நாவல் என்னும் கலைவடிவம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழில் தொடங்கி, 20ஆம் நூற்றாண்டில் பெருமளவில் மாற்றத்துக்கு உள்ளாகியது. நவீனக் கலை வடிவமாக நாவலை உள்வாங்கி மேற்கொள்ளப்பட்ட ஆக்கங்கள் மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்தில்தான் தொடங்கியது. அதுவரை எழுதப்பட்ட நாவல்கள் பெரிய கதைகள் என்னும் அளவில்தான் இருந்தன. சமூக, அரசியல் தளங்களில் அவற்றுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், படைப்பு நுட்பங்கள் கூடிவந்தாலும், நவீனக் கலை வடிவமான நாவல் குறித்த பிரக்ஞை அற்ற படைப்புகளாகவே இருந்தன. எனவே மணிக்கொடி காலத்திலிருந்தே தமிழின் நவீன நாவல் போக்கு தொடங்குவதாகக் கொள்ள வேண்டும். குறிப்பாக, க.நா.சுப்பிரமணியனின் நாவல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் காலகட்டத்தின் ஆக்கங்கள் 1940களில் தொடங்கிவிட்டாலும் 60களில் பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டது.
மணிக்கொடி காலம் தொடங்கி வளர்ந்துவந்த தமிழ் நாவலின் பயணம், நவீன நாவல் வடிவப் பிரக்ஞையும் புதுமை நாட்டமும் பேசாப் பொருள்களைப் பேசும் துணிவும் கொண்டதொரு தொடர் இயக்கத்தின் விளைவு. நவீனத்துவம் குறித்த பிரக்ஞையுடன் நவீனத்துவப் பார்வையுடன் வெளிப்பட்ட இந்தப் போக்கினை நவீனத்துவ அலை எனக் குறிப்பிடலாம். நவீனத்துவத்தின் போதாமைகளை உணர்ந்தவர்களும் நவீனத்துவத்தின் பார்வையோடு முழுமையாக உடன்படாதவர்களும்கூட நாவல் வெளிப்பாட்டில் நவீனத்துவப் போக்கையே கைக்கொண்டார்கள் என்பதால் இந்தக் காலகட்டத்தை நவீனத்துவ அலை என்று தயங்காமல் குறிப்பிடலாம். 40களில் தொடங்கிய இந்தப் போக்கு 90கள் வரையிலும் தொடர்ந்தது.
நவீனத்துவ அலை
நாவல்களில் நவீனத்துவ அலையைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் எனக் க.நா.சு.வைக் குறிப்பிடலாம். குறிப்பாக அவருடைய பொய்த்தேவு நவீனத்துவ அலையின் தொடக்கக் கட்டச் சாதனைகளில் ஒன்று. இந்த அலையை வரையறுத்து அதை வலுவான போக்காக மாற்றிய நாவலாசிரியர்கள் என சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் ஆகியோரைக் குறிப்பிடலாம். உள்ளடக்கம், மொழி, உத்திகள், படைப்பு நுட்பங்கள், படைப்பின் வீச்சு முதலானவற்றில் தம் சமகாலத்தின் வரையறைகளை இவர்கள் விரிவுபடுத்தினார்கள். நாவலின் சாத்தியப்பாடுகளையும் அதன் மூலம் விரிவுபடுத்தினார்கள். தமிழின் சிறந்த நாவல்களுக்கான எத்தகைய பட்டியலிலும் இவர்களுடைய ஆக்கங்கள் இன்றளவிலும் இடம்பெறுகின்றன.
தமிழ் நாவல் பரப்பில் 20ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தின் பல விதமான முகங்களையும் பிரதிபலித்தவை ஜெயகாந்தனின் நாவல்கள். வாழ்நிலைகளைக் கலாபூர்வமான சித்திரங்களாகவும் விவாதப் புள்ளிகளாகவும் மாற்றியவர் ஜெயகாந்தன். மாறிவரும் காலத்தின் போக்குடன் இயைந்து செல்வதில் தனிமனிதர்களுக்கு ஏற்பட்ட திணறலைக் கலையாக்கியவை அசோகமித்திரனின் நாவல்கள். மரபார்ந்த மனம் நவீனத்துவ வாழ்வை எதிர்கொள்வதில் ஏற்படும் ஊடாட்டங்களை விலகலான மனநிலையுடன் பதிவுசெய்யும் நாவல்கள் இவை. மரபின் வேர்களில் ஆழமாகக் காலூன்றி நின்று நவீன வாழ்வைப் புன்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் தி.ஜானகிராமனின் நாவல்கள், மனித வாழ்வின் உணர்வுபூர்வமான பரிமாணத்துக்கு மிக முக்கியமான இடத்தை வழங்குகின்றன.
சுந்தர ராமசாமியின் நாவல்கள் நவீனத்துவப் போக்கை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றின. ஜே.ஜே. சில குறிப்புகள் மூலம், நவீனத்துவச் சட்டகத்தை மீறுவதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். மண்வாசனையின் நவீன இலக்கிய அடையாளம் என்று சொல்லத்தக்க நாவல்களை எழுதியிருக்கும் கி.ராஜநாராயணன் அசலான வாழ்வின் பதிவுகளைக் கலையாக்கியவர்.
இந்தக் காலகட்டத்தின் போக்கை வடிவமைத்ததில் இந்த ஐவருக்கும் கணிசமான பங்குண்டு. 60கள் முதல் 90கள்வரை உருவான பெரும்பாலான நாவல்களும் இவர்கள் வரையறுத்த பரப்பினுள்ளேயே இயங்குபவை. என்பதால் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாவல் இயக்கத்தின் மைய அச்சாக இவர்களுடைய ஆக்கங்களைக் குறிப்பிடலாம். பின்நவீனத்துவ அலையையும் தாக்குப்பிடித்து இன்றுவரை நாவல் கலைக்கான உதாரணங்களாகவும் பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தருபவையாகவும் விவாதத்துக்குரியவையாகவும் விளங்குவதிலிருந்தே இவர்களுடைய நாவல்களின் முக்கியத்துவத்தை உணரலாம்.
இவர்களுடைய காலகட்டத்தில் உருவான மாற்றுப் போக்குகள் சிலவற்றையும் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். நாவலின் பேசுபொருளிலும் வடிவத்திலும் புதிய பரிசோதனைகளைச் செய்த நகுலன், தனி மனிதனின் சாகச விழைவையும் வரலாற்றின் ஒரு கண்ணியாக அவன் மாறும் விதத்தையும் கட்டவிழ்ந்த பாணியில் கலையாக்கிய ப.சிங்காரம், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளிருந்து பார்க்கும் கோணத்திலிருந்து சித்தரித்த ஜி.நாகராஜன், மாறுபட்ட வாழ்நிலைகளை அதிராத குரலில் பதிவுசெய்த வண்ணநிலவன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வை அதன் யதார்த்தத்தின் வெம்மை குறையாமல் பதிவுசெய்த பூமணி ஆகியோர் முக்கியமான சலனங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீனத்துவப் பரப்பில் ஆன்மிக அனுபவங்களைக் கையாண்ட தனி மரம் லா.ச.ராமாமிர்தம்.
கருத்துகள் ஏற்படுத்திய உடைப்புகள்
80களின் பாதியிலிருந்து தமிழ் எழுத்துப் பரப்பில் புதிய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. புதிய கோட்பாடுகளும் பார்வைகளும் முன்வைக்கப்பட்டன. விமர்சனங்களின் வரையறைகள் விரிவடைந்தன. கோட்பாட்டு ரீதியாகவும் ரசனை சார்ந்தும் படைப்புகளை மதிப்பிட்டுவந்த தமிழ் விமர்சகர்களின் போக்கினின்று மாறுபட்ட போக்குகள் உருவாயின. அதுவரையிலான கோட்பாட்டு விமர்சனமும் நவீனத்துவ மரபின் கலைப் பார்வைகளையே சார்ந்திருந்தன. 90களின் புதிய போக்கு அதில் உடைப்பை ஏற்படுத்தியது. நவீனத்துவ அலையின் முக்கியக் கூறான யதார்த்தவாதம் என்பதையே கேள்விக்கு உட்படுத்தியது. பகுத்தறிவு சார்ந்த பார்வையின் வரையறைகளை கவனப்படுத்தியது. அதுவரையிலுமான இலக்கியக் கட்டமைப்புகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. நவீனத்துவப் பார்வை கிட்டத்தட்ட முற்றாக ஒதுக்கியிருந்த தொன்மங்களின் முக்கியத்துவத்தை கவனப்படுத்தியது. சமூகம், அரசியல், பண்பாட்டுக் கூறுகள் என அனைத்திலும் விளிம்பு நிலை இருப்புகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. விளிம்பு நிலை வாழ்வு குறித்த பதிவுகளின் போதாமையைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பியது. தேர்வுகள், விடுபடல்கள் ஆகியவற்றின் அரசியலை அம்பலப்படுத்தியது.
இந்தப் பார்வைகள் தமிழில் முக்கியமான உடைப்பை ஏற்படுத்தின. கிட்டத் தட்ட அதே காலகட்டத்தில் விளிம்பு நிலைகளைச் சேர்ந்த பலர் எழுதத் தொடங்கினார்கள். பாலினம், சாதி, மதம், வாழ்விடம், தொழில் முதலானவை சார்ந்து எழுத்துப் பரப்பில் அதுவரையிலும் இருந்த எல்லைகள் நெகிழ்ந்தன, விரிந்தன. எழுத்தின் மீதான புதிய பார்வையிலான விமர்சனமும் விளிம்பு நிலை மாந்தரின் எழுச்சியும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் எழுந்தது. புதிய எழுத்தாளர்கள், புதிய கதைகள், புதிய வாழ்நிலைகள், புதிய சொல்லாடல்கள், புதிய வடிவங்கள் என 90களில் மாற்றத்தின் காற்று வலுவாக வீசத் தொடங்கியது.
இந்த மாற்றம் இரு பெரும் கூறுகளைக் கொண்டது. ஒன்று எழுத்து வகைமை, எழுதுமுறை சார்ந்தது. இன்னொன்று பேசுபொருள் சார்ந்தது. அதுவரையிலுமான பெரும்போக்கான யதார்த்தவாத எழுத்து வகை பெரிதும் விமர்சிக்கப்பட்டதில் யதார்த்தச் சட்டகத்தை மறுக்கும், நெகிழ்த்தும் கூறுமுறைகள் முன்னுக்கு வந்தன. தமிழ் எழுத்தின் மீதான பகுத்தறிவின் பிடி தளர்ந்தது. தனிநபர் உளவியல் சார்ந்து ஆழமான பிரதிகளை உருவாக்கிவந்த நவீனத்துவ எழுத்து, சமூக அளவில் பரப்பிலோ ஆழத்திலோ சில அடுக்குகளை, எல்லைகளைத் தாண்டிச் செல்லவில்லை. பின் நவீனத்துவ அலை இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சமூக வாழ்வின் அதுவரையில் பதிவுபெறாத சில அடுக்குகள் பதிவாகின. வாழ்வின் புதிய யதார்த்தங்கள் வெளிப்பட்டன. பேசப்படாத வாழ்க்கை பேசப்பட்டது. புதிய அறைகள் திறக்கப்பட்டன. தனிநபர் உளவியலைக் கையாள்கையில் நவீனத்துவ உளவியல் அணுகுமுறையைத் தாண்டிச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சமூகப் பரப்பிலும் தனிநபர் உளவியலிலும் தொன்மங்களின் இடமும் பங்கும் தேடலுக்கு உள்ளாகின. தொன்மங்கள் புதிய பாத்திரங்களாகவே மாறின. புராணிகப் படிமங்கள் இயல்பாகக் கதைப் பரப்புக்குள் வந்தன.
90களில் உருவான இந்தப் போக்குகளின் பிரதிநிதிகளாக கோணங்கி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் ஆகியோரைக் குறிப்பிடலாம். கோணங்கியின் இரு நாவல்களும் புத்தாயிரத்தில் வெளியானவை என்றாலும் யதார்த்தவாதத்தை மறுக்கும் போக்கு, படிம மொழி, தொன்மங்களால் நிரம்பிய கதைப் பரப்பு, கதையற்ற புனைவு, பிரதியின் மீதான எழுத்தாளரின் ஆளுகையை மறுக்கும் தன்னியல்பான எழுத்துப் போக்கு, சிக்கல்களின் ஊடாட்டம் ஆகிய கூறுகளின் அசல் உதாரணமாக இருப்பவர் என்னும் முறையில் கோணங்கியின் இடம் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜெயமோகனும் ராமகிருஷ்ணனும் பேசுபொருளிலும் கூறல் முறையிலும் யதார்த்தத்துடனான தங்கள் உறவை வெட்டி அறுத்துக்கொள்ளாமல் கதைப் பரப்பில் நடமாடுகிறார்கள். 90களின் இறுதியில் வெளியான ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மரபையும் வரலாற்றையும் புனைவுகளில் கையாளும் விதத்தை மாற்றியது. கதையாடலிலும் நாவல் கட்டமைப்பிலும் பெரும் உடைப்பை ஏற்படுத்தியது. பெரிய நாவல்களுக்கான கனவைத் தமிழில் புதுப்பித்தது. அவருடைய நாவல்கள் புனைவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வரையரைகளை மாற்றிவருகின்றன. அதே சமயத்தில் யதார்த்தவாத எழுத்தின் தேவையை இவரது நாவல்கள் முற்றாக மறுக்கவில்லை.
ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை முற்றிலும் புதிய முறையில் சமகாலப் புனைவுப் பரப்புக்குள் கொண்டுவந்தது. கூறுமுறையிலும் கையாண்ட முறையிலும் அலாதியான தன்மைகளைக் கொண்டிருந்த அந்த நாவல், புராண, இதிகாசப் பிரதிகளை முற்றிலும் மாறுபட்ட முறையில் வாசிக்க வழிவகுத்தது. விஷ்ணுபுரத்தைப் போலவே இந்த நாவலும் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் புராணங்களுக்கான இடத்தை உறுதிசெய்தது. புத்தாயிரத்தில் வெளியான இவரது நெடுங்குருதி, யாமம் முதலான நாவல்கள் தொன்மக் கூறுகளையும் யதார்த்த வாழ்வையும் இணைத்தபடி இயங்குகின்றன. தொன்மங்களைக் கதைப்பரப்புக்குள் இயல்பாகக் கொண்டுவரும் ராமகிருஷ்ணன் அந்த வகையில் தனித்து நிற்கும் படைப்பாளி.
மையமற்ற எழுத்து, தொகுப்புத் தன்மையிலான கதையாடல், பேசாப்பொருள்களின் இயல்பான இருப்பு ஆகியவற்றின் மூலம் பின்நவீனத்துவ அம்சங்கள் கொண்ட படைப்புகளை உருவாக்கிவரும் சாரு நிவேதிதாவும் இந்த மாற்றத்தின் முக்கியமான கண்ணி. 90களின் இறுதியில் வெளியான இவரது ஸீரோ டிகிரி பின்நவீனத்துவ எழுத்தின் முக்கியமான அடையாளம். தனது கதையாடலிலும் கூறுமுறையிலும் யதார்த்தச் சட்டகத்தைத் தவிர்ப்பவர் அல்ல இவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவரிடமிருந்தும் வேறுபட்ட இமையம், யதார்த்தவாதச் சட்டகத்துக்குள் நின்றபடி அதில் புதிய அடுக்குகளையும் பேசுபொருள்களையும் வாழ்நிலைப் பதிவுகளையும் சாத்தியப்படுத்திவருகிறார். இமையத்தின் எழுத்து முறை அவருடைய முன்னோடிகளைப் போலவே இருந்தாலும் அவர் எழுதும் விஷயங்கள் முற்றிலும் மாறுபட்ட தளங்களிலிருந்தும் அடுக்குகளிலிருந்தும் உருவாகுபவை. அவ்வகையில் பின்நவீனத்துவ அலையில் இணைந்தும் விலகியும் இயங்குபவை இவரது ஆக்கங்கள்.
நவீனத்துவ முன்னோடிகளை முற்றாக மறுக்காமல் தனக்கான புதிய கதையாடல்களைக் கண்டுகொண்ட படைப்பாளிகளில் முக்கிய இடம் தேவிபாரதிக்கு உண்டு. புத்தாயிரத்தில்தான் இவர் தன்னுடைய நாவல்களை எழுதினார் என்றாலும் 90களின் தொடங்கிய மாற்றத்தின் பகுதியாகவே இவரது புனைவுகளைக் காண வேண்டும். யதார்த்தத்தின் அபத்தத்தை அல்லது அபத்தத்தின் யதார்த்தத்தை அவலச் சுவையுடன் தீவிரமாகப் பிரதிபலிப்பவை இவரது ஆக்கங்கள். புனைவின் தேவைக்கேற்ப யதார்த்தச் சட்டகத்தின் எல்லைகள் இவரிடத்தில் நெகிழ்ந்துகொடுக்கின்றன.
மாறியதும் மாறாததும்
புதிய வகை எழுத்து குறித்த கருத்து வெளிப்பாடுகள் யதார்த்த வகை எழுத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தாலும் யதார்த்த வகை எழுத்து பல வகை மாற்றங்களுக்கிடையிலும் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதற்கான உதாரணமாக சாரு, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோரின் ஆக்கங்களைக் குறிப்பிடலாம். யதார்த்தத்தை மறுதலிக்காமலேயே அதன் சாத்தியப்பாடுகளை அதிகரிக்கச்செய்தவர் இமையம்.
நாவல் பரப்பில் க.நா.சு.விலிருந்து தொடங்கிய நவீனத்துவ அலை பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகிவந்தாலும் அதன் அடிப்படையான சில கூறுகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. யதார்த்த வகை எழுத்து காலாவதியாகிவிட்டது என்னும் தீர்ப்பு காலத்தின் முன் கரைந்துபோனது. யதார்த்த வகை எழுத்து காலத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியவாறு பயணிக்கிறது.
சிலர் அறிவித்தபடி யதார்த்தவாதம் செத்துவிடவில்லை என்றாலும் அது அதே வடிவில் இன்று இல்லை என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ்ப் புனைகதைப் பரப்பு, வடிவம், கூறுமுறை, பேசுபொருள் ஆகியவற்றில் தொடர்ந்து தன்னை நெகிழ்த்திக்கொண்டேவருகிறது. அந்த வகையில், 90களின் விவாதங்கள் அவற்றின் மலினமான அதிரடித்தன்மையின் நியாயமான வீழ்ச்சியைத் தாண்டித் தம் பங்களிப்பைச் செலுத்தியிருப்பதன் சான்றாக இன்றைய நாவல் போக்குகள் இருக்கின்றன.
ஜனவரி, 2019.