இப்போதெல்லாம் எழுத்துலகில் கூட முரண்பாடாகக் கருத்துச் சொன்னால் முறுக்கிக் கொண்டு, முப்பது, நாற்பதாண்டு நட்பைக் கூட முறித்துக் கொள்கிறார்கள். ஆமாம் சாமி போடாதவன் என் எதிரி என்ற புஷ்ஷிசம் அதிகாரம் ஏதும் இல்லாத இலக்கிய உலகம் எங்கணும் பரவிக் கிடக்கிறது. அங்கேயே அப்படி என்றால் அரசியல் உலகில் கேட்கவேண்டாம். அங்கே உயரே பறக்கும் ஹெலிகாப்டரையோ, உருண்டு நகரும் காரையோ விழுந்து கும்பிடாதவன் விரும்பத்தகாதவன்.
ஆனால் இலக்கியம், அரசியல் இரண்டிலும் முரண்பட்ட கருத்துக்களை முறுவலுடன் கேட்டு விட்டு, தன் தரப்பை தர்க்க ரீதியாக எடுத்துச் சொல்லிக் கை குலுக்குகிற கண்ணியம் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் பெயர் கருணாநிதி. அவர் என்னிடம் கொண்ட நட்பு அப்படிப்பட்டது. அது முரண்பாடுகளுக்கிடையே முகிழ்த்திருந்த முல்லை.
1996ல் அவரது திருக்குறள் உரை வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: “திருக்குறள் உரை பார்த்தீர்களா?'
‘பார்த்தேன் அதில் எனக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன' என்றேன்
‘கடவுள் வாழ்த்தை வழிபாடு என்று மாற்றியிருக்கிறேன். அதுவா?'
‘வாழ்த்துவதும் வழிபடுவதும் ஒன்றல்ல என்பது என் எண்ணம். ஆனாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் உங்கள் நிலையை உங்கள் முன்னுரையில் விளக்கிவிட்டீர்கள்'
‘பின்னே?‘
“தெய்வம் தொழாள்‘
‘அதிலென்ன?‘
‘பெய்யெனச் சொன்னவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்யும் மழையைப் போல மனைவி தன்னை அடிமையாக எண்ணிக் கொள்வாள் என்று சொல்லியிருக்கிறீர்கள் அஞ்சி நடுங்குதல், அடிமை என்ற கருத்துக்களுக்கு அந்தக் குறள் இடம் தருகிறதா?'
“பெய் என்பது ஆணை. ஆணைக்கு கட்டுப்படுதல் என்னும் போது அச்சம், நடுக்கம், அடிமைத்தனம் எல்லாம் இருக்குமல்லவா?'
“அது அன்பினால், மரியாதையினால் கூட இருக்கலாமே? நீங்கள் செய் எனச் சொல்வதை உங்கள் தொண்டர்கள் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் என்றால் அவர்கள் அடிமைகளா? அதுவும் தவிர அந்த அதிகாரத்தின் பெயரே வாழ்க்கைத் துணை நலம். வள்ளுவர் மனைவியைத் துணையாகத்தான் பார்க்கிறார், அடிமையாக அல்ல,' கலைஞர் சிரித்தார்.
“வள்ளுவர் சொல்கிறார் என்று நான் சொல்லவில்லையே?. மனைவி எண்ணிக் கொள்கிறாள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்,' அவரது உதவியாளர் அந்த நூலைக் கொண்டுவந்து நீட்டுகிறார். கலைஞர் அதைப் பிரித்து அந்தப் பக்கத்தைக் காட்டுகிறார்.
“நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் என நானும் சொல்லவில்லை' என்று அவரிடம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு அந்த உரையை வாசித்துக் காட்டுகிறேன். ‘கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்' இதில் அஞ்சி நடுங்கி அடிமை இதையெல்லாம் எடுத்து விட்டு மழையைப் போன்றவள் ஆவாள் என்பது மட்டும் இருந்தால் கூட உங்கள் கருத்து மாறாது' என்றேன்.
பின் அந்தக் குறளைப் பற்றி நிறைய பேசினோம். பரிமேலழகர், குழந்தை, பாரதிதாசன் உரைகள் இந்தக் குறள் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இடம் பெற்றிருப்பது என்று அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த உரையாடல் நீண்டது.
அன்று மாலை வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவரை அறிவாலயத்தில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ‘தலைவர் கொடுக்கச் சொன்னார்' என்று கவர் ஒன்றைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். அவரது திருக்குறள் உரை, புத்தகத்தைத் திறந்து முகப்புப் பக்கத்தைப் பார்த்ததும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் கணநேரம் உறைந்து விட்டேன். காரணம், அதில் அவர் எழுதியிருந்த வரிகள்:
‘மனதில் முத்திரை பதித்த நண்பர் மாலன் அவர்கட்கு, மாறாத அன்புடன்' என்றெழுதிக் கையொப்பம் இட்டிருந்தார்.
எத்தனை பேருக்கு இது சாத்தியம்? காலையில் நடந்த உரையாடலை அவர் பொருட்படுத்தாமல் கடந்து போயிருக்கலாம். பலர் பாராட்டிச் சொல்லியிருக்க இவன் வந்து விட்டான் குறை சொல்ல எனக் கோபம் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படி ஏதும் செய்யவில்லை. மாறாகப் பாராட்டி பரிசு ஒன்று அனுப்புகிறார்.அதுவும் வாழ்நாள் முழுதும் மனதைச் சிலிர்க்கச் செய்யும் வாசகத்துடன்!
அரசியலிலும் எங்கள் கருத்துக்கள் ஒரு புள்ளியில் ஒருமித்தன எனச் சொல்ல முடியாது.திருக்குறள் உரையாடல் நடந்த போது நான் குமுதம் ஆசிரியனாக இருந்தேன். அதற்கு முன் தினமணி. அப்போது தினமணிக் கதிரில் தமிழன் பதில்கள் என்பது என் கேள்வி&பதில் பகுதி. வாசகர் ஒருவரின் கேள்வி: “ ஊழல் செய்கிறார்கள் எனத் தெரிந்தும், திராவிடக் கட்சிகளை ஏன் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?' என் பதில்: “இந்தி வந்துவிடும் என்ற பயத்தால்'
மறுநாள் முரசொலியின் முதல் பக்கத்தில் திராவிடக் கட்சிகளும் தேசியத் தமிழனும் என்ற முழுநீளத் தலைப்பில் கருணாநிதி அவர்களின் கட்டுரை. அதில் என்னை வெளுத்து வாங்கியிருந்தார். தனிப்பட்ட தாக்குதல் ஏதும் இல்லை. தரம் தாழ்ந்த விமர்சனம் ஏதுமில்லை. ஆனால் டிடிகேயின் முந்த்ரா ஊழலில் தொடங்கி தேதி வாரியாக, ஆண்டு வாரியாகக், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களைப் பட்டியலிட்டிருந்தார்.
இது நடந்தது 1994, அதாவது குறள் உரையாடலுக்கு முன்பு. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த போதும் அவர் நட்பை அலட்சியப்படுத்தியதும் இல்லை. அதற்காகத் தன் நிலையை விட்டுக் கொடுத்ததும் இல்லை. என் தினமணித் தலையங்க கட்டுரைகளைத் தினமும் தவறாது படிப்பார். படித்ததும் அது பற்றிக் கருத்துச் சொல்ல அதிகாலை ஆறுமணிக்கு அழைப்பார். அந்த நேரத்தில் தொலைபேசி ஒலித்தால் என் மனைவி சொல்வார் ‘உங்க ஃபிரண்டாகத்தான் இருக்கும், நீங்களே பாருங்க'
ஆனால் ஒருமுறை அகாலத்தில் தொலைபேசி இடைவிடாமல் அலறியது. அதற்கு முந்தைய நாள் முழுவதும் எங்கள் விழுப்புரம் நிருபரின் கைதை எதிர்த்து போராட்டம். மாலை வரை காவல் நிலையத்தில் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் சரியான சாப்பாடு இல்லை. சரியாக சாப்பிடாததால் என் டயபடிக் உடல் ஒத்துழைக்க மறுத்து முரண்டிக் கொண்டிருந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து வீட்டிற்கு வந்ததும் பிளாக் அவுட் ஆகி விழுந்து கிடந்தேன். உடலில் குளுகோஸ் ஏற்றி உறங்க வைத்திருந்தார்கள். அலறிய போனை அமைதிப்படுத்த அரைத் தூக்கத்தில் எழுந்து வந்து அதை எடுத்தேன். அது சொன்ன செய்தி கலைஞர் கைது. அதிர்ந்தேன். அது ஒரு அசுர கணம். அல்ல, அல்ல அசுர நாள். அழுத்தம் எகிறிய ஒரு நாள்.
மறுநாள் சென்னை வந்திருந்த ஜார்ஜ் பெர்ணாண்டசை சந்திக்க ஓடினேன். லீ மெர்டியன் ஹோட்டலில் அவரைத் தனியாக சந்தித்து மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். அங்கேயே இருவரும்
சேர்ந்து ஓர் அறிக்கையை வரைவு செய்தோம். அதற்கு நாங்கள் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படவில்லை. கலைஞர் சிறையிலிருந்து வெளிவந்த பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கடினமான நேரத்தில் அவருக்கு உதவியவர்களைப் பெயர் பெயராகக் குறிப்பிட்டு நன்றி சொன்னார். அதில் என் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார். அப்போதும் நண்பர் மாலன் என்றே குறிப்பிட்டார்.
நண்பர் என்ற முறையில் நானே முன்வந்தோ அல்லது அவர் கேட்டோ விஷயங்களை விவாதித்த தருணங்களும் உண்டு.1997 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஜாதி மோதல்கள் உக்கிரம் பெற்றன. 1995 தொடங்கிய பிரச்னை அப்போது கொதி நிலையை எட்டியிருந்தது. வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் தொடர்ந்து தாக்கப்பட்டன, அந்தக் கழகம் இயங்கமுடியாதவாறு வன்முறையால் முடக்கப்பட்டது. அந்த நேரத்தில் நான் அவரிடம் ஒரு கருத்தை முன் வைத்தேன். மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை நீக்கி விடலாம் என்பது என் யோசனை. அவர் கட்சியில் இருந்த சிலருக்கு அதில் உடன்பாடில்லை.காரணம் அண்ணா, பெரியார் பெயர்களும் மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்டிருந்தன. இன்னும் சிலர் சோழன், சேரன் போன்றவர்கள் தமிழர்களின் வீரம் மானம் இவற்றின் அடையாளங்கள் அதை ஏன் நீக்க வேண்டும் என்றார்கள். வள்ளுவரும் பாரதியும் ஜாதி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என வாதிட்டார்கள். கலைஞர் யோசனையில் ஆழ்ந்தார். யோசிக்கிறேன் என்று என்ற வரியில் விவாதம் முடிந்தது.
அதற்குப் பின் அது என் நினைவிலிருந்து நழுவியது. காரணம் என் மனைவி உடல் நலம் குன்றியிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்ததால் மருத்துவ மனையில் சேர்த்திருந்தேன். அந்த விவாதம் நடந்து நான்கைந்து நாட்கள் ஆகியிருந்தன, அப்போது கலைஞரின் உதவியாளர் அழைத்தார். இரவு எட்டு மணிக்கு மேலிருக்கும். முதல்வர் உங்களோடு பேச விரும்புகிறார் என்றார். சரி போனை அவருக்கு மாற்றுங்கள் என்றேன். இல்லை நேரில் வந்தால் தேவலை. ஆலிவர் சாலை வீட்டுக்கு வாருங்களேன் என்றார். போனேன். கலைஞர் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார். சாப்டிறீங்களா என்றார். மறுத்து விட்டேன். ஆனால் அந்த சாப்பாட்டு மேஜையிலேயே அமர்ந்து பேசினோம். நீங்கள் ஒரு யோசனை சொன்னீர்களே அதைச் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஆனால் எதிர்ப்பு இருக்கும். நீங்கள் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பத்துப் பேர் கையெழுத்திட்டு ஒரு மனுவாகக் கொடுங்கள். அதை அரசு ஏற்கும் என்றார். முயற்சிக்கிறேன். என்றேன். கேட்டுப்பாருங்கள் என்றார்.
இரண்டொரு நாளில் மனு தயாராகியது. அதையடுத்து ராஜாஜி ஹாலில் நடந்த கூட்டத்தில் அதை முன் வைத்துப் பேசிய கலைஞர், தலைவர்களின் பெயர்களை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் தனது குடும்பப் பிரச்னைகளைக் கூட என்னிடம் பகிர்ந்து கொண்டது உண்டு. ஒரு முக்கியமான தருணத்தில் அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நீண்ட நேரம் ஆலோசனைகள் கொடுத்திருக்கிறேன். அவற்றையெல்லாம் இங்கு எழுதப் போவதில்லை. இங்கல்ல, எங்குமே என்றுமே என் வாழ்நாள் முழுக்க எழுதவோ பேசவோ மாட்டேன்.
அதற்குக் காரணம் மனதில் முத்திரை பதித்த அந்த நண்பரின் நட்பு மட்டுமல்ல, அவரை அரசியல் வாதியாகவும் என்னைப் பத்திரிகையாளனாகவும் மட்டுமே பார்க்க அறிந்தவர்களுக்கு எங்கள் நட்பின் ஆழமும் அழகும் புரியாது என்பதாலும் கூட.