ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது ஜம்புலிங்கம் என்கிற படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் இரட்டைஇயக்குநர்கள் தாம் ஹரி-ஹரிஷ். இவர்களைச் சந்தித்தபோது....
“2008 ஆம் ஆண்டு ராமன் எஃபெக்ட் என்கிற குறும்படத்தை எடுத்துவிட்டு அதைத் தொகுப்பதற்காக (எடிட்டிங்) நான் அணுகிய படத்தொகுப்பாளர்தான் ஹரி இன்றும் என்னுடைய போனில் ஹரி எடிட்டர் என்றுதான் வைத்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ்.
ஹரிஷூக்கு வீடு திருநின்றவூர். தியாகராயநகரில் உள்ள ஹரியின் அலுவலகத்தில் பணிமுடிவதற்குத் தாமதமாகும் நாட்களில் இரவு அங்கேயே தங்கிவிடுவது ஹரிஷின் வழக்கம். அப்படித் தங்கிய நாட்களில்தான் இருவருடைய சிந்தனைகளும் எல்லாநேரங்களிலும் ஒரேமாதிரி இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
“நான் திருநின்றவூரிலிருந்து வரும்போதே இந்தக்காட்சியை இப்படி வைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துக்கொண்டே வருவேன். இங்கு வந்தால் நான் புதிதாக ஒன்றைச் செய்துவைக்கிறேன் பாருங்கள் ஹரி சொல்வார். நான் நினைத்ததை அப்படியே செய்துவைத்திருப்பார் ” என்கிறார் ஹரிஷ்.
“2009 இல் ஓர் இரவு படத்தின் மையக்கருவை ஹரிஷ் சொன்னார். அது எனக்கும் பிடித்திருந்தது. உடனே அதற்கான திரைக்கதை அமைக்கத் தொடங்கியதோடு இருவரும் சேர்ந்தே இயக்கலாம் என்றும் முடிவுசெய்தோம்” என்று ஹரி சொல்ல, “நாங்கள் செய்ததில் எங்களுக்கு மிகவும் பிடித்தபடம் என்றால் அதைத்தான் சொல்வோம்” என்கிறார் ஹரிஷ்.
முதல் படத்திற்கான கதையைத் தயார் செய்துவிட்டு தயாரிப்பாளர்கள் தேடியும் சரியாக அமையவில்லை என்ற நேரத்தில் அந்தப்படத்தைத் தயாரித்தவர் ஹரியின் அப்பா. சங்கர் பிரதர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்த அளவு பணம் கிடைக்க-வில்லை. “அதில் இழப்பு என்றாலும் எங்களுக்கான முகவரி அட்டையாகவே அந்தப் படம் இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அம்புலி படத்யாரிப்பாளர் எங்களை அணுகினார்” என்று ஹரி சொல்லும்போதே, “ஓர் இரவு படம் பொருளாதாரரீதியாகச் சரியில்லை என்றபோதும் ஹரியின் அப்பா அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எங்களை ஊக்குவித்தார். அம்புலி படத்தையும் அவரே தயாரிப்பதாகச் சொன்னார்” என்கிறார் ஹரிஷ்.
இரண்டுபேர் இருந்தாலே எட்டுக் கருத்துகள் உருவாகும் காலம் இது. கதை திரைக்கதை விவாதங்களின்போது நிறையச் சண்டைகள் வந்திருக்குமே? அந்த அனுபவங்கள் பற்றி என்று கேட்டால், “எதையுமே வெளிப்படையாக விமர்சனம் செய்துவிடுவோம். ஒருசில விஷயங்களில் பிடிவாதமாக இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் யாராவது ஒருவருக்கு வரும், எங்களுக்குள்ளான புரிதல் காரணமாக அது அப்படியே இருக்கட்டும் என்கிற எண்ணம் இன்னொருவருக்கும் வந்துவிடும்” என்றும் சொல்கிறார்கள். முன் தயாரிப்புப்பணிகளின்போதே எல்லாவற்றையும் ஒன்றுக்குப் பலமுறை விவாதித்து எழுதிக்கொள்வதால் படப்பிடிப்புத்தளத்தில் எந்தச்சிக்கலும் இருக்காது. அதுமட்டுமின்றி எங்களுடைய தொழில்நுட்பக்கலைஞர்களும் எங்கள் எண்ணவோட்டத்தைப் புரிந்தவர்களாக அமைந்திருக்கிறார்கள் என்பதால் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட்புரொடக்ஷன் ஆகியனவற்றில் எவ்வித சிக்கலும் வந்ததில்லை என்கிறார்கள்.
உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் என்று நிறையப்பேர் பணியாற்றுகிற துறை இது. அவர்களில் யாராவது உங்களுக்குள் பிரிவினை வருகிற மாதிரியான விசயங்களைச் சொல்லும் வாய்ப்பிருக்கிறது அம்மாதிரி நடந்திருக்கிறதா? அப்போது எப்படி நடந்துகொள்வீர்கள்? என்று கேட்டதற்கு, “நாங்கள் இருவருமே எல்லாவிஷயங்களையும் வெளிப்படையாகப் பரிமாறிக்கொள்கிறவர்கள் என்பதால் என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தவறாகச் சொல்ல யாரும் துணிந்ததில்லை. அப்படி ஒரு எண்ணம் யார் மனதிலாவது இருந்தாலே எங்களுக்குப் புரிந்துவிடும் உடனே சம்பந்தப்பட்டவரை அனுப்பிவிடுவோம்” என்கிறார்கள்.
திரைப்படம் கதை விவாதம் ஆகியவை மட்டுமின்றி எல்லாவிஷயங்களிலும் இருவருடைய கருத்துகளும் ஒத்துப்போகுமாம் அல்லது ஒத்துப்போகிற கருத்துகளை மட்டுமே செயலாக்குவார்களாம். அலுவலகத்திற்கு மேசை நாற்காலிகள் வாங்குவதைக்கூட இருவரும் மனமொத்துத்தான் செய்வோம் என்கிறார்கள்.
ஹரியின் அப்பா மறைந்தநேரத்தில் ஹரியால் பணியாற்றமுடியாது எனும் நிலை. அதனால் தனியாகப் போய் படம் செய்யலாம் என்று எண்ணாமல் எல்லாநாட்களும் ஹரியுடனேயே இருந்திருக்கிறார் ஹரிஷ்.
இருவரும் சேர்ந்திருப்பதன் பலம், பலவீனம் பற்றிக் கேட்டால், “ஒருவிஷயத்தை யோசித்ததும் அதற்கான உடனடிப் பார்வையாளர் மற்றவர் என்றும் சொல்லலாம்; விமர்சகர் என்றும் சொல்லலாம். அப்படி ஒருவர் இருக்கிறார் என்பது இருவருக்குமே பெரும்பலம். எண்ணத்தைத் தாண்டி செயலுக்கு வருகிற நேரத்தில் வேலைப்பகிர்வு என்பது இன்னொருபலம். எல்லாவேலைகளும் திட்டமிட்டபடி சரியாக முடிவதோடு சிறப்பாக அமைவதற்குக் காரணம் நாங்கள் இருவரும் ஒரேநேரத்தில் வெவ்வேறு இடங்களில் வேலைகளைச் செய்துகொண்டிருப்பதுதான்” என்கிறார்கள்.
பலவீனம் என்றதும் இருவருமே யோசிக் கிறார்கள். சிறிதுநேரம் கழித்து அப்படி எதுவுமே தோன்றவில்லையே என்று சொல்லிச் சிரித்துவிட்டு, “தொலைக்காட்சிப்பேட்டிகளில் இருவரையும் பேசவைத்து எடுப்பார்கள். அதைநம்பி எங்கள் வீடுகளில் சொல்வோம். ஒளிபரப்பாகும்போது யாராவது ஒருவர் பேசியதை மட்டுமே ஒளிபரப்புவார்கள் அதேபோல பத்திரிகைகளில் இருவர் பெயரையும் மாற்றிப் போட்டுவிடுவார்கள் இதுதான் பலவீனம்” என்கிறார்கள்.
இருப்பதிலேயே மிகவும் சிக்கலான விசயம் பணம். அந்தவிசயத்தில் இருவரும் எப்படி? தயாரிப்பாளரைப் பொறுத்தவரை ஒரு படத்துக்கு இயக்குநரின் சம்பளம் எவ்வளவோ அதைக்கொடுத்துவிடுவார் இருவரும் பகிர்ந்துகொள்வார்கள். ஹரியின் வங்கியிருப்பு மற்றும் வங்கிக்கணக்கின் குறியீட்டுச் சொல் உட்பட எல்லாமும் ஹரிஷூக்குத் தெரியும். இருவரும் தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டால் ஒரேநேரத்தில் இரண்டுபடங்கள் இரண்டு வருமானம் என்று கிடைக்குமே என்றால் அவ்வளவு அவசரமாக ஒடவேண்டுமா என்கிறார்கள். தனித்தனியாகப் பிரிந்துசென்று வேலைசெய்வோம் என்று நினைத்துப் பார்த்ததுகூட இல்லை என்று சொல்கிறார்கள்.
இவர்களுடைய நட்பு என்பது இவர்களைத்தாண்டி குடும்பங்கள் வரையிலும் நீண்டிருக்கிறது. இப்போதும் என்னுடைய போன் அடித்தால் என்னுடைய இரண்டு வயதுக் குழந்தை ஹரி மாமா பேசறார் என்று சொல் கிறான் என்கிறார் ஹரிஷ்.
ஹரியின் பிறந்ததேதி 19 என்றால் ஹரிஷின் பிறந்ததேதியும் 19 தானாம். அவர் பிப்ரவரி 19 இவர் ஏப்ரல் 19. அதைவிட வியப்பான விஷயம், இருவருடைய அப்பாக்களின் பிறந்ததேதி மே 25. அட!
ஏப்ரல், 2015.