இருளர் சமூக முதல் வழக்கறிஞர்! சவால்களை ஜெயித்த சாதனைக்கதை!

இருளர் சமூக முதல் வழக்கறிஞர்!
சவால்களை ஜெயித்த சாதனைக்கதை!
Published on

மலைக் காடுகளில் நடந்து நடந்து அசதியுற்ற கால்கள். நோயால் அவதியுறும் உடல். நலிவுற்ற குடும்பம்... இவையெல்லாம் தாண்டி, இருளர் பழங்குடி சமூகத்தின் முதல் வழக்கறிஞராக உருப்பெற்றிருக்கிறார் காளியம்மாள்.  இவரின் வாழ்க்கைப் பயணம் வற்றாத நம்பிக்கை தருவது. இனி காளியம்மாள்...

கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கோபனாரி தான் சொந்த ஊர். கேரள எல்லைக்குப் பக்கத்தில் உள்ளது. அப்பா மருதன், அம்மா ஆண்டிச்சி. இருவருமே உடல் உழைப்பாளிகள். ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் தான் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். இதனால், எவ்வித

சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை. ஆறாம் வகுப்பு ஆனைக்கட்டியில் படித்தேன். தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்து, கேரளாவுக்கு சென்று, அங்கிருந்து பேருந்தைப் பிடித்து பள்ளிக்குச் செல்வேன். கேரளாவில் வேலை நிறுத்தம் என்றால், பத்து கிலோமீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பள்ளிக்குச் செல்லமாட்டேன். ஒரு முறை நானும் அப்பாவும் ஆற்றில் இறங்கி வந்து கொண்டிருந்தோம், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. வெள்ளம் எங்களை அடித்துச் செல்ல, அருகிலிருந்தவர்கள் உடனே காப்பாற்றிவிட்டனர். புத்தகப் பையை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. இவை இரண்டுக்கும் மத்தியில் யானைகளின் தொந்தரவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்படியான  சிக்கல்களுக்கு மத்தியில் தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். எடுத்த மதிப்பெண் ஐநூறுக்கு இருநூற்று தொன்னூற்று ஒன்பது.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, எங்கள் கிராமத்திற்கு லட்சுமணன் என்பவர் வருவார். பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழு ஏற்படுத்தினார். அவர்கள் சுய தொழில் செய்வதற்கான பயிற்சி கொடுத்தார். இடையிடையே, பழங்குடி இனத்தின் வரலாறு குறித்துப் பேசுவார். அவரின் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.  அப்படித்தான் எங்கள் இனத்து மக்கள் எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அவர் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழு நேரமாக பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என  தெரிந்து கொண்டேன். ‘நாமும் இவரைப் போன்று படித்து வழக்கறிஞராகி, நம் மக்களுக்காக, ஏன் பாடுபடக் கூடாது' என யோசித்தேன். பத்தாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க வைக்க வீட்டில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. என்னுடன் படித்தவர்கள் அனைவரும் பதினோறாம் வகுப்பு சேர்ந்து பள்ளிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். அப்போது, எங்கள் ஊருக்கு மருத்துவ உதவிகள் செய்ய ஜெயலட்சுமி என்கிற நர்ஸ் அக்கா வருவாங்க. அவரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.  அந்த அக்கா, ஊரிலிருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில், சீளியூரில் உள்ள துரைசாமி கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சொந்த செலவில் என்னை பதினோறாம் வகுப்பில் சேர்த்து விட்டாங்க. என் படிப்பிற்குண்டான எல்லா செலவுகளையும் அவங்க பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என்னைப் பள்ளியில் பார்க்க வருவாங்க. அவங்க வருவதைப் பார்த்து என் பள்ளி தலைமை ஆசிரியர் என்ன என்று விசாரிக்க, ‘அவங்கதான் எனக்கு படிக்க உதவுவதாக' சொன்னேன். உடனே தலைமை ஆசிரியரும் என் படிப்பிற்கு உதவி செய்வதாக சொன்னார். எனக்கு பாடப் புத்தகங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

இப்படி என் கல்விப் பயணம் தொடர, ஒரு நாள் எனக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்துவிட்டேன். உடல் நிலை மோசமாகிவிட்டது. ஒரு பக்கம் சரியான போக்குவரத்து வசதி இல்லாதது, இன்னொரு பக்கம் மிக மோசமான உடல் நிலை. சுகர், பீபி-யுடன் தைராய்டு பிரச்னையும் இருந்தது. நான் விரைவில் இறந்துவிடுவேன் என பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் அம்மா - அப்பா இருவரும் அழுது புரண்டனர். இந்த நிலையில் தான் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் படிப்பு படிக்க அரசு சட்ட கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.

சட்ட கல்லூரியில் சேர கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு போக வேண்டும். ஆனால் அதற்கான அழைப்புக் கடிதம் கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கு முந்தைய நாள் தான் எனக்கு கிடைத்தது. மேலும் சென்னைக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியவில்லை. அழைத்துச் செல்லவும் யாரும் இல்லை. அதனால் கவுன்சிலிங் போகவே முடியவில்லை. மனசுக்கு வருத்தமா இருந்தாலும், அவ்வளவு தான்னு விட்டுட்டேன்.

அந்த சமயத்தில் எங்கள் ஊர் மக்களைப் பற்றி தனியார் ரேடியோ சேனலில் டைரி என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார்கள். ‘என்னால் மட்டுமில்லை எங்க கிராமத்தில் உள்ள பலரால் மேற்கொண்டு படிக்க வசதியில்லைன்னு‘ நான் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தேன். அந்தப் பேட்டியைக் கேட்ட அப்துல்கலாம் அய்யாவுடைய நண்பர் சம்பத்குமார், அவினாசி லிங்கம் கல்லூரியை சேர்ந்த ஜெ.எஸ்.எஸ். சார், வனத்துறையை சேர்ந்த அன்வருதீன் சார் மூவரும் எங்க  ஊரைச் சேர்ந்த 18 பேரை கல்லூரியில்  சேர்த்து இலவசமாகப் படிக்க வைத்தனர். நான் கோவை அரசுக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல்  சேர்ந்தேன்.

கல்லூரிக்கு சேர்ந்து படிக்க ஆரம்பித்தது போக, மாலை நேரங்களில் வேலைக்கு சென்று வந்தேன். இது குறித்து தெரிந்து கொண்ட ‘வீட்டோ' அமைப்பினர், எங்கள் ஊர் குழந்தைகளுக்கு மாலை வகுப்புகள் எடுத்தால், அதற்கான ஊதியமும் தருவதாக  சொன்னார்கள். நானும் டியூசன் எடுத்தேன்.

ஒரு முறை ரயிலில் போகிறபோது விபத்தொன்று ஏற்பட்டது. இதனால் சிறுநீர் பிரச்னையையும் சமாளிக்க வேண்டிய சூழல். ரயில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற போது,  சிறு வயதில் பார்த்த அதே மருத்துவர், ‘ஏமா, நீ இன்னும் உசுரோட இருக்கியா?'னு கேட்டாரு. ‘நான் செத்துப்போனா உங்களுக்கு சந்தோஷமா?'னு கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.

எங்கள் ஊரில் மருத்துவமனை என்றாலே  பயப்படுவார்கள். அதனால் என்னால் முடிந்தவரை யாருக்கு, என்ன நோய் வந்தாலும் நான் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்வேன். இதனால், நான் சண்டை போட்ட மருத்துவரே நல்லா பழக ஆரம்பித்துவிட்டார்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், என்னோட கனவான வழக்கறிஞர் படிப்பிற்கு மீண்டும் விண்ணப்பித்தேன். கூடவே முதுகலை வணிகவியல் படிக்கவும் விண்ணப்பித்தேன். வழக்கறிஞர் படிப்பிற்கான கவுன்சிலிங் உடனே வராததால், முதுகலை வணிகவியல் சேர்ந்துவிட்டேன். திடீரென ஒரு நாள் சட்டக் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. சென்னைக்கு செல்ல வேண்டும். நான், அண்ணன், மாமா என மூவரும் கிளம்பினோம். சென்னையில் எங்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது என்று தெரியாமல், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு போய் விட்டோம். அங்கிருந்த வழக்கறிஞர் அண்ணா ஒருவர் கவுன்சிலிங் நடக்கும் சட்டக்கல்லூரிக்கு எங்களை அனுப்பி வைத்தார்.

ஆட்டோவில் சென்று இறங்குகிறேன், சரியாக அப்போது தான் என் பெயரை அழைக்கிறார்கள். உடனே  சென்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு,  சென்னையை சுற்றிப் பார்த்தோம். இரவு ரயில் ஏற வந்தபோது மாமா முன்னே சென்று கொண்டிருக்க, அண்ணன் பின்னாடி வந்து கொண்டிருக்கிறான். நடுவில் நான். திடீரென எனக்கு வலிப்பு வந்துவிட்டது. கீழே விழுந்துவிட்டேன். சுற்றி இருந்தவர்கள் என்னை சூழ்ந்த பிறகே, எங்கே காளியம்மா என்று இருவரும் பதறியடித்துக் கொண்டு என்னிடம் வந்தனர். பிறகு நிலைமை சரியாகி ஊர் வந்து சேர்ந்தோம்.

நான் கண்ட கனவு பலிக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்தபோது மற்றொரு இடி விழுந்தது. என் அப்பாவிற்கு கை கால் செயல்படாமல் போனது. பல பிரச்னைகளுக்குப் பிறகு, அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக

சேர்த்தோம். இதற்கிடையே படாதபாடு பட்டு மதுரை சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். காலையில் மதுரையில் உள்ள கல்லூரிக்கு போய்விட்டு மாலை அப்பாவை பார்க்க கோவை வந்துவிடுவேன். இப்படியே பல நாட்கள் போச்சு. ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா போச்சு. இந்த சமயத்தில் சுதாகர் சாரும், சம்பத்  சாரும் எதிர்பாராத அளவிற்கு உதவிகளை செய்தனர்.

என்னுடைய உடல் நல சிகிச்சையும் தொடர்ந்தது. கல்லூரியில் இருந்ததை விட என்னுடைய சிகிச்சைக்காக மருத்துவமனையிலிருந்ததுதான் அதிகம். காலையில் தூங்கி எழுந்த உடனே தண்ணீர் கூட குடிக்காமல் மருத்துவமனைக்கு சென்றுவிடுவேன். காலை  சாப்பாடு நண்பர்கள் இருவர் எடுத்துவருவார்கள். சாப்பிட்ட பிறகு மீண்டும் மருத்துவ பரிசோதனை தொடரும். மதுரையிலிருந்த ஒன்றரை வருடமும் மருத்துவமனையிலேயே தான் வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் மதுரை, கோவை என்று அலைய முடியாமல், கோவை  சட்டக்கல்லூரிக்கு மாறி வந்துவிட்டேன். அப்படியும் வீட்டுச் சூழலால், என்னால் கல்லூரிக்கும் போக முடியவில்லை. அப்பாவுடன் நானோ அம்மாவோ கூட இருக்க வேண்டிய சூழல். மேலும், எனக்கு வலிப்பு வந்துவிட்டதால் படிப்பை தொடரவோ, தேர்வு எழுதவோ முடியவில்லை. இந்த சமயத்தில் அப்பாவின் மருத்துவத்திற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தேன். இறுதியாக சித்த மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம் அளித்ததன் மூலம் நடக்க ஆரம்பித்தார்.  இதற்கிடையே, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன் நாச்சிமுத்து சாரின் அறிமுகம் கிடைத்தது. என் நிலைமையைப் புரிந்து கொண்டு, அப்பாவின் மருத்துவச் செலவு, என்னுடைய படிப்புச் செலவு எல்லாவற்றையும் பார்த்து கொண்டார். மீண்டும் படிப்பை தொடரலாம் என முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். கடந்த வருடம் மொத்தம் பதினெட்டு பேப்பர் எழுதினேன். எழுதிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றேன். அதனைத் தொடர்ந்து ஒன்பது பேப்பர் எழுதினேன் அதிலும் தேர்ச்சி பெற்றேன். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தேன்.

நிறைய நல்ல உள்ளங்களின் அன்பும் அரவணைப்பும் தான் நான். எனக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது. நிறையப் பேர் வாழ்த்து தெரிவித்தனர். டிவியில் பார்த்த முதல்வரை நேரில் பார்த்த போது நம்ப முடியவில்லை. ‘எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நல்லா பண்ணுங்க. உடல் ஆரோக்கியம்தான் முக்கியம். எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்க‘னு முதல்வர் சொன்னார். நமக்கென்ன உரிமை இருக்கிறது, கடமை இருக்கிறது என்பதை பழங்குடி மக்களிடம் எடுத்து சொல்வேன். கண்டிப்பாக நான் மக்களுக்காக நிற்பேன்' என்கிறார் காளியம்மாள் நம்பிக்கையுடன்.

நவம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com