இளம் தொழிலதிபர்கள்

இளம் தொழிலதிபர்கள்

Published on

ஒரு மாநிலமோ அல்லது ஓர் இனமோ முன்னேற வேண்டுமென்றால் மிகவும் அவசியத் தேவையாக இருப்பது அங்கே பெருமளவுக்கு தொழிலதிபர்கள் உருவாவது. ஒரு தொழிலை உருவாக்குபவர் பலருக்கு வேலை தருவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறார். அந்த விதத்தில் தமிழகப் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொண்டிருக்கும் இளம் தொழிலதிபர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களில் நம்பிக்கையூட்டும் இளைஞர்கள் சிலரை இங்கே காண்போம்.

செந்தில் நடராஜன், 30

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள கோவை பழமுதிர்நிலையம் கடைகளுக்குச் செல்பவர்கள் இதன் ஆரம்பம் 1965-ல் 300 ரூபாய் முதலீட்டில் சின்ன கடையாக உருவானது என்றால் நம்பச் சிரமப்படுவார்கள். கோவையில் நடராஜன் என்கிற கடின உழைப்பாளியின் உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இன்றைய 160 கோடிரூபாய் வருமானம் ஈட்டும் பழமுதிர்நிலையம். இதன் வெற்றிக்கதைக்கு மகுடம் சூட்டுகிறார் அதன் நிர்வாக இயக்குநர் செந்தில் நடராஜன். இவர் நடராஜனின் மகன். மென்பொருள் பொறியாளரான இவர் 2006-ல் இருந்து தந்தையின் தொழிலில் இணைந்துள்ளார். அவர் இணைந்தபின் கடைகளின் எண்ணிக்கையைப் பெருக்கினார். இப்போது தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் சேர்த்து 40 கடைகள் இருக்கின்றன. இதை இன்னும் பெருக்கும் திட்டம் உள்ளது. “ஆண்டுக்கு 8-10 கடைகள் புதிதாகத் திறக்கலாம் என்று நினைக்கிறோம். நன்கு பயிற்சி பெற்ற ஆட்களை அமர்த்தினால்தான் இந்த தொழிலில் வெற்றி பெறமுடியும்.” என்கிறார் அந்திமழையிடம் பேசிய செந்தில். “இப்போது பில்லிங் செய்வதை ஒருங்கிணைத்துள்ளோம். ஒரே இடத்தில் இருந்தே எந்த கடையில் எந்த பொருள் விற்பனை ஆகி உள்ளது என்று பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் பொருட்கள் வீணாவதைத் குறைக்க முடிகிறது. அத்துடன் பில்லிங் போடுவதை விரைவு படுத்த தொழில்நுட்பங்களையும் புகுத்தி உள்ளோம்” என்கிறார் அவர். சீசன்ஸ் என்ற பெயரில் ஜுஸ் பார்களையும் அறிமுகப் படுத்தியதும் இவரது யோசனைதான்.

***

அபிஷேக், 29 - அஸ்வின், 27

நாகர்கோவிலில் கோத்ரஜ் கம்பெனியின் மார்க்கெட்டிங்கில் வேலை பார்த்த அனுபவத்துடன் ஆச்சி மசாலாலாவை 1990 ல் தொடங்கினார் பத்ம சிங் ஐசக். ஆச்சி மசாலாவின் முதல்தயாரிப்பான குழம்பு மிளகாய்தூள் மசாலாவின் பார்முலாவை உருவாக்கியவர் ஐசக்கின் மனைவி தெல்மா.இன்று வருடத்திற்கு 700 கோடி ரூபாய் வியாபாரம் செய்யும் இந்நிறுவனம்160 வகையான மசாலாக்களை வியாபாரம் செய்கிறார்கள்.தற்போது ஆச்சி மசாலா நிறுவனத்தை ஐசக்கின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக நடத்திவருவது அவரது இரண்டுமகன்கள் அபிஷேக் மற்றும் அஸ்வின்.மூத்தவர் அபிஷேக் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவைக் கவனித்துக்கொள்ள, இளையவர் அஸ்வின் உற்பத்தியைக் கவனித்துக் கொள்கிறார்.அந்திமழைக்காக அண்ணா நகரிலுள்ள ஆச்சி மசாலாவின் அலுவலகத்தில் அபிஷேக்கை சந்தித்தோம்.

“ஆச்சி மசாலாவின் வெற்றி ரகசியம் இரண்டே விஷயம்தான். முதலில் தரமான பொருட்களை தயாரிக்கிறோம். இரண்டாவது தென்னகத்தின் எந்த குக்கிராமத்திற்கும் 6 நாட்களுக்குள் எங்களுடைய பொருளை கொண்டு சேர்ப்பதற் காக  3000 விநியோகஸ்தர்களை வைத்திருக்கிறோம்.புதிதாக ஒரு மசாலாவைஅறிமுகப்படுத்தியவுடன் ஒரு வாரத்திற்குள் எந்த கிராமத்திலும் நீங்கள் அதை வாங்க முடியும்” என்கிறார்.

அப்பாவிற்கு அடுத்து வியாபாரத்தை எந்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்போகிறார்கள் என்ற கேள்விக்கு, “தற்போது கீஞுச்ஞீதூ tணி ஞுச்t வகையில் 29 வகையான உணவு பொருட்களைஅறிமுகப்படுத்த உள்ளோம். பதப்படுத்தும் பொருட்கள் எதையும் சேர்க்காமல் ஒரு வருட காலத்திற்கு ஷெல்ப் லைப் உள்ளவாறு அதை தயாரித்துள்ளோம். இது பெரிய வரவேற்பைப் பெறும்.  அடுத்ததாக மத்திய கிழக்கு, கனடா, ஆப்பிரிக்கா என்று தற்போது 15 நாடுகளுக்கு ஆச்சி மசாலாவை ஏற்றுமதி செய்கிறோம். இதை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கமும்இருக்கிறது.” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

தென்னிந்தியாவில் கொடிகட்டி பறப்பது மட்டுமில்லாமல் வட இந்தியாவில் கோலோச்சும் எண்ணமும் இவர்களுக்கு இருக்கிறது. “வட இந்திய மசாலா வகைகளான ஜல்ஜீரா, பானிபூரி மசாலா போன்று அவர்களுக்கு தக்க மசாலா வகைகளை உருவாக்கி வருகிறோம். இதை 8 மாநிலங்களில் பரவலாக அறிமுகப்படுத்த உள்ளோம்.இனி ஆச்சி தென்னிந்தியபிராண்ட் கிடையாது.மொத்த இந்தியாவிற்கான மசாலாவின் அடையாளம்” என்று சிரிக்கிறார்.

ஆச்சி மசாலாவின் எதிர்கால திட்டம் மேலே  சொன்னது மட்டும்தானா அல்லது இன்னும் இருக்கிறதா என்ற நம் பார்வைக்கு பதில் வைத்திருக்கிறார் அபிஷேக். “ஆச்சி தண்ணீர்பாட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்போகிறோம்”.

தமிழக அரசேகூட  குடி நீர் பாட்டில் விற்கத்தொடங்கியிருக்கிறதே என்ற நம் கேள்விக்கு, “மக்களுக்கு சுத்தமான குடிநீர் மீதான கவனம் அதிகமாகி வருவதைத்தான் இது காட்டுகிறது.அதனால் இனி சுகாதாரமான பாட்டில் குடி நீரை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கைஅதிகமாகும்.ஆச்சியின் விநியோகஸ்தர்கள் மூலமாக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எங்களால் நுழைய முடியும்” உறுதியாக சொல்லும் அபிஷேக்கின் அடுத்த இலக்கு ஆச்சியை 1000 கோடி கம்பெனியாக உயர்த்துவது.

---

புட்கிங் சரத்பாபு 36

இன்றைக்கு 36 வயதாகும் சரத்பாபு 2006-ல் தொடங்கிய புட்கிங் நிறுவனம் 10 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. இதில் பணியாற்றுபவர்களில் 95 சதவீதம் பேருக்கும் மேல் ஏழ்மையான பின்னணி கொண்டவர்கள்.

சின்னவயதில் அம்மா இட்லி சுட்டு விற்ற பணத்தில் படித்து, பள்ளிச் செலவுக்காக புத்தகம் பைண்டிங் செய்து சம்பாதித்து கல்லூரிச் செலவுக்காக அக்காவின் நகைகளை அடகுவைத்து பணம் திரட்டி, படிப்படியாக மேலே வந்தவர் சரத்பாபு. அவருடையது ஒரு சாகசமான வெற்றிக்கதை. இன்று பலருக்கு அவர்களின் குடும்பங்களை தாங்குவதற்காக வேலை தரும் தொழிலதிபராக உருவாகி இருப்பது மிகச் சிறந்த விஷயம்.

“சென்னையில் இருக்கும் பல கல்லூரிகளுக்கு உணவு சப்ளை செய்கிறோம். பல புதிய உணவுகளை மெனுவில் சேர்த்துள்ளோம். இங்கிருந்து விரிவடைந்து பிற மாநிலங்களுக்கும் செல்ல இருப்பது எதிர்காலத் திட்டம்” என்று அந்திமழையிடம் தெரிவிக்கிறார் ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவரான சரத்பாபு.

சமூகத்துக்குப் பயன்பட வாழ்வது, மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வது சரத்பாபுவின் இன்னொரு முகம். அதற்காக அரசியலிலும் இறங்கினார் இவர். 2009-ல் சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டார். அதன் பின் வந்த சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டார். ‘’ நான் போட்டியிட்ட வேளச்சேரி தொகுதியில் நன்கு அறிமுகமானவன். சுயேச்சையாக நின்றாலும் நான் மூன்றாவது இடம் பெற்றது பெருமைதான்” என்கிறார். “அடிமட்ட மக்களின் பிரச்னை எனக்குத்தான் நன்றாகத் தெரியும். இதுதான் என் அரசியல் ஆர்வத்துக்குக் காரணம்” என்று உற்சாகத்துடன் விளக்கமளிக்கிறார் இந்த இளம் தொழிலதிபர்.

---

குமுதவல்லி, 39   

ஈரோடு தொழிலதிபரான எஸ்.கே.எம். மயிலானந்தன் அவர்களால் 1989 ல்,வேதாந்திரி மகரிஷியின் வழிகாட்டுதலுடன் உருவான எஸ்கேஎம் சித்தா ஆயுர்வேதா நிறுவனத்தை தற்போது நிர்வகித்து வருகிறார்  அவரது மருமகள் திருமதி குமுதவல்லி சிவக்குமார். “முதலில் மருத்துவம் இலவச சேவையாகத் தான் தொடங்கப்பட்டது.ஆனால் இலவசமாக கிடைத்ததால் மக்கள் சித்த மருந்துகளை முறையாக பயன்படுத்தவில்லை. அதனால் எங்களுடைய சித்த மருத்துவமனையில் சிகிச்சை மட்டும் இலவசம், மருந்திற்கு குறைவான தொகை ஒன்றை வைத்தோம்.எளிதில் கிடைக்காத கரிசாலைக் கற்பம், திரிபலா கற்பம் போன்ற தரமான மருந்துகள் எங்கள் நிறுவனத்தில் கிடைப்பதை அறிந்த மருத்துவர்கள் எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்த பிறகு மருந்து விற்பனையையும் தொடங்கினோம்” என்கிறார். பாரம்பரிய மருத்துவத்தின் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் இந்நிறுவனம் சென்ற ஆண்டில் 17 கோடி ரூபாய் வியாபாரம் செய்திருக்கிறது.

கேர் என்ற அமைப்பின் மூலமாக வசதியில்லாத மாணவர்களுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேதா படிப்பிற்கு உதவி செய்வது, நாடெங்கும் சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்திற்கான  செமினார்களை நடத்துவது போன்ற சேவைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். “முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட முதல் சித்தா, ஆயுர்வேதா மருத்துவமனையை உருவாக்கி இருக்கிறோம். 20 வருட நோயாளிகளின் மொத்த தகவல்களும் உள்ளது. இது வருங்கால ஆராய்சிக்கும் மருத்துவ முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்” என்றவர், இந்திய பாரம்பரிய மருத்துவத்தை முறையான ஆவணப்படுத்துதலுடன், இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இணைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதே தன் முன்னாலுள்ள சவாலாக கருதுகிறார்.

 சிருஷ்டி என்ற அமைப்பின் மூலமாக கருவுற்ற தாய்மார்களுக்கு கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான வகுப்புகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதற்காக ஜேசிஐ அமைப்பினால் வழங்கப்படும் இளம் இந்திய சாதனையாளர் விருதினை 2006 ல் பெற்றுள்ளார். இந்த வகுப்புகள் மூலமாக குழந்தை வளர்ப்பில் புதிய அத்தியாயத்தை துவங்கி இருக்கும் இவர் “கருவிலேயே கதை கேட்ட பிரகலாதன், அபிமன்யு கதைகளை கதைகளாக மட்டுமே வைத்துவிட்டோம். குழந்தையின் அத்தனை புலன்களுக்கும் நியூரல் பாத்வேயின் மூலமாக திறப்புகளை உருவாக்குவதன் மூலம் திறமையான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும்” என்கிறார். “பெண் தொழில் முனைவோருக்கு குடும்பத்தின் புரிதலும் ஆதரவும் மிக முக்கியம். அப்படி கிடைக்கும் பட்சத்தில் பெண்களின் உண்மையான திறமை தெரியவரும்” என உற்சாகமாகத் தெரிவிக்கிறார்.

---

நித்தின் ஜெகநாதன், 27

இரவு சாலைகளில் வாகனங்கள் செல்லும் முன்னிரவு நேரங்களில் விளக்குகள் மிகவும் மங்கலாக எரியும். வாகனங்களே செல்லாத நள்ளிரவில் விளக்குகள் பளிச்சென்று எரியும். பார்த்திருக்கிறீர்களா? இதைக் கட்டுப்படுத்தி விளக்குகளை ரிமோட் மூலம் தேவையான அளவுக்கு பிரகாசத்துடன் எரியவைத்து மின் சாரத்தை மிச்சம் பிடிக்க வைக்கும் கருவிகளை தமிழ்நாட்டில் நான்கு நகரங்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது கோவை அருகே உள்ள ஸ்னெல் எனெர்ஜி எக்யூப்மெண்ட் நிறுவனம். அதன் தலைவர் நிதின் ஜெகந்நாதனுக்கு வயது 27 ஆகிறது. கோவை அருகே உள்ள பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் 2008-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறவர்.  கடந்த ஆண்டு இந்நிறுவனம் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம்  செய்திருக்கிறது. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர் இவர். “பொறியியல் படித்தவுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்தேன். இடையில் கொல்கத்தா ஐஐஎம்-மில் எம்பிஏ படித்தேன். அங்கு படிக்கையில் ஜே.பி. மார்கனில் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்கில் இண்டர்ன்ஷிப் செய்தேன். பொறியியல்  பின்னணி உடைய நான் நிதி ஆலோசனை தொடர்பாக பணிபுரிவது அவசியமில்லை என்று அப்போது உணர்ந்தேன். என் தந்தை ஒரு வொர்க்‌ஷாப் நடத்திவந்தார். அவரும் ஒரு தொழிலதிபராக இருந்ததால் எனக்குள் இயல்பாகவே சொந்தத் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது” என்கிறார்.

‘’தொழில் தொடங்கிய உடன் அரசு டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதால் வேறொரு பெரிய நிறுவனத்துக்கு சப் காண்ட்ராக்டர் போல எரிசக்தி சேமிக்கும் கருவிகளை தயாரித்துக் கொடுத்தோம். பின்னர் இப்போது பல இடங்களில் நாங்கள் சப்ளை செய்த கருவிகளைப் பார்த்துவிட்டு அரசிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்கின்றன.” என்கிற நித்தினுக்கு சமீபத்தில் தான் திருமணமாகி உள்ளது.

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com