அடிமைப்பட்டுக்கிடந்த ஒரு துணைக்கண்டம். இங்கிலாந்தின் காலனி நாடுகளில் ஒன்றாக தொழில் வியாபார பெருக்கம் இல்லாமல், 100க்கு 80 பேர் விவசாயம் தவிர வேறு எதுவும் செய்யாமல், பெரும்பாலானவர்கள் சொந்த நிலம் இல்லாமல் நிலச்சுவான்தார்களிடம் வேலை செய்து, கூலியாக விளைந்த தானியத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு, இங்கிலாந்து சார்பாக உலகப் போர்களில் போரிட்டு உயிரை விட்டுக்கொண்டு, அடிப்படை சுகாதாரம், மருத்துவ வசதிகள் தவிர போதிய கல்வி அறிவும் கிடைக்கப்பெறாமல், ‘சைல்ட் மார்டாலிட்டி' எனப்படும் சிசுக்கள் இறப்பில் 1000 க்கு 218 என்ற அளவிலும் சராசரி ஆயுட்காலம் வெறும் 32 ஆண்டுகளாகவும் இருந்த மக்கள்.
இப்படி அராஜகம் செய்து கொண்டிருந்த வெள்ளையர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய ஆகஸ்ட் 15, 1947 தான் கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய பொருளாதாரத்தில் நிகழ்ந்த முதல் மற்றும் முக்கிய திருப்புமுனை.
இதைத் தொடர்ந்து செல்வந்தர் வீட்டுப் பின்னணி, மேல்நாட்டுப் படிப்பு, உலகத் தலைவர்களின் அறிமுகம், தேசப்பிதா காந்தியோடு விடுதலைப் போராட்டத்தில் தொடர் பயணம், 9 ஆண்டுகள் சிறைவாசம் என்ற அம்சங்களுடன் நாட்டுப்பற்று மிக்க நேரு பிரதமர் ஆனதும் உடனே நடந்த முக்கிய நிகழ்வு.
தலைமை ஏற்ற நேரு, ஒருங்கிணைந்த ரஷ்யா- USSR- போன்ற சோஷலிச பொருளாதாரக் கொள்கையை தேர்ந்தெடுத்தது, நாடு முழுவதற்குமான ‘சென்ட்ரல் பிளானிங்‘ அதைச் செய்ய திட்டக்கமிஷன், அதன் தலைவராக பிரதமர், ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் முதல் ஐந்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு முன்னுரிமை, அடுத்த ஐந்தாண்டுகளில் இரும்பு, மின்சாரம் போன்ற அடிப்படை மூலதன உற்பத்திக்கு முக்கியத்துவம் என கொண்டுசென்ற போக்கு ஆகியவை இந்திய பொருளாதாரத்திற்கு ஆரம்ப திசைகாட்டி.
‘சோசலிஸ்டிக் பேட்டர்ன் ஆப் சொசைட்டி' என்றார் நேரு. வலதும் இல்லை, இடதும் இல்லை. நாம் ‘மிக்சட் எக்கானமி‘ என்றார். GRD டாடா, GD பிர்லா போன்ற எட்டு பெரிய தொழில் நிறுவன முதலாளிகளைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்படி ‘மகானோலோபிஸ் மாடல்', புதிய ‘தொழில்துறைக் கொள்கை 1951' அறிவிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்கு மிக அவசியமான துறைகள் முழுவதும் அரசு வசம். அடிப்படை மற்றும் மூலதன பொருள் உற்பத்தி பெரும்பாலான உரிமை அரசு வசம் இருக்கும் நிறுவனங்கள் மூலம் மட்டுமே. மக்களுக்குப் பயன்படும் நுகர்வு பொருட்களை மட்டும் தனியார் உற்பத்தி செய்யலாம். அவற்றுக்கும் பலவித அனுமதிகள் பெறவேண்டும். இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதனால் வேலை வாய்ப்புகள் வரவில்லை. வளர்ச்சி இல்லை.
ஜீவ நதிகள் சில உண்டு. ஆனாலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையை நம்பியே விவசாயம். மழை மிகுந்தாலும், பொய்த்தாலும் பிரச்னை. அடிக்கடி ஏற்பட்ட உணவுப்பொருட்கள் பற்றாகுறை. அதனால் விலைவாசி உயர்வு. பதுக்கல், தண்டனைகள். நிலவளம் உண்டு. ஆனால் அவற்றின் உரிமை சிலரிடம். 80%மக்களுக்கு விவசாயம் தவிர வேறு வழியில்லை. கூலிதான் கிடைக்கும், தானியங்களாக.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் விவசாயத்திற்கான ஒதுக்கீடு 14 சதவீதமாக குறைந்து, மீண்டும் உணவுப் பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. சுதந்திராக்கட்சி தலைவர் ராஜாஜி, நேருவை கடுமையாக விமர்சித்தார்.
1962இல் அதிர்ச்சியளிக்கும் விதமாக சீனா படையெடுத்தது. பஞ்சசீலக் கொள்கை என்று சமாதானம் பேசிக்கொண்டிருந்த அமைதிப்புறா நேரு இடிந்துபோனார். 64இல் இறந்தார். தேசம் விடுதலையானதிலிருந்து 17 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்த தலைவன் மறைந்தது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. காமராஜ் தேர்வுசெய்த லால்பகதூர் சாஸ்திரி அடுத்த பிரதமராகி தடுமாறிக்கொண்டிருந்த பொருளாதாரத்தை சீர் செய்ய முயன்றார். 1965இல் மீண்டும் ஒரு போர். இம்முறை பாகிஸ்தான் காஷ்மீரைத் தாக்கியது.
‘ஜெய் ஜவான்' என தீரத்துடன் இந்திய ராணுவம் போரிட்டு வெற்றிபெறும் சூழலில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவால் போர் நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்றிரவே லாலபக்தூர் மரணம் அடைந்தது மர்மமோ இல்லையோ, இந்தியாவின் துரதிஷ்டம்.
சீர்திருத்தம் என்பதை முதலில் செய்தவர் லால்பகதூர் சாஸ்திரிதான். திட்ட கமிஷனின் பங்களிப்பை குறைத்து, ஐந்தாண்டு திட்டங்களுக்குப் பதிலாக ஆண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுவே 1966 முதல் 1969 வரை தொடர்ந்தது. அயல்நாட்டு முதலீடுகளைக் குறைத்து, மீண்டும் விவசாயத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கினார்.
பிரதமராக இருந்தது இரண்டே ஆண்டுகள் என்றாலும் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோரை பயன்படுத்தி வீரியமிக்க விதைகள், செயற்கை உரம், எந்திரங்கள் பயன்பாடு, நீர்ப்பாசன மேம்பாடு என விவசாயத்தில் பெரும்மாற்றங்கள் என ஒரு பசுமைப் புரட்சி நிகழ்த்தினார். ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தானிய உற்பத்தி பன்மடங்காகி, வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டாத நிலை உருவானது. பால் உற்பத்தியும் சாஸ்திரி காலத்தில் வர்கீஸ் குரியனால் பெருகியது. ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என்று முழக்கமிட்ட சாஸ்திரி உணவுப்பொருள் தேவைகளை நிறைவு செய்ய எடுத்த சில முடிவுகள் தற்சார்பு பொருளாதாரம் அடைய ஏற்பட்ட முக்கிய திருப்புமுனை.
1965இல் பாகிஸ்தானோடு போர், 1965, 66 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம், ஆகியவற்றால் அரசின் கடன் சுமை அதிகமானது. இறக்குமதி அதிகரித்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) ஏற்பட்டது. தவிர போரைக் காரணம் காட்டி இங்கிலாந்தும் அமெரிக்காவும் உதவித்தொகைகளை நிறுத்தின. உலக வங்கியும் மறுத்தது.
இவற்றை சமாளிக்க சாஸ்திரி தலைமையிலான அரசு எடுத்த முடிவுகளில் ஒன்று, ரூபாய் மதிப்பு குறைப்பு (Devaluation). அதைச் செய்வதற்கு முன்பே அவர் இறந்து போனார்.
அடுத்த பிரதமராக இந்திராகாந்தியையும் காமராஜர்தான் தேர்வு செய்தார். ஏற்கெனவே சாஸ்திரி அரசு திட்டமிட்டிருந்த ரூபாய் மதிப்பு குறைப்பு முடிவை இந்திரா அறிவித்தார்.
நாடு விடுதலை அடைந்ததிலிருந்து 19 ஆண்டுகளுக்கு டாலர் மதிப்பு 4.76 ஆக கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை தளர்த்தி, ஒரே உத்தரவில் 57 % இறக்கம் செய்து, டாலர் ஒன்றுக்கு ரூ 7.5 ஆக்கி பிரச்னையை அப்போதைக்கு சமாளித்தார்.
இந்த அதிரடி, இந்திய பொருளாதாரத்தில் மட்டுமல்ல. அதுவரை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய ரூபாயை கரன்சியாக பயன்படுத்திக்கொண்டிருந்த ஏமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் திருப்புமுனையானது. அவை இந்திய ரூபாயில் இருந்து விலகி தத்தம் சொந்த கரன்சிகளை உருவாக்கிக் கொண்டன.
நாட்டில் மிகப் பெரிய பல தனியார் வங்கிகள் இயங்கின. விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு கடன் கிடைக்கவில்லை. அதற்காக தனியார் வங்கிகளை அரசே எடுத்து நடத்தலாம் என்ற இந்திராவின் யோசனைக்கு நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த அடுத்தநாள், தாற்காலிக குடியரசுத் தலைவராக இருந்த விவி கிரியின் பதவிக்காலம் முடிவதற்கு ஒருநாள் முன்பு அவசரசட்டத்திற்கு ஒப்புதல் பெற்று, இரவோடிரவாக நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த 14 தனியார் வங்கிகளை அரசுடைமை ஆக்கி, தகவலை ரேடியோ உரை மூலம் தெரிவித்தார் பிரதமர் இந்திரா.
நீதிமன்றம் அது தவறு என்று சொன்னதும் நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டமியற்றி, வங்கிகள் தேசியமயமாக்கலை நிலைநிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் மற்றொரு முக்கியத் திருப்புமுனை உருவாக்கினார் இந்திரா. 1971இல், 565 மன்னர் குடும்பங்களுக்கு அரசு வழங்கிக்கொண்டிருந்த மான்யத்தை சட்டம் இயற்றி, நிறுத்தியது, கிழக்கு பாகிஸ்தானில் நிலவிய போராட்டங்கள் காரணமாக இந்தியாவிற்குள் ஒரு கோடி மக்கள் அகதிகளாக வந்தநிலையில், விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த முஜிபுர் ரெஹ்மானுக்கு ஆதரவாக இந்தியப்படைகளை அனுப்பி, வங்காளதேசம் என்ற புதிய நாடு உருவாக இந்தியா காரணமானாது, அவசரநிலை, கட்டாய கருத்தடை என பல அதிரடி முடிவுகள் எடுத்தது என இந்திராவால் ஏற்பட்ட தாக்கங்கள் ஏராளம்.
ராஜிவ் காந்தி பிரதமரான காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு குறிப்பாக கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவமும் நிதிஒதுக்குதலும் கொடுத்தார். இறக்குமதி தீர்வைகளைக் குறைத்தார். பட்டிதொட்டியெங்கும் எஸ்டிடி பூத்கள் உருவாக்கினார். மொத்தத்தில் தற்போதைய ‘டிஜிட்டல் இண்டியா' விற்கு அடித்தளம் அமைத்த இளம் பிரதமரின் செயல்பாடுகள் பெரிய திருப்புமுனை. ராஜிவிற்குப் பின் விபி சிங், சந்திரசேகர் ஆகியோர் பிரதமர்களாக 19 மாதங்கள் இருந்தனர். 1991இல் அமைந்த காங்கிரஸ் அரசின் பிரதமராக நரசிம்மராவ் பதவியேற்ற போது உலக அளவிலேயே பல சிக்கல்கள். சோவியத் ரஷ்யா உடைந்துபோனது. வளைகுடா போர். அதனாலும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை. உள்நாட்டில் அதைவிட அதிக சிக்கல்கள். 1985 முதல் அதிகரித்துவந்த இறக்குமதி, குறைந்த அளவிலான ஏற்றுமதி, அன்னிய செலாவணி பற்றாக்குறை, அதிகரித்திருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, 14 சதவீத பணவீக்கம் , அரசின் கடன்கள், ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை சரியில்லை என்று சொல்ல, பெரும் பிரச்னைகள். இந்திய ரூபாயை 19.5% மதிப்புக் குறைப்பு செய்தும் பலனில்லை. படுக்கையில் கிடந்தது இந்தியப் பொருளாதாரம்.
அரசின் கஜானாவில் இருந்த தங்கத்தை அடகு வைத்து கடன் பெற வேண்டியிருந்தது. அதன்பின் பிரதமர் நரசிம்மராவ் அவர்கள், நிதியமைச்சர் மன்மோகன்சிங் மற்றும் உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு எடுத்த முடிவு இந்திய பொருளாதாரத்தில் கடந்த நூற்றாண்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை. அதன் பெயர் ‘தாராளமயமாக்கல்-தனியார்மயமாக்கல்-உலகமயமாக்கல்‘ சுருக்கமாக LPG..
2005இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு. மன்மோகன்சிங் பிரதமர். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) அமைத்து, ஏற்றுமதி; மகாத்மாகாந்தி ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் மூலம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலையும் சம்பளமும்; பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே அமெரிக்காவுடன் அணுமின்சாரத்துக்கு ஒப்பந்தம் என பல நடவடிக்கைகள் எடுத்ததால், பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 6 முதல் 7 சதவீதம் ஆனது. 2006&-07இல் எஈக வளர்ச்சி 10.7%. 1991இல் 266 பில்லியன் டாலர் ஆக இருந்த இந்திய பொருளாதார ஓராண்டு மதிப்பு, 2019இல் 3000 பில்லியன் டாலர்கள் ஆனது. வேலைவாய்ப்பு பெருகியது. வறுமைக்கோட்டிற்கு கீழிருப்போர் சதவீதம் குறைந்தது. அதே சமயம் பணக்காரர்களுக்கும் எழைகளுக்கும் இடைவெளி (வருவாய் இடைவெளி) மிக அதிகமானது.
1998இல் பிஜேபியின் வாஜ்பாய் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகி, 2004 வரை ஆட்சி செய்த காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாயில் சுமார் 6000 கிமீ நீளத்திற்கு தங்கநாற்கர சாலை திட்டம் மூலம் 100க்கும் மேற்பட்ட நகரங்களை பெருவழிச்சாலைவழி இணைத்து பெரும் வியாபார பெருக்கம்ஏற்பட்டது. பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்காக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு VSNL,IPCL,BPCL விற்கப்பட்டன. தொலைத்தொடர்புத்துறை வளர்ச்சிகண்டது. பொக்ரானில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. அதனால் இந்தியாவுடனான வியாபாரத்தை நிறுத்துவதாக சில நாடுகள் அறிவித்தன. அதிக பாதிப்பு இல்லை. பாகிஸ்தானுடன் நட்பு நாடி , இரண்டுநாடுகளுக்கும் இடையே பேருந்துவிட்ட பிரதமர், அங்கு சென்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டு வந்த சில மாதங்களிலேயே பாகிஸ்தான் இந்தியப் பகுதி கார்கில் மீது தாக்குதல் நடத்தியது. 85 நாட்கள் நடந்த போரில் இந்தியா வெற்றிபெற்றது
2014இல் நரேந்திர மோடி பிரதமராகிறார். 2016 ஆம் ஆண்டு கொண்டுவந்த திவால் சட்டம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனை. அதுவரை வங்கிகளில் பெரிய அளவுகளில் கடன் வாங்கிவிட்டு தொழிலில் நஷ்டம் என்றால் அந்தக் கடனை கட்டாமல் நிறுவனத்தை மூடி பெரிய மூலதனம் முடங்கிப் போய்க்கொண்டிருந்த நிலையை மாற்றிய சட்டம்.
முதல் போட்டு நிறுவனம் தொடங்கியவர் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போனால் கடன் கொடுத்தவர்கள் அந்தக் கடனைத் திரும்பப் பெறுவதற்கு நிறுவனத்தின் உரிமையையும் நிர்வாகத்தையும் செயல்படகூடிய வேறுஒருவருக்கு மாற்றிக்கொடுத்து, தங்கள் கடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழி செய்திருக்கிற ஒரு சட்டம். இது நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை 250 நிறுவனங்கள் அப்படி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்காமலேயே சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து இழுத்தடித்தவர்கள் மீதான வழக்குகள் சராசரியாக 1500 நாட்கள் வரை நீடித்து கொண்டிருந்ததை, தற்போது சராசரியாக 380 நாட்களில் முடிவுக்கு கொண்டுவரும் படி செய்திருக்கிறது இந்த சட்டம். இதன் காரணமாகவும்தான் தொழில் செய்வதற்கு ஏற்ற நாடு என்கிற ‘ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்' குறியீட்டில் 148 இடத்தில் இருந்த இந்தியா, 63வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடிந்திருக்கிறது.
நாட்டில் ஊழல் பெருக கருப்புப்பணம் ஒரு காரணம். அதை ஒழிப்பதற்காக இன்றிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று 2016 நவம்பரில் பிரதமர் மோடி அறிவித்தது சமீபத்தில் நாம் கண்ட பெரிய முடிவுகளில் ஒன்று. நாட்டில் புழங்கிக்கொண்டிருந்த மொத்த ரொக்கத்தாள்களில் 86% மதிப்பிற்கான தாள்களை செல்லாது என்று அறிவித்ததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியே ஓராண்டிற்கும் மேல் பாதிக்கப்பட்டது. நோக்கம் நிறைவேறவில்லை. எளியோர் கொடுத்த விலை மிகப்பெரியது.
வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வரிகள், ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் மற்றும் வரி விதிப்பு வசூலிலும் வெளிப்படைத்-தன்மை இல்லாமை. வரி ஏய்ப்பு, லஞ்சம், ஊழல் என்றிருந்த பல்வேறு மத்திய மாநில வரிகளை ஒரே சட்டத்தின் மூலம் மாற்றி, அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்தி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்தது மற்றொரு திருப்புமுனை.
எதற்கு வரி எவ்வளவு வரி போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் வசம் ஒப்பித்திருப்பதும், வரியை கணினி மூலம் வசூலித்து, மாநிலங்களும் மத்திய அரசும் சரி பாதியாகப் பிரித்துக் கொள்வதும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகளின் வரிவருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது.
வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத சவால்கள் உள்ள ஒரு ஜனநாயக நாடு ,உலகின் இரண்டாவது அதிக, 135 கோடி மக்கள்தொகை உள்ள,பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு. தற்போதைய நிலை இன்னும் மேம்படவேண்டும், செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்பதெல்லாம் உண்மை. அதே சமயம், பெரிய அளவுகளில் பற்றாக்குறை இல்லாத பெட்ரோல் தவிர வேறு எதற்கும் வெளிநாடுகளை முழுதும் நம்பியிராத, உலகின் ஐந்தாவது பெரிய, 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, தகவல்தொழில்நுட்பம், மருத்து உற்பத்தி, விண்வெளி போன்ற துறைகளில் உலக அளவில் முக்கிய தேசமாக, உலகின் இரண்டாவது பெரிய ராணுவம் உள்ள நாடாக இந்தியா வளர்ந்திருக்கிறது போன்றவையும் கவனிக்கப்படவேண்டியதே.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலையை அடைந்து, இதையும் கடந்து வளர்ந்த நாடாகியிருக்கமுடியும் என்று ஒரு வாதத்திற்கு சொன்னாலும், காலனி நாடாக இருந்தபோது செய்யப்பட்ட சுரண்டல்கள், விடுதலைக்குப் பிறகு சந்தித்த அண்டை நாடுகளின் படையெடுப்புகள், இயற்கை சீற்றங்கள், அம்மை, போலியோ , கொரானா போன்ற தாக்குதல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், அடைந்திருக்கும் முன்னேற்றம் அவ்வளவு மோசம் இல்லை என்று சொல்லலாம்.
வெல்டன் இந்தியா. இன்னும் செய்க.
டிசம்பர், 2022