இந்திரா நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப்பிடித்திருக்கும்

காங்கிரசின் நிலை
இந்திரா நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப்பிடித்திருக்கும்
Published on

ஜஸ்டிஸ் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டிருக்கும் நேரத்தில், தமிழ் நாட்டில் காங்கிரஸ் பதவி இழந்து 50 ஆண்டுகள் முடிந்துவிட்டிருப்பதும் காலத்தின் விசித்திரம்! ‘ஜஸ்டிஸ் கட்சியை ஆழக் குழிதோண்டி புதைத்தாகிவிட்டது’ என்று அக்கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நேரத்தில் முழக்கமிட்டார் தீரர் சத்தியமூர்த்தி. ஜஸ்டிஸ் கட்சியின் வழித்தோன்றல்களான திராவிட இயக்கத்தால், காங்கிரஸ் பதவி இழந்து நிற்கிறது இன்று!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கதை மற்ற மாநிலங்களை காட்டிலும் வேறுபட்டது. பல அற்புதமான தலைவர்களை நாட்டுக்கு அளித்தது தமிழ்நாடு காங்கிரஸ். பல வித சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்த அரும்பெரும் தலைவர்கள் அவர்கள். அவர்களது சிந்தனை வளத்தில் மனம் பறிகொடுத்து மக்கள் காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களாக திரண்டார்கள்.

கட்சியின் சல்லிவேர்களாக இருந்த அந்த தொண்டர்கள் தான் அன்று வெற்றிக்குக் காரணம்! தொண்டர்கள் மறைய, சல்லிவேர்கள் அறுபட - கட்சி நிமிர்ந்து நிற்க முடியுமா? காங்கிரஸ் துவண்டு போனதற்கு, கட்சியில் சிந்தனை வளம் பூஜ்யம் ஆனதே உண்மைக்காரணம்.

 கடைசியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராஜ் மட்டுமே! காங்கிரசுக்கு தேசிய கண்ணோட்டம் மட்டுமே- லட்சியமாக ஆயிற்று. காமராஜருடைய தியாக வாழ்வு, எளிமை, ஆட்சிக்கு அவர் கொடுத்த புதியதோர் பார்வை ஆகியவற்றால் அவர் பின்னே தொண்டர்கள் திரண்டிருந்தனர். அகில இந்தியாவில் நேரு ஒருவரே மக்களை கவர்ந்த தலைவராக இருந்தார்.

நேருவுக்கு காமராஜ் ‘அப்ரோச்’ பிடித்துவிட்டது. அவரை டெல்லிக்கு இழுக்க முயற்சி செய்தார். காமராஜ் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ஆனார். அதுவே தமிழக காங்கிரஸுக்கு ஆபத்தாக போயிற்று. காமராஜ் டெல்லிக்கு போவது சரியல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல என்று சொன்னார் பெரியார். பெரியார் அரசியலிலும் ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபித்த கருத்து இது.

தமிழ்நாடு விஷயங்களை கவனிக்க முடியாத அளவுக்கு டெல்லியில் காமராஜருக்கு தலைக்கு மேல் பணிகள். நேரு இறந்து போனார். அடுத்த பிரதமர் லால்பகதூரும் காலமானார். புது பிரதமரை தேர்ந்தெடுக்க காமராஜ் கையாண்ட வியூகம் புதியதோர் அரசியல் பாணி ஆயிற்று. அதற்குள் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட குழப்பங்கள். இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை அடக்க வழி தெரியாமல் முதல்வர் பக்தவத்சலம் திண்டாடினார்.

நேரு மட்டுமே இந்திக்கு எதிரான அரணாக தமிழர்கள் நினைத்தனர். அவரது மறைவும், இந்தியைத் திணிக்க வடவர் காட்டிய ஆர்வமும் தமிழ்நாட்டில் பெரும் பூகம்பமாக வெடித்தது. இது காங்கிரஸை இளைய தலைமுறையினரிடமிருந்து பிரித்தது.

அடுத்தது அரிசிப்பஞ்சம்! படி அரிசி 60 பைசாவி லிருந்து கிடுகிடுவென்று ஏறி ஒரு ரூபாய் ஆயிற்று. அதுமட்டுமின்றி, வெளிமார்க்கெட்டிலும் அரிசி காணாமல்போக, ரேஷன் வந்தது. ரேஷன் கடைகளில் நீண்ட கியூ பல மணிநேரம். பக்தவத்சலம் அரசு இந்த விஷயத்தையும் குழப்பிற்று. காமராஜருக்கு சரியான தகவல் போகவில்லை போலும்.

 “அரிசிப்பஞ்சமா?  அது வெறும் காகிதப்பஞ்சம்! பத்திரிகைகள் சொல்லும் கட்டுக்கதை” என்று பேசினார் காமராஜ். சாதாரண மக்களிடமிருந்து விலகி போயிற்று காங்கிரஸ். காமராஜரின் ‘அரசியல் உயரம்’ பற்றி தமிழர்கள் கவலைப்படவில்லை. 1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றது. காமராஜ் தோற்ற துயரமான சம்பவமும் நடந்தது. காமராஜ் டெல்லிக்கு போன மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுவிட்டது.

அடுத்து இந்திய அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள். பலமிக்க மாநிலத்தலைவர்களை வைத்து பிரதமரை தேர்ந்தெடுப்பது என்கிற கட்டமைப்பு இந்திராவைப் பயமுறுத்தியது. மாநிலங்களில் உள்ள பலம்மிக்கத் தலைவர்களை ஒழித்தார் அவர்! அதில் காமராஜரும் பாதிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடைந்தது. மேல் பார்வைக்கு காமராஜ் தலைமை வகித்த காங்கிரஸ் பலமாகத்தோன்றினாலும், இந்திராவின் செல்வாக்கு மக்களிடம் கூடியிருந்தது. இந்திராவும் காமராஜரும் சேர்ந்து ஒரே அணியில் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கும். அல்லது இந்திராவே தனது தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தனித்து நிறுத்தி ஓர் அணியை உருவாக்கி தேர்தலை சந்தித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார். இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

இந்திராவுக்கு நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும் ஆதரவு இருந்தால் போதும், மாநிலத்தில் காங்கிரஸ் வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அவருடைய மன்னர் மானிய ஒழிப்பு, வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கம், வங்கிகளை தேசியமயமாக்கியது ஆகியவை இளைய தலையினரிடமும், மக்களிடமும் பெரும் ஆதரவை திரட்டியிருந்தது. நாடெங்கும் இந்திரா பற்றியே பேச்சு!

 இந்திராவின் செல்வாக்கை கலைஞர் அரசியல் சாதுரியத்தால் ஜெயித்தார். இந்திரா டெல்லியை ஆளும் ஆசையில் தமிழ்நாட்டின் ஆட்சி தான் சொற்படி கேட்பவர் கீழ் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தார். தமிழ்நாட்டை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. திமுக உடைந்து எம்.ஜி.ஆர் கட்சி அமைத்தார். பின்னணியில் டெல்லி இல்லாமல் இல்லை. இந்திரா நினைத்திருந்தால் எம்.ஜி.ஆருடன் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையே ஏற்படுத்தியிருக்கலாம்.

மாநிலங்களை இந்திய பிரதமராக தன் விருப்பப்படி ஆட்டிவைக்கலாம் என்கிற எண்ணத்தில், தமிழ்நாட்டில் தன் கட்சிக்கு புது வாழ்வுதர இந்திரா எண்ணவில்லை. மாநிலங்களை எந்த கட்சி ஆண்டால் என்ன! என்கிற தைரியம் அவருக்கு. காங்கிரஸ் என்றால் தான் மட்டுமே தெரிய வேண்டும் என்று நினைத்தார். காமராஜ் மறைவுக்கு பிறகு அவரது தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார்கள். இன்று ஜி.கே வாசன் கட்சி, ஒரு காலத்தில் காமராஜ் வழி நடத்தியது என்றால் சிரிப்புதான் வரும். இந்திரா காங்கிரஸ் இன்று ஒரே காங்கிரஸாக இருந்தாலும், அதன் தலைவர்களுக்கு கட்சியிலேயே மதிப்பு கிடையாது. தமிழ் மக்களிடம் செல்வாக்கு ஏது?

இனி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கமுடியுமா? எந்தக்கட்சியும் ஒரு ‘இயக்கமாக’  தோற்றம் தரும் வரையில்தான் தொண்டர்கள் நிரம்பி காட்சி தரும். மக்கள் கவனம் அதன் மீது இருக்கும்.

இன்று காங்கிரஸ் இயக்கமாகவே இல்லை. புதிய தலைமுறையினரோடு செல்வதற்கோ, வழிநடத்துவதற்கோ எந்த கொள்கையோ லட்சியமோ இல்லை. போதாக்குறைக்கு டெல்லியிலும் முடிபறிப்பு.அரசியல்வானை தொலைநோக்கி கண்ணாடி வழியாக அலசினால், காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டில் பதவியில் ஏற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை!

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com