இரு மொழியில் ஓர் இடி முழக்கம்!

இரு மொழியில் ஓர் இடி முழக்கம்!
Published on

இளையராஜா இசையமைத்த திருவாசகத்தின் ஒலிப்பேழை வெளியீடு விழா. ‘திருவாசகம்’ பற்றி வைகோ பேசுகிறார். பெருங்கூட்டம் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. அன்று மேடையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் விசிலடித்து மகிழ்கிறார். அதன் பின்னர் பேசிய இளையராஜா, நீங்கள் ஏன் அரசியலில் இருக்கிறீர்கள் இவ்வளவு ஞானத்துடன் பேசும் நீங்கள் இலக்கியத்தின் பக்கம் வந்துவிடக்கூடாதா? என்று கேட்கிறார். வைகோ அரசியலைத் தாண்டி எல்லா தரப்பையும் கவர்ந்த பேச்சாற்றல் படைத்தவர்.

திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முக்கியகாரணம் மேடைதான் என்பதை தமிழக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது. பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுக, தமிழகத்தின் பட்டிதொட்டி பட்டினக்கரை யெல்லாம் கிளைபரப்பி வளர்ந்ததற்கு அண்ணாவின் பேச்சாற்றல்தான் காரணம். தன்னைப் போலவே மக்களை ஈர்த்த பேச்சாற்றல் கொண்ட தம்பியர் படைவரிசையை அண்ணா உருவாக்கி இருந்தார். சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், நாஞ்சில் கி.மனோகரன், தத்துவமேதை டிகே சீனிவாசன் போன்ற சொல் லாற்றல் மிக்க தலைவர்களால் திமுக காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ல் ஆட்சிக்கு வந்தது. திராவிட இயக்கத்தின் இந்த பாரம்பரியம் பட்டுப்போகாமல் அறிஞர் அண்ணா கலைஞருக்குப் பிறகு தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் தலைவராகவும் வைகோ இருக்கிறார்.

கலிங்கப்பட்டியில் கால்சட்டைப் பருவத்தில் எட்டாவது வயதிலேயே மேடை ஏறியவர் வைகோ. மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தி, பூமிதான இயக்க சர்வோதய தலைவர்களுடன் கலிங்கப் பட்டி வந்தபோது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வயலி மாணிக்கவாசகம், கவிஞர் சட்டமுத்தன் இருவரும் வைகோவை மேடை ஏற்றினர். மக்கள் வெள்ளத்துக்கு முன்னால் கடையேழு வள்ளல்களில் ஈகை குறித்துப் பேசச் செய்தனர். பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் படிக்கும்போதும் சென்னையில் மாநிலக்கல்லூரி, சட்டக்கல்லூரியில் மாணவராக இருக்கும்போதும் வைகோ சிறந்த பேச்சாளராக உருவெடுத்தார். மாநிலக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலைப் படிக்கும்போது 1964-ல் கோகலே மண்டபத்தில் சென்னை அனைத்துக்கல்லூரி தமிழ்மன்றத்தினர் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் அறிஞர் அண்ணாவுக்கு முன்னால் உரை ஆற்றினார். அவர் பாராட்டையும் பெற்றார். 1968-ல் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது நடந்த பேச்சுப்போட்டியில் உணஞீண் ஒதண்tடிtதூ tடஞு Mஞுச்ணண், முடிவுகள் வழிகளை நியாயப்படுத்துகின்றன என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை வைகோவுக்கு முதல்பரிசைப் பெற்றுத் தந்தது.

வைகோவின் பேச்சு, கணீரென்ற குரலுடன் முரசு அறைவது போன்று இருக்கும். கம்பீரமான தோற்றப் பொலிவு. கழுத்தில் தொங்கும் ட்ரேட் மார்க் கறுப்பு சால்வை. அதை இழுத்து வைத்துக் கொண்டு அவர் பேசத் தொடங்கினால் வீறுகொண்ட முழக்கம்தான்.

எந்த ஊருக்குப் பேசச் சென்றாலும் அந்த ஊரைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றுச் செய்திகளை முதலில் அவர் அழகாக எடுத்துரைக்கும் போது சொந்த ஊரின் பெருமையை அறியாத மக்கள் தம் ஊரின் பெருமையைக் கேட்டும் மகிழ்ந்துபோவர். பேசத் தொடங்கும்போதே மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார். அடுத்து உரையாற்றுகின்ற தேதியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டுவார். வைகோவின் உரையில் உலக சரித்திர நிகழ்வுகள் இடையிடையே வந்துகொண்டே இருக்கும். கேட்போர்க்கு கிளர்ச்சியூட்டக் கூடிய வகையில் வரலாற்றுச் செய்திகளை அவர் எடுத்துரைப்பார்.

கிரேக்கத்து மகா அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், இத்தாலியின் கரிபால்டி, அடிமை விலங்கொடித்த ஆபிரஹாம் லிங்கன் போன்றோர் வாழ்க்கையில் நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அவர் மேடையில் எடுத்துரைக்கும் பாணியே அலாதியானது. ஸ்பார்டாவின் வீரர்கள் களம் கண்ட பாணியை விளக்கும்போது தொண்டர்கள் நாடி நரம்புகள் முறுக்கேறும். நேதாஜியின் வீர வரலாற்றை எடுத்துக் கூறி ஈழ விடுதலைப் போராட்டத்தையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தையும் இணைத்து அவர் வாதங்களை அடுக்குவார்.

1990-ல் திருச்சி மாநில மாநாட்டில் உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பில் வைகோ ஆற்றிய உரை,அவரை திமுக தலைவர் கலைஞருக்கு அடுத்த இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. அன்று அவர் பேசவந்தபோது உணவு இடைவேளைக்கு வெளியே வந்திருந்த தொண்டர்கள் அப்படியே போட்டுவிட்டு மாநாட்டுத்திடலுக்குள் ஓடி வந்தார்கள். அதற்குப் பிறகு நடந்த திமுக மாநாடுகள் அனைத்திலும் வைகோவின் பேச்சுதான் கருணாநிதிக்கு அடுத்தபடியாக தொண்டர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்றது.

 தமிழில் எப்படி ஓங்கிய குரலில் குமுறும் எரிமலை என முழங்குகிறாரோ அதுபோலவே ஆங்கிலத்திலும் பேசும் ஆற்றல் வைகோவுக்கு உண்டு. திராவிட இயக்கத்தில் அண்ணா ஒருவருக்குத்தான் இருமொழிகளிலும் மேடையில் அழகாகப் பேசும் ஆற்றல் இருந்தது. அண்ணாவின் இத்தகைய ஆற்றல் கைவரப் பெற்றவராக வைகோ இருப்பதால்தான் நாடாளுமன்றத்தில் புகழ்பெற்றார்.

தமிழ் இலக்கியங்களை மேற்கோள்காட்டி பேசும்போதும், சங்க இலக்கியப் பாடல்களை எந்த வித குறிப்பும் இல்லாமல் அவர் எடுத்து வைப்பார். பெரும்பாலும் ‘திருக்குறளை’ தமது பேச்சில் வைகோ அதிகம் எடுத்துக்காட்டுவார். பாவேந்தர் பாரதிதாசன், பாரதியின் பாடல்கள் அனைத்தும் வைகோவுக்கு அத்துப்படி.

சிதம்பரம் சேக்கிழார் விழாவிலும்,சேலம் மார்கழி பெருவிழாவிலும் வைகோ ஆற்றிய உரைகள் புகழ்பெற்றவை. ஈரோடு புத்தகக் கண்காட்சியில் “எழுத்து எனும் கருவறை” என்ற தலைப்பிலும், சென்னை புத்தகக் கண்காட்சியில் “சொல் லாற்றல்” என்ற தலைப்பிலும் வைகோ ஆற்றிய உரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. கோவை வழக்கறிஞர் மன்றத்திலும்,தஞ்சை வழக்கறிஞர் மன்றத்திலும் ‘என் பார்வையில் அண்ணல் அம்பேத்கர்’,‘சுய நிர்ணய உரிமையும் பொதுவாக்கெடுப்பும்’ ஆகிய தலைப்புகளில் வைகோ ஆற்றிய உரைகள் வரலாற்றின் பக்கங்களில் எந்நாளும் நிலைத்து இருக்கும். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’,‘சிவகாமியின் சபதம்’ புதினங்கள் பற்றிய வைகோவின் உரைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மேடைகளில் வைகோ ஒரு தேர்ந்த வாள்வீரர். அது அவருக்கு எதிரிகளை எதிர்கொள்ளும் போர்க்களம்.

ஆகஸ்ட், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com