இயக்குநர்கள்

Published on

எவ்ளோ சினிமா, எவ்ளோ கதை விவாதம்? கோடம்பாக்கத்திலிருந்து அலை அலையாக இயக்குநர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் புதிய பாணியை உருவாக்குகிறவர்களாக வும் சிறந்த எதிர்காலம் உடையவர்களாக தங்களை நிரூபித்திருக்கும் இளைஞர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகள்:

மணிகண்டன்: வணிக சினிமாவுக்கான திரைக்கதை உத்தியுடன் ’காக்கா முட்டை’ என்கிற எதார்த்தமான படைப்பை உருவாக்கியதன் வழியாக ஒட்டு மொத்த தமிழ் திரையுலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மணிகண்டன். ஸ்டில் போட்டோகிராஃபராக தன் வாழ்க்கையை தொடங்கியவர், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகி இப்போது பெரிய திரையில் இயக்குநராக முத்திரை பதித்திருக்கிறார். உலகளவில் மாற்றுப் படங்களுக்கு இருக்கும் சந்தையை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது ’காக்கா முட்டை’தான். அது மட்டுமல்ல சர்வதேச  அளவிலும், தேசிய அளவிலும் விருது வாங்கிய படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது என்ற நிலையையும் இப்படம் மாற்றியிருக்கிறது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், தமிழ் சினிமாவுக்கு புதிய வாசலை திறந்திருக்கிறார் மணிகண்டன். இனி காற்று வீசும்.

பிரம்மா. ஜி:  இன்னமும் வெளியாகாத படம்தான் ‘குற்றம் கடிதல்’. ஆனாலும்  நம்பிக்கை தரும் இயக்குநராக  பிரம்மா. ஜி. கருதப்படுகிறார். காரணம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை இப்படம் பெற்றுள்ளதுதான். பொதுவாக உணர்வுகள் சார்ந்த திரைப்படங்களுக்கே விருது வழங்கப்படும். ஆனால், ‘கு.க’ முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம். ஒரு கொலையும் அது சார்ந்த நிகழ்வுகளும்தான் மொத்தக் கதையும். இது மாதிரியான களன்கள் பொழுது போக்கு படங்களுக்கு மட்டுமே உரியவை என்று கருதப்பட்டு வந்த வேளையில், அந்த ஏரியாவிலும் விருது வாங்கலாம் என பிரம்மா.ஜி. நிரூபித்திருக்கிறார். அதாவது மாஸ் ஏரியாவில் க்ளாஸை கொண்டு வந்திருக்கிறார். சந்தேகமேயில்லாமல் இது தமிழ்த் திரையுலகில் பாய்ச்சல்தான்.

ரவிக்குமார்: தமிழ்த் திரையுலகில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு இடமில்லை என பலரும் கருதி வந்த வேளையில், அறிவியல் அதிபுனைவு கதையைப் படமாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் திருப்பூரை சேர்ந்த ரவிக்குமார். இத்தனைக்கும் இவரது ‘இன்று நேற்று நாளை’ குறைந்த முதலீட்டில், சிறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படம். என்றாலும் பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது. ‘கலையரசி’யில் எம்ஜிஆர் தோற்ற புள்ளி இது என்பதையும் அதிக பொருட் செலவில் ‘எந்திரன்’ படத்தை உருவாக்கியே ஷங்கர் வெற்றி பெற்றார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில்தான் லோ பட்ஜெட்டிலும் புதியப் புதிய ஜானர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தலாம்... மக்களும் அதை ஆரவாரத்துடன் ஏற்பார்கள் என்பதை திரையுலகுக்கு ரவிக்குமார் புரிய வைத்திருக்கிறார்.

டிகே: த்ரில்லர் படம் என்றால் பரபரவென காட்சிகள் நகர வேண்டும். நகத்தை கடித்தபடி பார்வையாளர்கள் பார்க்க வேண்டும்.  பேய் படம் எனில் ஆவியை / ஆத்மாவை கொடூரமாக காட்ட வேண்டும். அவற்றின் ஆக்‌ஷனைக் கண்டு கதாபாத்திரங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் மிரள வேண்டும். இதுதான் இதுவரை பேய் படங்களின் ஃபார்முலா. அதை முதன் முதலில் தகர்த்து எறிந்த படம், ‘யாமிருக்க பயமே’. நகைச்சுவைதான் பிரதானம். இரட்டை அர்த்த வசனங்கள்தான் ஹைலைட்... என்று முதல் காட்சியில் அறிவித்துவிட்டே முழு படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குநர் டி.கார்த்திகேயன் என்கிற டிகே. பெரிய நட்சத்திரங்கள் இல்லை. பிரமாண்டமான அரங்குகள் இல்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்காக கோடிக் கணக்கில் செலவு செய்யவில்லை. என்றாலும் இவை அனைத்தும் இருந்தாலும் பெற முடியாத வசூலை, ‘யாமிருக்க பயமே’ பெற்றது. அத்துடன் ‘நகைச்சுவை பேய்’ என்ற புதிய டிரெண்ட்டையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஓர் இயக்குநராக டிகே ஜெயித்திருப்பது இந்த புள்ளியில்தான்.

 மகிழ்திருமேனி: இவர் எடுப்பவை மசாலா படங்கள்தான். ‘தடையறத் தாக்க’வும், ‘மீகாமன்’ படமும் அதற்கு சிறந்த உதாரணம்தான். என்றாலும் இயக்குநர் மகிழ்திருமேனியை அவ்வளவு சுலபத்தில் ஒதுக்கிவிட முடியாது. வணிகப் படமாக இருந்தாலும் அதிலும் தரம் இருக்க வேண்டும் என கவனம் செலுத்தி இவர் இயக்குவதே அதற்கு காரணம். கவுதம் வாசுதேவ் மேனனிடம் இணை இயக்குநராக இருந்த இவரது முதல் படம், ‘முன்தினம் பார்த்தேனே...’ காதலை மையமாகக் கொண்ட இப்படம் தவிர்த்து மற்ற இரண்டும் ஆக்‌ஷன் படங்கள். இந்த மூன்றுமே மாபெரும் வெற்றி எல்லாம் பெறவில்லை என்றாலும் ‘தடையறத் தாக்க’ அருண் விஜய்க்கு விலாசம் கொடுத்தது.

சாக்லெட் பாய் ஆக இருந்த ஆர்யாவுக்கு ‘மீகாமன்’ ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை அளித் தது. இப்படி இளம் ஹீரோக்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் ஓர் இயக்குநராக இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

செப்டெம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com