இலக்கணப் பிழைகள்
ஓவியம்: பி.ஆர் ராஜன்

இலக்கணப் பிழைகள்

மூன்றாம் பரிசு ரூ.5000 பெறும் கதை

“டீச்சர்... நேத்து நைட்டு சுஜாதாவுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சுனு அவங்கம்மா ஃபோன்    பண்ணினாங்க,  இன்ஜெக்சன்  போட்டதால காலைல எழுந்திருக்க கஷ்டப்படுறாளாம்... லேட்டானாலும் எப்டியும் வந்துடுவா டீச்சர்! " என்று சொல்லிப்போனாள்,சுஜாதா படிக்கிற பள்ளியின் மற்ற மாணவிகளை தேர்வுமையத்திற்கு அழைத்து வந்த ஆசிரியை. காலை பத்துமணி ஆகியிருந்தது. இனி சுஜாதா வருவாள் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தது ஜெனட்டுக்கு. பத்துமணிக்கு தேர்வு எனில் வருகைப்பதிவு செய்யும் பத்தேகால் வரை மாணவர்களை தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர் அனுமதிக்கலாம், அதற்குமேல் எனில் அந்த மாணவி வாயிலிலேயே திருப்பி அனுப்பப்படுவாள்.

அரசுப்பொதுத்தேர்வின் பதினொன்றாம் வகுப்பு தமிழ்த்தேர்வு நாள். சுஜாதாவின் சொல்வதை எழுதும் ஆசிரியராக  நியமிக்கப்பட்டிருந்த ஜெனட், அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தேர்வறையில் காத்திருந்தாள். தேர்வறை நுழைவுச்சீட்டில் சுஜாதா, வரலாறு பிரிவு என்றிருந்தது. புகைப்படத்தில் பளிச்சென சிரித்துக்கொண்டிருந்தாள். உச்சந்தலை இயல்பைவிட சற்று நீண்டு தெரிவது புகைப்பட விளைவாய் இருக்கலாம் என நினைத்துக்கொண்டாள்.

பத்து மணி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தபோது, நுழைவாயிலில் ஆட்டோ சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து மிக அருகில்தான் சுஜாதாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த தரைத்தள அறை இருந்தது.   ‘ஆட்டோ உள்ளே வரலாமா... ஆட்டோவில் சுஜாதாவுடன் அம்மா உள்ளே வரலாமா' என வாயிற்காவலருடன் சிறிய வாக்குவாதம் போலிருக்கிறது, சத்தம் சற்று வலுத்துக்கேட்டதும் துறை அலுவலராக இருந்த ஆசிரியையே அவசர அவசரமாய் வாயிலுக்கு ஓடி, சுஜாதாவை அழைத்துவந்தாள். சுஜாதா முகத்தில் சோர்வு தெரிந்தது. ஆனாலும் பற்கள் தெரிகிறதோர் சிரிப்பை ஆளரவமற்றிருந்த அந்த மைதானத்தின் நாற்புறமும் வழங்கியபடி வந்துகொண்டிருந்தாள். வாயிலின் இரும்புக்கம்பிகளைப் பிடித்தபடி பார்வையை தேர்வறை வரை அனுப்பிய சுஜாதாவின் அம்மா, ஜெனட்டைப் பார்த்து சற்று துணுக்குற்று காவலரிடம் ஏதோ கேட்பது தெரிந்தது. அவள் என்ன கேட்டிருப்பாள் என்பதும் ஜெனட்டுக்குப் புரிந்தது. தலையை திருப்பித் திருப்பிப் பார்த்தபடி வாயிலைவிட்டு நகர்கிற அம்மாவைப்பார்த்து சுஜாதா, டாட்டா என கையை அசைத்தாள். ஒருவழியாய் அறைக்குள் நுழைந்த சுஜாதா, ஜெனட்டைப் பார்த்ததும், "ஹைய்ய்ய்யோ... பொம்ம மாதிரி இருக்கீங்க டீச்சர்!" என்றாள்.

ஜெனட்டுக்கு 'விட்டிலிகோ', உடல்முழுவதும் ஓரிரு இடங்களைத்தவிர மீதி எல்லா இடங்களையும் நிறமி இழப்பு ஆக்கிரமித்து வெண்ணிறமாகி இருந்தாள். வெளியில் தெரியும் இடங்களில் இன்னமும் கன்னத்திலும் கைகளில் சில இடங்களிலும் மட்டுமே தோலின் பழைய நிறம் எஞ்சியிருக்கிறது. சுஜாதாவைப்பார்த்துப் புன்னகைத்து, "குட்மார்னிங் சுஜாதா, நான் ஜெனட் டீச்சர், நம்ம ரெண்டுபேரும் சேர்ந்துதான் உன் எக்சாம எழுதப்போறோம்" என்றவளிடம் சுஜாதா, "ஜெனட் டீச்சர்... ம்ஹும்... பொம்மை டீச்சர்... அதான் நல்லாருக்கு" என்றாள்.

புன்னகைத்தபடி வினாத்தாளில் கவனத்தை ஓடவிட்ட ஜெனட் மனதுக்குள்  ‘பொம்மை' என்ற வார்த்தைக்கு, தான் எப்படிப் பொருந்தினோம் என்ற வினாவும் ஓடிக்கொண்டிருந்தது. ஜெனட் சிறுமியாக இருக்கும்போது அவளது ஊரின் பழமையான தேவாலயத்துக்கு ராஜிவ்காந்தியும், சோனியா காந்தியும் வந்திருந்தார்கள். அவர்கள் வரும்வழியில் வெள்ளை ஆடை உடுத்தி மலர்க்கொத்தோடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த குழந்தைகளில் ஜெனட்டும் ஒருத்தி. பார்க்க பொம்மை போலவே இருக்கவேண்டும் என அம்மாவிடம் அடம்பிடித்து ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கி  அள்ளிப்பூசி போயிருந்தாள். ராஜிவ்காந்தியும் சோனியாகாந்தியும் அவர்களைக் கடந்தபோது ஒரு கணம் ராஜீவ் நின்று அவள் பக்கமாய் குனிந்து, அவள் கன்னத்தைத்தட்டி, "லுக்கிங் லைக்க டால்... ஸோ க்யூட்" என்றார். அதன்பிறகு நிறைவேற்றப்பட்ட அந்த இலத்தீன் மொழி திருப்பலி, லத்தீன் மொழிப் பாடல்கள் என எதையும்விட அந்த  ‘பொம்மை' என்ற வார்த்தையே அவளுக்கு அன்று மிக உயர்ந்த வரம் பெற்றது போல் இருந்தது.

சுஜாதா ஜெனட்டின் புடவை யையே தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்ததை உணர்ந்த ஜெனட்,  ‘என்னடா பண்ற?’ என்றாள்.

 ‘பஞ்சுமாதிரி இருக்கு டீச்சர் உங்க சேலை’ மூக்குப்பொடி நிறத்தில் கருஞ்சிவப்பு நிற ஓரம் உடைய காதிப்பருத்திப் புடவை அது. சோனியாகாந்தியைப் பார்த்த அன்று, சோனியா இதுபோலவே ஒரு பொடி நிறப்புடவையும் கருஞ்சிவப்பு வண்ண சட்டையும் அணிந்திருந்தார். அந்த வண்ணக்கலவை, அந்த முகத்தின் நிறத்துக்கு அவ்வளவு பாந்தமாகப் பொருந்தி, ஒரு கம்பீர அழகைத் தந்திருந்தது. அதோடு அவரது குட்டைத் தலைமுடி, குளிர்க்கண்ணாடி இதெல்லாம் ஏற்படுத்தியிருந்த பிம்பம். 'அவங்க மாதிரி கலராகனும், க்ரீம் வாங்கிக்கொடு' என வீட்டில் அழிச்சாட்டியம் செய்து அடிவாங்கியது என எல்லாமே முடிந்து அவள் தனக்குள்ளேயே ஒடுங்குபவளாக ஆவதற்கும் ஒரு காலம் வந்தது.

பதின்மூன்று வயதில் விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளிகளை முதன்முதலாக நாசியின் உட்பகுதியிலும் உதட்டிலும் கண்டறிந்தது... ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என அலைந்த அலைச்சல்கள்... உண்ட மருந்துகள்... பின்விளைவுகள்... கேலிப்பேச்சுகள்... பரிதாபப்பார்வைகள்... அருவருக்கத்தக்க ஆறுதல்கள்... எல்லாவற்றாலும் ஒடுங்கி தனியறையை நாடிய காலகட்டம் அது.

 ‘உங்களுக்கு இங்கிலீசுதான் தெரியும்னு நெனச்சு எப்டி பேசப்போறோம் இந்த டீச்சர்ட்டனு பயந்தேன் டீச்சர், ஆனா இப்ப நல்லாருக்கு, இப்ப நல்லாருக்கு’ என்ற உற்சாகக்குரலால் சுஜாதா ஜெனட்டை நிகழுலகிற்கு இழுத்தாள்.

 ‘நம்ம எக்ஸாம் எழுதலாமா சுஜாதா...?’ என்ற ஜெனட், முதல் கேள்வியை ஆரம்பித்தாள்,

 ‘துன்பப்படாதவர்.... டேஷ்... ஆப்ஷன் வாசிக்கேன் பாப்பா,  பொருளைக் காக்காதவர்,  தீக்காயம் பட்டவர், நாவைக் காக்காதவர், தீயினால் சுட்டவர்’

 ‘துன்பப்படாதவர் சுஜாதா...’ என்றபடி குலுங்கிக் குலுங்கிச்சிரித்தவள்,

 ‘அம்மா அப்டிதான் சொல்லுவாங்க டீச்சர், அப்பா செத்துக்கெடந்தப்பக்கூட நான் துன்பப்படாம சிரிச்சுட்டு இருந்தனாம், அவரதான் எனக்குப் பிடிக்காதே டீச்சர், எப்பப்பாரு என்னய ஏன் பொறந்துதொலச்சனு திட்டுவாரு, அல்லாங்காட்டி அம்மாவ ஏன் இப்டி பெத்தேனு திட்டுவாரு, அம்மா என்ன செய்வா, சாமி குடுத்த கிஃப்ட் நானு’ ஜெனட் ஆதுரமாய் தலையசைத்தபடி அவளாகவே ஒரு பதில் எழுதினாள். அடுத்த கேள்வி, கேட்கலாமா வேண்டாமா என குழப்பம் மேலோங்க  ‘புல்லின் இதழ்கள் நூலின் ஆசிரியர் யார்?’ சுஜாதா பட்டென  ‘வாமிட்டன்' என்றாள். ஆச்சர்யமாகிவிட்டது ஜெனட்டுக்கு,  ‘வால்ட் விட்மன்' இந்த குழந்தையின் மூளையில் போய் எப்படியோ அமர்ந்திருக்கிறார் எனில் அந்த தமிழாசிரியர் எவ்வளவு முறை இதைக் கூறியிருப்பார். அடுத்தடுத்த வினாக்களை சுஜாதா சட்டை செய்யவே இல்லை, ஜெனட்டை ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டாள்.

‘டீச்சர்! கன்னத்துல டாட்டூ போட்ருக்கீங்களா’ என்றாள்.

விட்டிலிகோ இன்னும் உறிஞ்சாத தோலின் கருநிறம் இரு கன்னங்களிலும் மிச்சமிருந்ததைத்தான் சுஜாதா அவ்வாறு கேட்டாள். அவள் அதை டாட்டூ என நினைக்கிறாளெனில் அப்படியே நினைக்கட்டுமே என்று எண்ணியபடி,  ‘ம்... நல்லாருக்கா?’ என்றாள் ஜெனட்.

 ‘இந்த டாட்டூ... ஒரு ஜல்லிக்கட்டு மாடு மண்ணப்பார்த்து குனிஞ்சு, அடுத்து முட்டுறதுக்கு ரெடியா இருக்கற டாட்டூதான?’

 ‘அட! கரெக்ட்டா சொல்லிட்டியே!’

கைகளைத்தட்டிக்கொண்டு சிரித்த சுஜாதா,  ‘இருங்க அந்தப்பக்கம் பாக்கறேன்’ என்றபடி சுற்றிவந்து

 ‘இந்தப்பக்கம் டாட்டூ, உங்க நாடியில பின்னங்கால வச்சு மூக்குமேல முன்னங்கால வச்சு புருவத்து முடிய எட்டி புல் மேயுற குதிர. கருப்பு குதிர வாய் வச்ச புல்லு, பாதி வெள்ளப்புல்லு, தின்னு தின்னு குதிர வெள்ளையாக ட்ரை பண்ணுது’ சிலிர்த்தது ஜெனட்டுக்கு, இவ்வளவு அணு அணுவாய் யாரும் வர்ணித்ததில்லை ஜெனட்டை.

உடலில் பாதி கருப்பும் பாதி வெள்ளையுமாக புள்ளிகள் பரவிய காலத்தில், தனிமையில் தானே பல கற்பனை உருவங்களை அந்த புள்ளிகளில் தேட ஆரம்பித்தவளின் கனவுகளிலும் திட்டுத்திட்டாய் நிறமிகள் உதிர்ந்து, வெண்ணிற மேகங்களும் வெண்ணிற பட்டாம்பூச்சிகளுமாய் அலையத்தொடங்கின. இரவின் கருமைக்குத் தன் அங்கத்தை ஒப்படைத்து வெண்மையை ஒளிப்பது பிடித்துப்போனது, பகலிலும் இருட்டு அறைகளை நாட ஆரம்பித்தவளைப் பார்த்து பயந்து, அவள் அம்மா ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச்சென்றாள்.

 ‘குழந்தையை நான் தனியா பார்க்கனுமே... ‘ என்றவர், தனியறையில்,  ‘பாப்பா! உன் உடம்புல நான் தைலம் தடவுனா சரியாகிரும்’ என்றபடி நெருங்கிவந்து உடையைத்தொட்டார்.

அவரை அங்கேயே ஒரே தள்ளு, தள்ளிபடி வெளியே ஓடிவந்தவள்,

 ‘நான் இப்டியே இருக்கிறேன்மா, தயவுசெஞ்சு எனக்கு இனி எந்த வைத்தியமும் வேணாம்’ எனக்கூறிய அந்த நாள்தான் ஜெனட்டின் போதி நாள். புத்தகங்கள் மட்டுமே நண்பர்கள் என்றாகி, தன்னைத்தானே தேற்றப்பழகி, பிறகு எவர் எப்படிப்பேசினால் எனக்கென்ன எனத் துணிந்து வெளியுலாவத்தொடங்கிய காலகட்டம் என எல்லாம் கடந்து இன்று, தன்னை... தன் உடலை... அப்படியே அதனதன் மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டுவிட்ட ஒரு முன்னுதாரணப்பெண், இந்தத் திறமைமிக்க ஜெனட் டீச்சர்.

டாட்டூ ஆராய்ச்சியிலிருந்த சுஜாதாவின் கவனத்தை திசைதிருப்ப, ஏற்ற வினா எதுவெனத்தேடினாள். வினா எண் இருபத்தைந்து,  ‘மரபுப் பிழை நீக்கி எழுதுக.... குயில் கத்த நாய் ஊளையிட்டது... இது எப்டி எழுதுனா சரியாகும்?’

 ‘குயில் கூஊஊஊஊ, நாய் ஊஊஊஊஊ டீச்சர்’ குயிலுக்குக் குரலை மெலிதாக்கி கூ எனவும், நாய்க்கு குரலை தடிமனாக்கி ஊ எனவும் கத்திவிட்டு சிரித்தாள் சுஜாதா.

சரி, இவளை ஏதாவது பேசவிட்டுவிட்டு இவளுக்கு தேர்ச்சிக்குத் தேவையான அளவைவிட ஒரு பத்துமதிப்பெண் அதிகமாய் வருமளவு நாமே எழுதிவைப்போம் என முடிவுசெய்துகொண்டாள் ஜெனட்.

  ‘இரவென்னும் ஏமாப்பில் தோணி...னு ஒரு திருக்குறள் வருமே பாப்பா, அதில் வர்ற அணி எது?’

 ‘இரவு... இரவு... நேத்து நைட்டு ஊசி போட்டாங்க டீச்சர், வலிச்சுச்சு’

 ‘என்னாச்சு ராத்திரி? வெட்டு வந்துச்சா? ’

 ‘ம்...’

மூக்கை சுளித்தபடி அதன்மேல் புறங்கையைத் தேய்த்து இழுத்தாள்.

 ‘ஏன் வெட்டு வந்துச்சு?’

 ‘அம்மா அழுதனால பயந்துட்டேன்’

 ‘அச்சோ... அம்மா ஏன் அழுதாங்க?’

 ‘என்னய அடிச்சாங்கல்ல... அதான் அவங்க அழுதாங்க’

 ‘அடிச்சாங்களா?’

 ‘அது டீச்சர்... அம்மா தைப்பாங்கல்ல, வீட்ல போட எனக்கு நேத்திக்கு நைட்டி தச்சு தந்தாங்க... நைட்டு கரெண்ட் போச்சா... கரெண்ட்டு போனா ஜாலியா நாங்க ஐஸ்பாய் வெளாடுவோம். பக்கத்துவீட்டு மாரியோட அண்ணன வெளாட்டுக்கு சேக்கக்கூடாதுனு அம்மா எப்பவும் சொல்லும்... மாரியில்ல மாரி அவதான் சேத்துக்கிட்டா போல... அந்த அண்ணன் வெளாட்டுல இருக்கதே எனக்குத் தெரியல, ஒளியப்போனப்ப நான் ஒளியற எடத்துலயே அந்த அண்ணனும் வந்து ஒளிஞ்சிச்சு. அந்த அண்ணா சொன்னுச்சு... உன்னோட சட்டைய கழட்டிக்குடு, நா போட்டுட்டு பொம்பளப்புள்ளமாதிரி போறேன், கண்ணு பொத்திட்டு இருக்கற நவீனுக்கு அடையாளம் தெரியாது, நா கப்னு புடுச்சுக்குவேன், அவன் அவுட்டாகிருவான்'ன்னுச்சு அந்தண்ணா. நானும் நைட்டிய கழட்டிக் கொடுத்தேன். உள்ள சிமிஸ் போட்ருந்தேனா...?   ‘இது ஏன் இதுலாம் போடுற? இதயும் கழட்டுனு சொன்னான்', அது எனக்கு பிடிச்ச பஞ்சு பஞ்சான சிமிஸ், யாருக்கும் தரமாட்டேன் சொன்னதுக்கு அவனே கழட்டப்பாத்தான்,   நான்  அவன் கைய கடிச்சு வச்சிட்டு கத்திட்டே வீட்டுக்கு ஓடிவந்தேன், அம்மாகிட்ட சொன்னதும் வெளக்குமாத்த எடுத்துட்டுப்போயி அந்த அண்ணன அடிஅடினு அடிச்சு சட்டய புடுங்கிட்டு வந்துட்டாங்க’

 ‘ஆனா அம்மா சட்டைக்காக அடிக்கல பாப்பா, அத கழட்டினதுக்குதான் அடிச்சாங்க’

 ‘புதுச்சட்டைல்ல டீச்சர், அதான் அடிச்சிருக்கும் அம்மா’

 ‘சரி பாப்பா! அதுக்கெதுக்கு உனக்கு வெட்டு வந்துச்சு’

 ‘சட்டைய வாங்கிட்டுவந்துட்டு அத எரியுற அடுப்புக்குள்ள தள்ளிட்டாங்க டீச்சர், அது எரியறத பாத்துட்டு நான் ஜாலியா கத்துனேன், என்னையும் போட்டு அடிச்சுட்டாங்க, என்னய அடிச்சுட்டு அவங்க உக்காந்து ஓ... னு அழுதாங்களா, நம்ம என்னவோ தப்பு பண்ணிட்டோம்னு எனக்கு பயந்து வந்திருச்சு டீச்சர், அவ்ளதான் தெரியும், அப்றம் என்னய டாக்கடர் ஊசி போட்டது வலிச்சுது... அப்றம்... அப்றம்... ’

சுஜாதாவின் சற்று முட்டைவடிவத்திலிருந்த தலையில் லேசாய் வருடிவிட்டாள்.

 ‘அப்டிலாம் சட்டைய கழட்டக்கூடாதுடா. வீட்ல அதுவும் அம்மா சொன்னா மட்டும்தான் கழட்டனும்...’

 ‘சரி டீச்சர்... நா மொதோ அந்த அண்ணன் கைய கடிச்சதுக்குதான் அம்மா அடிச்சுதுனு நெனச்சேன், அப்றமாதா தெரிஞ்சுது நைட்டிக்காக அடிச்சுதுனு’

 ‘கடிப்பியா அடிக்கடி?’

 ‘ஆமா டீச்சர், நேத்திக்கு... இல்ல... முந்தி... போனவாரம்... அதான் பர்த்டே வந்துச்சுல்ல அப்ப, என்னய கோச்சி மண்டைனு சொன்னவன கடிச்சு வச்சிட்டேன்’

 ‘ஏன் அப்டி கடிக்கற?’

 ‘அப்பதான என்மேல ஒரு பயம் இருக்கும் டீச்சர்...’

காலை ஆட்டியபடி உற்சாகமாய் சொன்னாள்.

 ‘சரி சுஜாதா, நம்ம பரிச்சை எழுதுவமா?’

 ‘ஆமா டீச்சர், பரிச்சைல பாஸாகி டாக்டராகி, அந்த டாக்டருக்கு ஊசி போடனும்’

அவளது நுழைவுச்சீட்டில் வரலாறு பிரிவு என இருந்ததை மற்றொருமுறை கவனித்துக்கொண்டாள்.

 ‘அப்ப இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சிருக்குமே உனக்கு?’ வினாத்தாளைப் புரட்டி நாற்பத்தியாறாவது வினாவைச் சுட்டினாள்.

 ‘யானை டாக்டர் குறும்புதினம் பற்றி எழுதுக’

சிறிதுசிறிதாய் வாசித்தவள்  ‘குறும்பு தினமா? டாக்டருக்கும் குறும்பு... குறும்பு...’என சிரித்தாள். குறும் புதினம் என்பதை அப்படி வாசிக்கிறாள் எனப்புரிந்தது.

 ‘யானை டாக்டர் கத தெரியுமா?’  ‘ம்... தெரியும் டீச்சர்’ என இழுத்து முழக்கியவள்,

 ‘அம்மா வயித்துல இருந்து நான் வெளில வர்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டனாம்.  அப்ப அம்மா வயித்த வெட்டி எடுக்கனும்னு  டாக்டர் சொன்னாங்களாம்,  எங்க அப்பா அம்மா வவுற வெட்டாம என்னய வெளிய எடுக்க முடியுமானு பாக்க சொன்னாங்களாம், அந்த டாக்டர் ஏதோ கப்பு போட்டு என்னய இழுத்தாங்களாம்... அந்த டாக்டரு நல்லா இத்தாத்தண்டி இருப்பாங்களா, அவங்க கப்பு போட்டு இழுத்தது யானை இருக்குல்ல அது தும்பிக்கையால உறியற மாறி இருந்துச்சாம் அம்மாவுக்கு, என் மண்டைய அப்டி இழுத்ததுல மண்டை இப்டி ஆகிருச்சாம். அந்த யானை டாக்டர் மட்டும் அப்டி இழுக்காம இருந்திருந்தா நான் நல்லா இருந்திருப்பேனாம், ஆனா நான் நல்லாதான இருக்கேன் டீச்சர்? அம்மாவ வெட்டாம விட்டவுங்க நல்ல டாக்டர்தான?’ என்றவளிடம்

 ‘ஆமால்ல’ என்ற ஜெனட்,

 ‘சரி அடுத்த க்வஸ்டின் கேக்கேன், இதுவும் மரபுப்பிழைதான்... 'சோறு சாப்பிட்டு நீர் பருகினான்' இந்த வாக்கியத்தை மரபுப்படி எப்டி சரியா சொல்லனும்?’

 ‘தண்ணி குடிக்கனும் டீச்சர்?’

 ‘சரி குடி’

  ‘ஹைய்யோ டீச்சர், அது இல்ல, நீங்க கேட்டதுக்கு பதில் தண்ணீ குடிக்கனும்’

 ‘ஐ... செம்ம செம்ம,  அப்ப சோறு?’

  ‘சோறு ஊட்டனும்’ என்றபடி காலை ஆட்டினாள். தன்னை அறியாமலே  ‘தங்கமே!’ என்றுவிட்டாள், கண்கள் நிறைந்தது, மீண்டும் அவள் தலையை வருடினாள்.

 ‘இப்டிலாம் தலைய தடவுனா நான் அம்மா மேல சாயுறமாதிரி உங்க மேல சாஞ்சிருவேன் டீச்சர்’ என்றாள் சுஜாதா லேசாய் வெட்கப்பட்டபடி. அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு ஜெனட் தொடர்ந்து எழுத ஆரம்பித்தாள்.

ரம்யா அருண் ராயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன்பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன், முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக கோவையில் பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன.   இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி” சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதினை 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற'த்திடம் இருந்து பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com