இரட்டை வேடம் - நானே ஹூரோ; நானே வில்லன்

இரட்டை வேடம் - நானே ஹூரோ; நானே வில்லன்
Published on

வில்லன் என்பவன் யார்? ஒரு திரைக்கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தின் கெட்ட நடவடிக்கைகள் அல்லது எண்ணங்கள் தான் வில்லன் என்கிறது அகராதி. அனைவருக்கும் ஒரு ஹீரோ கதாபாத்திரம் பிடிக்கும். ஆனால் யாரும் மறக்க முடியாத கதாபாத்திரம் வில்லனுடையது. அதனால்தான், பல திரைக்கதைகளின் வில்லன் கதாபாத்திரம் நம் ஆழ் மனத்தில் தங்கி விடுகிறது. பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்கள்  நம்மை பயப்பட வைத்தாலும், படம் முடிந்த பின்பும் நம் மனத்தில் அவர்களின் தாக்கம் கதாநாயகனை விட அதிகம் ஏற்படுத்தின என்பதை மறுக்க முடியாது.

எந்த ஒரு திரைக்கதையிலும் வில்லன் இல்லை என்றால் சுவாரசியம் இல்லை. ஒரு சில படங்களை தவிர, அனேக படங்களுக்கு திருப்புமுனை தருவதே வில்லன்கள் தான். எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக வில்லன்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு சுவாரசியமும், ஆர்வமும் ஒரு படத்திற்கு கூடும். சில சமீபகால உதாரணங்களாக துப்பாக்கி (2012) படத்தில் ஸ்லீப்பர் ஸெல் தீவிரவாத தலைவனாக வந்த வித்யுத் ஜாம்வால், வீரம் (2013) படத்தில் ஆடலரசு என்ற சக்திவாய்ந்த வில்லனாக வந்த அதுல்குல்கர்னி, சிங்கம் (2010) படத்தில் மயில்வாகனன் என்ற பாத்திரத்தில் படத்திற்கு சுறுசுறுப்பை ஊட்டிய பிரகாஷ் ராஜ், பாண்டிய நாடு (2013) படத்தில், சிம்மக்கல் ரவி என்ற கதாபாத்திரத்தில் வந்து பயமுறுத்திய ஷரத்  போன்ற சிலரை குறிப்பிடலாம். அப்பேர்ப்பட்ட ஒரு வில்லனை எப்படி நம் ஹீரோ வெல்கிறார் என்பதை சுவாரசியமாக சொன்னால், அப்படம் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. பல படங்களின் வெற்றிக்கு சரியாக சித்தரிக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரங்களே காரணம்.  தோல்விக்கும் சரியாக உருவாக்கப்படாத வில்லன் கதாபாத்திரங்களே காரணம்.

82 வருட தமிழ் பேசும் படங்களில், வில்லன் கதாபாத்திரம் பல பரிமாணங்களை சந்தித்து உள்ளது. மேனகா (1935) படத்தில், டி.கே. ஷண்முகம், நைனா மொகமது என்ற கெட்டவன் வேடத்தில் வந்து பயமுறுதியிருப்பார். அதன்பின், சதிலீலாவதி (1936) படத்தில் ஆரம்பித்து, இரு சகோதரர்கள் (1936), அம்பிகாபதி (1937), உத்தமபுத்திரன் (1940), ஆரியமாலா (1941), ஜகததலப்பிரதாபன் (1944) என பல படங்களில் டி.எஸ். பாலையா புது மாதிரியான வில்லத்தனத்தை காண்பித்து வெற்றி கண்டார். அவருக்கு பின், ரஞ்ஜன், ஆர். நாகேந்திர ராவ், சஹஸ்ரநாமம், வீ.கே.ராமசாமி, எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், எஸ்.வீ. ரங்கா ராவ், எம்.ஆர். ராதா, டி. பாலசுப்ரமணியம், பி.எஸ். வீரப்பா, ஆர்.எஸ். மனோஹர், எஸ்.ஏ. அசோ கன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், ‘தேங்காய்’ சீனிவாசன், செந்தாமரை, ரஜினிகாந்த், ஜெய்சங்கர், சரத்குமார், சத்யராஜ், சரண்ராஜ், நெப்போலியன், மலேசியா வாசுதேவன், விஜயன், திலகன், ராதாரவி, ரகுவரன், நாசர், மணிவண்ணன், ரவிச்சந்திரன், சாய்குமார், பிரகாஷ்ராஜ், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ரஞ்சித், பசுபதி, அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, ராஜன் பி.தேவ், சாயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், மனோஜ் கே. ஜெயன், ராஜ்கபூர், ஜீவன் என பல வில்லன் நடிகர்கள் தங்களின் நடிப்பாற்றலால், பல விதமான  கதாபாத்திரங்கங்களில்  பிரகாசித்தார்கள். இவர்களில் பலர் வில்லன் கதாபாத்திரத்திலிருந்து உயர்ந்து கதாநாயகர்களாக இன்றும் பிரகாசித்து வருகிறார்கள் (ரஜினிகாந்த், சரத்குமார், சத்யராஜ்).

ஒரு படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரம் நாயகனின் ஆளுமையைக் கூட்ட உதவுகிறது. சில சமயம் நாயகனை விட வில்லன் பாத்திரங்கள் வலுவாக அமைந்துவிடுவதும் உண்டு. எனவே அத்தகைய கதாபாத்திரங்களை, வேறு ஒரு நடிகர் செய்வதை விட சில சமயம் கதாநாயகர்களே வில்லன் வேடங்களையும் ஏற்கிறார்கள். இப்படிச் செய்யும் சமயத்தில் தங்களது வழக்கமான கதாநாயக பிம்பத்தையும் இழந்துவிடாமல் இரு வேடங்களையும் ஒருவரே ஏற்பது பழக்கமாக இருந்துவருகிறது. 1940-ல் வெளிவந்த பி.யு. சின்னப்பாவின் உத்தமபுத்திரன் தொடங்கி, சமீபத்தில் வெளிவந்த அமீர்-ஜெயம் ரவியின் ஆதிபகவன் (2013) வரை,  இவ்வாறு இரு கதாபாத்திரங்களில் கதாநாயக நடிகர்களின் வெற்றி கண்ட பல படங்களில் குறிப்பிட வேண்டிய படங்களை (இரட்டை வேடம் மட்டுமில்லாமல், இரண்டு எதிர்மறையான கதாபாத்திரங்களில்) அடுத்த பக்கத்தில் பெட்டிச்செய்தியாக கொடுத்துள்ளேன்.

கதாநாயகன் மட்டுமில்லாமல், கதாநாயகிகளும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த படங்களும் தமிழில் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பிரியாமணி நடித்த சாருலதா (2012) என்ற படம்.

கதாநாயகனாகவும் எதிர்மறை அல்லது மாறுபட்ட ஆளுமை கொண்ட இன்னொரு பாத்திரமாகவும் இரு வேடங்களை தரிக்கும்போது, அதில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இரண்டு எதிர்மறையான வேடங்களையும் ஒருவர் எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பார்க்கும் ஆர்வம் உண்டா கிறது. இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பும் கூடுகிறது. கதாநாயகனாக நடிக்கும்போது நடிப்பில் செய்ய முடியாத சில பரிசோதனைகளைச் செய்யும் வாய்ப்பையும் இது அவர்களுக்கு வழங்குவதால் இது புதிய சவாலாகவும் இருக்கிறது. இந்தச் சவாலும் படத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது. இந்தக் காரணங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.

1940 மற்றும் 1958-ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தையும், அப்படங்களின் தூண்டுதலில் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி (2006) என்ற படத்தையும் உதாரணமாக எடுத்து கொண்டால், ஒரே நடிகர் எவ்வாறு எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தார் என்று சொல்ல முடியும். ஒரு கதாபாத்திரம், எப்படி நாம் ஒரு ஹீரோவின் கதாபாத்திரத்தை எதிர்பார்ப்போமா, அதை போல், எல்லாவற்றையும் சரியாக செய்யும்-நமக்கு பிடிக்க கூடிய நல்ல கதாபாத்திரம். அவருக்கு எதிர்மறையான கதாபாத்திரத்தில், அதே நடிகர், உலகத்தில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களையும் கொண்டு, எப்படி வாழக்கூடாதோ, அதை போல் வாழ்ந்து வருபவராக வேறு பரிமாணத்தில் நடித்து நம்மை ஆச்சரியப்படுத்துவார். ஒரே நடிகர் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தாலும், முடிவில் நம்மை மிகவும் பாதித்த பாத்திரமாக, உத்தமபுத்திரன் (1940 மற்றும் 1958)-ல் விக்ரமன் கதாபாத்திரம் தான். பி.யு.சின்னப்பா 1940-லும், சிவாஜி கணேசன் 1958-லும் வில்லத்தனம் பொருந்திய கதாநாயகனாக கலக்கி இருப்பார்கள். இவர்களை போலவே, நீரும் நெருப்பும் (1971) படத்தில் கரிகாலன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில், நல்லவனாகவே பல படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் ஜொலித்திருப்பார். அவரின் வில்லத்தனமான வேடம், மக்களை பெரிதும் கவர்ந்து படத்தை வெற்றி பெற செய்தது. இம்சை அரசன் 23-ம் புலிகேசியில், எல்லாவற்றையும் சரியாக செய்யக்கூடிய உக்கிரபுத்தன் கதாபாத்திரத்தை விட, நகைச்சுவை கலந்த வில்லனான புலிகேசி என்ற வடிவேலின் கதாபாத்திரம்தான் நம் மனத்தில் குடி கொண்டது.

ஹீரோ-வில்லன் என்ற எதிர்மறையான இரண்டு கதாபாத்திரங்களிலும் மக்கள் மனத்தில் குடி கொண்ட படங்களாக, கமலின் ஒரு கைதியின் டைரி, இந்திரன் சந்திரன், இந்தியன், ஆளவந்தான், ரஜினியின் பில்லா, நெற்றிக்கண் மற்றும் எந்திரன், சத்யராஜின் அமைதிப்படை, அஜித்தின் வாலி படங்களை சொல்ல வேண்டும். இப்படங்களில், எதிர்மறை வேடத்தில், கதாநாயகர்கள் பிரகாசித்திருப்பார்கள். டேவிட்(ஒரு கைதியின் டைரி), ஜீ.கே.ராயுடு (இந்திரன் சந்திரன்), சேனாபதி (இந்தியன்),  நந்து (ஆளவந்தான்), பில்லா (பில்லா), சக்ரவர்த்தி (நெற்றிக்கண்), சிட்டி (எந்திரன்), அமாவாசை (அமைதிப்படை) மற்றும் தேவா (வாலி) வேடங்களில் நம் கதாநாயகர்கள், வேறு எந்த வில்லன் நடிகரும் செய்ய முடியாத அளவுக்கு தங்களின் கதாபாத்திரத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருப்பார்கள்.

வெளிவரப்போகும் ஏ.ஆர். முருகதாஸின் கத்தி படத்தில், விஜய் இரு பாத்திரங்களில் நடித்துள்ளார் என்று செய்திகள் சொல்கின்றன. அதை போல, சரத்குமாரின் படமான சண்டமாருதத்திலும் அவரை இரண்டு கதாபாத்திரங்களில் பார்க்க முடியும் என்ற செய்திகள் இப்படங்களின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. ஒரே நடிகர் எதிர்மறையான இரு கதாபாத்திரங்களில் ஒரு படத்தில் நடிப்பது தமிழ் சினிமாவின் வெற்றி சூத்திரங்களில் ஒன்று என தாராளமாகச் சொல்லலாம்.

ஜூன், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com