லா முடிவுகளையும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர் ஷோபா.
நான் மூன்று படங்கள் இயக்கிய பிறகும் என்னிடம் ஒரு ஸ்கூட்டர்தான். ஒருநாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஷோபாவையும் விஜய்யையும் உட்காரவைத்து ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு வந்தேன். எங்களுக்குப் பின்னால் காரில் வந்த ஜெய்சங்கர், என்னைப் பார்த்ததும் காரை நிறுத்தி வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டுப் போனார். உடனே அவர் வீட்டுக்குப் போனேன். அங்கு நின்றிருந்த சிவப்புக்கலர் 7121 என்ற எண்ணைக்கொண்ட ஃ பியட் காரைக் காட்டி எடுத்துக்கொண்டு போ என்று சொன்னார். என்னிடம் பணம் இல்லை வேண்டாம் என்று மறுத்தேன். பணமே கொடுக்கவேண்டாம் சும்மா எடுத்துக்கொண்டு போ. உனக்கு மனமில்லை என்றால், எப்போது முடிகிறதோ அப்போது பணத்தைக் கொடு என்று சொன்னார். வேறுவழியே இல்லை. காரை எடுத்துக் கொண்டு போகவேண்டும். அதற்குமுன் காரே ஓட்டியிராத நான், தைரியமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தேன். அப்போதும் என்னை நம்பி என்னுடன் வர அவர் தயங்கவில்லை. அந்தக் காருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயாக ஆறுமாதங்களில் அறுபதாயிரம் கொடுத்து அந்தக்கடனை கழித்தேன்.
எங்கள் திருமணத்தை என் குடும்பத்தினர்தான் எதிர்த்தார்கள். அதற்காக என் குடும்பத்தின் மீது கொஞ்சமும் ஷோபா வருத்தப்பட்டதில்லை. நான் உயர உயர என் அம்மாவைத் தங்கத்தட்டில் வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றியவர் ஷோபா. 22 ஆண்டுகள் அம்மா எங்கள் வீட்டில்தான் இருந்தார். அவர்களை அன்புடன் கவனித்துக்கொண்டது ஷோபாதான். தனக்கு ஏதாவது தேவையென்றால் என்னிடம் கேட்கமாட்டார் அம்மா. ஷோபாவிடம்தான் கேட்பார். அம்மா மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினர் எல்லோரையும் வசியம் செய்துவிட்டார் என்றே சொல்லலாம்.
விஜய்யை முதலில் பள்ளியில் சேர்க்கும்போது, நேசனாலிட்டியில் இந்தியன் என்று எழுதிவிட்டேன். அதற்கடுத்து மதம் என்று கேட்கப்பட்ட இடத்திலும் சாதி என்ற இடத்திலும் இந்தியன் என்றே எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு தவறாக எழுதிவிட்டீர்கள் மாற்றி எழுதிக்கொடுங்கள் என்று சொன்னார்கள். நான் சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னேன். இரண்டு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால், குழந்தையை அப்பாவின் மதத்தில் சேர்த்துவிடலாம் என்று சொன்னார்கள். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சண்டைபோட்டு பள்ளியில் சேர்த்தேன். அப்போதும் நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று என்னை முழுமையாக நம்பியவர் ஷோபா.
உங்களுக்குத் தெரியுமா? நான் ஒருநாள் ஹோட்டலில் சாப்பிட்டாலும் சம்மதிக்க மாட்டார். அந்தளவு என் மனைவி சமையலுக்கு நான் அடிமை. நன்றாகச் சமைப்பார். படப்பிடிப்புக்காக வெளியூர் போனாலும் கூடவே கூட்டிக் கொண்டு போய்விடுவேன். ஸ்டார்ஹோட்டலிலும் ரகசியமாக எலெக்ட்ரிக் குக்கர் வைத்து சமைத்துத் தருவார்.
ராஜேஷ்கன்னா படம் செய்யும்போது ஷோபாவை விட்டுவிட்டு மும்பை போய்விட்டேன். முதல்நாளே இரவு பனிரெண்டு மணிக்குப் போன் செய்து காலையில் முதல் ஃப்ளைட்டைப் பிடித்து மும்பை வா என்று சொல்லி விட்டேன்.
இவ்வளவு ஆண்டுகளில் ஷோபாவைப் பிரிந்திருந்தது நாற்பத்தைந்து நாட்கள்தான். எங்கள் குடும்பம் மொத்தமும் அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் வீட்டுக்குச் சென்றார்கள். எனக்கு தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால் என்னால் போகமுடியாத சூழல். அதனால் அவர்களுடன் ஷோபாவையும் விஜய்யையம் அனுப்பிவிட்டேன். நாள்தோறும் ஷேவிங் செய்யும் வழக்கமுள்ள நான் அவர்கள் அமெரிக்கா போன நாளிலிருந்து ஷேவ் செய்யவில்லை. அவர்கள் திரும்பிவரும்போது விமானநிலையத்தில் தாடியோடு நின்றிருந்த என்னைப் பார்த்து ஏன் இப்படி? என்று ஷோபா கேட்டபோது, ஏனோ தோன்றவில்லை என்று சொன்னேன்.
நான் மிகுந்த கோபக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களுக்குள் பலமுறை சண்டைகள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று தெரிந்ததும் உடனே அமைதியாகிவிடுவார் ஷோபா. இவருடைய அமைதி, சுமூகத்தை ஏற்படுத்திவிடும். சண்டை போட்டுவிட்டாலும் நான் முதலில் பேசிவிடுவேன். திரும்பிப்பார்த்து யோசித்தால், இவ்வளவு வருடங்களில் நாங்கள் பேசாமல் இருந்ததேயில்லை.” என்று பெருமிதப்பட்டார் எஸ்.ஏ.சி.
செப்டெம்பர், 2014.