காங்கிரசின் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து புதிய படித்த வர்க்கம் சமூகத்தின் முன்னணிக்கு வந்தபோது புதிய கனவுகள் விரிந்தன. திராவிட இயக்கங்கள் மொழி, இனம், என்ற தளங்களுக்குள் மட்டுமே தங்கள் இயக்கங்களின் எல்லையை விரித்தன. மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மாற்ற சமூக மாற்றம் ஒன்று தான் வழியென்று மக்களிடம் சென்ற இடதுசாரிகளின் பின்னால் புதிய இளைஞர்கள் அணி திரண்டனர். அவர்கள் கலையை மக்களிடம் கொண்டு செல்லவும், முற்போக்குக் கலை இலக்கியத்தைப் படைக்கவும் முன்வந்தனர். ஜீவா, தொ.மு.சி. கே.முத்தையா, தமிழ்ஒளி, இவர்களின் வழியே புதிய படைவரிசையே இலக்கியத்தில் களம் கண்டது. அஸ்வகோஷ், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தணிகைச்செல்வன், ச.தமிழ்ச்செல்வன், அருணன், கோணங்கி, உதயசங்கர், பவாசெல்லத்துரை, அ.வெண்ணிலா, ம.காமுத்துரை, தேனீ சீருடையான், ஆதவன் தீட்சண்யா, சு.வெங்கடேசன், அல்லி உதயன், போடிமாலன், உமர் பாரூக், அய்.தமிழ்மணி, நாறும்பூநாதன், மு.அப்பணசாமி, மணிநாத், சோலை சுந்தரப்பெருமாள், என்று மிகப்பெரிய எழுத்தாளர் படையும், பிரளயன், எஸ்.கருணா, ரோகிணி, புதுகை பிரகதீஸ்வரன், அன்புமணி, முரசு ஆனந்த், ஏகாதசி, கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையான், உமா, வசந்தி, கரிசல் கருணாநிதி, என்று கலைஞர்களும் திரண்டனர். தமிழகத்தில் வீதி நாடகம் என்கிற கலை வடிவத்தை நிலைநிறுத்தியவர் அஸ்வகோஷ்.
தமுஎகச தமிழ்மொழியைச் செம்மொழியாக்கிட கோரிக்கை வைத்து டெல்லியில் பெருந்திரள் முறையீடு செய்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பத்திரிகை தணிக்கைச் சட்டம் அமலுக்கு வந்தபோது அதற்கு எதிராகக் களம் கண்டது. மாதொரு பாகன் நாவலுக்காக எழுத்தாளர்.பெருமாள்முருகனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தபோது அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று போராடி வெற்றி பெற்றது. கருத்துரிமை, படைப்புரிமைக்கு எதிராக இப்போதும் விடாது போராடிக் கொண்டிருக்கிற அமைப்பு தமுஎகச.
மூன்று சாகித்ய அகாதமி விருதுகள் தோல் - டி.செல்வராஜ், மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுச்சாமி, காவல்கோட்டம் - சு.வெங்கடேசன், என்று படைப்புகளின் பெருமிதத்தோடு இந்த அமைப்பின் படைப்பாளிகளின் அணிவரிசை இன்னமும் அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.
(உதயசங்கர், து.பொ.செயலர், தமுஎகச)
ஜனவரி, 2020.