இரந்து கோட் தக்கத் துடைத்து

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்
Published on

மு ப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ‘இலக்கியச் சிந்தனை' ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. கவிக்கோ அப்துல் ரகுமான், விழாத் தலைமை உரையில் சொன்னார், ‘எங்களுக்குப் பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்' என. எனது இலக்கியப் பயணம் 42 ஆண்டுகள் நீண்டது. சில பொற்கிழிகள் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். பூம் பல்லக்கு செய்து அதில் என்னைக் கிடத்திச் சுமந்து போகும் அளவுக்குப் பூக்களும் பெற்றதுண்டு.

பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அனைத்தும் வாங்கக் கிடைக்கும். பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கி இறும்பூது எய்தி உவக்கும் . குடியரசு தலைவர் , முதன்மை அமைச்சர் , முதலமைச்சர் என அமர்ந்து அவர்கள் இரவு உணவு அருந்துவார்கள். பிறந்த நாளுக்கு முன்னணி அரசியல் கொள்ளையர் வாழ்த்துவர் . இறந்தால் வரிசையில் நின்று மலர் வளையம் வைப்பர். வாரிசுகளின் சிரசில் கைவைத்து ஆறுதலும் சொல்வர் . ‘வானத்து அமரன் வந்தான் காண், வந்தது போல் போனான் காண்' என்று புதுமைப்பித்தன் சொற்களில் இரங்கல் செய்தி விடுப்பார்கள்.

ஆனால் மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்தும், கடத்த முயற்சி செய்யும் தீவிர எழுத்தாளன் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பான். இஃதோர் அவலம், தொல்காப்பியன் பிறந்த மொழி பேசும் நாட்டில்.

இன்று நிலைமை கவனிக்கத்தக்க அளவில் மாறிவருகிறது. தொடர்கதை எழுதிப் புகழ்பெற்ற இனம் அழிந்தே போயிற்று. எழுத்தும் வளம் சேர்க்கும் வணிகமே என்று கடை விரித்தார் செல்வம் சேர்க்கலாம். ஆனால் நவீன படைப்புலகில் அவர்கள் தடம் பதிக்கவில்லை, இன்று வணிக வார, மாத மற்றும் பருவ இதழ்களில் பங்களிப்போர் பட்டியலை பார்த்தால் அதில் பெரும்பாலோர் இலக்கியம் முயல்வோராக இருக்கிறார்கள் .

ஒரு பூ போதும் எங்களுக்கு என்றிருந்த ஏக்கம் மாறி இலக்கியப் படைப்பாளிகளுக்கான அங்கீகாரங்கள் , வாழ்நாள் சாதனைக்கான விருதுகள் என்று கடல் கடந்தும் கரைசேர்கின்றன . ஆண்டுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட கௌரவங்கள் உண்டு அவர்களுக்கு இன்று சிலர் விடுபட்டு போயிருக்கலாம் , ஆனால் அங்கு வாங்கும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன.

யாவற்றையும் கடந்து, தமிழின் தேர்ந்த படைப்பாளர் சீரிய முயற்சியில் இருப்போர், கவனிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், அன்பு பாராட்டப்படுகிறார்கள், சிறு புன்னகை , கை குலுக்கள் ‘‘ சார் நீங்க... ‘ எனும் உசாவல்  என இயல்பாக நிகழ்கின்றன.

சீமந்தம், பாண்ட சுத்தி, காது குத்து, பிறந்த நாள், பூப்புனித நீராட்டு , நிச்சயதார்த்தம், கல்யாணம் என்று இன்னும் நான் சராசரியாக மாதம் ஒருமுறை 500 கி.மீ பயணம் செய்து தென் திசை ஓடுகிறேன். இரயிலில் குளிர் பதனப் பெட்டி , சொகுசுப் பேருந்தில் வசதி என்பதெல்லாம் எனக்கு சீலமில்லை. செமி ஸ்லிப்பர் என்று முன்பதிவும் செய்வதில்லை. எட்டு மணி நேர இரவுப் பயணத்துக்கு எதற்கு இத்தனை முன் தயாரிப்புகள் என்பதென் எண்ணம். மேலும் சொகுசுப் பேருந்துகள் கறக்கும் கழுத்தறுப்புக் கட்டணங்கள், கோவை சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். அங்கிருந்து நேராக நாகர்கோவில் . 3+2 இருக்கை வரிசையில் உட்பக்கமாக ஒரு இருக்கை போதும். தாராபுரத்தில் , மற்றும் கோவில்பட்டியில் சாயா. சமீபத்தில் ஒரு பயணத்தின் போது, இரவு இரண்டரை மணி சுமாருக்கு , கோவில்பட்டியில் நிறுத்தினார்கள் பேருந்தை. இருபது கிலோ அரிசி இலவசமாக ரேசன் கடையில் வழங்கப்படும் நாட்டில் மூத்திரம் பெய்ய ஐந்து ரூபாய் வசூலிக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தனியார் நிறுத்தங்கள் என்று இல்லை , நகராட்சி, பேரூராட்சி , மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களிலும் ஐந்து ரூபாய்தான். மூத்திரப் புரை ஒப்பந்தக்காரர் அரசியல் சிற்றரசுகள் என்பார்கள். மூத்திரம் பெய்யும் இடத்தின் அசுத்தம், நாற்றம் , அருவருப்பு பற்றிப் பேசத் தனிக்கட்டுரை எழுத வேண்டும் , இதுவும் ஸ்வச் பாரத் தான்.

பேருந்தில் இருந்து இறங்கி , மூத்திரப் புரை நோக்கி வேகமாய் நடக்கும்போது , முன்பு எப்போதும் சந்தித்திராத இளைஞர் ஒருவர் குறுக்கிட்டு வணக்கம் சொன்னார். ‘‘ அண்ணாச்சி நாஞ்சில் நாடன் தானே! ஊருக்கு போறேளா?'' என்றார் மகிழ்ச்சியாக இருந்தது எனும் ஒற்றைச் சொல்லால் கடந்துபோக எனக்கு உவப்பில்லை.

வேலை இருக்கிறதோ, இல்லையோ ! வாரத்தில் மூன்று நாட்கள் நகரத்துக்குப் போய் , புத்தகங்கள் பார்த்து , நண்பர்களைச் சந்தித்து உரையாடித் திரும்புவது என்பது எனக்கு வழக்கம், பணி நிறைந்துவிட்டது என்று சோம்பிக் கிடந்து, சீரியல் பார்த்து, நோய் பெருக்குவதல்ல.  நகரம் போனால், வழக்கமானதோர் உணவு விடுதியில் அரைச்சீனி போட்டு, கடுப்பங்கூட்டிய காப்பி ஒன்று பருகுவேன். பருகிவிட்டு ஒரு நாள் , இருபத்தெட்டு ரூபாய் பில்லுக்குக் காத்திருந்தபோது சர்வர்  எதிர்த்திசை மூலையில் இருந்த மனிதர் ஒருவரைக் கை காட்டினார். அவர் எனக்குச் சைகை செய்தார் தானே கொடுத்துவிடுவதாக முன்பின் அறிந்தவரும் அல்ல, அவர் என்னை கமலஹாசன் என்று கருதியிருக்க வாய்ப்பில்லை.

தமிழிலக்கியம் முனைவோர் எளிய மனிதர்கள். அவர்களுக்கு பெருந்துறையில் இருந்து மட்டன் சுக்கா, பவானியில் இருந்து சிக்கன் , பள்ளிபாளையம், பொங்கலூரில் இருந்து உப்பிட்டு வரவேண்டாம். மதிய உணவுக்கு தட்டுக்கடைகளில் தென்படுகிறார்கள் அவனது வாசகர்கள்.

‘ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறி இத் தாம் மாய்ந்தனரே ‘‘

என்கிறார்  பெருந்தலைச் சாத்தனார் , புறநானூற்றில். தம் புகழை நிலைபெறச் செய்துவிட்டுத் தாம் இறந்து போனார்கள் என்பது பொருள், இத்தகு வாசகப் புன்முறுவல்கள், எனக்கு இந்தப் பாடல் வரிகளை நினைவுபடுத்துகின்றன.

2012ம் ஆண்டு ஜூன் இறுதி முதல் ஆகஸ்டு இறுதி வரை 58 நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயணம் செய்தேன். பயணச்சீட்டு வாங்கி, விமான நிலையத்தில் வரவேற்று, தம் வீட்டில் தங்க வைத்து, சுற்றுலாத் தலங்கள் காட்டி, பல்வகை பானங்கள், உணவுகள் வாங்கித்தந்து உபசரித்தவர் அனைவரும் முன்பின் அறிந்திராத நண்பர்களே!  பாஸ்டன் , நியூயார்க், வாஷிங்டன் டி.சி, பால்டிமோர், நியூ ஜெர்சி, ஃப்ரிமாண்ட், லாஸ் ஏஞ்ஜலிஸ், சான் பிரான்சிஸ்கோ , ஹ்யூஸ்டன், ஆல்பர் கர்க் என அங்கு மாத்திரம் என்று இல்லை கனடாவில் துபாயில், சார்ஜாவில், குவைத்தில் , மலேசியாவில் , சிங்கப்பூரில்...

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 19 நாட்கள் தங்கி, லாஸ் வேகாஸ், கிராண்ட் கேன்யான், ஹோசிமிட்டு தேசியப்பூங்கா எனச் சுற்றினோம். ஒரு சமயம் பக்கத்து ஓரேகான் மாநிலத்து மலைச்சிகரம் ஒன்றுக்குக் கூட்டிப் போனார்கள் . ‘ The Oregon trial' எனும் பயண வேட்டை நூல் நீங்கள் வாசித்திருக்கலாம்.

நெடுக கார் பயணம். ப்ரிமாண்ட் கவுண்டியில் வாழும் தென் திருப்பேரை சடகோபன் திருமலை ராஜன் வழி நடத்தினார். எம்முடன் பயணித்தவர்கள் எனக்கு மூத்த, திறன் வாய்ந்த படைப்பாளி ‘ புலி நகக் கொன்றை ‘ எனும் புகழ்பெற்ற நாவல் எழுதிய பி.ஏ.கிருஷ்ணன், அவர் துணைவியார், பக்ஸ் என்றழைக்கபட்ட பஞ்சலிங்கபுரத்துப் பகவதிப் பெருமாள் .

பதினான்காயிரம் அடி உயரச் சிகரம், கிட்டத்தட்ட 8000 அடி வரை பயணம் செய்ய சாலை இருந்தது . நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது இரவு எட்டே கால் மணி சூரியன் சாய ஆரம்பித்திருந்தது. இரவு எட்டே முக்கால் மணி வரை வெயிலடிக்கும் கோடை கால நாட்கள் குளிர் 13''இ ஆகத் தணுத்திருந்தது.

திருமலைராஜன் இரவல் தந்திருந்த மேல் கோட் அணிந்திருந்தாலும் சற்றே குளிர்ந்தது. வெப்ப பானம் எதுவும் அருந்தி இருக்கவில்லை. ஆதி அமெரிக்கர் , NATIVE INDIANS, வழிபடும் சிகரம் என்றார்கள் , நாங்கள் நின்றிருந்த சம தளத்து அடிவாரத்தில் சதுர, செவ்வக, முக்கோண வடிவில் சிறு குருணைக் கற்கள் அடுக்கி, தீபம் ஏற்றி வைத்து, அவர்கள் மொழியில் முணு முணுத்தவாறு இரண்டு மூன்று ஆதி அமெரிக்கர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அங்கிருந்த மொத்த மனிதர்கள் பதினைந்து பேருக்குள் தான் இருப்போம். சிகரம் அடைய ஆறாயிரம் அடிகள் ஏறித்தான் ஆகவேண்டும். எமக்கந்த உத்தேசம் இல்லை. ஜென் குரு ஒருவரிடம், சீடன் ஒருவன் கேட்டானாம் ,‘‘குருவே ! சிகரத்தை அடைய எங்கிருந்து தொடங்கவேண்டும்?'' என்று. குரு சொன்னாராம் ‘‘ சீடனே ! சிகரத்தில் இருந்து தொடங்கு!'' என்று . அப்போது எனக்கு அந்தக்கதை நினைவுக்கு வந்தது.

 மலை ஏறுபவர்கள் வளர்ப்பு விலங்குகளைக் கூட்டிச் செல்லக்கூடாது என்றும் மலையேறும் மனிதர்கள் தங்களது உள், வெளிக் கழிவுகளுக்கு பைகள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பு இருந்தது. கவிஞர் ஒருவர் என்னை ஜெயமோகனின் வளர்ப்பு மிருகம் என்றார். ஆனால் அவரோ தமிழின சமூக விரோதக் கறைகள் படிந்த அரசியல்வாதிகளின் வளர்ப்பு விலங்காக இருக்கிறார் . அது தனிக்கதை.

ஒருவித மிஸ்டிக் மனநிலை கூடியிருந்தது எனக்கு. மலைச் சிகரத்தின் இருப்புப் பகுதியில் நின்றிருந்தபோது திருமலைராஜன் சொன்னார், அந்த சிகரத்தின் பெயர் மவுண்ட் சாஸ்தா என்றும் சாஸ்தா என்பது Native American சொல் எனவும் , அந்த மவுண்ட் அவர்கள் வணங்கும் தலம் என்றும்.

ஆரல்வாய்மொழியின் பரகோடி கண்டன் சாஸ்தா, சுசீந்திரத்தின் சேரவாதல் சாஸ்தா, பூலா உடைய கண்டன் சாஸ்தா, ஒழுகின சேரியின் எங்கோடி கண்டன் சாஸ்தா, வீர நாராயணமங்கலத்து நீர் நிறை காவு கொண்ட சாஸ்தா, இறச்சகுளத்தின் எருக்கலை மூட்டு சாஸ்தா, சித்தூரின் தென்கரை மகாராஜன் சாஸ்தா, அச்சன்கோவில் , ஆரியங்காவு, குளத்துபுழை - பந்தளம் - எருமேலி - சபரிமலை ஐயப்ப சாஸ்தாக்கள் அறிவேன். எங்கள் மூதாதையர் வழிபட்டது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், சின்ன மூலைக்கரைப்பட்டி எனும் சிற்றூரின் குளக்கரையில் அமர்ந்திருக்கும் தெய்வேந்திரமுடையார் சாஸ்தா.

மவுண்ட் சாஸ்தா என்றும், ஆதி அமெரிக்க இந்தியர் வழிபடும் சிகரம் என்றும் கேட்டதும் கூடிய பரவச மன நிலையில், குனிந்து வலது கை விரல்களைப் பரத்தி நீட்டி , மலையடிவாரத்து மண்ணில் தோய்த்து, நெற்றியில் திருநீரு போலப் பூசினேன். இதே செயலை பல ஆண்டுகளுக்கு முன்பு சாயர்புரத்து கிறிஸ்தவத் திருக்கோவில்  முன்பும் செய்திருக்கிறேன். அது ஜி.யு.போப் நிர்மானித்த, திறப்பு விழாவில் கால்டுவெல் கலந்து கொண்ட திருத்தலம். கிறிஸ்தவக் கம்பர் என்று வழங்கப்பட்ட , 'இரட்சணிய யாத்ரிகம்' எழுதிய வைணவராக இருந்து கத்தோலிக்க மார்க்கத்துக்குப் பெயர்ந்த ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப் பிள்ளை வழிபட்ட திருத்தலம்.

விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் நாங்குநேரி தென்கலை வைணவரான பி.ஏ.கிருஷ்ணன். நான் அந்த மண்ணை நட்டக் குத்தாக நாமமாகத் தீற்றினாலும் அப்படித்தான் பார்த்திருப்பார் ஏனெனில் அவர் நாத்திகர்.

மவுண்ட் சாஸ்தா மலையடிவாரத் திருமண்ணை நெற்றியில் அணிந்து நிமிர்ந்த என்னை நோக்கி நடந்து வந்தார், சுமாராக ஐம்பத்தைந்து வயதான பெண்மணி. அவரைத் தொடர்ந்து அவரது கணவர், மகன், மருமகள், பேரன் என்று சிறு குழுவும். என்னை நோக்கியே வந்தார். அணுகி நடந்து, வணக்கம் சொல்லி, ‘‘ ஐயா நீங்கள் நாஞ்சில் நாடன் இல்லையா?,‘‘ என்றார்.

நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையின்றி வேறில்லை, மிகையில்லை, புனைவில்லை, பொய்யும் இல்லை. சென்னையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் தாண்டி, மற்றெதுவும் இன்றைக்கு நினைவில் இல்லை.

எந்த நாட்டில், எந்த ஊரில் , எந்த தலத்தில் , எந்த நேரத்து நிகழ்வு அது! எம் தாய்மொழி பேசி என் தடம் துலங்கக் கேட்ட வாசக அங்கீகாரம்! தற்செயலா, முன்கூறாய்த் தீர்மானம் செய்யப்பட்டதா?

தாம் விரும்பும் கலைஞருக்குக் கழுத்துச் சங்கிலியை கழற்றி அணிவித்தவர் உண்டு. கழற்றி வாங்கியவரும் உண்டு. பலமுறை நான் மேற்கோளாய்ச் சொன்ன பாடல்தான். புறநானுற்றில் இளம்பெருவழுதியின் பாடல்.

‘ புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் , பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்.'

ஆம் ! அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.

மருதன் இளநாதனாரின் புறநானூற்று வரி சொல்கிறது, ‘வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன், மெய் கூறுவல்' என்று. செல்வம் சேர்த்து வாழ்வதை விரும்பிப் பொய் கூற மாட்டேன். உண்மையே கூறுவேன் என்பது பொருள். ஆம்! எமக்கும் உலகெங்கும் உண்டு முகமறியா வாசகர்கள்!.

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com