கால்நடை, வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் தனியாக புத்தகம் எழுதுமளவிற்கு ஏராளமாக உள்ளன. பொதுவான சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
1. நம்பிக்கை: நாய், பூனைகளுக்கு வரும் உண்ணி பிரச்னையைத் தீர்க்க பூண்டைக் கொடுக்கலாம்.
உண்மை: பூண்டு உண்ணி பிரச்னையைத் தீர்க்காது என்பதோடு ஆபத்தானதும் கூட. பூண்டில் உள்ள தையோசல்பேட் இரத்த சிவப்பணுக்களை அழித்து இரத்தசோகையை உண்டாக்கும்.
2. நம்பிக்கை: நாய்கள் பிறவியிலேயே நன்றாக நீந்தக் கூடியவை
உண்மை: இது எல்லா வகையான நாய்களுக்கும் பொருந்தாது. மேஸ்டிப், புல் டாக் போன்ற நிறைய வகையான நாய்கள் பயிற்சியில்லாமல் நீந்தக்கூடியவை அல்ல.
3. நம்பிக்கை: மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்கள் வாலை ஆட்டும், அல்லது அன்பைத் தெரிவிக்க வாலை ஆட்டும்
உண்மை: நாய் வாலை ஆட்டுவதில் பல வகை உண்டு. நாய்கள் பதட்டம், முரட்டுத்தனத்துடன் இருக்கும்போது வாலை விறைப்புத்தன்மையுடன் ஆட்டும். இதை தவறாக கணித்து அந்த சமயத்தில் நாயுடன் கொஞ்சி கடி வாங்கியவர்கள் உண்டு.
4. நம்பிக்கை: நாய்கள் கொட்டாவி விடுவது தூக்கம் வருவதற்கான அறிகுறி.
உண்மை: மனிதர்களுக்குத்தான் இது பொருந்தும். மன அழுத்தம், பதட்டத்தை தணிக்க நாய்கள் கொட்டாவி விடும். நாம் தியானம் செய்வது போல நாய்களுக்கு கொட்டாவி.
5. நம்பிக்கை: நாய்,பூனைகள் தங்களின் உடல் நிலை சரியில்லை என்றால் எஜமானர்களிடம் குறிப்பால் உணர்த்திவிடும்.
உண்மை: விலங்குகள் உடல் நிலை சரியில்லை என்பதை வெளியில் காட்ட தயங்கும். காட்டினால் வலிமை குறைவானது என்ற எண்ணம் அதற்குண்டு. வழக்கமான காட்டு விலங்குகளுக்கான இந்த நுண்னுணர்வு நாய்,பூனைக்கும் உண்டு.
6. நம்பிக்கை: பூனைகளால் கார்போஹைட்ரேட்டை செரிக்க முடியாது.
உண்மை: இதில் பாதி உண்மை உள்ளது. பூனைகளில் கார்போஹைட்ரேட்டை செரிக்கக் கூடிய குளுக்கோகைனேஸ் என்ற என்சைம் இல்லை என்பது பாதி உண்மை. ஆனால் அதற்குப் பதிலாக எக்சோகைனேஸ் என்ற என்சைம் உள்ளது. நன்றாக சமைக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டை பூனைகள் நன்றாக செரிக்கும்.
7. நம்பிக்கை : இரண்டு நாய் குட்டிகளை ஒரே நேரத்தில் வளர்த்தால் அவற்றை எளிதாக பராமரிக்கலாம்.
உண்மை: நாய் விற்பவர்கள் யாரோ பரப்பிவிட்ட கட்டுக்கதையாக இருக்கலாம். இரண்டு நாய்க்குட்டிகளை ஒன்றாக வளர்க்கும்போது அவற்றுக்கிடையேயான பிணைப்பு அதிகமாக இருக்கும். இதனால் ஒன்றை மற்றொன்று தொந்தரவு செய்யும். நாயைப் பழக்குவது கடினம். மனிதர்களுடனான பிணைப்பு குறையும். சிரமங்கள் அதிகம்.
8. நம்பிக்கை: நாய்,பூனைகள் நிறங்களைப் பார்ப்பதில் குறைபாடு கொண்டவை.கருப்பு வெள்ளையாக மட்டுமே அவை பார்க்கும்.
உண்மை: எருமை மாடுகள் தான் கருப்பு வெள்ளையாகப் பார்க்கும். நாய்,பூனைகள் பச்சை, நீல நிறத்தைப் பார்க்கும். சிவப்பு வண்ணத்தை அதனால் காண முடியாது.
9. நம்பிக்கை : நாய்கள் கூர்மையான பார்வைத்திறன் கொண்டது.
உண்மை: நாய்கள் குறைபட்ட பார்வைத்திறன் கொண்டவை. மனிதர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேரத்தில் அதன் பார்வைத் திறனை வைத்து இந்த நம்பிக்கை வந்திருக்கலாம். நாய்களால் தூரத்தில் உள்ளதை தெளிவாக பார்க்கவும், கணிக்கவும் முடியாது. இதனால் தான் நகர சாலைகளில் அடிக்கடி நாய்கள் விபத்தில் சிக்கி மடிகின்றன.
10. நம்பிக்கை: ஏமாற்றுவதற்கு முதலைக் கண்ணீரை உதாரணமாகச் சொல்வது.
உண்மை: முதலைகளுக்கு கண்ணீரை சுரக்கும் லேக்ரிமல் சுரப்பி அதன் தொண்டைக்கு அருகில் உள்ளது. அதனால் உணவு உண்ணும்போது அதன் மீது அழுத்தம் ஏற்படுவதால் கண்ணீர் சுரக்கும். முதலைகள் யாரையும் ஏமாற்ற அல்ல, சாப்பிடுவதற்காக கண்ணீர் வடிக்கின்றன.
11. நம்பிக்கை: வளர்ந்த நாய்களை பழக்க முடியாது. குட்டியாக இருக்கும்போதே அவற்றை பழக்க முடியும்.
உண்மை: எந்த வயதுடைய நாயாக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் அதற்கு சரியான பயிற்சி கொடுத்தால் நன்றாக பழக்கி விடலாம்.
12. நம்பிக்கை: ஆமை ஓடு பாறை போன்று கடினமானது.
உண்மை: நம்முடைய நகங்களைப் போன்றது ஆமையின் ஓடு. இரத்த ஓட்டமும் உண்டு. இதன் ஓடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டால் ஆமை இறக்க நேரிடும்.
13. நம்பிக்கை: பூனைகளுக்கும் நகம் வெட்டுவது அவசியம்
உண்மை: பூனைகளின் நகம் என்பது எலும்பின் நீட்சிதான். அதனால் பூனைகளின் நகத்தை முழுமையாக வெட்டுவதென்பது அதன் எலும்பை நீக்குவது போன்றது. கண்டிப்பாக செய்யக்கூடாதது.
14. நம்பிக்கை: பச்சோந்தி இடத்திற்கேற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும்.
உண்மை: பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது உண்மை. ஆனால் அதனின் நிறம் பயம்,அன்பு, காதல்,பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்த அதற்கென்ற தனியான நிறத்தைக் காண்பிக்கும். புற சூழ் நிலையின் நிறத்திற்கேற்றவாறு பச்சோந்திகள் நிறம் மாறும் என்பது தவறு.
15. நம்பிக்கை: நாய்,பூனைகள் உணவில் உப்பு சேர்க்கக்கூடாது
உண்மை: உப்பு மிக அவசியமான ஒன்று. ஆனால் நாம் உண்ணும் உப்பின் அளவைவிட குறைவான அளவு உப்பு செல்லப் பிராணிகளுக்குப் போதுமானது.
16. நம்பிக்கை: தடுப்பூசி போடுவதால் மாடுகளில் பால் சுரப்பு குறையும்
உண்மை: தவறான நம்பிக்கை. தடுப்பூசி போடும்போது மிக அதிக அளவில் மாடுகளை அலைகழித்தால் அன்று மட்டும் சில சமயம் பால் குறையும். மற்றபடி தடுப்பூசியால் பால் குறையும் என்பது தவறு.
17. நம்பிக்கை: பூனைகளுக்கு உகந்த உணவு பால்
உண்மை: சிறிய குட்டிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரும்பாலான வளர்ந்த பூனைகளுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கும். அதனால் பூனை என்றாலே பால் வைத்தால் போதும் என்று எண்ண வேண்டாம்.
முனைவர். ஆர்.ஜெயப்பிரகாஷ்,
முன்னாள் இயக்குநர்,
சிகிச்சையியல் இயக்குநரகம்,
தமிழ்நாடு கால் நடை அறிவியல் பல்கலைக்கழகம்.
ஜூலை, 2020.