இந்தியிடம் தாய்மொழியை இழந்த பீகாரிகள்!

இந்தியிடம் தாய்மொழியை இழந்த பீகாரிகள்!
Published on

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு கேம்பஸில் வசிக்கும் பீகார் மாணவர்களிடம் பிரபலமான சுய எள்ளல் ஒன்று உண்டு. தன்னுடன் படிக்கும் பீகாரைச் சேர்ந்த மாணவரிடம் டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஏன் உன் கால்களில் அழுக்கு படிந்திருக்கிறது? என்று கேட்பார்.

பீகாரி, ‘‘ நான் நடந்து வரும்போது தேங்கிய சேற்றில் கால் தெரியாமல் பட்டுவிட்டது'' என்பார். சேற்றுக்கு அவர் காடோ என்று சொல்வார். அவர் ஊர் மொழியான போஜ்பூரி, மகதியில் அதுதான் சொல். ஆனால் டெல்லிக்காரர்களோ அதை இந்தியில் கீச்சட் என்பார்கள். எவ்வளவுதான் ஒரு பீகாரி தன்னுடைய அடையாளத்தை நாகரீக ஆடைகளுக்குப் பின்னால் மறைக்க முயன்றாலும் அவனுடைய பேச்சு காட்டிக் கொடுத்துவிடும் என்று பீகாரிகளே கிண்டலாகச் சொல்லிக்கொள்வார்கள். 

எள்ளல் ஒருபுறம் இருப்பினும் இது இந்திபேசப்படும் மாநிலங்களில் நிகழும் மெதுவான கலாச்சார மாறுதலைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தி, சரியாகச் சொல்வதென்றால் அரசாங்க இந்தி விந்தியமலைக்கு வடக்கே வாழும் கோடிக்கணக்கான மக்களின் பல்வேறு மொழிகளை மெல்லத் தின்று கொண்டிருக்கிறது. டெல்லிக்காரர்கள் இழப்பது  பஞ்சாபி, ஹரியான்வி, அல்லது உருதுவாகக் கூட இருக்கலாம். என்னுடைய சொந்த ஊரைப் பொறுத்தவரை அது மகதி மொழி(ஊரில் மகஹி என்போம்). அதன் பெயர் சுட்டுவதுபோல் அசோகர் போன்ற மாபெரும் மன்னர்களின் பகுதியாக இருந்த மகதத்துடன் தொடர்புடையது அது. டெல்லி மற்றும் பிற பெரு நகரங்களில் பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்னுடைய இளம் உறவினர்கள் யாரும் அம்மொழியை சரளமாகப் பேசமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் சில தலைமுறைகளுக்கு முன்புவரை என் குடும்பத்தில் அதுவே பேச்சுமொழியாக இருந்தது.

இந்த துண்டாடலுக்கு சில விளைவுகளும் உண்டு. இன்றும் இதுபோன்ற மொழிகளே கலாச்சார வழக்கங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஒரு உதாரணம் போதுமானது. பீகாரிலும் கிழக்கு உத்தர பிரதேசத்திலும் சத் என்பது முக்கியமான பண்டிகை.  டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இந்த பிரதேசங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கெல்லாம் இப்பண்டிகைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கலாமா என்பது முக்கியமான அரசியல் பிரச்னை ஆகி உள்ளது. சடங்குகள் ஒருபுறம் இருந்தாலும் சத் என்பது அதன் நாட்டுப்புற பக்திப்பாடல்களுக்குப் பெயர் பெற்றது.

இந்தியில் எழுதப்பட்ட ஒரு சத் பாடலைக் கூட நான் கேட்டதில்லை. அவை மகதி, மைதிலி அல்லது போஜ்பூரியில் இருக்கும். டெல்லியில் இருப்பவர்களால் அவற்றின் பெரும்பகுதியைப் புரிந்துகொள்ள முடியாது. ஆர்வமிருப்பவர்கள் யூட்யூபில் சில பாடல்களைக் கேளுங்கள்.

கேரளாவுக்கு வெளியே வளர்ந்த மலையாள இளைஞன், அவனுக்கு மலையாளம் தெரிந்திருக்கும் பட்சத்தில் எப்போதுவேண்டுமானாலும் கேரளாவுக்குச் செல்லும்போது அங்கே சமூக, கலாச்சார நிகழ்வுகளில் நடப்பதை எளிதாகப் புரிந்துகொள்வான். ஆனால் இதே பின்னணி கொண்ட ஒரு பீகாரி இளைஞன் சத் பாடல்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுவான்.

பழைய நினைவுகள் மட்டுமே ஆபத்தில் உள்ளன என்று நினைப்பது தவறு. பல லட்சம் மக்கள் இன்றும் தங்கள் அன்றாட பேச்சுவழக்குக்கு இந்த மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் காடோ என்றால் கீச்சட் என்பதை அறியாதவர்களுடன் உரையாடுவதற்கு சிரமப்படுவார்கள். வெளியூரில் வசிக்கும் பீகாரி தன் தாய்மண்ணில் தாய்மொழி இல்லாமல் விடப்படுவான் என்பதுதான் இதன் பொருள்.

வட இந்தியா முழுக்க இந்திதான் பேசப்படுகிறது என்பதுடன் இதை எப்படி ஒப்பிட்டுப் புரிந்துகொள்வது? மக்கள்தொகைக்கணக்கீட்டில் உள்ள மொழி பற்றி தகவல்கள் உதவக்கூடும். இந்த கணக்கீட்டின்போது தாய்மொழிகளும் பதிவுசெய்யப்படும். தாய்மொழி என்பது ஒருவர் குழந்தையாக இருக்கும்போது அவரிடம் அவரது அம்மா பேசும் மொழி. தாய் இறந்துவிட்ட சூழலில் இதற்கான வரையறைகள் மாறுபடும். ஆனால் பின்னணி கருதுகோள் தெளிவானது. தாய்மொழி என்பது வீட்டில் பேசப்படுவது. அது கல்வி கற்கும் மொழியோ, சமூகத்துடன் உரையாடும் மொழியோ அல்ல.

அரசியல்சாசனத்தின் எட்டாவது பட்டியலில் 22 மொழிகள் உள்ளன. தாய்மொழிகளைப் பதிவு செய்யும் முயற்சியில் 2001 - ஆம் ஆண்டுக் கான மக்கள் தொகைக் கணக்கீடு ஒவ்வொரு மொழியின் கீழும் துணைத் தலைப்புகள் கொண்டிருக்கிறது. இந்தி என்ற தலைப்பின்  கீழ் மட்டும் 49 தாய்மொழிகள் இந்தியையும் சேர்த்து பட்டியலிடப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள 42.2 கோடிப்பேரில் 61% மட்டுமே தங்கள் தாய்மொழி இந்தி எனக்கூறி உள்ளனர். போஜ்பூரியும்(7.8%) மகதியும்(3.3%) முதல் ஐந்து மொழிகளுக்குள் உள்ளன.

பீகாரில் இந்த நிலை மாறுகிறது. தாய்மொழி இந்தி என்பவர்கள் கால்வாசிக்கும் கீழ். போஜ்பூரியும் மகதியும் முறையே 33.6%, 20% பேரால் தாய் மொழி எனப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 2 கோடி மற்றும் 1.2 கோடிப்பேர். சமீபத்திய உலக வங்கியின் கணக்கீடுகள் படி இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையான 2.4 கோடியை விட மிக அதிகம்.

இந்த எண்ணிக்கை தன் சொந்த பிராந்தியத்திலேயே இந்திமொழி அவிழ்த்துவிட்டிருக்கும் கலாச்சார வன்முறைக்கு சாட்சி. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை தேசிய மொழியாகப் புகுத்துவதன் விளைவுகளைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் மகதி, போஜ்பூரி போன்ற மொழிகளையும் அடக்கி இணைத்துக்கொள்ளும் திட்டத்தைப் பற்றி என்ன சொல்வது? இந்தியாவின் வலதுசாரி அரசியலுடன் தொடர்புடைய இந்து, இந்தி, இந்துஸ்தான் என்பதின் இன்னொரு அம்சமா இது? இங்கே இந்தி தேசியவாத வரலாறு பற்றி கொஞ்சம் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

அலஹாபாத், டெல்லி பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கும் அலோக் ராய் எழுதி இருக்கும் இந்தி தேசியவாதம் என்கிற ஆங்கிலப்புத்தகம் (Hindi Nationalism by Alok Rai)  இது பற்றித் தெரியாதவர்களுக்கு நல்ல புரிதலைத் தரக்கூடும்.

ராய், இந்தி, உருது மொழிகளின் புகழ்பெற்ற எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த்தின் பேரன். இன்றைய இந்தி எப்படி இந்த ஆதிக்கத்தை அடைந்தது என்பதை இந்நூல் விரிவாகச்

சொல்கிறது. ஆங்கிலேயருக்கு முன்பு பாரசீக எழுத்துவடிவில் அரசு அலுவல்கள் நடந்தன. இந்துக்களுக்கு அந்த எழுத்து வடிவம் தெரியாததால் இயற்கையாகவே பின் தங்கவேண்டிய நிர்ப்பந்தம். வடமேற்கு மாகாணங்கள், ஆவூத் பிரதேசம் ஆகியவற்றின் ஆளுநராக இருந்த சர் அந்தோனி மெக் டானல், 1900 - த்தில்  நீதிமன்றங்களில் இந்தி எழுதப்படும் தேவநாகரி வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம் என அனுமதித்தார். இதற்கு இரு காரணங்கள் பின்னணியில் இருந்ததாக ராய் கூறுகிறார். ஒன்று, நிர்வாக மொழி சாமான்யர்களும் புரிந்துகொள்ளுமாறு இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இரண்டு, இஸ்லாமிய மேல்மட்டத்தினர் 1857 புரட்சியில் முக்கியப் பங்குவகித்தனர். ஆங்கிலேய நிர்வாகத்தில் பாரசீக எழுத்துவடிவின் புழக்கத்தை ஒழிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தமுடியும். பாரசீகம் தெரியாததால் பின் தங்கி இருந்த இந்துக்களுக்கு இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. எழுத்துவடிவில் இப்படி சட்டம் போட்டு தீர்மானித்தாலும் பேச்சு மொழியில் இதைச் சாதிப்பது எளிதாக இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஒரேமாதிரி இந்திமொழி உருவாக்கப்படவேண்டும் என விரும்பினர். இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி மொழி அதற்குப் பொருத்தமானதாக இல்லை.

1857க்கு முன்பே ஒரே மொழியை உருவாக்கவேண்டும் என்ற ஆங்கிலேயர்களின் முயற்சி தொடங்கிவிட்டது. 1846-47 ல் அப்போதைய அரசின் கல்வித்துறை அறிக்கையில் பெனாரஸ் கல்லூரியின் முதல்வரான ஜே. ஆர். பாலண்டைன், ‘‘தேசிய மொழியை வடிவமைக்கும் பொறுப்பை கிராமவாசிகளிடம் விட்டுவிட்டதற்காக'' மாணவர்களைக் கடிந்துகொள்வதாகக் கூறுகிறது. பாலண்டைன் பலனற்ற மாகாண பேச்சுவழக்குகளை விட்டொழிக்குமாறும் ஒரே தரப்படுத்தபட்ட மொழியை உருவாக்குமாறும் மாணவர்களிடம் கூறுகிறார். ‘‘ஐரோப்பியர்கள் இந்தி என்றால் என்னவென்று நினைக்கிறார்கள்? ஏனெனில் இங்கே அந்த பெயருக்கு பொருத்தமான நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளனவே. எங்களால் நீங்கள் இந்தி என்று சொல்வது எதை எனப் புரிந்துகொள்ள முடியவில்லை,'' என்று ஒரு மாணவர் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

விரைவிலேயே மொழி, அரசியலுக்குள்ளும் நுழைந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் தரப்படுத்தப் பட்ட மொழிகளில் இருந்து பாரசீக, சமஸ்கிருத சொற்களை அகற்ற விரும்பினார்கள். இங்குதான் இந்தியும் உருதுவும் மதங்களின் அடையாளங்கள் ஆயின. இந்த இரட்டைப் பிளவு வளர்ந்தபோது  ‘‘இந்தி என்ற பெயருக்குத் தகுதியான'' பல பேச்சு வழக்குகள் காலியாகி விட்டன. இதை யார் எதிர்த்தாலும் அவர் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டார். நாதுராம் கோட்சேவின் இறுதி வாக்குமூலத்தை ராய் சுட்டிக்காட்டுகிறார். சமஸ்கிருதமயமாக்கபட்ட இந்தியை காந்தி எதிர்த்ததை அவரைக் கொல்வதற்கான காரணங்களில் ஒன்றாக கோட்சே சொல்கிறார். 

இந்த வரலாறு இன்று மிகவும் பொருத்தமானது.  1950கள், 1960களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் நெருப்பை மீண்டும் தூண்டிவிடுவதற்கான முயற்சிகளாகவே இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் உள்ளன. இந்த பிரிவினை முயற்சிகளுக்கு இந்தியின் கலாச்சார, அறிவுஜீவி உலகில் இருந்தும் போதுமான எதிர்ப்பு இல்லை. இதன் காரணமாக இந்திபேசும் மக்கள் அனைவருமே மொழி வெறியர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஒரே இந்தி

திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது இந்திமொழிதான். ஒரே தேசம் கலாச்சாரம் என பெருங்கதையாடலை உருவாக்கும் முயற்சியில் நம் பன்முகங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. 1960களில் எழுதப்பட்ட சுதாம பாண்டே தூமில் என்கிற இந்தி கவிஞரின் இது பற்றிய கவிதையை ராய் இங்கே மேற்கோள் காட்டுகிறார்:

உங்கள் தமிழின் துயரம்

எம் போஜ்பூரி துயரத்தின் சகோதரனே..

அந்த ஏமாற்றும் மிருகம் தின்னும் பருக்கைதான் மொழி என்பது!

இப்பிரச்னையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அதைத் தீர்ப்பதை விட எளிதானது. போஜ்பூரி, மகதி மொழிகளின் வளர்ச்சிக்கு உதவுவது இந்தியின் நிலையை பலவீனப்படுத்துமா என்பதுபற்றி இந்தி கல்வியாளர்களிடம் விவாதம் உள்ளது. அதிகார வர்க்கத்தின் ஆதரவைத் தேட இந்தி ஆதிக்கமே உதவியாக உள்ளது.

அரசியல் சாசனத்தில் எட்டாவது அட்டவணையில் மகதியைச் சேர்ப்பதோ(2004-ல் மைதிலி சேர்க்கப்பட்டது) பல்கலைக்கழகங்களில் சில துறைகளை உருவாக்குவதோ கட்டுரையின் ஆரம்பத்தில்

சொல்லப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற கொள்கை மாற்றங்கள் மொழியிலிருந்து மக்கள் விலகிச் செல்வதைத் தீர்க்க முடியுமா?

 அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெற்கு டெல்லி திரையரங்கு ஒன்றில் திரையிடப்படும் போஜ்பூரி, மகதி மொழி படம் ஒன்றை யாராவது எடுப்பார்களா? இந்திமொழி பிரதேசங்கள் சாதி அரசியலைத் தாண்டி, பிராந்திய, மதச்சார்பற்ற மக்களின் கலச்சாரத்தை ஆதரிக்க முன்வருமா? இந்தி பேசும் இந்தியா இந்த பன்முகத்தன்மை அழிவதன் மூலம் எதை இழக்க இருக்கிறது? இதுபற்றி நம் அரசியல்வாதிகள் கவலை கொள்கிறார்களா?

 இன்று மிகவும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி இந்த பன்முகத் தன்மையைப் புரிந்துகொள்கிறார். 2013 அக்டோபர் 27 அன்று பாட்னாவில் பீகார் மாநில 2014 தேர்தல் பிரச்சா ரக்கூட்டத்தில் பேசினார். அப்போது போஜ்பூரி, மைதிலி, மகதி ஆகிய பீகாரின் முன்று மொழிகளிலும் சில வாக்கியங்கள் பேசினார். மக்கள் அதை வெகுவாக ரசித்தனர்.

ஆனால் அவரது சகாக்கள் முன்னெடுத்த சமஸ்கிருதமயமாக்கப்பட்ட, BvUP இந்தியால் உருவான இழப்புகளைச் சரிசெய்ய மோடியின் அரசியல் வல்லமையால் இயலுமா என்று அறிய இதுவரை துரதிருஷ்ட வசமாக எந்த அறிகுறியும் இல்லை!

( மிண்ட் பத்திரிகையில் 2017 ஆம் ஆண்டில் வெளியான இக்கட்டுரை HTDigital Streams Ltd நிறுவனத்திடம் உரிமை பெற்று வெளியிடப்படுகிறது.

தமிழில்: கரிகாலன்  )

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com