இரட்டை விரல் காட்டினால் போதும்!

இரட்டை விரல் காட்டினால் போதும்!
Published on

1977 சட்டசபைத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் முதல்முறையாக எம்.ஜி.ஆர். முதல்வரானார். எனவே அந்தத் தொகுதி மீது அவருக்கு பிடித்தம் அதிகம். 1980 தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி. பிச்சை. 1984 தேர்தலில் மீண்டும் அவரே போட்டியிட்டு ஜெயித்தார். சாலை விபத்தில் அவர் இறந்ததையடுத்து இந்தத் தொகுதியில் 1986-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது. அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கான தொகுதி என்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வினர் பலருக்கு விருப்பம். அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் வே. தங்கபாண்டியன். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் அந்தத் தொகுதியைத் தக்க வைத்துவிடவேண்டும் என்பதில் அ.தி.மு.க. குறியாக இருந்தது. குறிப்பாக எம்.ஜி.ஆர். இந்தத் தொகுதி மீது தனி கவனம் செலுத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் சரியாகப் பேசும் திறனற்றே இருந்தார். அவர் பேசியதை மக்கள் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரைப் பார்த்தாலே போதும் என்ற மனோபாவம் பெரும்பாலான வாக்காளர்களிடம் இருந்தது. இந்த நேரத்தில், எம்.ஜி.ஆரிடமிருந்த  அபரிமிதமான முயற்சியும் கவனத்தில் கொள்ளத்தக்கது. பேச்சுப் பயிற்சிக்கான டாக்டர் மனோகரன் என்பவரையும் உடன் அழைத்து வந்திருந்தார். தேர்தலில் தான் பேசவேண்டிய விஷயங்களை அவரிடம் எம்.ஜி.ஆர் சொல்லிவிடுவார். எந்தெந்த வார்த்தைகள் எளிமையாக பேச முடியுமோ, அந்த வார்த்தைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் பேச்சை தயார் செய்வது அந்த டாக்டரின் பணியாக இருந்தது. அதனை சரியாக பயிற்சி எடுத்து டெலிவரி செய்துவிடுவார் எம்.ஜி.ஆர்.அருப்புக்கோட்டை இடைத்தேர்தலின்போது அவர் காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார். தி.மு.க. வேட்பாளர் தங்கபாண்டியனின் சொந்த ஊரான மல்லாங்கிணறிலும் பேசினார். நெல்லை மாவட்டத்திற்கு கட்டபொம்மன் பெயரை வைப்பதாக வாக்குறுதியளித்தார்.

பிரச்சாரத்தின் போது அவரைப் பார்ப்பதற்காக நள்ளிரவுவரை மக்கள் கூட்டம் காத்திருந்தது. தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு அவர் இரவு 9 மணியளவில் தான் வருவார். பின்னர் பேசுவார். அதன் பின்னர் மதுரை வந்து செய்தி அளிப்பது என்பது செய்தியாளர்களுக்கு சிரமமாகவே இருந்தது. அவரது பிரச்சார பேச்சு மறுநாள் இடம் பெறவேண்டும் என்பதற்காக நாளிதழ்களும் இரவு குறிப்பிட்ட நேரம் வரை அச்சாகாமல் (சிலவேளைகளில் நள்ளிரவு 1 மணிவரை) காத்திருந்தன. இப்போது போல தொழில்நுட்ப வசதியேதும் கிடையாது. அலுவலகம் சென்று கையால் எழுதித்தான் கொடுக்கவேண்டும். அல்லது போனில் சொல்லவேண்டும். போன் வசதியெல்லாம் அப்போது பரவலாக இல்லை.

இந்த பிரச்சாரத்திற்கு மத்தியில் ஒருநாள் எங்களில் (செய்தியாளர்கள்) சிலரிடம் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர், ‘நீங்கள் பொதுக்கூட்டங்களுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்து பேசினால் நாங்க மதுரைக்கு வந்து செய்தி கொடுக்க வசதியாக இருக்கும். அதுவுமில்லாமல் முழுமையாக செய்தி கொடுக்கும் வாய்ப்பும் ஏற்படும். நாளிதழ்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு மக்களைச் சென்றடையும்’ என்றார்.

‘உங்கள் செய்திக்காக பத்திரிகைகள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள்?’ எம்.ஜி.ஆர். கேட்டார். ‘இரவு 12.30 வரை காத்திருப்பாங்க. இல்லையென்றால் பேஜ் (பக்கம்) முடிச்சிருவாங்க..’ என்றார் செய்தியாளர். உள்வாங்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அதன் பிறகு அவர் கூட்டத்திற்கு வந்து சேரும் நேரம் இன்னும் தள்ளிப்போனது. கூட்டம் காலதாமதமாக முடிவடைந்ததால் செய்தியாளர்கள் அவசர அவசர மாகச் சென்று செய்தி கொடுக்கவேண்டிய கட்டாயமும் இல்லாமல் போனது. இது செய்தியாளர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சி தான். மறுநாள் அலுவலகம் சென்று செய்தி கொடுத்தால் போதுமல்லவா? இதனை எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்து நினைவுகூர்ந்தபோது புன்னகைத்தார். ‘மகிழ்ச்சி தானே?’ என்று அதற்கு அர்த்தம் கொள்ளத்தோன்றியது. ஒரு கட்டத்துக்குப் பிறகு தனது நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் இதழ்களில் விரைவில் வரவேண்டும் என அவர் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. மக்கள் தனக்காக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கலாம்.

சரி.. அருப்புக்கோட்டை இடைத்தேர்தல் என்னவாயிற்று..? காட்ட வேண்டிய இரட்டை விரலை சரியாகக் காட்டினாலே போதுமே! இதுவரை அருப்புக்கோட்டைத் தொகுதியில் யாரும் பெறாத ஓட்டு சதவீதமான 66.32 விழுக்காடு வாக்கு சதவிகிதத்தை அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் பெற்றார்.

ஜெயலலிதா என்றவுடன் அவரது போராட்டக்குணமும் துணிச்சலும் அசைக்கமுடியாத அவரது தன்னம்பிக்கையும் தான் நினைவுக்கு வரும். அவரது இந்தக் குணங்கள் 1984-ல் எம்.ஜி.ஆர். இல்லாத தேர்தல் களத்தில் வெளிப்பட்டது. அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். மனுதாக்கல் செய்தார். இந்த நேரத்தில் கட்சியிலிருந்து ஜெயலலிதா முற்றிலும் ஒதுக்கப்பட்டது போன்ற தோற்றம் உருவானது.

ஜெயலலிதாவின் வளர்ச்சியாலும் எம்.ஜி.ஆர். அவருக்கு அளித்த முக்கியத்துவத்தாலும் காட்டம் கொண்டிருந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், அவரை  ஓரங்கட்டத் துவங்கினர். அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.  எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது அவர்கள் முடிவு செய்தனர். அத்தோடு ‘ஜெயலலிதா பிரச்சா ரம் செய்யமாட்டார்’என்று பத்திரிகைகளில் பேட்டி அளித்தனர். அதிர்ச்சியடைந்தார் ஜெயலலிதா.

இருப்பினும் அவர் விடவில்லை. மதுரை அழகர்கோவில் ரோட்டில் ஜெயலலிதாவும் அதிமுகவில் அவருக்கு எதிரானவர்களும் எதிரெதிர் ஹோட்டல்களில் தங்கிருந்தனர். பிரச்சாரத்துக்குச் செல்வதற்காக அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களின் அனுமதிக்காகக் காத்திருந்தார். ஆனால் காலதாமதமாகிக் கொண்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் சட்டென  பிரச்சாரத்துக்குக் கிளம்பினார். இதைக் கண்ட எதிர்தரப்பு ‘ஜெயலலிதாவால் என்ன செய்யமுடியும்’ எனத் தவறாகக் கணக்கிட்டது. ஜெயலலிதாவைத் தொடர்ந்து செய்தியாளர்களும் சென்றோம்.

ஜெயலலிதா மதுரையில் இருந்து புறப்பட்டு நேராக சென்று நின்ற இடம் எம்.ஜி.ஆர். போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதி. அந்தத் தேர்தலுக்கான ஜெயலலிதாவின் முதல் பிரச்சாரக் கூட்டம் அது. மக்கள் ஜெயலலிதாவை ஆர்வத்தோடு வரவேற்றனர். ஜெயலலிதா சோகமான முகத்துடன் இருந்தார். மேடை ஏறி மைக் முன் நின்றார். அவரது ஒரு கையில் டேப்ரிக்கார்டர். ‘உங்கள் வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆருக்கு ஓட்டளியுங்கள். அவரை மீண்டும் முதல்வராக்குங்கள்..‘ என சோகம் கப்பிய குரலில் பேசினார். எம்.ஜி.ஆர். உடைந்த குரலில் பேசும் கேசட்டை ஓடவிட்டார். பின்னர் பேசத் துவங்கிய அவர் விம்மி விம்மி அழுதார். பேசமுடியாமல் திணறினார். கூட்டமே கலங்கியது. காமிராக்களின் வெளிச்ச மழை நீண்டநேரம் நீடித்தது. அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரம் இங்கு தான் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

மறுநாள் நாளிதழ்களில் இது முக்கிய செய்தியாயிற்று. இவரை எதிர்த்த அ.தி.மு.க. தலைவர்கள் சிலர் இதைக்கண்டு ஆடிப்போய்விட்டார்கள். 1984 டிசம்பர் 3-ல் ஆண்டிப்பட்டியில் தொடங்கிய ஜெயலலிதாவின் பரப்புரை, அடுத்தடுத்து மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்கு தமிழகம் முழுக்க தொடர்ந்தது. நானும் சில நாட்கள் அவரது பயணத்தில் தொடர்ந்து செய்தி சேகரித்தேன். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த திமுகவின் தவறான பரப்புரை பற்றி விளக்கமளித்தார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரச்சாரத்தை அப்போதுதான் துவங்கினார். ‘எம்.ஜி.ஆர் இல்லாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டினார்‘ எனப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி. அடுத்தடுத்த அரசியல் வெற்றிகளை அவர் பெறுவதற்கான வாய்ப்பை அன்றைய ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்ய அவர் எடுத்தமுடிவு தான் உருவாக்கியது எனலாம்.

பிப்ரவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com