“இனி தமிழ் சினிமா மெல்ல சாகும்!”

திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் சுப்ரமணியம்
Published on

தியேட்டர் அதிபர்,ஃபைனான்ஸியர் சங்தத்தலைவர், முக்கியமான விநியோகிஸ்தர், சினிமாவின் நல்லது கெட்டது எல்லாம் தெரிந்தவர்... மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லக்கூடியவர் திருப்பூர் சுப்ரமணியம். அவரிடம் பேசினோம்.

சினிமா இன்றைக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா?

பொதுவாக சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா, ஆரோக்கியமாக இல்லை. அதற்குக் காரணம்,மற்ற எல்லா மொழியிலும் கதையை எழுதி வைத்து விட்டு நடிகர்களைத் தேடுறாங்க. இங்கே, நடிகரைத் தேர்ந்தெடுத்துவிட்டு கதை எழுதுறாங்க. கதையை தயாரிப்பாளர் கேட்கணும், அந்தக் கதைக்கு எந்த நடிகர் பொருந்துவார் என்று அவர் முடிவு
எடுக்கணும்.

உதாரணமாக, குடியிருந்த கோயில் படத்தில்
சிவாஜி நடித்தால் சரிவராது. பாச மலரில் எம்.ஜி.ஆர். நடித்தால் சரிவராது. அப்போதெல்லாம் முதலில் கதை எழுதுவாங்க, அந்தக் கதைக்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார்னு முடிவு பண்ணுவாங்க. அதனாலே அன்றைக்குப் பத்துப் படம் வந்தால் அதில் எட்டுப் படம் வெற்றி பெற்றது. ஏன்னா அந்தக் கேரக்டருக்கு தகுந்த மாதிரி ஹீரோ இருந்தார். எஸ்.எஸ்.ஆர். வேணும்னா எஸ்.எஸ்.ஆர். ஜெமினி வேணும்னா ஜெமினி.

சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துல வில்லன் ரோல்ல ராஜேஷைப் போடலாம்னு நினைச்சாங்க, கன்னிப்பருவத்திலே ராஜேஷ் வேற மாதிரி நடிச்சிருந்தாரு. அதனால இதுக்கு கமல்ஹாசன்தான் சரியாக இருக்கும் என்று செலக்ட் பண்ணியதாக பாலசந்தர் சொல்லி இருந்தார்.

இப்போ தயாரிப்பாளர்கிட்ட யாரும் கதை சொல்றது கிடையாது. நடிகர்கிட்ட தான்
சொல்றாங்க. ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு முதல்ல கதை கேட்கிறது அவங்க தான். அந்தக் கதையைச் சொல்ற கதாசிரியர், டைரக்டர் நடிகர்களை சந்தோஷப்படுத்துற மாதிரிதான் சொல்றாங்க. அஜித் என்றால் 'சார் நீங்க சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல வர்றீங்க'னு அவங்களை வெச்சு கதை சொல்றாங்க. அது முழுமை அடையாது. ஏன்னா, தனி மனிதனை வெச்சு சினிமா கிடையாது. எப்பவும் சினிமாங்றது கூட்டு முயற்சிதான் . தனிமனித துதிபாடல் அல்ல.

படத்தின் விளம்பரங்களில் எல்லாம் பார்த்தீங்கன்னா, கதாநாயகனுடைய முகத்தைத் தான் போடணும்னு நினைக்கிறாங்க. இந்தப் பத்து கதாநாயகர்களும் தன்னுடைய முகத்தைத் தவிர வேறு யார் முகத்தையும் போட ஒப்புக்க மாட்டாங்க. நேர்கொண்ட பார்வை பட விளம்பரத்தில் அஜித் தவிர வேறு யார் முகத்தையாவது சமீபத்தில் பார்த்திருக்கிறீர்களா? பிகில் விளம்பரம் பார்த்தீங் கன்னா விஜய் மட்டும் தான். தர்பார் விளம்பரம் பார்த்தீங்கன்னா ரஜினி முகம் மட்டும் தான். இது என்ன நியாயம்னு எனக்குப் புரியல. இவங்க
ஒருத்தராலே தான் அந்தப் படம் ஓடுதா? கிடையாது. ஒரு படம்ன்னா கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடிநடிகர், ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் கூட அந்தப் படத்துக்கு வேணும். தன் முகத்துக்காக மட்டும் ஜனங்க வர்றாங்கனு நினைக்கிறது மாதிரி முட்டாள்தனம் வேறில்லை.

திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் சுப்ரமணியம்

எங்க வீட்டு பிள்ளை விளம்பரம் பாருங்க. எம்ஜிஆர். சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ், தங்கவேலு, ரங்காராவ், ரத்னா, பண்டரிபாய் எல்லாம் போஸ்டர் விளம்பரத்தில் இருப்பாங்க. இவ்வளவு பேர் நடிச்சிருக்காங்களா என்று படம் பார்க்க ஆசை வரும்.

இந்த மாதிரி ஹீரோ படம் மட்டும் போடுறது தமிழ்
நாட்டில் மட்டும்தான். ஸ்பைடர் மேன், அவ்தார் விளம்பரம் பாருங்க அதுல அஞ்சாறு பேர் இருப்பாங்க.

கதாநாயகன் வரும்போது அவன் என்னவோ தேவ லோகத்திலிருந்து வர்ற கடவுள் மாதிரி, அவரோட introduction சீன் இருக்கும். ஒரு ஹீரோ ஸ்க்ரீன்ல என்ட்ரி ஆகும் போது புயல் அடிக்கும். மழை பெய்யும். கால் மட்டும் முதல்ல வரும். கையிலிருக்கிற செயின் மட்டும் குளோசப்ல காட்டுவாங்க. இவன் முகம் காட்டாமலே கத்தி எடுத்து வீசுவான். அந்தக் கத்திய அவர் பிடிச்சுக் குவார். அவன் துப்பாக்கியால் சுடுவான், இவர் துப்பாக்கி குண்டைப் பிடிச்சுக்குவார். இப்படி நம்ப முடியாத, யதார்த்தத்தை மீறிய காட்சிகள் இதெல்லாம் பார்த்து
சாதாரண சினிமா ரசிகர்களுக்கு எரிச்சல்தான் வருகிறது. அந்த ஹீரோவுடைய ரசிகர்கள் ஒரு ஷோவுக்கு கைதட்டுவாங்க, அவ்வளவுதான். அவங்க ரெண்டு பர்சன்ட் இருப்பாங்க. பொழுதுபோக்கு உள்ள நல்ல கதையம்சம் உள்ள படத்தைப் பார்க்க வருகிறவர்கள் 98 சதவிகிதம்.

இப்போ லயன் கிங்னு ஒரு ஆங்கில படம் வருது.  அது எப்படி இருக்குனு கூட
மக்களுக்குத் தெரியாது. அதுக்கு ஆகிற
ரிசர்வேஷன் டிக்கெட் , அதோட ரிலீஸ் ஆகிற கடாரம் கொண்டானுக்குக் கூட போக மாட்டேங்குது. அப்போ, உங்க படத்துமேல மக்களுக்கு நம்பிக்கை போயிடுச்சு பாருங்க.

வேற்று மொழி படம் ஓடுதுனு சொல்றாங்க, ஓடாமல் என்ன பண்ண..? ஒரு காலத்துல என்னோட பதினாறு வயசுல ஆராதனா, யாதோங் கி பாராத், தோரகா எல்லாம் பார்த்துட்டு இருந்தோம். இளையராஜா வந்தாரு தமிழ் மியூசிக் மாறிச்சு. அந்தப் பாடல்கள் பிடிச்சது. இந்திப் படங்களின் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இளையராஜா மியூசிக் இருக்கான்னு பார்த்துப் படத்துக்குப் போற அளவுக்கு சினிமா மாறியது. நீங்க அப்படி உங்க படங்களின் தரம் உயர்த்தலைன்னா மக்கள் வேற்று மொழி படங்களை நோக்கி போயிட்டிருப்பாங்க.

எனக்கு தெரிந்து கன்னடப் படங்கள் தமிழ் நாட்டில் ஓடினதே கிடையாது. ஒரே ஒரு படம் 'கள்ளா குள்ளா'னு கன்னட மொழியிலே ரிலீஸாகி பெரிய ஹிட்டானது. 40 வருஷத்துக்கு அப்புறம் இப்ப கேஜிஎப் பெரிய ஹிட் ஆகியிருக்குன்னா, யார் காரணம்? நீங்க தான். நீங்க நல்லபடம் கொடுத்தால் அவங்க ஏன் அந்தப் படங்களுக்குப் போறாங்க..? அதான் வேற்றுமொழி படங்களுக்கு தியேட்டர் கிடைக்குது என்று சொல்றாங்க.தியேட்டர்க்காரன் சமூகசேவை செய்ய வர வில்லை; அவங்க பணம் போட்டு தொழில் பண்ண வந்திருக்காங்க. அவங்கள குறை சொல்லாதீங்க. நீங்க தரமான படம் எடுங்க .

இரண்டாவது காரணம். எந்த ஒரு படத்தையும் முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதி பைண்ட் பண்ணி வெச்சுக்கிட்டு ஷூட்டிங்குக்குப் போறதில்லை. அப்படிப்போனால், எவ்வளவு பெரிய படமானாலும் 90நாளில் முடிக்க
முடியும். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த முகராசி படத்தை 15 நாளில் தேவர் எடுத்தார். 8 நாளில் 'தேர்த்திருவிழா' எடுத்தார். 18 நாளில் நெஞ்சில் ஓர் ஆலயம் எடுத்தாங்க. இத்தனைக்கும் இன்றைக்கு போல டெக்னிக்கல் டெவலப்மென்ட் கிடையாது. படத்தை எடுத்து பிலிம் கொண்டு போய் பிராசஸ் பண்ணி கழுவி போட்டால்தான் என்ன வந்திருக்குன்னு தெரியும். இன்னிக்கு படமாக்கும்போதே மானிட்டர்ல பார்த்துடலாம் எந்த நடிகரின் படமும் எடுத்து முடிக்க ஒரு வருஷத்துக்கு குறையாமல் ஆகிறது. அது விஜய், அஜித், தனுஷ், சிம்பு ஆனாலும் ஒரு வருஷமாயிடுது. சிவகார்த்திகேயன் படம் ஒண்ணரை வருஷமாகுது. இதனாலே என்ன ஆகிறது?. ஐம்பது நாளில், தொண்ணூறு நாளில் கொடுக்க வேண்டிய வட்டி ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் வரை வட்டி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுது. அது ஒரு கூடுதல் சுமை தயாரிப்பாளருக்கு.

கதாநாயகனுக்கு சம்பளம் அள்ளிக் கொடுக்கிறாங்க, தயாரிப்பாளர்கள். அது மட்டும் எப்படி முடியுது?

ஹீரோவுக்கு மார்க்கெட் இருக்கு, கொடுக்கிறாங்க, வாங்கிக்கிறீங்க. நான் அதை குறை சொல்லலே. இவ்வளவு சம்பளம் வாங்குறியே, நீ என்னிக்காவது, 'என்னை வெச்சு படம் எடுத்தியே, நீ நல்லா இருக்கியா?' ன்னு கேட்டது உண்டா? உங்கிட்ட படம் வாங்கியவர்களுக்கு, தியேட்டர்களுக்கு ஏதாவது கிடைச்சுதானு விசாரிச்சு இருக்கியா? எதுவுமே நீ விசாரிக்கிறது இல்லே. இந்தப் படத்துக்கு ஐம்பது கோடி வாங்கினால் அடுத்ததுக்கு அறுபது கோடி யார் தர்றாங்கனு தேடிட்டு ஓடுறே. 50 கோடி கொடுத்தானே அவன் இருக்கானா செத்துட்டானா என்று கூட பார்க்க மாட்டேங்கறே.

விவேகம்னு ஒரு படம் எடுக்குறாங்க அந்தப் படம் லாஸ். அடுத்து அதே கம்பெனிக்கு அஜித் கால்ஷீட் கொடுக்கிறார். அவர் என்ன பண்ணணும்? அதுக்கு 40 கோடி வாங்கியிருந்தால் இது 30 வாங்கியிருக்கணும். ஆனால் அவர் 48 வாங்குறார். அப்புறம் தயாரிப்பாளரை நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? பணம் காய்க்கும் ஏடிஎம் கார்டுன்னா? தயாரிப்பாளர் நல்லாயிருக்கணுங்கற எண்ணம் உனக்கில்லை;முடிந்த வரைக்கும் அந்த கார்டை தேய்ச்சு எடுத்துடணும்னு பார்க்கிற... இந்த மாதிரி இருந்தால் தமிழ் சினிமா எப்படி ஆரோக்கியமாக இருக்கும் இனி மெல்ல தமிழ் சினிமா
சாகும். இன்னும் கொஞ்சம் நாளில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இருக்க மாட்டார்கள். நடிகர்களே படம் எடுத்துக்க வேண்டியதுதான் சமீபத்தில் விஜய்  சேதுபதி சொன்னாராம். 'என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் எல்லாம் கடைசியில் துண்டு போட்டுடறாங்க. அதுக்கு, நாங்களே சொந்தப் படம் எடுக்கப் போறோம்'னு. எடுத்துக்கோ... எப்படித் துண்டுபோட்டதுனு கூப்பிட்டு கேட்க மாட்டேங்குறே... அவங்கள வெச்சு படம் ஆரம்பிக்கும்போது 30 கோடியில் ஆரம்பிச்சு, எடுத்து முடிக்கும் போது 50 கோடி ஆயிடுது. அப்புறம் அவன் தலையில் துண்டு போடாமல் என்ன பண்ணுவான்?

புதிய மற்றும் சிறிய தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்று புலம்புகிறார்களே?

சினிமா டிஜிட்டல் ஆனதின் மிகப்
பெரிய சாபக்கேடு, யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்பதுதான். எந்த அனுபவமும் இல்லாமல் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாமல் படம் எடுக்குறாங்க. சினிமா பற்றி தெரிஞ்சுகிட்டு வந்தால் நல்லது. நேரடியாக தயாரிப்பாளராக வர்றாங்க.இவங்க, சினிமாங்கறது போட்டோ பிடிக்கிற மாதிரின்னு நெனைச்சுடுறாங்க. அப்புறம் சின்னப் படங்களுக்கு ஆதரவு தர்றதில்ல. தியேட்டர் கிடைப்பதில்லைன்னு புலம்புறது... பத்திரிகையாளர்களே உங்க படத்தை ஒரு
தண்டனைன்னு நினைச்சு பார்க்கிறாங்க. மக்கள் எப்படிப் பார்ப்பாங்க.!

ஆகஸ்ட், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com