இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

புலனாய்வு
இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
Published on

ஹலோ ஸார், டெலிபோன் டிபார்ட்மெண்டில் இருந்து பேசுறோம். உங்கள் டெலிபோன் வேலை செய்கிறதா?''

''நான் ஏதும் புகார் செய்யவில்லையே.. என்ன ஆச்சு?''

‘'பத்து நாளா உங்க டெலிபோனில் இருந்து ஒரு கால்கூட போகலையே..''

நான் சிரித்தேன். ‘‘அதனால் என்ன? இவ்வளவு அக்கறை எடுத்துகொள்கிறீர்களே?''

''ஆமா சார்.. நீங்க ஒரு விஐபி சார்''

பத்துநாட்களுக்கு முன்பாக நன்கு அறிமுகமான போலீஸ் அதிகாரி ஒருவர், ‘‘ உங்கள் டெலிபோனை மானிட்டரில் போட்டிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தவேண்டாம்'' என்று எச்சரித்திருந்தார். என்னுடன் யார் பேசுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறிய அதிகார வர்ர்க்கம் ஆசைப்பட்டிருக்கிறது! சில அரசியல்வாதிகள் நேரடியாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! களத்தில் இறங்கிச் சேகரிப்பதே வழக்கம்! பலருக்கு நான் யாரென்றே தெரியாது! இந்த பூனையும் பால்குடிக்குமா என்பதுபோல் ஒதுங்கி அமைதியாகச் சேகரிப்பதே வழக்கம்!

இன்னொரு சமயம். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்திக்க அழைத்தார்! சந்தித்தபோது ஒரு பெண்மணியின் பெயரைக் குறிப்பிட்டு ‘‘ அவர் அடிக்கடி உங்கள் வீட்டுக்குப் போன் செய்கிறாரே'' என்றார். அந்த பெண்மணி என் நெருங்கிய நண்பரின் மனைவி. அவர் பெயரும் ஓர் அமைச்சர் மனைவியின் பெயரும் ஒன்று. அமைச்சர் மனைவி போன் பேசுவதாக நினைத்துவிட்டார்! பாவம் அதிகாரி உண்மை அறிந்ததும் ஏமாந்தார்!

இப்படி எத்தனையோ! எங்கள் பத்திரிகை அலுவலகத்தை ஒரு வாரம் கண்காணித்தார்கள்!

சாதாரண பத்திரிகை ஆபீசுக்கு வருகிறவர்கள் கூட உங்கள் ஆபீஸுக்கு வருவதில்லை. மாலையில் வேர்க்கடலைக் காரர் ஒருவர்தான் நுழைகிறார்!'' என்றார் உயர் பதவியில் இருந்த போலீஸ் அதிகாரி.

இப்படி எத்தனையோ! எங்கள் பத்திரிகை அலுவலகத்தை ஒரு வாரம் கண்காணித்தார்கள்!

சாதாரண பத்திரிகை ஆபீசுக்கு வருகிறவர்கள் கூட உங்கள் ஆபீஸுக்கு வருவதில்லை. மாலையில் வேர்க்கடலைக் காரர் ஒருவர்தான் நுழைகிறார்!'' என்றார் உயர் பதவியில் இருந்த போலீஸ் அதிகாரி.

ஜூனியர் விகடனில் மிஸ்டர் கழுகு ஆரம்பிக்கும் முன்பு நிறைய ஆலோசனைகள் நடந்தன. கழுகுக்கு மூக்கில் வியர்க்கும் என்பார்கள்! செய்தி என்ற இரையைக் குறிவைத்து தேடுவது என்பதால் மிஸ்டர் கழுகு என்று பெயர் வைத்தவர் மதன்!

‘‘வதந்தியான செய்திகள் கூடாது. அவதூறு கூடாது! பொய் செய்திகள் கூடாது! உள்நோக்கம் கூடாது! யாரையும் அவமானப் படுத்தக்கூடாது. போலீஸ் மூலம் வரும் செய்திகள் கூடாது' இப்படி பல கூடாதுகள்! அப்படியென்றால் களத்தில் இறங்கி சேகரிப்பதுதான். அப்படித்தான் நடந்தது. ஒருமுறை கூட இந்த கூடாது என்கிற லட்சுமணன் கோட்டைத் தாண்டியது இல்லை.

மிஸ்டர் கழுகு பகுதியில் ஒரு செய்தி வந்தால் அது  உண்மையாக இருக்கும் என்று வாசகர்கள் நம்பினார்கள்! பல செய்திகள் உண்மை ஆயிற்று! எம்ஜிஆர் ஆட்சியில் இடைத்தேர்தல் ஒன்று வந்தது. கழுகு பகுதியில் இடைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டது! அப்படியே நடந்தது! கழுகுக்கு மாலைபோட்டு ஒரு பேனர் வாசகர்களால் ஆபீஸ் வாசலில் வைக்கப்பட்டது. ஆந்திராவில் என்.டிஆர் ஆட்சியை பாஸ்கரராவ் என்பவரை வைத்து கலைக்க முயற்சி நடப்பதாக ஒரு மாதம் முன்பே கழுகார் கூறிவிட்டார்.

கட்சிகளின் பொதுக்குழு செயற்குழுவில் நடந்த வாக்கு வாதங்கள் வந்தன. ஒரு முறை

அமைச்சரவைக் கூட்டத்துச் செய்தி நடந்தபோதுதான் போலீஸ் அதிகாரி விசாரித்த பெண்மணி விஷயம்! டெல்லி விஷயங்களும் வந்தன. அப்படியே நடந்தன. ஒருமுறை தலைவர் ஒருவர் வீட்டு ஹாலில் உட்கார்ந்தவாறு எதிர்க்கட்சி நடத்திய பேரணியை வீடியோவில் பார்த்து விமர்சித்ததும் அது தொடர்பான வாதங்களும் கழுகில் வந்தன. அந்தக் கட்சித் தலைவர் அதிர்ச்சி அடைந்து ஆசிரியரிடம் யார் கூறியது என்று வலியுறுத்தி திரும்பத் திரும்ப போன் செய்தார்! ஆனால் செய்தியை மறுக்கவில்லை!

கழுகுக்கு வித்தியாசமான செய்திகள் கிடைக்க அலைந்து திரிந்தோம்.

மேற்படி தலைவர் வீட்டு ஹால் நியூஸ் எப்படிக் கிடைத்தது?  இப்படி செய்திகள் திரட்ட பல மட்டங்களில் நம்பகமான ‘முறை' வைத்திருந்தோம்! கழுகு பகுதியில்தான் வைகோவின் ஈழ ரகசியப் பயணம் வெளிவந்து கலைஞர் அரசு அறிந்துகொண்டது! அதிகாரபூர்வமான இந்த செய்தி சுதாங்கன் மூலமாக வந்தது.

ஜூனியர் விகடனில் வெளிவந்த மிஸ்டர் கழுகு பகுதிக்கு கொண்ட அக்கறைதான் இதழில் வெளியான மற்ற அரசியல் கட்டுரைகளுக்கும் ஊழல்களைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகளுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது!

மதன் எழுப்பும் சந்தேகங்களையும் ஆசிரியர் பாலசுப்ரமணியன் எழுப்பும் கேள்விகுறிப்புகளையும் தாண்டி ஊழல்களை வெளிப்படுத்தும் கட்டுரைகள் அச்சில் ஏறுவது எளிதல்ல. தேவையான ஆதாரங்கள், ஆவணங்கள் இருக்கவேண்டும்.

மத்திய அரசுத்துறை ஒன்றில் பணிபுரிந்த ஒருவர் பற்றி வெளிவந்த கட்டுரையின் மீது அவர் வழக்குத்தொடர்ந்தார். தூக்கமுடியாத அளவுக்கு டாகுமெண்டுகள் சேகரிக்கப்பட்டன! அந்த செய்தி அறிந்து வழக்கை வாபஸ் பெற்றார் அவர்!

உள்நோக்கத்துடன் எழுதப்படும் கட்டுரை என்றால் அது கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அந்த சாமர்த்தியம் ஆசிரியர் குழுவுக்கு இருந்தது. அதை எழுதுபவர்கள் எப்படி சேகரிக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட்டு வந்தது.  ‘நாங்கள் இதைக் கண்டுபிடிக்க வந்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி மிரட்டல், உருட்டல் பாணியில் ஊழல் தகவல்கள் எதுவும் சேகரிக்கப்பட்டதில்லை. எதிலும் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும் என்ற விதி இருந்தது. அரசு வழங்கும் காண்ட்ராக்ட் விவரங்கள் என்றால் அது நியாயமாகப் பெறவேண்டியவர்களுக்குக்

கிடைக்க வில்லை என்ற நிலை நிச்சயம் இருக்கும். அந்த தரப்பினைக் கண்டுபிடித்து விசாரித்தால் போதும். அரசியல் உட்பட எதிலும் போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆகவே தேவையான தகவல்களைப் பெறமுடியும்& எச்சரிக்கையுடன்.

இன்னொரு விஷயம். எப்போதும் முழு தகவல்களை வெளியிடக் கூடாது. மறுப்பு, வக்கீல் நோட்டீஸ் வந்தால், அதற்கு அளிக்கும் பதிலில், ‘ இன்னும் இவ்வளவு செய்திகள் உள்ளன.. நாங்கள் அதை வெளியிடவில்லை...'என்று பதில் எழுதினால் கப்சிப் ஆகிவிடுவார்கள்.

எழுதிக்கொண்டே போகலாம். ஜூவியில் கழுகுக்கும் மற்ற கட்டுரைகளுக்கும் செய்தி சேகரித்து நியாய உள்ளப் பயிற்சி பெற்றவர்கள் இன்று ஊடகங்களில் ஜொலித்துக் கொண்டு நம்பிக்கை

நட்சத்திரங்களாக இருப்பது மகிழ்ச்சிகரமான விஷயம்!

டிசம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com