திருக்குறள் என்கின்ற வாழ்க்கை அமுதத்தை எத்தனையோ கோணங்களில் அலசிப் பார்த்த பிறகும் இன்னும் அள்ளுவதற்கு வாய்ப்புத் தருகிற அமுதசுரபியாக அது நீடிக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு.
உலகப் பேரறிஞர்களோடு வள்ளுவத்தை ஒப்பிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவருக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த பல அறிஞர்களின் கருத்துகளை வழிமொழிந்தோ, வாதமிட்டோ மறுத்தோ, அது ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது. அவருடைய பார்வை சமரசத்தை ஒருபோதும் முன்வைக்கவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அன்றிருந்த ஒழுக்க நெறிமுறைகளைத் தாண்டி அவரால் பேச முடிந்தது. காலத்தை தாண்டி சிந்திக்க முடிந்தது. அதன் காரணமாகவே அவர் இன்றும் வாசிக்கப்பட்டு வருகிறார்.
திருக்குறள் இலக்கிய அந்தஸ்தைப் பெறுவது காமத்துப் பாலால். மிக மென்மையாக காதலர்களுக்குள்ளும் தம்பதியர்களுக்குள்ளும் இருக்கவேண்டிய இணக்கத்தை அருகிலமர்ந்து வியந்து பேசுவதுபோல அந்தச் சித்தரிப்புகள் திகழ்கின்றன. இளமையாக இருக்கும்போது அவர் இன்பத்துப் பாலை எழுதினாரா அல்லது முதிர்ந்த வயதில் ஒரு சாட்சியாக நின்று தவறவிட்டவற்றையும் உள்ளடக்கி ஆவணப்படுத்தினாரா என்பது ஆய்வுக்குரியது. சமணத்தைச் சார்ந்தவராக அவர் இருந்திருக்க முடியாது என்பதற்கு அத்தாட்சியாக அப்பகுதி அமைந்திருக்கிறது.
ஷேக்ஸ்பியர் ஐந்து விதமான நடையழகுகளை கையகப்படுத்தியதாக அவரைப் பற்றி எழுதிய புத்தகத்தில் அரவிந்தர் தெரிவிக்கின்றார். அதன் உச்சம் உயர்ந்த தவிர்க்க முடியாக நடையழகு (ஐணஞுதிடிtச்ஞடூஞு குtதூடூஞு ). திருவள்ளுவர் சில அத்தியாயங்களில் அந்த ஐந்து நடையழகையுமே கையாண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஒரு தீய செயலைப் பற்றி விளக்கத் தொடங்கும்போது மென்மையாக அதைத் தொடங்குகின்ற வள்ளுவர் படிப்படியாக தொனியை அதிகரித்து ஒரு கட்டத்தில் கன்னத்தில் அறைவதைப்போல அதை நம் மனத்தில் பதியவைக்கிறார். எல்லோருக்கும் புரியும் படியான உவமைகளையும் சில இடங்களில் மிகுந்த மேன்மைக்குண்டானவர்கள் மட்டுமே உணரும்படியாக உவமேயங்களையும் அவர் கையாண்டிருப்பதுதான் அது குறித்த பார்வைகளை விசாலப்படுத்திக்கொண்டே இருக்கிறது. வாசகர்களுக்கான வெளியை அவர் அபகரித்துக்கொள்ளவில்லை.
திருக்குறளை வாசித்துப்பார்க்கும்போது ஒவ்வோர் அத்தியாயத்திலும் இறுதிக் குறள் முக்கியமானதாக எனக்குப்படுகிறது. ஒட்டுமொத்த தலைப்பின் சாரத்தை அந்தக் குறளில் அவர் சுருக்கிக் கொடுத்திருக்கிறாரோ என்கிற எண்ணம் எற்படுகிறது. எல்லா தலைப்புகளிலும் இருக்கின்ற இறுதிக் குறள் அவருடைய முடிவுரையாக எனக்குப்படுகிறது.
கடவுள் வாழ்த்தில் ஆன்மிகப் பயணத்தின் சாரம் பிறவிகளற்ற நிலையை அடைவது என்பதுதான் என்ற கடைசிக்குறள் வழிபாடுகளின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. பிறப்பே ஓர் உயிரியல் விபத்து என எண்ணுபவர்கள் மறுபிறப்பைக் குறித்து கவலைப்படுவதில்லை. அடுத்த பிறவி என்பதற்கு அவசியமில்லாமல் இந்தப் பிறவியிலேயே பலமுறை இறந்தும் பிறந்தும் உயிர்த்தெழுகிற நமக்கு உண்மைக்குச் சார்பாக வாழ்வது ஆன்மிக நிலை என்பதையே இக்குறள் தெளிவு படுத்துவதாய் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வான்சிறப்பு பற்றிப் பேசும்போது வள்ளுவர் அதை நீரின்றி அமையாது உலகு என்று முடிக்கின்றார். வறுமையே பல குற்றங்களுக்குக் காரணமாகவும் இருக்கின்றது. பசியும் , ஏழ்மையும் மனித வாழ்வைப் புழுதியில் புரட்டி எடுக்கும்போது சமூகத்தின் நியாயங்களும் தர்மங்களும் வழிதவறி விடுகின்றன. மனித நேயத்தைப் பேணுவதற்கும், குறைந்த பட்ச பரோபகாரத்தை வெளிப்படுத்துவதற்கும் இயற்கையின் வளம் அவசியம்.
உலகில் மொத்தம் 196 நாடுகள் இருக்கின்றன. அவற்றில் 25 நாடுகள் மட்டுமே செல்வச் செழிப்புடன் இருக்கின்றன. வறுமையின் விளிம்பிலிருப்பது ஜிம்பாப்வே. இப்போதிருக்கும் விகிதத்தில் அது வளர்ந்தால் தன்னிறைவை அடைவதற்கு 2277 ஆண்டுகள் ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வான் இன்றி அமையாது ஒழுக்கு என்பது மழையை மட்டும் குறிப்பிடவில்லை. சுற்றுச்சூழல், தட்ப வெட்பம், பூகோளம் போன்ற அனைத்தையும் குறிப்பிடுகிறது. வறுமைக்கும் வாழ்கிற இடத்திற்கும் தொடர்பு இருக்கிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளில் வெப்பம் அதிகம், மழை குறைவு, இயற்கை ஆதாரங்கள் சொற்பம், நிலத்தால் பூட்டப்பட்ட நாடுகளில் தகவல் தொடர்பு குறைவு, அங்கு வளர்ச்சியின் விகிதம் நத்தையின் வேகத்தில் நகரும். முற்றிலும் நிலத்தால் மூடப்பட்ட ஆப்கானிஸ்தானே ஆசியாவின் வறிய நாடு.
பூகோளம் மனித வாழ்வை மட்டுமல்ல மாடுகளின் வாழ்வையும் தீர்மானிக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கால்நடைகள் ஸெட்ஸீ ஈயால் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. அங்கிருக்கும் பால்வளம் குறைவு. மனிதர்களுக்கும் நோய்களின் தாக்குதல் அதிகம். வாழ்வாதாரம் ஒருபுறம், நோய்களின் பெருக்கம் மறுபுறமும் வாட்டி எடுக்கும்போது உலகம் விதித்த நியதிகள் காற்றில் பறக்கத் தொடங்குகின்றன. வளமையான நாடுகள் வாளிப்பான நிறுவனங்களை உருவாக்குகின்றன. அங்கு நேர்மையான முறையில் நியமனங்கள் நடக்கின்றன. அதன் மூலம் விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் நடக்கும் ஆய்வுகள் பாய்ச்சல் வேகத்தில் நிகழ்கின்றன. ஒற்றைக் குறளில் திருவள்ளுவர் ஏன் சில நாடுகள் வசதியாக இருக்கின்றன என்பதற்கான அத்தனைக் காரணங்களையும் அலசி விடுகிறார்.
நீத்தார் பெருமையைப் பற்றிய கடைசிக் குறளில் சாதிகளால் ஒருவர் அந்தணர் ஆகிவிடுவதில்லை என்று அறிவிக்கிறார். அண்மையில் ஓர் இளைஞரை சந்தித்தேன். அவர் பெயர் அந்தணர். அவருடைய அப்பா திருக்குறளில் தித்திப்பைக் காண்பவர். முப்பதாவது குறளை முன்னிட்டு அந்தப் பெயரை அவருக்கு இட்டிருக்கிறார். எல்லா உயிர்களையும் நேசிப்பவர்களே அறவோராக இருக்க முடியும். சம்சாரி குடும்பத்தை மட்டுமே நேசிப்பவன். சந்நியாசி உலகத்தில் இருக்கிற எல்லோரையும் நேசிக்கக் கூடியவன். நாம் குடும்பத்தைத் தாண்டி எத்தனைப் பேரை நேசிக்கிறோம் என்பதில்தான் நம் அறத்தன்மை அடங்கியிருக்கிறது.
ஒரு வகையில் தலைமைப் பண்பும் அப்படிப்பட்டதுதான். மானுடத்தின் காயப்பட்ட பக்கங்களை கண்டுபிடித்து அவை ஆறுவததற்கு ஆறுதலாய் ஊதி விடுகிற குமிழ்வாயைக் கொண்டவர்கள் ஆளுமை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். எல்லா உயிர்களும் என்று சொல்லுகிறபோது அவற்றில் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் பறவைகளும் மீன்களும் செடிகளும் கூட அடங்கும். அந்த நிலையில்தான் ஒரு கிளையை முறிப்பதற்குக் கூட மனம் சங்கடப்படும்.
இன்று ஒரு காட்டில் எத்தனை புலிகள் இருக்கின்றன என்பது புலிகளின் எண்ணிக்கையை மட்டும் தீர்மானிப்பதில்லை. மற்ற எல்லா வன உயிரின் செழுமையையும் அறுதியிடுகிறது என்பதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. எல்லா உயிர்களுக்கும் செந்தண்மைப் பூண்டு ஒழுகுகிறபோதுதான் மானுடத்தை முழுமையாக
நேசித்தவர்களாக நாம் கருதப்படுவோம். இந்தப் புரிதல் திருவள்ளுவருக்கு இருந்தது. அவர் நீத்தார் என்று சொல்வது சொந்த விருப்பு வெறுப்புகளை பற்றித்தான் என்பதை இந்த இறுதிக் குறளில் அவர் குழப்பமின்றி தெளிவுபடுத்திவிடுகிறார்.
இப்படித்தான் எல்லா அத்தியாயத்திலும் இறுதிக் குறளை மிகவும் சிந்தித்து, செப்பனிட்டு மெருகேற்றி அந்தத் தலைப்பின் சாரத்தை உணர்த்துவதாக வள்ளுவர் வடிவமைத்திருக்கிறார். இல்வாழ்க்கையைப் பற்றிய இறுதிக் குறளில் இவ்வுலகில் முறையாக வாழ்பவன் தெய்வத்திற்குச் சமம் என்று சமன் படுத்துகிறார்.
அன்பும், கருணையும், சீலமும், மனித நேயமும், ஒப்புரவும், தூய்மையும் பெருந்தன்மையும் , தாராள குணமும் , மன்னிக்கும் மனப்பான்மையும், பகிர்ந்துகொள்ளும் பரோபகாரமும் நிறைந்த மனிதர்கள் வாழுகிறபோதே வணங்கப்படுகிறவர்களாக மாறுகிறார்கள். அவர்களையே உலகம் போற்றத் தக்கவர்களாக எண்ணிப் பின்பற்றுகிறது. அவர்கள் உள்ளுணர்வு ஏதேனும் ஒரு வகையில் உலகத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அந்த உள்ளுணர்விற்கு அழிவு இல்லை என்பதைத்தான் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற சொற்றொடரின் மூலம் திருவள்ளுவர் தெரியப்படுத்துகிறார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை உலகம் தன் ஒட்டுமொத்த உள்ளுணர்வில் தக்க வைத்துக் கொள்கிறது. துறவறத்தில் சந்திக்கின்ற நெருக்கடிகளைவிட ஒரு மனிதன் இல்லறத்தில் சந்திக்கின்ற சவால்கள்தான் அதிகம். அவன் அனுபவிக்கின்ற இன்பங்களின் ஒட்டுமொத்த நேரம் சில நாட்களுக்குக் கூட தேறாது. அவனை சுயநலமாக வாழவைக்கக் குடும்பமும், சுற்றமும் இடைவிடாத பிரயத்தனங்களை மேற்கொள்ளுகின்றன. அவன் பெருந்தன்மையாக நடந்த நிகழ்வுகளில் ஏமாற்றப்பட்டு நிராயுதபாணியாக தோல்விகளைச் சந்திக்கிறான். அதற்குப் பின்பும் அவன் உயர்ந்த மனிதனாக அனைவரையும் நேசிக் கின்ற உள்ளத்தோடு வாழ முடிந்தால் அவன் இறந்த பிறகும் வாழ்வதாகவும் தங்கள் உள்ளுணர்வில் அவன் கலந்துவிட்டதாகவும் சமூகம் எண்ணுகிறது.
துறவறத்தில் மட்டுமல்ல, இல்லறத்திலும் முறையாக வாழ்ந்தவன் தெய்வமாக கருதப்படுவான். துறவறத்தில் முழுமையாக இல்லாதவன் மக்களின் மனத்தில் மிதிபட்டுப்போவான் என்பதையெல்லாம் இந்தக் குறளில் புரிய வைத்துவிடுகிறார் வள்ளுவர். சமூக மாற்றங்கள் பெருமளவு நடந்து கொண்டிருந்த காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தக் குறள் எனக்குப்படுகிறது.
வாழ்க்கையை மறுதலிக்கும் இலக்கியங்கள் இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருந்தபோது வாழ்வைக் கொண்டாடும் இலக்கியமாக திருக்குறள் மலர்ந்ததற்கு இந்தக் குறள் ஓர் ஆதாரம். அதன் அடிப்படையில்தான் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர் திருக்குறளை வாழ்க்கை ஒப்புதல் இலக்கியமாகப் பதிவுசெய்தார். வள்ளுவர் வறுமையை ஒருபோதும் போற்றியவரல்லர். சிறந்த நாடு வறுமையற்ற நாடு என்பதில் அவர் அழுத்தம் திருத்தமாக கருத்தியல்களை அகவயப்படுத்தியவர்.
அடுத்த உலகம் ஆனந்தமயமாக இருப்பதற்கு இந்த உலகத்தைத் தியாகம் செய்யவேண்டும் என்கிற கருத்தில் அதிகமான மதம் சார்ந்த மனிதர்கள் இருக்கிற நாடுகள் ஏழ்மையிலேயே மூழ்கிக்கொண்டிருக்கின்றன. இந்த உலகத்தில் சந்திக்கும் அத்தனை துயரங்களும் மறு உலகில் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பது உண்மையிலிருந்து தப்பிப்பதற்கான ஓர் உத்தி. இங்கே தடைசெய்யப்பட்டவற்றை அங்கே செய்யலாம் என்பது எந்த வகையிலும் நியாயமாகப் படவில்லை. இவ்வுலகத்தையே நாம் மனத் தயாரிப்பு வைத்திருக்கும் சொர்க்கமாக மாற்றுவதற்குத்தான் முற்போக்கான பொருளாதாரமும் சமூக நீதியும், வலிமையான நிறுவனங்களும் தொலை நோக்குள்ள திட்டங்களும் தேவைப்படுகின்றன. வையத்தில் வாழ்வாங்கு அனைவரும் வாழ முதலில் வாழ்க்கையை ஏற்றுக்கொள்பவர்களாக மாறவேண்டும். ஒவ்வொரு நொடியையும் திருவிழாவாக மாற்ற முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை காமத்துப் பாலிலும் பொருட்பாலிலும் அறத்துப் பாலை இணைத்தாக அமையும்.
மக்கட்பேறு பற்றி திருவள்ளுவர் ஒரு குழந்தையின் வளர்ச்சியை படிப்படியாக ஓவியமாக நம் முன் தீட்டுகிறார். அதன் ஒவ்வொரு வளர் நிலையிலும் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அது அளிக்கும் என்று குறிப்பிட்ட அவர் வளர்ந்த பிறகு அந்த வாரிசு தந்தைக்கு எந்த வகையில் நன்றிக் கடனை செலுத்த வேண்டும் என்பதைச் சொல்லி முடிக்கிறார். அப்படி நன்றிக் கடனை செய்யும் வகையில் அவன் அமையாவிட்டால் மக்கட் பேறு முழுமையடையாது. அது தண்டனையாகவே இருக்கும். குழந்தையின் முக்கியத்துவத்தில் தொடங்கும் இந்த அத்தியாயம் மகன் தந்தைக்காற்றும் உதவியோடு நிறைவு பெறுகிறது.
திருக்குறனின் கடைசி குறட்பாக்கள் மிகுந்த நுட்பமும் ஆழமும் கொண்டவை என்பதைச் சுட்ட ஒன்றிரண்டு உதாரணங்களை இந்தக் கட்டுரையின் மேலாக தேங்காய்த் துருவலாய்த் தூவி கிளறி இறக்கிவைத்திருக்கிறேன். அவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு ஒரு விரிவான முனைவர் பட்ட ஆய்வை ஒருவர் மேற்கொள்ள முடியும். அதற்கான தூண்டுதலே இந்தச் சிறிய சிந்தனைத் துளி.
ஜனவரி, 2015.