இதோ ஒரு கவிஞன்!

முதல் புத்தகம்
Published on

இருபது கவிதைகள், ஆல்பெர் காம்யுவின் இரண்டு வாக்கிய மேற்கோள், கவிஞர் பிரம்மராஜனின் நான்கு பக்க முன்னுரை, தமிழகத்தின் முக்கிய ஓவியர் மூவரின் கோட்டோவியங்கள் - இவற்றுடன் நாற்பத்தியெட்டு பக்க ஒல்லிப் புத்தகமாக 1985 மார்ச் மாதம் என் முதலாவது கவிதைத் தொகுப்பு ‘கோடைகாலக் குறிப்புகள்’ வெளியானது. இந்தத் தொகுப்புதான் என் கவித்துவ இருப்பை நிறுவியது. அதிலிருந்ததைவிடப் பல மடங்குக் கவிதைகள் வெளிவந்த பின்னும் முதல் தொகுப்பை வைத்தே இன்றும் அடையாளம் காணப்படுகிறேன் என்பது நிறைவையும் சற்று வருத்தத்தையும் தருகிறது. எனினும் இந்தத் தொகுப்பு அளித்த அந்தரங்க மகிழ்ச்சியை இதைவிட மேலான வடிவமைப்பிலும் நேர்த்தியிலும் வெளியான பிந்தைய தொகுப்புகள் அளிக்கவில்லை.

எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் தொடக்கம்வரை முக்கியமான சிற்றிதழ்களில் தொடர்ந்து பத்துப் பதினைந்து கவிதைகள் வெளியாயின. விவரம் அறிந்தவர்கள் ‘நம்பிக்கைக்குரிய கவிஞன்’ என்றும் சொல்லியாயிற்று. அடுத்து கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டியதுதான். அந்த ஆசையை முதலில் தூண்டிவிட்டவர் ஆத்மாநாம். அவருடைய தொகுப்பு ‘காகிதத்தில் ஒரு கோடு’ ஏறத்தாழ அந்தச் சமயத்தில்தான் வெளிவந்திருந்தது. ஆனால் மிகவும் தக்கையாக ஒரு நூலை வெளியிடுவது பற்றி எனக்குத் தயக்கமிருந்தது. நானாக வரித்துக்கொண்ட எழுத்துக் கட்டுப்பாடுகள் நிறைய எழுதவும் அனுமதிக்கவில்லை. எழுபத்து மூன்று முதல் எண்பத்தி நான்கு வரையிலான பன்னிரண்டு ஆண்டுகளில் இருபத்தைந்துக்கும் குறைவான கவிதைகளையே எழுதியிருந்தேன். அந்தக் கால அளவில் வெளியான பெரும்பான்மையான கவிதைத் தொகுப்புகள் பக்க அளவிலும் கவிதை எண்ணிக்கையிலும் சிறியவை தாம். நான்கு பாரங்களுக்கு - அறுபத்து நான்கு பக்கங்களுக்கு - அதிகமாக எந்தத் தொகுப்பும் அநேகமாக இல்லை. எனவே இருபது கவிதைகள் தொகுப்பாக வருவதில் கூச்சப்படத் தேவையில்லை என்று தேற்றிக்கொண்டேன். தலைப்பையும் ‘இருபது கவிதைகள்’ என்றே வைக்க விரும்பினேன். நண்பரும் மலையாளக் கவிஞருமான பாலசந்திரன் சுள்ளிக்காடின் முதல் தொகுப்பின் தலைப்பு - ‘பதினெட்டுக் கவிதைகள்’. அதை நகலெடுத்ததாக ஆகிவிடலாம் என்பதால் ஆசையைத் துறந்தேன்.

நண்பர் சுரேந்திரன் (யுகசிற்பி என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அகாலத்தில் மறைந்தார்) கோவையில் ஓர் அச்சகத்தை நடத்திவந்தார். பிரம்மராஜனின் முயற்சியில் ஊட்டியிலிருந்து வந்த மீட்சி சிற்றிதழின் ஆரம்பக் காலம் முதல் இதழின் இருபதோ இருபத்திரண்டோ இதழ்கள்வரை எனக்கும் அதில் சிறு பங்களிப்பு இருந்தது. சில இதழ்கள் யுகசிற்பியின் அச்சகத்தில்தான் உருவாயின. அந்த நாட்களில்தான் தொகுப்புப் பற்றிய திட்டமும் தீட்டப்பட்டது. கையில் காசில்லாத காலம். வெறும் திட்டத்தை வைத்து என்ன செய்ய? யுகசிற்பி ஆதரவுக் கரம் நீட்டினார். புத்தகத்தை அச்சிட்டுத் தருவது தன் பொறுப்பு என்றும் காசு வரும் காலத்தில் கணக்குப் பார்க்கலாம் என்றும் முன்வந்தார். அன்று அவர் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த வேதாத்திரி மகரிஷியின் அமைப்புக்காகப் புத்தகங்களை அச்சிடுவதில் மும்முரமாக இருந்தார். அதனால் நானே அச்சுக் கோக்கத் தயாரானேன். ஈய அச்சுகளைத் தேடித்தேடி அடுக்கி, தினமும் ஐந்து முதல் பத்து வரிகள்வரை உருவாக்குவதில் தேர்ச்சியடைந்தேன். ஒரு முழுக் கவிதையை நான்கு நாட்களில் கோத்து முடித்ததும் முழுப் புத்தகமே முடிவடைந்தது போலப் பெரும் நிறைவு ஏற்பட்டது. ஒரு வாரப் பயிற்சியில் மரச் சதுரங்களுக்குள் எங்கெங்கே என்னென்ன எழுத்துருக்கள் இருக்கின்றன என்பது அத்துப்படியானது. கைக்கு வேகம் கூடியது. வேலை நேரம் போக மற்ற சமயங்களில் அச்சுக்கோத்து இரண்டாவது வாரக் கடைசியில் இரண்டரை பாரத்தில் புத்தகத்தையே முடித்துவிட்டேன். பகுதி நேரமாக அச்சகத்தில் வேலை பார்க்கலாம் என்று நம்புமளவு உற்சாகம் திரண்டது. அந்த உற்சாகத்தில் மீட்சியின் முதலாண்டு நிறைவு இதழில் (அக்டோபர் - நவம்பர் 1984) ‘விரைவில் வெளிவருகிறது - சுகுமாரனின் கவிதைத் தொகுதி - கோடைகாலக் குறிப்புகள் - ப்ரதிபா பதிப்பகம், கோவை’ என்று ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டேன். பிரம்மராஜன் வெளியிட்டார் என்பதுதான் சரி.

யுகசிற்பியும் அவர் மனைவியும் இரவு பகலாகப் பணிபுரிந்து உருவாக்கிய மகரிஷியின் புத்தகம் பொருளாதார இழப்பையும் கடனையும் சுமத்தியது. அச்சகம் நொடித்துப்போனது. என்னுடைய தொகுப்பும் கைவிடப்பட்டது.

அதற்கு முந்தைய ஆண்டுதான் நண்பர் விமலாதித்த மாமல்லன் தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு - ‘அறியாத முகங்க’ளைச் சொந்த வெளியீடாகக் கொண்டுவந்திருந்தார். அதில் பெற்ற பட்டறிவில் பிரமிளின் ‘ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை’ கட்டுரை நூலையும் அச்சியற்றி வெளியிட்டிருந்தார். இரண்டும் நேர்த்தியான தயாரிப்புகள். இவை இரண்டையும் வெளியிட்ட அனுபவத்திலேயே மாமல்லன் புத்தகத் தயாரிப்பில் விற்பன்னராகியிருந்தார். “காசைத் தயார் செய். கையெழுத்துப் படியைக் கொடு. புத்தகமாக்கித் தர நானாச்சு” என்று அபயக் கரம் நீட்டினார். இறுகப் பற்றிக்கொண்டேன். ஆனால் காசு? கறார்ப் பேர்வழியான மாமல்லன் விலாவாரியாகச் செலவுக் கணக்கை எழுதியனுப்பியிருந்தார். புத்தகத் தயாரிப்புச் செலவு ரூபாய் ஆயிரத்து எண்ணூறு. இதர செலவுகள் ரூபாய் இருநூறு. ஆக மொத்தம் ரூபாய் இரண்டாயிரம்.

அம்மாவின் கம்மலை அடகுவைத்து ஐந்நூறு ரூபாய். (அந்தக் கம்மல் திரும்ப அம்மாவின் காதுகளில் குடியேறவில்லை.) என் விற்பனைப் பிரதிநிதி வேலையில் தினப்படிகளைச் சேர்த்துவைத்துக் கிடைத்த அறுநூறு ரூபாய். ஆக ஆயிரத்து நூறு ரூபாயைத் திரட்ட முடிந்தது. என்னிடம் பிரியமாக இருந்த தோழி மீதித் தொகையை நன்கொடையாகக் கொடுத்தார். டிசம்பர் மாத இறுதியில் திட்டச் செலவுடன் சென்னைக்குச் சென்று பிரதியையும் பணத்தையும் மாமல்லனிடம் ஒப்படைத்தேன். கோவையில் அன்று நண்பர்களுடன் இணைந்து நடத்திக்கொண்டிருந்த ‘தர்சனா’ திரைப்படச் சங்கத்தின் பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும்

எண்ணத்தில் பதிப்பகத்துக்கும் ‘தர்சனா பப்ளிகேஷன்ஸ்’ என்று பெயரிட்டிருந்தேன். முன்னுரை மட்டும் பாக்கி. அதை பிரம்மராஜன் எழுதுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். “சீக்கிரம் வாங்கி அனுப்பிவிடு” என்று மாமல்லன் முன்னெச்சரிகையும் விடுத்தார். ஓவியர் ஆதிமூலம் அவருடைய சில கோட்டோவியங்களையும் ஆர்.பி. பாஸ்கரன், வரதராஜன் ஆகியவர்களின் தலா ஒரு கோட்டோவியத்தையும் கொடுத்தார். சென்னை திருவல்லிக்கேணி ராஜேஸ்வரி அச்சகத்தில் அச்சிட ஏற்பாடானது. கையெழுத்துப்படியைக் கொடுத்ததும் ஆதிமூலத்தின் பெசன்ட் நகர் வீட்டுக்குச் சென்று படங்களை வாங்கியதும் அவற்றுக்கு ‘அச்சுக்கட்டை’ (பிளாக்குகள்) தயார் செய்து அனுப்பியதும்தான் என் தொகுப்புக்கு நான் செய்த பங்களிப்பு. மற்றதெல்லாம் மாமல்லன் உபயம்.

பிரதியை அச்சகத்தில் கொடுத்த பின்னர் மாமல்லன் “முன்னுரை எங்கே?” என்று நான்கைந்து அஞ்சலட்டைகளில் துளைக்க ஆரம்பித்தார். பிரம்மராஜனைத் தொந்தரவு செய்ய சங்கோஜப்பட்டுக்கொண்டு நானே “நாளை அனுப்புவேன். இன்னும் இரண்டு நாளில் அனுப்பிவிடுகிறேன்” என்று பதில் அட்டைகளை அனுப்பி வந்தேன். “அச்சுக் கோப்பு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு நாளில் வரவில்லை என்றால் முன்னுரையில்லாமலே புத்தகம் வரும்” என்று அச்சுறுத்தினார். நல்ல வேளையாக, அந்த அட்டை அஞ்சலில் வந்த அன்றே ஊருக்குப் போக மலையிறங்கி வந்த பிரம்மராஜன் முன்னுரையைக் கொடுத்துவிட்டுப் போனார். மெல்லிய வெள்ளைத் தாளில் நான்கு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்து முடித்தபோது அடைந்த நெகிழ்ச்சியும் பெருமிதமுமான மனநிலை விவரிப்புக்கு அப்பாற்பட்டது. நான் உள்ளுணர்வு மூலம் அடைந்திருந்த கவித்துவ சாத்தியங்களை அவர் இனங்கண்டிருந்தார். நட்பின் இதமும் புரிந்துகொள்ளலின் வெளிச்சமும் கலந்த அந்த வரிகள் என் செயலில் என்னை நம்பிக்கைகொள்ளச் செய்தன. அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக ‘இனி என்னுடைய எந்தப் புத்தகத்துக்கும் வேறு யாரிடமும் முன்னுரை வாங்குவதில்லை’ என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன். பதினேழு வருடங்கள் கடைப்பிடித்த உறுதி 2002இல் நான்காவது கவிதைத் தொகுப்பான ‘வாழ்நிலம்’ அச்சிலிருந்தபோது தளரப் பார்த்தது. அந்தத் தொகுப்புக்காகக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ஒரு முன்னுரை எழுதினார். கவிதையை விடக் கவிஞனைப் பற்றிய விவரிப்புகள் அதில் கூடுதலாக இருந்ததால் முன்னுரையை வெளியிடவில்லை. இப்போது யோசிக்கும் போது அது மட்டுமல்ல காரணம் என்று புரிகிறது. வாழ்க்கையின் நெருக்கடியும் படைப்பூக்கமும் முட்டிக்கொண்டிருந்த தருணத்தில் பிரம்மராஜனுடன் நிலவிய நட்பு கொடுத்த தார்மீக வலு இணையற்றது.

புத்தகத்தின் தயாரிப்புப் பொறுப்பு மாமல்லன். பிழை திருத்துநர் கவிஞர் விக்ரமாதித்யன். வடிவமைப்பு பஷீர். புத்தகத்தின் இரண்டு பக்கங்களில் ஒவ்வொரு எழுத்து உதிர்ந்துபோனதைத் தவிரப் பிழையே இல்லாத மெய்ப்புப்படி. கறுப்பு வெள்ளையில் இலைகளே இல்லாத இரண்டு மொட்டை மரங்கள் இருக்கும் படம். தலைப்பையும் மொத்தக் கவிதைகளின் தொனியையும் நியாயப்படுத்திய அந்தத் தேர்வுக்காக பஷீருக்கு மனதுக்குள் நன்றி தெரிவித்தேன். மாமல்லனின் கறாரும் உழைப்பும் இல்லாமலிருந்தால் ‘கோடைகாலக் குறிப்புகள்’ வந்திருக்காது என்று அன்று நினைத்தேன். இன்றும் நினைக்கிறேன்.

சில பிரதிகளைக் கோவை ஞானியிடம் கொடுப்பதற்காகப் புறப்பட்டேன். வழியில் தென்பட்ட எல்லா மனித முகங்களும் புது சோபை கொண்டவையாக இருந்தன. பேருந்திலிருந்த எல்லாப் பெண்களும் என்னையே பார்த்தார்கள். புத்தகத்தின் தலைப்பு அட்டையின் கீழ்ப் பகுதியில் இருந்ததால் தலைகீழாகப் பிடித்திருந்தேன். அதை வாசிக்கப் பேருந்து இருக்கையிலிருந்து தலையைச் சாய்த்துப் பார்த்த மாறுகண்ணுள்ள பெண் உலகின் பேரழகியாகத் தெரிந்தாள். எல்லாரும் என்னைச் சுட்டிக்காட்டி ‘இதோ போகிறான் ஒரு கவிஞன்’ என்றார்கள்.

ஜூன், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com