இலக்கியம்: இளம் படைப்பாளிகள்

இளைஞர் சிறப்பிதழ்
இலக்கியம்: இளம் படைப்பாளிகள்
Published on

தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களின் உதவியால் தடுக்கிவிழுந்தால் கவிஞர்கள், எழுத்தாளர்களின் மேல்தான் விழவேண்டும் என்கிற நிலை. அவ்வளவு பேரில் சில இளம் படைப்பாளிகளைத் தெரிவு செய்வது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஈழத்து எழுத்து என்ற பிரிவுகளின் கீழ் சிறந்த சில இளம் படைப்பாளிகளை இங்கே அடையாளம்  காண்பிக்கிறது அந்திமழை.

---

லக்ஷ்மி சரவணகுமார், 29

அவரும் இவரும் உவரும் தண்டி தண்டியாக நாவல்களைத் தயாரித்து வெளியிட்டு வாசகனை மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்கையில் வித்தியாசமான நாவல் மூலம் - உப்பு நாய்கள் - கவனத்தை ஈர்த்தவர் லக்ஷ்மி சரவண குமார். அதற்காக சுஜாதா விருதையும் பெற்றவர். சொல்லப்படும் வாழ்க்கையை இதுவரை சொல்லப்படாத முறையில் சொல்ல முயன்றிருப்பவர் இந்த இளைஞர்.  இப்போது திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் கிட்டும் அனுபவங்களுக்கு நான் புரியும் எதிர்வினையே என் எழுத்து”

---

அபிலாஷ்.ஆர், 32

அபிலாஷ் எல்லாத் துறைகளையும் ஒரு கை பார்த்திருக்கிறார். கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாவல் என்று கலந்து கட்டி முன்னேறுகிறார். கல்லூரியில் பணி புரிகிறார். புனைவுகளை விட அவருடைய படைப்பாற்றலும் தர்க்க ஒழுங்கும் தென்படுவது அவரது கட்டுரைகளில்தான். சினிமா, கிரிக்கெட், சமூகப் பிரச்னைகள், இலக்கிய வம்புகள் எல்லாமும் நேர்த்தியும் கூர்மையும் கொண்ட கட்டுரைகளுக்குப் பொருளாகின்றன. சில சமயங்களில் வாத்தியார் கைப் பிரம்பாக அவரது சொற்கள் அசைந்தாலும் புதியவர்களில் உரை நடையில் குறிப்பிடத் தகுந்தவர் இந்த இளைஞர்தான்.

“நிறைய எழுதப் பிடிக்கும், அதிகமாக உரைநடை எழுதியிருக்கிறேன் என்றாலும் கவிதை தான் லட்சிய வடிவம். இலக்கியம் போக பிடித்த துறைகள் உளவியல், உயிரியல், தத்துவம், பண்பாட்டு தத்துவம் போன்றவை”

---

கே.என். செந்தில், 32

தற்காலத் தமிழிலக்கியத்தில் சோர்ந்து கிடக்கும் துறை சிறுகதை. விரல் விட்டு எண்ணக் கூடிய புதியவர்களே சிறுகதைப் படைப்பில் ஈடுபட்டிருக் கிறார்கள். அந்தப் பட்டியலில் கே.என். செந்திலுக்கு நிச்சயமான இடம் இருக்கிறது. வாசிப்பின் மூலமும் தான் எதிர்கொள்ள நேரும் அனுபவங்கள் வாயிலாகவும் தொனியிலும் வடிவிலும் புதிய சிறுகதைகளை உருவாக்கும் பேராசை இந்த இளைஞருக்கு இருக்கிறது. ‘இரவுக் காட்சி’ என்ற தொகுப்பு அதற்குச் சாட்சி. அவினாசியில் கணக்காளராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது தொகுப்பு இந்த ஆண்டு வர இருக்கிறது.

“நான் வாழ்கிற இந்த ஒற்றை வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இல்லை. இதை விட்டு விலகி வேறு வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன். அதற்கு எனக்குக் கிடைத்த வழி இலக்கியம். அதில் பல்வேறு வாழ்க்கைகள். அவற்றையெல்லாம் ஒரே ஜென்மத்தில் வாழ்ந்து தீர்க்கத்தான் எழுத்தின் உலகத்துக்குள் வந்தேன்.”

---

ஸர்மிளா ஸெய்யத், 30

முப்பதாண்டுப் போருக்குப் பின்னர் இலங்கையிலிருந்து வரும் காத்திரமான இலக்கியப் படைப்புகள் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்களாலேயே அதிகம் எழுதப்படுகின்றன.குறிப்பாக இஸ்லாமியர்களால். அவர்களில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவர் ஸெர்மிளா ஸெய்யித். பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். கல்வி முகாமைத்துவம்,இதழியல், உளவியல் துறைகளில் பயின்றிருக்கிறார். பெண் விழிப்புணர்வுப் பணிகளிலும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர்.

‘சிறகு முளைத்த பெண்’ என்ற கவிதைத் தொகுதி ஸெர்மிளாவைக் கவிஞராக அடையாளம் காட்டியிருக்கிறது. ‘உம்மத்’ என்ற நாவல் மூலம் புனைகதையாளராகவும் அறிமுகமாக இருக்கிறார். இலங்கை மட்டக் கிளப்பில் வசிக்கிறார்.

“வெளிச்சத்தை நோக்கிய 

எனது பயணத்தில் ஒருநாள்

என் குலத்தை என்னைக் குற்றம் கண்டோரைச் சந்திப்பேன்

எங்கள் குலத்தின் பொக்கிஷமென

அந்நாளில் அவர்கள்

என்னைப் போற்றவும் கூடும்”

---

ஏன் எழுதுகிறேன்? கவிஞர் இசை

எழுதுவதற்கு என்று என்றென்றைக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றுண்டு. அது ஒருவனுக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒரு சேதி இருக்கிறது என்பது தான். ஒரு சாமானியனுக்கு எந்த சேதியும் இல்லையா என்றால், அவனுக்கும் சொல்ல ஒன்று உண்டு தான். ஆனால் அவனுக்கு சொல்லியே தீரவேண்டிய நெருக்கடியோ, பதைபதைப்போ இல்லை. நீட்டிப்படுத்தால் தூக்கம் வந்து விடுகிறது என்றால் எழுதுவதற்கு ஒரு அவசியமும் கிடையாது. மாறாக படுக்கையில் நாலாய் எட்டாய் சுருண்டு வளையும் பாம்பு எழுதியே தீரவேண்டி இருக்கிறது.

எது ஒருவனை படுத்தி எடுக்கிறது என்பது ஆளுக்கு தக்க மாறுபடும். அது ஒன்றாகவே இருக்க ஒரு கட்டாயமும் இல்லை.  லா.ச.ரா, தன்னை ஒரு சௌந்தர்ய உபாசகன் என்கிறார். இளவேனிலோ, “ சகோதரிகளே , உங்கள் ஸ்நான அறையை நன்றாகத் தாளிட்டுக் கொள்ளுங்கள். வெளியே ஒரு சௌந்தர்ய உபாசகன் காத்திருக்கிறான் “ என்று சொல்கிறார். சொல்லத்தான் செய்வார்.

தவிர எழுத்துக்காரனுக்கு இயல்பிலேயே ஒரு கோணல்  இருக்கிறது. அவன் தன் கோணலை இரசிக்கிறான். அந்த கோணலின் வழியே அவன் இந்த சலித்த உலகத்தை  புதிதாக்கிப் பார்த்துக் கொள்கிறான். நான் எல்லோரையும் போல அல்ல என்று அவன் முதலில் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். பிறகு ஊருக்குச் சொல்ல முனைகிறான்.

‘காக்கைக் குருவி எங்கள்  ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’

என்கிற பித்து இங்கிருந்து தான் புறப்படுகிறது.

இந்த வாழ்வை எழுதி எழுதித் தான் கடக்க வேண்டும் என்றவன் விரும்புகிறான்; நம்புகிறான். எழுத்து ஒரு வெளியேற்றமாக இருக்கிறது. எழுத்து தப்பித்தல் அல்ல என்கிறார் சுகுமாரன். தப்பித்தல் என்றால் எதாவது மாற வேண்டும் அல்லவா என்று கேட்கிறார். என் பதில் என்னவென்றால், நான் வெளியேறிச் செல்லும் இடத்தில் இங்கிருக்கும் எல்லாமும் இருக்கிறது. கூடவே கொஞ்சம் காற்றோட்டமும் இருக்கிறது. அது என்மூச்சுத்தவிப்பை சற்றேனும் குறைக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தனக்கேயான ஒரு வாழ்வு உண்டு. இவ்வுலகம் தொன்று தொட்டு சொல்லி வரும் உணர்வுகளை அவன் தன் கைகளால் தொட்டுப் பார்க்க விரும்பிகிறான். தன் விழிகளால் அள்ளிப்பருகப் பார்கிறான். யுகயுகமாய் கண்டு வந்த நிலவையல்ல அவன் காண்பது. இங்கு எழுத்து பிறக்கிறது. ஒரு கோடித் துயரங்களோடு ஒரு துயரம் சேர்ந்து கொள்கிறது. பலகோடிக் காதல்களோடு இன்னொரு காதலும் இணைந்து கொள்கிறது. இன்னொரு தீப்பந்தம் உயருகிறது. எண்ணற்ற நெம்புகோல்களோடு இன்னொரு நெம்புகோலும் சேர்ந்து கொள்கிறது.

தன் எழுத்தில் எதை சொல்ல வேண்டும் என்பதில் ஒருவருக்கு விரும்பியோ விரும்பாமலோ ஒரு  தேர்வு  நேர்ந்து விடுகிறது. வெவ்வேறு விஷயங்களால் இயக்கப் பட்டாலும் ஒரு குறிப்பிட்ட விஷயமே ஒருவரை எழுதத் தூண்டுகிறது. அல்லது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு விஷயம் என்று சொல்லலாம். வெவ்வேறு வண்ணங்களில் ஜாலம் நிகழ்த்திய எழுத்தாளுமைகள் சொற்பமே.

எதை எழுத வேண்டும் என்பதில் காலம் முக்கிய பங்கு கொள்கிறது.

சங்க இலக்கியம் “ அன்பின் ஐந்திணை” என்கிறது. நான் என்னுடைய காலத்தில் என்னுடைய தர்மத்தின் மீது நின்று கொண்டு “ பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விட முடியாது ” என்று எழுதுகிறேன். 

வேறு எந்தக் காலத்தையம் விடவும் ஒருவன் தன் அந்தரங்க உணர்வுகளுக்கு நேர்மை செய்ய வேண்டிய காலமாக இருக்கிறது இது. ஏற்கனவே சொல்லப்பட்ட எல்லா  தத்தவங்களும் அவன்  கண்முன்னே சிதைந்து போய் இருக்கின்றன. ஒருவன் தன்னை ஒரு சுதேசி என்று மார்தட்டிக் கொள்வான் எனில், அவன் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சாக வாய்ப்புள்ள வாழ்வு இன்றையது.

ஈழத்தில் நடைபெற்ற இன அழித்தொழிப்பின் போது 10 வரிகளை அடுக்கி கவிதை எழுத பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை. அப்படி எழுதி விட முடியும் தான். அதில் சில நல்ல கவிதைகளும் கிடைத்திருக்கும் தான். ஆனால் இன்றைய எழுத்தாளன் அப்படிச் செய்யாததற்கு அவன் படைப்பு வறுமை காரணம் இல்லை என்று நான் நம்புகிறேன். அவன் தன் அந்தரங்கத்தை மிக நேர்மையாக எதிர் கொண்டதின் விளைவே இது. அவனுக்கு தெரியும் குடித்து விட்டு விடுதி அறைகளை கண்ணீரால் மிதக்க விட்டது தவிர தான் வேறொன்றும் செய்யவில்லை என்று. வேறொன்றும் செய்ய முடியாதென்றும்.

---

போகன் சங்கர், 40

திருநெல்வேலிக்காரரான போகன் சங்கர் புதிய கவிதையில் ஒரு ஆச்சரியம். இதுவரை எந்த அச்சிதழிலும் கவிதைகளை வெளியிடாமல் முகப்புத்தகம், வலைத்தளங்களில் மட்டுமே எழுதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். யாருடைய  சாயலும் இல்லாமல் தனக்கான கவிதையைக் கண்டு பிடித்திருப்பவர். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வசிக்கிறார். மருத்துவத் துறையில் பணியாற்றுகிறார்.

“கவிதை, இலக்கியம் ஆகியவை என்னை ஈர்த்ததை விட தத்துவம், ஆன்மீகம் போன்ற விஷயங்கள்தான் என்னை அதிகம் கவர்ந்தவை. ஒருவேளை அந்தப் பாதிப்புகள்தான் என்னை வித்தியாசமான கவிதைகளை, யார் செல்வாக்கும் படியாத கவிதைகளை எழுதச் செய்வதாக இருக்கலாம்”

செப்டம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com