இது பெரிய பொறுப்புங்க!

இது பெரிய பொறுப்புங்க!
Published on

மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே எனப் பயணித்து இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் மனங்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் நடிகர் குமரன் தங்கராஜ். இவரிடம் நடிப்பைப் பற்றி மட்டுமல்ல; சுயமுன்னேற்றம், தியானம், மனோதத்துவம் என எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். தங்குதடையின்றி அருவிபோல் விழுகின்றன வார்த்தைகள்...

உங்கள் வாழ்க்கையில் சிறந்த தருணம் எது?

நடிக்க முயற்சி செய்த காலகட்டங்கள்ல கடுமையான மன உளைச்சல் இருக்கும். காரணம் வீட்ல எனக்கு கொடுத்த சுதந்திரத்தை சரியான படி நான் உபயோகிக்கணுமே என்கிற எண்ணம்.  நடிகனாகணும் என்கிற என்னோட கனவுக்கு உறுதுணையா அப்பா இருந்தாலும் சில சமயம் அதுவே மிகப் பெரிய பாரமா என் மனசுல சுமக்க நேரிடும். இவ்ளோ நம்பறாங்க எனக்காக இல்லாட்டியும் அவங்களுக்காக ஜெயிக்கணும்னு தீவிரமா போராடினேன். அப்பா தஞ்சாவூர்லேர்ந்து சென்னைக்கு

வந்து செட்டில் ஆனவர்.  குடும்பத்தை காப்பாத்த ஒரு டீக்கடை வைச்சார்.  எனக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லா வளர்த்தார். நான் படிப்புல எல்லாம் சுமார் தான், ஸ்கூல் ட்ராமா, டான்ஸ் இதுல எல்லாம் பங்கு பெற ட்ரை பண்ணுவேன். ஒன்பதாம் வகுப்புல தான் பின்னாடி வரிசையில் ஓரமா நின்னு  ஆட முதல் சான்ஸ் கிடைச்சுது. இப்படி வளர்ந்தது என்னோட நடிப்பு ஆசை.

சமீபத்துல பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் அவார்ட் வாங்கினேன். அது என்னோட முதல் விருது. மறக்க முடியாததும் கூட.

நீங்க நடித்துக் கடந்த தொடர்கள் பற்றி?

மாப்பிள்ளை சீரியல்ல தான் முதன்முதல்ல ஒரு சின்ன ரோல்ல நடிச்சேன். அடுத்து ஈரமான ரோஜாவே.  அதுல ஒரு முக்கியமான கதாபாத்திரம் & மாறன். அந்த பாத்திரம்தான் எனக்கு அடுத்தடுத்து பாதை அமைச்சுக் கொடுத்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்ப நடிச்சிட்டு இருக்கற சீரியல். அதில் வரும் கதிர் அப்படின்னு சொன்னா பெரியவங்க முதல் சின்னவங்க வரைக்கும் கவர்ந்துட்டு இருக்கற ஒருத்தன்.

உங்களுக்கு இந்த மூன்று ரோல்ல பிடிச்சது எது?

ஈரமான ரோஜாவில் வரும் மாறன் தான். காரணம் முதல் வாய்ப்பு. இதுல 40 -வது எபிஸோட்ல இந்த கதாபாத்திரம் இறந்துடும். ஆனாலும் ஒரு வலுவான கதாபாத்திரம். உண்மையில் அடுத்து கதிருக்கு உயிர் கொடுத்தவன் மாறன் தான்.

ஈரமான ரோஜாவே ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட். ஒரு மேல் டாமினேஷன் இருக்க கூடிய ஒரு கதை. மாறனோட ஆங்கிள்ல தான் கதை இருக்கும். பாண்டியன் ஸ்டோர்ஸ் பெண் மையக் கதை.  இதோட திரைக்கதை ஆசிரியரான பிரியாதம்பி இதுல ஒவ்வொரு காரெக்டரையும் பாத்து பாத்து செதுக்கி இருப்பாங்க. இதுல எல்லோருக்கும் நல்ல ரோல் இருந்தாலும் அண்ணி தான் மையப் புள்ளி. அவங்களை சுத்தி தான் எல்லாரும் இருப்பாங்க. முதல்ல என்னோட காரெக்டருக்கு நிறைய டயலாக் இருந்தது. ஆனா நான் உள்வாங்கி இருந்த கதிர் கொஞ்சம் அமைதியானவன்; அழுத்தமானவன். அவன் இப்படி இருப்பாங்கற ஒரு சித்திரம் என் மனசுல நடிக்கறப்ப தானே உருவாகத் தொடங்கிச்சு. அந்த பல்ஸை நல்லா புரிஞ்சிகிட்டு, ரைட்டர் எனக்கு ஏத்த மாதிரி கதிர் காரெக்டரை கொஞ்சம்  மாத்த ஆரம்பிச்சாங்க. நானும் அதை புரிஞ்சு இன்னும் கொஞ்சம் அதுக்கு மெருகு ஏத்தினேன். இதெல்லாம் ப்ளான் பண்ணி, பேசி, நடக்கறது இல்லை. அதோட ஒரு நடிகரோட பங்களிப்பைப்  புரிஞ்சுகிட்டு அதுக்கேத்தபடி ஒரு ரைட்டர் எழுதறாங்க அப்படிங்கறது பெரிய விஷயம்.

உங்க வாழ்க்கைத் துணை பத்தி சொல்லுங்க

என் மனைவி சுஹாசினி. சில சமயம் நண்பர்கள், பெற்றோர்கூட இவன் ஜெயிப்பானான்னு ஒரு  கேள்விக்குறியை ஏற்படுத்திய போது என் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வைச்சிருக்காங்க. என்னோட கேரியரை நல்லா வெற்றிகரமா அமைக்கணும்னு கூடவே இருந்து எல்லாவிதத்துலயும் சப்போர்ட் பண்ணுவாங்க. இந்த நம்பிக்கை சந்தோஷமா இருந்தாலும் சில சமயம் ஹெவியா ஆகிடும். என்னடா இவ்ளோ நம்பறாங்களே இவங்களுக்காகவாவது ஜெயிக்கணும்னு ஒரு வெறி வரும். அதான் என்னை மேலும் ஒரு வேகத்தோட ஓட வைக்குது.

உங்களுக்குப் பெருமிதமா இருந்த விஷயம்?

நான் படிச்ச வேலம்மாள் பள்ளியின் தாளாளர் என்னை அழைச்சு ஒருமணி நேரம் பேசினார். அது என்னால மறக்கவே முடியாது. காரணம் ஸ்கூல் படிக்கும் போது நான் ஆவரேஜ் ஸ்டூடென்ட்தான். படிப்பு மேல ரொம்ப கவனம் கிடையாது. டான்ஸ் ஆக்டிங் இதெல்லாம் ரொம்ப இஷ்டம். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா நடிப்புத் துறையில சின்ன சின்ன விஷயங்கள் பண்ணிட்டு ஒரு கட்டத்துல எல்லோருக்கும் தெரிந்த ஒரு நபரா ஆனதுக்கு என்னோட உழைப்பு ஒரு காரணமா இருந்தாலும் எல்லோரோட ஆசிர்வாதங்கள் ரொம்ப முக்கியம். அதுவும் பள்ளி நாட்களில நாம படிக்கலைன்னு எல்லாரும் திட்றாங்களேன்னு நினைச்சு ஃபீல் பண்ணுவோம் ஆனா அவங்க நம்ம நன்மைக்கு தான் சொல்றாங்கன்னு அப்ப புரியாது. இதோ இப்ப என்னை மறுபடி கூப்பிட்டுப்  பாராட்டினப்போ தான் தெரிஞ்சுது. ஒரு ஆசிரியர் மாணவனை படிக்கலைன்னு திட்டலை. நீங்க நல்லா வரணும்னு தான் போராடறாங்க. என்னை அவங்க கூப்பிட்டுப் பாராட்டினது பெருமிதமா இருந்துச்சு.

சின்னத்திரை விஜய்... இப்படி உங்களைக் கூப்பிடறாங்களே... இது உங்களுக்கு கிடைச்ச பட்டமா? யார் முதல்ல சொன்னது?

சத்தியமா எனக்கு தெரியாதுங்க. அதுக்கு நான் தகுதியானவனா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனா இது சரியில்லன்னு மட்டும் தெரியும். விஜய் சார் இந்த இடத்துக்கு வரதுக்கு எவ்ளோ ட்ராவல் பண்ணியிருக்கார். எவ்ளோ  சோதனைகள் போராடங்கள்ல தாண்டி வந்து இப்ப நின்னு ஜெயிச்சிருக்கார். ரசிகர்கள் என் மேல இருக்கிற அதீத அன்பினால இப்படி சொல்றாங்க.. இருந்தாலும் இப்படி ஒரு வார்த்தை பெரிய பொறுப்பு. ஒரு பாட்டி என்னோட ரசிகர்னு சொல்லி என்கிட்ட பேசினாங்க. அவங்களுக்கு நான் யாரோ எவரோ ஆனா என்னோட ஆக்டிங் பிடிச்சு தான் மனமார பாராட்டறாங்க. இதுபோல் நிறையபேர்... இருந்தாலும் நான் என்னோட எடத்துல உயரங்களை அடைய இன்னும் நிறைய உழைக்கணும். நிச்சயம் எனக்கான ஒரு தனி அடையாளத்தை நான் கண்டடைவேன்.

ஆகஸ்ட், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com