இரும்புக் கரம்!

ஜெ.வின் அரசியல் பயணம்
ஜெயலலிதா
ஜெயலலிதா
Published on

எனக்குப் பிறகு பிரளயம்! இது பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயி சொன்ன வார்த்தை.

எனக்குப் பின்னால் என்ன வேண்டுமானாலும்  நடக்கட்டுமே எனக்குக் கவலையில்லை என்ற பொருளில். அதிமுகவின் இறுதிக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆரும் இந்த மனநிலையில்தான்  இருந்திருக்க வேண்டும்.

அன்று வீட்டில் சற்று தூக்கமின்றி தவித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் தொலைபேசி அலறியது. ‘தலைவர் போயிட்டாரு!'

கவலையுடன் சொன்னது அந்த குரல். சமீப காலமாக தன் பிரியத்துக்குந்த தலைவர் தன்னை அருகிலேயே சேர்க்கவில்லை. சந்திக்க எத்தனை முயற்சி எடுத்தும் நடந்திருக்க-வில்லை. என்ன தான் தனக்கு வழி? என்று சோர்ந்துபோயிருந்த அந்த பெண் அரசியல்வாதி, வீட்டிலேயே முடங்கி இருக்க விரும்பவில்லை. தனக்கான இடத்தை தானே நிறுவவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கார் தலைவனின் இல்லம் நோக்கி விரைந்தது. உள்ளே விடக்கூடாது என்று தடுத்தவர்களை உதாசீனம் செய்து, அறை அறையாகத் தேடினார். தன் தலைவனின் தங்க முகத்தைக் காணவில்லை. மாடிக்கு ஓடினார். அங்கும் இல்லை. கேட்பதற்கு யாரும் இல்லை. கேட்டால் யாரும் பதிலும் சொல்லமாட்டார்கள்.

அந்த இல்லமே அவரது அரசியல் எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. வெளியே ஏதோ சலசலப்பு. தலைவனின் பூத உடலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்வதற்காக வண்டியில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர் கீழே ஓடி வந்தபோது வண்டி கிளம்பிப் போய்விட்டது.

அங்கிருந்து விரைந்து புறப்பட்டு ராஜாஜி ஹாலுக்குள் நுழைந்தார். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தலைவனின் தலைப்பக்கத்தில் இடம் பிடித்து நின்றுகொண்டார். இரண்டு நாட்கள் அவர் இப்படி ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தார். இந்த உறுதிதான் அந்த பெண்ணை அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு வழி நடத்துவதாக அமைந்தது. அவர் ஜெயலலிதா. தனக்குப் பின் வாரிசு என்று யாரையும் கைசுட்டாமல் போய்விட்ட எம்ஜிஆர், தோற்றுவித்த அதிமுக என்ற கட்சியைக் கைப்பற்றி இரும்புக்கரம் கொண்டு ஆட்டிவைப்பதற்கான விதை எம்ஜிஆரின் இறுதிச் சடங்கு அன்றே ஊன்றப்பட்டுவிட்டது.

எம்ஜிஆரின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டபோது அதில் ஏறமுயன்ற அவர் இழுத்துத்தள்ளி தாக்கப்பட்டார். பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்படுவது அது முதல்முறை. இதைத் தொடர்ந்து ஏராளமான ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து சந்திப்பதற்கான தொடக்கமாக அது அமைந்தது.

எம்ஜிஆர் இறந்தபின் யார் முதல்வராக ஆவது? அப்போது மூத்த அமைச்சராக இருந்த நெடுஞ் செழியனா? ஆர்.எம்.வீயா? என்ற கேள்வி இருந்தபோது யாரும் எதிர்பாராமல் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி முன்னிறுத்தப்பட்டார். இதை ஜெவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கவில்லை. நெடுஞ்செழியனுக்கே தன் ஆதரவு என்றார் ஜெயலலிதா. அச்சமயம் எம்ஜிஆருக்கு அடுத்து சரியான தலைமையைத் தரக்கூடிய கவர்ச்சியான ஆளுமை ஜெவிடமே இருக்கிறது என்று ஒருவிதமான கருத்தொற்றுமை அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினரிடம் உருவாகிக்கொண்டிருந்தது.

ஜானகிக்கு ஆதரவாக 97 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் அளித்தார்கள். அவர் ஜானகியை பதவியேற்க அழைத்தார். 1987 ஜனவரி 7 ஆம் தேதி அவர் பதவியேற்றார். அதே மாதம் 28க்குள் அவர் தன் பலத்தை நிரூபிக்கவேண்டும். தமிழக வரலாற்றில் முதல்வர் ஆன முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமை ஜானகிக்குக் கிடைத்தது.

தனக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை நம்பி இருந்தது ஜானகி அணி. அவர்களுக்கு 32 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். கூட்டணிக் கட்சி. ஆனால் இதுதான் சமயம் என்று காங்கிரஸ் அதிமுகவின் கழுத்தை அறுக்க முடிவு செய்தது. ஆதரவு அளிப்பதில்லை. எப்படியோ  முட்டிக்கொண்டு ஆட்சி கவிழவேண்டும் என அவர்கள் விரும்பி இருக்கவேண்டும். இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாட்டை மீறி சிலர் ஜானகிக்கு ஆதரவு அளிக்கத் தயார் ஆனார்கள். ஜானகி அணியைச்சேர்ந்த பிஎச் பாண்டியன் சபாநாயகராக இருந்தார். அவர்தான் வானளாவிய அதிகாரம் படைத்தவர். ஜெயலலிதா அணியில் இருந்த 32 எம்.எல்.ஏக்களையும் கட்சித்தாவல் குற்றத்துக்காக கட்சியில் இருந்து நீக்கி, அவர்கள் வாக்களிக்க முடியாது என அறிவித்தார். சட்டமன்றம் ரகளை மன்றம் ஆனது. குண்டர்கள் உள்ளே நுழைந்து ஜெ. ஆதரவு எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் உறுப்பினர்களைத் தாக்கினர். காவல்துறை வந்தது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி வென்றதாக பாண்டியன் அறிவித்தார். இதை அடுத்து ஆட்சி கலைக்கப்படவேண்டும் என தாக்கப்பட்ட உறுப்பினர்கள் தரப்பு ஆளுநரை சந்தித்து வேண்டுகோள் வைக்க, அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

அதிமுக ஜானகி அணி, ஜெ.அணி என்று இரண்டாகப் பிளந்தது. எம்ஜிஆரின் மனைவியா, அவரை தன் தலைவராக வரித்துக்கொண்டு அவரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஜெயலலிதாவா? முடிவெடுப்பது அதிமுகவினருக்கு மிகச் சிரமமாகத்தான் இருந்திருக்கும். பெரும்பாலான சீனியர் தலைவர்கள் ஜானகி பக்கம் இருந்தனர். ஆனால் செல்லும் இடமெல்லாம் கூட்டம் ஜெயலலிதாவைப் பார்க்கத்தான் முண்டி அடித்தது. ஆளுநர் ஆட்சி நடைபெற்று ஆறுமாதத்துக்குள் தேர்தல் வந்தபோது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. ஜானகி அணி இரட்டைப் புறா, ஜெ. அணி சேவல் சின்னத்தில் களமிறங்கினர். முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே வந்திருந்தன. திமுக அணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிமுகவைப் பொருத்தவரை யார் பக்கம் கட்சி என தீர்மானம் ஆகியது. சேவல் சின்னத்தினர் 27 இடங்களில் வென்றனர். ஜெயலலிதா போடியில் வெற்றி பெற்றார். ஜா அணியினர் ஓர் இடம் தவிர எல்லா இடங்களிலும் தோல்வி. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட வி.என்.ஜானகியே தோல்வி அடைந்தது பேரதிர்ச்சி.

ஜானகி ஏன் தேர்தல் அரசியலை விரும்பினார் என்று தெரியவில்லை. இத்தோல்விக்குப் பிறகு அவர் கட்சியை ஜெயலலிதாவிடமே ஒப்படைத்துவிட்டார். மீண்டும் இரட்டை இலை சின்னமும் கட்சி அலுவலகமும் ஜெ வசம் வந்து சேர்ந்தன.

 அதற்கு அடுத்ததாக உடனே நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது. ஆளுங்கட்சியாக திமுக இருக்கும்போதே கிடைத்த இந்த வெற்றி ஜெயலலிதாவின் தலைமையை உறுதிப்படுத்திற்று.

எம்.ஜி.ஆர். மரணத்தின்போது ஜெயலலிதாவுக்கு 38 வயதே ஆகி இருந்தது. எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கையில், அதிமுக ஜெ. கையில்தான் வந்து சேர்ந்திருந்தது. அதைப் பத்திரமாக வழி நடந்த வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல, திராவிடக் கட்சி ஒன்றுக்கு பிராமணப் பெண் ஒருவர் தலைவி. அவரை பிற அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு பொருட்டாக எடுக்க இன்னும் கொஞ்சம் காலம் பிடித்தது. அதுமட்டுமல்ல சில விஷயங்களால் அவரது ஆரம்ப காலகட்டம் சற்று தடுமாற்றங்களுடன் தான் தொடங்கியது.

ஜெயலலிதா எடுத்த எடுப்பிலேயே சற்று சர்வாதிகாரமாகவே கட்சியை நடத்த ஆரம்பித்தார். அவருடன் கருத்துவேறுபாடு கொண்ட எந்த தலைவருக்கும் நிலைமை சிக்கல்தான். ஆரம்பத்திலிருந்து ஆதரவு தெரிவித்த திருநாவுக்கரசு போன்றவர்களே உள்ளே வெளியே ஆட்டம்தான் ஆடவேண்டி இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்துக்குள் சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜனும் வசித்து வந்தார். ஜெயலலிதாவின் அரசியல் விவகாரங்களை தானே நிர்வகித்து வருவதாக நடராஜன் நடந்து கொண்டதில் கட்சிக்குள் நிறைய உரசல்கள், குற்றச்சாட்டுகள்.

இந்நிலையில் ஜெயலலிதா  சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதம் எழுதி வைக்க, அது சட்டசபை சபாநாயகர் கைக்கு மர்மமான முறையில் சென்றது. ஊடகங்களுக்கும் இக்கடிதம் சென்று, அவர் அரசியலை விட்டு விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் தான் அப்படி எதுவும் எழுதவில்லை என்று ஜெயலலிதா பின்னர் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் பல்வேறு சக்திகள் அவரை குழப்பி அடித்த காலம் அது.

1989, மார்ச் 25 ஆம் தேதி. இந்நாளில் நடந்த ஒரு நிகழ்வு தமிழக அரசியலின் போக்கை மாற்றி அமைத்தது. சட்டமன்றத்தில் நிதி அமைச்சராகவும் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டை வாசிக்க எழுந்தார். அச்சமயம் தன்னை காவல்துறை கண்காணிப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். முதல்வர் பதிலுக்குப் பேசி, பட்ஜெட்டை வாசிக்க முற்பட்டபோது, அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு திமுக உறுப்பினர்கள் பாய்ந்ததில் பெண் என்றும் பாராமல் ஜெ. தாக்குதலுக்கு உள்ளானார். தேர்ந்த அரசியல்வாதி ஆகிவிட்டிருந்த அவர் இதையும் தன் ஆதரவாகப் பயன்படுத்த தீர்மானித்தார். சபைக்கு வெளியே தலைவிரி கோலமாகத் தோன்றினார். கௌரவர் சபையில் அவமானப்படுத்தப்பட்ட திரௌபதியாக தன்னை தமிழகத் தாய்மார்கள் முன்பு வைத்த அவர், ‘ஒரு பெண் கண்ணியமாக நடத்தப்படும் காலம் வரும்வரை இந்த அவைக்குள் கால் வைக்கமாட்டேன்' என்றார்.

அந்த காலமும் அவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவர் மட்டுமல்ல யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். சடசடவென்று காலங்கள் மாறிவிட்டன.

இதை அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. தனக்கு நேர்ந்த அவமானத்தை தேர்தல் பொருளாக்கினார் ஜெயலலிதா. போட்டியிட்ட 11 இடங்களில் அதிமுக வென்றது. காங்கிரசும் தான் போட்டியிட்ட 29 இடங்களில் 28&இல் வென்றது. ஆக மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை போய்விட்டது ஆட்சியைக் கலையுங்கள் என வலியுறுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர் பிரச்னை கொழுந்துவிட்டு எறிந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகம் முழுக்க போராளிகள் பயிற்சி முகாம்கள் இருந்தன. அமைதிப்படை இலங்கையில் இருந்தது. அது அப்பாவித் தமிழர்களைக் கொல்வதாக குற்றச்சாட்டு இருந்தது. திமுகவின் கூட்டணிதான் மத்தியில் ஆட்சியிலும் இருந்தது. ஆனாலும் சடாரென மண்டல் பிரச்னையில் வி.பி. சிங் அரசு கவிழ, காங்கிரஸ் ஆதரவுடன் சந்திர சேகர் ஆட்சி டெல்லியில் அமைந்தபோது, திமுகவுக்கு எதுவும் சுலபமாக இல்லை. தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி காரணம் காட்டி,  ஆட்சியை கலைத்துவிட்டனர்.

சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தது. இப்போது தங்கள் ஆட்சியைக் கலைத்ததற்கு நியாயம் கேட்க திமுகவுக்கு வாய்ப்பு. அநியாயத்துக்கு நீதியை மக்கள் தான் வழங்க வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் எந்த வாய்ப்பையும் காலம் வழங்கவில்லை. 1991, மே, 21 ஆம் தேதி ராஜீவ்காந்தி திரும்பெரும்புதூரில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார். புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இந்த தாக்குதலின் முழு பழியையும் திமுகவே சுமக்க நேர்ந்தது.

சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டிலுமே திமுக அடிவாங்க, அதிமுக அமோகமாக வெற்றி. அதிமுக காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களில் அசுரபலம். அதிமுக 164, திமுக 2.

அதிமுகவின் இரண்டாவது வெற்றி அத்தியாயம் தொடங்கியது. இது மாறுபட்டதாக இருக்கும் என்பது அவர் பதவியேற்றதில் இருந்தே தெரியத் தொடங்கியது. 1991 ஜூலை 24 ஆம் தேதி அவர் பதவிப்பிரமாணம் எடுத்தபோது இறைவன் பெயரால் எடுத்தார். அமைச்சர்களும் அப்படியே. அதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள்  தொடங்கி எல்லோரும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து எழுந்தார்கள். ஒரு மகாராணியாக இரும்புக் கரத்தால் ஆட்சி செய்யப்போகிறார் என்பதையும் கட்சிக்குள் எந்த எதிர்ப்புக்குரலையும் சகிக்கப் போவதில்லை என்பதையுமே இது காண்பித்தது. ஆனால் மக்களாட்சி முறையில் இது நல்லதா?

ஆட்சிப் பொறுப்பில் இந்த ஐந்தாண்டுகள் அவருக்கு முதல் முறை. இக்காலகட்டத்தில் அவர் செய்த பிழைகள்தான் அவரது அரசியலில் கடைசி வரைக்கும் துரத்தி வந்தன.

பதவி ஏற்றவுடன் மலிவுவிலை மதுவை ரத்து செய்தார். ஈழப்போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி இருந்தன. காவிரிப் பிரச்னை சூடு பிடித்திருந்தது. அதில் மிகவும் உறுதியாக நடந்துகொண்டார். கர்நாடகத்தில் காவிரிப் பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தபோது இங்கே மூன்று நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் உட்கார்ந்தார். இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் 69% சதவீதத்தைக் காத்தார். தொட்டில் குழந்தைகள் திட்டம் கொண்டு வந்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

இருப்பினும் அவருக்கு எதிரான மனநிலையை வளர்க்கும் நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் செய்தன. அவற்றைத் தவிர்த்திருக்கும் அளவுக்கு அவருக்கு கவனம் குவிந்திருக்கவில்லை. அதில் முக்கியமானது கும்பகோணம் மகாமக நிகழ்வில் ஏற்பட்ட விபத்து. 1992, பிப்ரவரி 18 ஆம் தேதி, மகாமகக் குளத்தில் அவர் குளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோழி சசிகலாவுடன் அவர் குளிக்கும் நிகழ்வைக் காண மக்கள் முண்டி அடித்ததில் சுவர் சரிந்துவிழுந்து 48 பேர் இறந்தார்கள். நீராடி முடிந்து அவர் கிளம்பிச் சென்றுவிட்டார். ஆனால் இந்த சம்பவம் அவருக்கு எதிரான மனநிலையை ஊடகங்களிலும் மக்கள் மனதிலும் உருவாக்குவதில் முதலிடத்தில் இருந்தது.

பத்திரிகைகளுடனான மோதல் போக்கும் தொடங்கியது. நக்கீரன் குறிவைத்துத் தாக்கப்பட்டது. இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் பரிதி இளம்வழுதி சட்டமன்றத்தில் வேட்டி உருவப்பட்டு தாக்கப்பட்டது எழுதப்பட்டபோது அதன் ஆசிரியருக்கும் நிருபருக்கும் சபாநாயகரால் கைதுவாரண்ட்  பிறப்பிக்கப்பட்டது. முரசொலி, மாலைமுரசு பத்திரிகைகளுக்கும் இதே நிலைதான். அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா.

புகழ்ந்தால்தான் அம்மாவுக்குப் பிடிக்கும் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் கண்டுகொண்ட காலம் இதுதான். எங்கும் ஜே ஜே என்று ஜால்ரா சத்தமாக ஒலிக்க ஆரம்பத்தது. நெல்லுக்குப் பெயர், நகருக்குப் பெயர், போக்குவரத்துக்கழகத்துக்குப் பெயர், ராகத்துக்குப் பெயர் என்று ‘வாழ்ந்தார்' ஜெயலலிதா.

சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவைப் புகழ்ந்தவர். அவர் அரசின் சிறுதொழில் துறையில் பணியாற்றினார். ஒருநாள் அவர் முகத்தில் அமிலம் வீசப்பட்டது. வீசியவன் மும்பைக்கு ஓடிப்போக அவனைப் பிடித்துவந்து சிறையில் அடைத்தாலும் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யாரும் தண்டிக்கப்படவே இல்லை. இது தொடர்பாகப் பரவிய வதந்திகள் எதையும் அவர் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த சமயத்தில்தான் அவருக்கு ஒரு எதிரியாக சுப்ரமணியம் சாமி உருவானார். டான்ஸி நிலத்தை குறைந்த மதிப்பில் ஜெயா பப்ளிகேஷன்ஸுக்கு வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தார். அவர் தங்கி இருந்த ஓட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்

நீதிமன்றம் வரும்போது மகளிரணி வரவேற்பு வழங்கப்பட்டது.  ப.சிதம்பரம், வழக்கறிஞர் கே.விஜயன் போன்றவர்களும் குண்டர்களால் தாக்கப்படும் கலாசாரம் நிலவியது.

இம்மாதிரி சூழலில் அவரை நெருங்குவதும் சிரமம் என்றானபோது, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் உறவினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஊடகங்களை ஆக்கிரமித்தன.

இச்சமயத்தில் சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்து எடுத்ததுடன் அவரது திருமணத்தை மிகுந்த ஆடம்பரமாக நடத்தியதுவேறு அவரது

செல்வாக்கை அசைத்திருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்தும் கருத்துகள் சொல்லி இருந்தார்.

1996-இல் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தது. பிரதமர் நரசிம்மராவ் விருப்பப்படி காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி வைத்தது. இதை விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் மூப்பனார் தலைமையில் தனி அணி உருவாக்கி, தமிழ்மாநில காங்கிரஸ் என்ற பெயரில் திமுகவுடன் கூட்டணி அமைத்தனர்.

அதிமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. புதிதாக திமுக ஆட்சி அமைந்தது. ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். சசிகலா ஏற்கெனவே ஃபெரா சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இச்சமயத்தில் போடப்பட்ட வழக்குகளை சமாளிப்பதே எதிர்காலத்தில் அவரது அரசியலாக மாறிப்போனது துரதிருஷ்டம்தான்.

இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரனிடமிருந்து விலகி இருக்கப்போவதாக திடீரென அறிக்கை கொடுத்தார் ஜெயலலிதா. ‘ஒருசில தனி நபர்களை விட கட்சி முக்கியமானது என்று கருதுகிறேன்,' என்றார், அவர். 28 நாட்கள் சிறைவாசம். அதன் பின்னர் அதிமுகவின் ‘சாப்டர் குளோஸ்’ என்று யாராவது நினைத்திருக்கக் கூடும்தான்.

1999 ஏப்ரல் 12-ஆம் தேதி அவர் டெல்லிக்குப் புறப்பட்டார். ஒரு மகாராணியைப் போல் கம்பீரமாக. தில்லி மௌரியா ஷரட்டன் விடுதி இந்தியாவின் அரசியல் மையமானது. முக்கியமான டெல்லி அரசியல்வாதிகளுடன் சந்திப்புகள், பேரங்கள், தேநீர் சந்திப்புகள். ஜெயலலிதா ஒரு கிங் மேக்கராக உச்சசக்திபெற்ற அரசியல்வாதியாக வளையவந்தார். அவருக்கு அங்கிருந்த சிலவாரங்களில் அபிரிதமான செல்வாக்கு இருந்தது.

இதற்கு முந்தைய மூன்றாண்டுகளில்  என்ன ஆனது என்று பார்க்கவேண்டும்.  சிறையிலிருந்து விடுதலை ஆனதும் வீட்டுக்குள் எட்டுமாதங்கள் யாரையும் பார்க்காமல் ஒதுங்கி இருந்து மீண்டும் வெளியே வந்தார் அதிமுக தலைவி. அவர் ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். அதை மத்தியில் ஐக்கியமுன்னணி ஆட்சி கவிழ்ந்து, பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து இதுவரை தமிழக திராவிடக்கட்சிகள் எதுவும் செய்திராத ஒரு வேலையைச் செய்ய அவர் முன்வந்தார். பாஜகவுடன் கூட்டணி. தமிழகத்தில் இருந்து வேறு சில கட்சிகளும் ஒன்றிணைய, கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய களேபரத்தில், இந்த அணி அமோக வெற்றி. அதிமுகவுக்கு மட்டும் 18 எம்பிகள் கிடைத்தார்கள். வடக்கே வாஜ்பாய் அரசு அமைய, அதில் அதிமுகவும் பங்கேற்றது. அகில இந்திய தலைவர் ஆக, அந்தஸ்து உயர, அதிமுக சிறகடித்துப் பறந்தது.

ஆனால் அதிமுக தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகள், தன் மீதான வழக்குகளில் இருந்து விடுதலை  உள்ளிட்ட பலவற்றை பாஜகவிடம் எதிர்பார்க்க, கிடைக்காத சூழல் இருந்தது. இந்நிலையில்தான் ஜெயலலிதா டெல்லிக்கு வந்திருந்தார். ஏப்ரல் 14, ஆம் நாள் பாஜகவுக்கு தன் ஆதரவை விலக்கி, ஆட்சியைக் கவிழ்த்தார்! அவர் எதிர்பார்த்தது போல் மாற்று அரசு அமையவில்லை! அதுதான் அதிமுக மத்தியில் கூட்டணி அரசில் இடம்பெற்ற கடைசி தருணமாக அமைந்தது! அதன்பின்னர் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே இல்லை!

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் இடத்தில் திமுகவும் பிற கூட்டணிக் கட்சிகளும் இடம் பிடித்துக்கொண்டன. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஐந்தாண்டுகள் நீடித்தது.

இச்சமயத்தில் கொடைக்கானல் ப்ளசென்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கும் அமைச்சராக இருந்த செல்வகணபதி உள்ளிட்டோருக்கும் இரண்டாண்டு தண்டனை அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுக்க கலவரம் மூண்டது. பல பேருந்துகள் எரிக்கப்பட்டன.

இச்சமயத்தில் தர்மபுரி அருகே கோவை வேளாண்கல்லூரி மாணவிகள் பயணித்த பேருந்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டதில் மூன்று மாணவிகள்  அநியாயமாக மாண்டுபோனார்கள்.

இது நடந்து சில மாதங்களில் அடுத்ததாக டான்ஸி வழக்கில் பல போராட்டங்களுக்குப் பின்னால் சிறப்பு நீதிமன்றத்தில் அக்டோபர் 9, 2000 த்தில் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டுகள் தண்டனை கொடுத்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை. ஆனாலும் கூட அவர் அசரவில்லை. ‘ஜெயமுண்டு பயமில்லை' என்றார். சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புகள் கருணாநிதியின் சதிவேலை என்று தொடர்ந்து கூறிவந்தார். 2001 தேர்தல் வந்தபோது தமாகா, பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அவருடன் நின்றார்கள்.

தேர்தலில் நிற்கமுடியாத தன்னுடைய நிலையையே தன் ஆதரவாளர்களிடம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். ஆம். எங்கும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றாலும் கூட நான்கு தொகுதிகளில் அவர் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது! அவை நிராகரிக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்களிடம் அனுதாபத்தை ஆறாக ஓடச் செய்தது. அதிமுகவின் வாக்காளர்கள் அம்மாவிடம் அளவில்லாத ஆதரவைக் காட்டத்தான் செய்தனர். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதே அதிமுகவின் அணுகுமுறையாக இருந்தது. இத் தேர்தலில் மீண்டும் தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்!

வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு சோதனைதான். அதன் சமுக்கள் ஜெயலலிதாவை தங்கள் சட்டமன்றத்தலைவராக தேர்வு செய்தனர். ஆனால் தண்டனை இருப்பதால் அவர் முதல்வர் ஆகக்கூடாது என்ற கருத்து இருக்கும்போது, அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஆட்சியில் அமர்ந்ததும் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டது பெரிய நகை முரண். பரிதி இளம்வழுதி சிறைக்கு அனுப்பப்பட்டார். 2001 ஜூன் 30, அன்று நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது திமுக மத்திய கூட்டணி அரசில் இருந்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் திரும்ப அழைக்கப்பட்டார். மத்திய அரசும் அழுத்தம் கொடுக்க, 'முதிய வயதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மனித நேய அடிப்படையில்' கருணாநிதி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுக ஒரு தர்மசங்கடமான நிலையை எதிர்கொண்டது. உச்சநீதிமன்றம் அதிமுக தலைவி முதல்வராகப் பதவி ஏற்றது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்க, அவர் பதவி விலகிவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் என்ற பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை முதல்வர் பதவிக்கு நியமித்தார்.

அதே ஆண்டு இறுதியில் டான்ஸி வழக்கில் அவருக்கு விடுதலை கிடைக்க, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு இருந்த தடைகள் நீங்கின. அதிமுகவினரின் கொண்டாட்டத்துக்கு இடையே அவர் ஆட்சிப்பீடத்தில் ஏறினார்.

பின் வந்த அவரது ஆட்சிக்காலம், வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்ததற்காக அறியப்பட்டதானது. காங்கிரஸ் தலைவி சோனியாவை இத்தாலிக்காரி என விமர் சித்து காங்கிரஸுடன் இருந்த உறவுப்பாலத்தையும் எரித்துக்கொண்டார். மதமாற்றத் தடை சட்டம், கிராம கோவில்களில் ஆடுமாடு பலியிடத் தடை சட்டம் போன்ற தேவையில்லாத ஆணிகளை அடித்து சிக்கிக்கொள்ளவும் அவர் தவறவில்லை. மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது ஒரே இரவில் இரண்டு லட்சம் ஊழியரை பணி  நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி, போராட்டத்தை முறியடித்தார். பத்திரிகைகள் மீது வழக்குகள் போடுவது தொடர்ந்தது. இச்சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடகத்துக்கு திமுக போட்ட வழக்கால் மாற்றப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில் வந்தது 2004 நாடாளுமன்றத் தேர்தல். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தையும் இணைத்து கூட்டணி அமைத்ததில் அதிமுக படு தோல்வி அடைந்தது. மீண்டும் மத்தியில் திமுக அமைச்சரவையில் பலமாக இடம் பிடித்தது. தோல்விக்குப் பின் அதிமுக தங்கள் ஆட்சியில் போடப்பட்ட சில சட்டங்களை விலக்கிக்கொண்டது. சென்னைக்குக் குடிநீர் கொண்டுவர வீராணம்  நீர்த்திட்டத்தை நிறைவேற்றியது, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் போன்றவை இருந்தாலும் 2006&இல் வலுவான கூட்டணியுடன் திமுக ஆட்சிக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் அவர் டாஸ்மாக் மூலம் மதுவிற்பனையைத் தொடக்கினார். பின் வந்த மாநில அரசுகளுக்கு பெரும் வருவாயாக அது அமைந்தது. அதிமுக சார்பில் செய்யப்பட்ட அதிரடிகளில் ஒன்று காஞ்சி சங்கராச்சாரியாரை 2004 நவம்பர் மாதம் தீபாவளியன்று கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்ததுமாகும். 2004, டிசம்பரில் வந்த சுனாமியையும் அதன் இழப்புகளையும் அதிமுக அரசு கையாண்டவிதமும் பாராட்டப்பெற்றது.

இந்ததேர்தல் தோல்விக்குப் பின் கொடநாடு பங்களாவுக்குச் சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தார் ஜெ. இன்னும் ஐந்தாண்டுகள் அவர் எதிர்க்கட்சியாகத் தாக்குப்பிடித்தாகவேண்டும். திமுகவுக்கு முழு பலம் இல்லை. கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில்தான் அது நின்றது. எனவே அதை மைனாரிட்சி அரசு என்று அவ்வப்போது அறிக்கைகளில் தாக்கிகொண்டிருந்தார். அந்த ஐந்தாண்டுகளில் திமுகவில் ஏற்பட்ட குளறுபடிகள், மத்தியில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மீது சொல்லப்பட்ட 2 ஜி உள்ளிட்ட ஊழல்கள் ஆகியற்றை அவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். இதற்கிடையில் இலங்கையில் நடந்த பெரும் இன அழிப்புப்போர் திமுக மீது இளைஞர்களின் கோபத்தைக் கிளப்பி இருந்தது. எல்லாம் சேர்ந்த தனக்கு ஆதரவாகக் காற்று வீசச்செய்வதை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவர் சும்மா இருக்கவில்லை. மதுரை. கோவை, திருச்சி என்று மிகப்பிரமாண்டமாக லட்சக்கணக்கானோர் கூடிய அதிமுக மாநாடுகளை தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கூட்டி, திமுகவை விமர்சித்தார்.

2011 தேர்தலில் அதிமுக, ஒரு தேர்தல் உத்தியாக தேமுதிகவை அணியில் சேர்த்துக்கொண்டிருந்தது. அந்தத் தேர்தல் வெற்றியைப் பெற்றுத் தந்தது. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கையோடு தேமுதிகவை கழற்றிவிட்டார். திமுக சோர்விலிருந்து மீண்டு வர இன்னும் பல காலம் ஆகும் என்பதை உணர்ந்த அவர் அதற்கேற்ப தேர்தல் வியூகங்கள் வகுத்தார். மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அவர், இம்முறை மிகுந்த முதிர்ச்சியுடன் இருந்தார் என்றே சொல்லவேண்டும். அனாயசமான கைதுகள், அடக்குமுறைகள் குறைந்திருந்தன. ஆனால் திமுக வெறுப்பு மட்டும் அப்படியே இருந்தது. திமுக கட்டிய தலைமைச்செயலகம் மருத்துவமனையாக்கப்பட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட ஆட்டுவிக்கப்பட்டு தப்பித்தது.

அவரது அதே இரும்புப்பிடி ஆட்சிதான் என்றாலும் மக்கள் நல முகம் கொண்ட திட்டங்கள் அம்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டன. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட்.. எல்லாம் நடுத்தர நிலைக்கு கீழே இருக்கும் ஏழை மக்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டன. அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய், தயிர்சாதம் மூன்று ரூபாய்! அம்மா அன்னபூரணி ஆனார்!

2ஜி, இலங்கைப் பிரச்னை போன்றவற்றால் திமுக சரிவுக்குள்ளானது. இனி அகில இந்தியக் கனவுக்கு ஜெயலலிதா திரும்பினார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அவரருக்கு யாருடனும் கூட்டணி சேர அவசியம் இருக்கவில்லை. வலுவான கூட்டணி எதுவும் எதிரணியில் இல்லை! தனக்கு நண்பரான மோடி பாஜகவில் பிரதமர் வேட்பாளராக இருந்தும் அவருடன் கூட்டணி வைத்து ஆதரிக்கவில்லை! அந்த மோடியா இந்த லேடியா என்று சவால் விட்டார்!

39 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வென்றது. ஆனால் இவ்வளவு இடங்கள் வென்றும் பிரயோசனம் இல்லாமல் போனது அவருக்கு வருத்தம் அளித்திருக்கும்! மோடி யாருடைய உதவியும் இன்றி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெருவெற்றி அடைந்திருந்தார்!

அகில இந்திய அளவில் தன்னால் முத்திரை பதிக்க முடியாவிட்டாலும் ஒரு குறை இருந்தது. தொடர்ந்தாற்போல் இரண்டு முறை தமிழ்நாட்டில் ஜெயித்துக்காட்டவேண்டும். புரட்சித்தலைவர்தான் மூன்று முறை தொடர்ந்து வென்று காட்டியவர்! அதன் பின்னர் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.

இந்த இலக்கு நோக்கி சிந்தித்தவருக்கு செப்டம்பர் 27, 2014 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைவளாக நீதிமன்றத்தில் பழைய சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு பேரிடியாக இறங்கியது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் நான்காண்டு சிறைத்தண்டனை; ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம்! மற்ற மூவருக்கும் 10 கோடி!

இதைத் தொடர்ந்து அவர் 21 நாட்கள் சிறையிலிருந்தார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பினார். தங்கள் தலைவிக்காக அமைச்சர்களும் தொண்டர்களும் வேண்டாத தெய்வமில்லை;

சாப்பிடாத மண் சோறு இல்லை; குத்தாத அலகு இல்லை; தூக்காத தீச்சட்டி இல்லை! ஒட்டுமொத்த கட்சியுமே இறைவனிடம் சரணாகதி அடைந்திருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு முறை முதலமைச்சராகி இருந்தார்.

எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு மின்னல் கீற்று. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்து, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விடுதலை வழங்க, மீண்டும் போயஸ் கார்டன் பிரகாசமானது. மீண்டும் முதல்வராக பதவி ஏற்றவர், ஆர்.கே. நகரில் நின்று வெற்றி பெற்றார்.

2015ஆம் ஆண்டு கடைசியில் பெய்த பருவமழை சென்னையை மூழ்கடித்தது. செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீரில் நகரமே மூழ்கியது. பலர் இறந்தும் போனார்கள். இது எப்படியும் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்க்கட்சிகள் நம்பினார்கள். ஆனால் அதிமுகவோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

2016 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, திமுகவும் காங்கிரசும் கூட்டணி வைத்திருந்தன. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் பிற கட்சிகள் அணி அமைத்தன. அதிமுக தனியாக 234 தொகுதிகளிலும் நின்றது. மக்களால் நான் மக்களுக்காக நான் என்றவண்ணம் சுற்றிவந்தார் ஜெயலலிதா. திமுக தரப்பிலும் பாமக தரப்பிலும் அதிநவீன முறையில் பிரச்சார கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனால் அதிமுக சார்பில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை! அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது! தொடர்ச்சியாக இரண்டாவது முறை வென்றுகாட்டினார் அவர்! ‘பத்து கட்சிகள் என்னை எதிர்த்தன. மக்களுடன் தான் நான் கூட்டணி வைத்தேன். கடவுளை நம்பினேன்' என்று தன் வெற்றி உரையில் குறிப்பிட்டார் அவர்.

பிப்ரவரி - 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com