இந்த தடிகள் அடிப்பதற்கு அல்ல!

பாதுகாப்புப் பணியாளர்கள்
இந்த தடிகள் அடிப்பதற்கு அல்ல!
Published on

கோயம்பேட்டுக்கு அருகில் இருக்கிறது அந்தத் திரையரங்கம். அங்குதான் செக்யூரிட்டி ராஜேந்திரனை முதன்முதலில் சந்தித்தேன். அவருக்கு அங்கே வாகனங்களை ஒழுங்குபடுத்துகிற வேலை.

கணுக்காலுக்கு மடித்துவிடப்பட்ட பேண்டும், பழுப்பேறிய சட்டையும் அணிந்து கைகளில் ஒரு கம்பை வைத்து ‘‘உள்ளே போங்க உள்ளே போங்க பார்க்கிங் பின்னால'' என விரட்டிக்கொண்டிருப்பார். அவரை யாருமே மதிப்பதில்லை. அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. தன் கடமையை செய்துகொண்டேயிருப்பார்.

ஒருநாளில் பனிரெண்டு மணிநேரத்திற்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஓய்வே கிடையாது. திரையரங்கிற்கு

செல்லும் போதெல்லாம் அவரோடு உரையாடுவது வழக்கம். மிகுந்த தயக்கத்தோடுதான் பேசுவார். வேலைநேரத்தில் யாரிடமாவது பேசி கொண்டிருந்தால் அன்றைய தின சம்பளத்தில் பாதியை குறைத்துவிடுவார்களாம். ஒருநாள் ‘‘என்னதான் உங்களுக்கு சம்பளம் குடுக்கறானுக, இன்னைக்கு உங்க சம்பளத்தை நான்தரேன், வாங்க ஒரு டீயப் போட்டுட்டு பேசுவோம்'' என்று

அழைத்துச்சென்றேன். அதிக கூட்டமில்லாத

செவ்வாய் கிழமை என்பதால் அவரும் வேறொருவரிடம் சைகை காட்டிவிட்டு வந்தார்.

இருவருமாக டீயெல்லாம் குடித்து அவர் தன் பீடியை இழுத்து முடித்த பின் பேச ஆரம்பித்தார். அவர்

சித்தூரை சேர்ந்தவர். அங்கே ஒருகாலத்தில் விவசா யம் பார்த்து நல்ல வாழ்க்கை வந்தவர். அண்ணன் தம்பிகளுக்குள் நடந்த சொத்துத் தகராறில் வழக்கை நடத்துவதற்காகவே இருந்த

சேமிப்புகளை எல்லாம் இழந்தவர். இப்போதும் வழக்கு போய்க்கொண்டிருக்கிறது என்றார். இதற்கு நடுவில் அவருடைய மனைவி இறந்துவிட்டார். மகள் திருமணமாகி சென்னைக்கு வந்துவிட்டார். தனிமையில் இருந்தவரை பார்த்துக்கொள்ள ஆளில்லை. வருமானத்திற்கு வழியில்லை. மகளை பார்க்க சென்னை வந்தவர், திரும்பிச்செல்லாமல் ஒருமுறை கோயம்பேட்டிலேயே தங்கிவிட்டார். இங்கேயே இருந்தால் மகளையாவது அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியும் என்பது அவரது திட்டம்.

எவ்ளோண்ணே சம்பளம் என்றேன். ஒருநாளைக்கு நூறுரூவா, மூணுவேளை சோறுபோட்ருவாங்க, தங்குறதுக்கு இடம் குடுத்துடுவாங்க, வாரத்துல ஒருநாள் லீவ் போட்டுக்கலாம் என்றார். இந்தக்காலத்தில் வெறும் மூவாயிரம் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்களா என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கலாம். மிகமிக மலிவாக கிடைக்கிற மனிதர்கள் இந்த செக்யூரிட்டிகள். பணம் மட்டுமல்ல. மரியாதை தரத்தேவையில்லை. பணிப்பாதுகாப்புகள் இல்லை. வேண்டியபடி பயன்படுத்தலாம் என்பதெல்லாம் எத்தனை துயரம்.

''ஏண்ணே இவ்ளோ கம்மி சம்பளத்துக்கு வேலை பாக்குறீங்க, வேற ஏதாச்சும் பண்ணி பொழைச்சுக் கலாம்ல'' என்று கேட்டதும் தயக்கமாக பார்த்துவிட்டு மறுபடியும் பேசத்தொடங்கினார்.

‘‘சோறும்போட்டு தங்க எடமும் வேற யாரு குடுப்பா'' என்றார் ராஜேந்திரன். 

விவசாய நிலத்தை கடனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு ஈசிஆர் ஹோட்டல் ஒன்றில் டார்ச் லைட்டோடு அமர்ந்திருக்கும் அருணாச்சலம் தன் மகன் தலையெடுத்து நிலத்தை மீட்டுக்கொடுத்துவிட்டால் இதிலிருந்து தப்பி மீண்டும் மண்ணுக்குள் புதைந்துவிடலாம் என்கிற கனவுகளோடு கைகாட்டி வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டிருக்கிறார்.

செக்யூரிட்டி வேலை என்பது ஒரு மீளமுடியாத சுழல். இந்த வேலைக்குள் நுழைந்தவர்கள் யாருமே வேறு வேலைகளுக்கு சென்று வேறு தொழில்கள் செய்வதை பார்த்ததேயில்லை. நுங்கபாக்கத்தில் இருக்கிற ஒரு ஹோட்டலுக்கு செல்வேன். நான் சென்னைக்கு வந்த புதிதில் இருந்து இன்று வரை அந்தக்கடை வாசலில் வாகனங்களை ஒழுங்குப்படுத்துகிற வேலை பார்க்கிற ஆள் ஒருவரேதான். முப்பதுகளில் இருந்தபோது பார்க்க ஆரம்பித்து இப்போது அவருக்கு வயது ஐம்பதை தாண்டிவிட்டது. பதினைந்து ஆண்டுகளாக அதே வேலை, அதே ஆள். அதே இடம்தான். இந்த கொரானா காலத்திலும் கூட அவர் அதே கடைவாசலில்தான் நிற்கிறார். ஏன்ணே வேற எதாச்சும் நல்ல வேலைக்கு போகலாம்ல இதுல உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன்.

அவர் கேரளாவில் இருந்து தன் பதினைந்தாவது வயதில் வறுமை விரட்ட பிழைப்பு தேடி அகதியாக சென்னைக்கு வந்திருக்கிறார். ஒருவேளை உணவு கிடைத்தால் போதும் என்கிற தேடல் மட்டுமே இருந்திருக்கிறது. அந்த ஹோட்டல் முதலாளி அவருக்கு சர்வர் வேலை கொடுத்திருக்கிறார். பிறகு இவராகவே செக்யூரிட்டி வேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். பதினைந்து வயதில் கையில் எடுத்துக்கொண்ட அந்த தடியை இதுவரை கீழே வைக்கவே இல்லை. முப்பந்தைந்து ஆண்டுகளை அந்த பார்க்கிங்கிலேயே கழித்துவிட்டார்.

''எனக்கு பிறகு வேலைக்கு சேர்ந்த

பசங்க எல்லாம் நம்ம பிராஞ்ச்ல மேனேஜர் ஆய்ட்டானுக, எனக்கு அவ்ளோ பவ்சு இல்ல... இப்படியே இதையே செஞ்சுட்டு காலம் போயிடுச்சு. ஆனா ஓனர் தங்கமானவர் எதுனாலும் செஞ்சு குடுப்பார்'' என்றார். எவ்ளோண்ணே சம்பளம் என்றேன். மாசம் பத்தாயிரம் என்றார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். அவன் கல்லூரியில் படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டான். இருந்தும் அவர் வேலைக்கு வருகிறார். ''வேற ஆக்கள் பொறுப்பா பாத்துக்க மாட்டாங்க'' என்றார். கொரானா காலத்திலும் கூட அவர் கடை வாசலில் முகமூடியோடு நிற்கிறார்.

கொரானா காலத்தில் பேருந்துகள் இல்லை, பாதி சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது, வைரஸின் நேரடித்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் வேலைதான் என்றாலும் அவர்கள் ட்யூட்டி பார்த்தார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் காவலுக்கு நின்றார்கள்.

எங்கள் பகுதியில் இருக்கிற சூப்பர் மார்க்கெட்டில் இருக்கிறார் செக்யூரிட்டி முருகேசன் அண்ணன். ‘‘இப்படி வரவன் எல்லார் பக்கத்துல நின்னு தெர்மா மீட்டர் காட்றியே, கொரானா காச்ச வந்துடுமோனு பயமா இல்லையாண்ணே'' என்றேன். ''பயமா எனக்கா'' என கபாலி ரஜினி போல அவர் சொன்னார்:

‘‘எல்லாரும் நல்லா இருக்கணும்னா யாரோ ஒருத்தன் துணிஞ்சு முன்னால நின்னுதான ஆகணும்'' 

ஆகஸ்ட், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com