இனிப்பான ஆபத்து!

சர்க்கரைக்கு பலியாகும் குழந்தைகள்!
இனிப்பான ஆபத்து!
Published on

தன் தோற்றம் மற்றும் பிம்பத்தின் மீது அதீத கவனம் செலுத்திய பிரபல இந்திய நடிகர் அவர். இனிப்பு அவருக்கு பிடித்தமான ஒன்று. நீரிழிவு நோய் வந்த பின்னும் அவர் இனிப்பை கைவிடவில்லை.

பொது நிகழ்வுகளின்போது இனிப்பை தவிர்த்தால் நீரிழிவு நோய் என்று பேசுவார்களோ என்று ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடுவாராம். மருத்துவர்கள் ஆட்சேபித்தால் வீட்டிற்கு போய் மாத்திரையை டபுள்டோஸாக சாப்பிட்டுக் கொள்கிறேன் என்பாராம். மருத்துவர் சொல் கேளாததால் அவருக்கு நீரிழிவு நோய் தீவிரமாகி சிறு நீரகமும் பாதிப்புக்குள்ளானது. இது முப்பதாண்டு காலத்திற்கு முன் நான் கேள்விப்பட்ட செய்தி.

இந்த இடைப்பட்ட காலத்தில் நண்பர்கள் தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள் என்று பலரை இனிப்பு காவு வாங்கியுள்ளது. டீக்கடைகளில் ''சர்க்கரை தூக்கலாக ஒரு டீ'' என்று சொல்பவர்கள் குறைந்து, ''சர்க்கரை கம்மியா'', ''சர்க்கரை இல்லாம'' என்று சொல்லும் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

''சர்க்கரை கம்மியா'' என்று கூறுவதை கேட்டவுடன் ரெடிமேட் கேள்விகள் மற்றும் ஆலோசனையுடன் தாக்குவதற்கு பலர் காத்திருக்கிறார்கள்.

இனிப்பு காலங்காலமாக இருந்து வந்ததுதானே என்று கேள்வி எழலாம். 26000 வருடங்கள் பழைமையான பாறை ஓவியத்தில் தேன் பற்றிய சித்திரம் தென்படுகிறது. உலகில் பழைமையான தேன் பயன்பாடு பற்றிய தரவுகள் இந்தியாவிலும் எகிப்திலும் கிடைத்துள்ளன.

ரேச்சல் லாடன் எழுதியுள்ள Cuisine and Empire என்ற புத்தகத்தில் '' கி.மு. 260 இல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த பௌத்த உணவில் சர்க்கரை மூலப்பொருளாக இருந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சர்க்கரை பரவியிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற இஸ்லாமிய மருத்துவரான அல் - ராஸி (865 - 925) மருந்தின் கசப்பை போக்குவதற்கு சர்க்கரையை பயன்படுத்தியிருக்கிறார். 1245இல் திறக்கப்பட்ட லண்டனின் முதல் பார்மஸியில் மருந்துகளோடு சர்க்கரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் இனிப்பின் பயன்பாடு தேவைக்கு அதிகமாகி உள்ளது. இனிப்பு வாங்கி தருவது அன்பை வெளிப்படுத்தும் செயல் என்றெண்ணி நம் அடுத்த தலைமுறைக்கு நஞ்சைத் திணிக்கிறோம்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒரு நாளுக்கு எவ்வளவு
சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஆண் 150 கலோரிகள் என்றும், பெண்  100 கலோரிகள் என்றும் கூறுகிறது. அமெரிக்காவின் டயட் கைட் லைன் எவ்வளவு உணவு உட்கொள்கிறீர்களோ அதில் 5 - 10 சதவீதம் மட்டுமே சர்க்கரை உட்கொள்ளுங்கள் என்கிறது.

350 மில்லி குளிர்பானத்தில் 140 கலோரியும், ஒரு சாக்லேட் பாரில் 120 கலோரியும் சர்க்கரையிலிருந்து கிடைக்கிறது. நீரிழிவு நோயுடன் உடல் பருமன் மற்றும் கேன்சரின் காரணியாக இனிப்பை வைத்து அமெரிக்காவில் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. இனிப்பு மற்றும் அதன் பாதிப்பின் சகல கூறுகளையும் விரிவாக இந்த சிறப்பு பக்கங்கள் உங்களுக்கு வழங்குகிறது.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

டிசம்பர், 2019 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com