இடதுசாரிகளோடு இணக்கமான உறவையே அதிமுக விரும்புகிறது!

இடதுசாரிகளோடு இணக்கமான உறவையே அதிமுக விரும்புகிறது!
Published on

தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பே வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரக் களத்தில் முந்திக்கொண்டு இறங்கிவிட்டது அதிமுக. அக்கட்சியின் தலைமைக் கழகப்பேச்சாளர் ஆவடி குமார் அந்திமழையின் கேள்விகளை எதிர்கொள்கிறார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் நிலைபாடு என்ன? பிரச்சார வியூகம்  என்ன?

தேர்தல் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான். எதிர்வரும் 16வது மக்களவைத் தேர்தலை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் தமிழகத்தில் 39ம், புதுச்சேரியில் ஒன்றுமாக நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறச் செய்ய வேண்டும். பிரச்சார நிலைபாடுகளை பொறுத்தவரை புரட்சித்தலைவி அம்மாவின் மக்கள் நல திட்டங்களை எடுத்துச் சொல்வது, 16வது நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழ்நாட்டிலிருந்து அம்மா பிரதமர் ஆகும் சூழலை உருவாக்குவது போன்றவையாக முன் வைத்துள்ளோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம், பாதுகாப்பு, வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் இந்தியாவில் வளர்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் தேர்தல் நிலைப்பாடு.

ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கான சூழல் உள்ளது என்பதை எதனடிப்படையில் சொல்கிறீர்கள்? எப்படி?

எதிர்வரும் மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக, காங்கிரசுக்கு அடுத்து எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கப்போவது அதிமுக தான். இதனடிப்படையில்தான் ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கான சூழல் உருவாகும் என்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று இந்தியாவுக்கு அமைதி, வளம், வளர்ச்சி, உருவாக்குகிற வகையில்  கூட்டுறவு கூட்டாட்சி அமைக்கும் முயற்சியில் அதிமுக உள்ளது. மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் உள்ளிட்ட மாநில கட்சி தலைவர்கள்கூட புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிரதமராக ஏற்க தயாராக இருப்பதாக அறிவித்து விட்டனர்.

தமிழ்நாட்டைவிட அதிக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மாநிலங்கள் இருக்க இங்கிருந்து 40 எம்பிகளை வைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க சாத்தியம் உள்ளதா?

நம்முடைய ஜனநாயகத்தில் சாத்தியம் இருப்பதால்தான் இதை முன்வைக்கிறோம். அதிக நாடாளுமன்ற தொகுதிகளை உடைய உத்தரபிரதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள்  பிரித்துக் கொள்ளும் நிலைமை. இதேபோலத்தான்  ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை. அதிமுக சார்பில் 40 எம்பிகளை தமிழகம் அனுப்பும் நிலையில், மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரிகளும், காங்கிரஸ் ஊழல் ஆட்சிக்கு எதிராக மாற்று அரசாங்கத்தை விரும்பும் மாநில கட்சிகளும் ஆட்சி அமைக்க அதிமுகவுக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள்.

உ.பி. போல தமிழ்நாட்டு அரசியலிலும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி கூட உள்ளதே.. இங்கும் இடங்கள் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளதே?

பிரதான நான்கு கட்சிகள், நான்கு முனை என்பதெல்லாம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் நம்ப தயாராக இல்லை. கடைசிவரை அவர்களுக்குள் நடந்த கூட்டணி பேரத்திலேயே அவர்கள்மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மோடி அலை வீசுவதாகச் சொல்லிக் கொண்டே கூட்டணிக்கு ஆள் பிடிக்க அலைந்த கதை மக்கள் அறிவார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் தங்களுக்கு என்று தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் முரண்பாடுகள், குழப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திட்டங்களை முன்வைக்கிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்பதற்கான பொதுவான ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டியதுதானே? மத்தபடி அந்த கூட்டணியாகட்டும், இடதுசாரிகளாகட்டும் எல்லாமே சொற்ப வாக்கு வங்கி கொண்டவைதான். அடுத்து  திமுக, காங்கிரஸ்  சொல்லவே வேண்டாம். ஏற்கனவே செல்வாக்கு இழந்த கட்சிகள். இதனால்தான் நாற்பது தொகுதிகளிலும் அதிமுகவுக்குதான் வெற்றிவாய்ப்பு உறுதி என்கிறோம் இதர கட்சிகள்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி இல்லை என்கிறீர்களா? முக்கிய பிரச்னையான மின்வெட்டு பிரச்னை ஒன்று போதாதா உங்கள் வெற்றியை பாதிக்க?

மின்சார தட்டுப்பாடு இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். அது வெற்றி வாய்ப்பை திசை திருப்பும் வாய்ப்பு உள்ள பிரச்னைதான். ஆனால் மக்கள் மத்தியில் விளக்கப்பட வேண்டிய விஷயம். அதை செய்து வருகிறோம். மின்சார உற்பத்தி என்பது மாநில அரசின் பட்டியலிலோ அல்லது மத்திய அரசின் பட்டியலிலோ கிடையாது. பொதுப் பட்டியலில் வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படிதான் பொதுப்பட்டியல் நிறுவனங்கள் இயங்குகின்றன. மத்திய அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் நமக்கு மின்சார தட்டுப்பாடு உள்ளது.  மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கேட்டு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லை. இதனால்தான் நாம் விரும்பாமலேயே மின்வெட்டை தொடரவேண்டியதாக இருக்கிறது. மத்தியில் நாம் ஆட்சி அமைக்ககூடிய நிலையில்தான் தமிழ்நாட்டிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை நேரடியாக சந்திப்பது தொண்டர்களை உற்சாகப் படுத்தும். இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பிரச்சாரம் பயணம் எல்லாம் ஆகாயம் மார்க்கமாகவே உள்ளதே..

40 தொகுதி மக்களையும் சந்திப்பதுதான் அம்மாவின் பிரச்சார திட்டம். நாற்பது நாட்கள் தொடர்ச்சியான பிரச்சாரம் என்பதால் சாலைவழியான பயணம் பொருத்தமாக இருக்காது.  மேலும்  பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் சாலை வழியை தேர்ந்தெடுக்க வில்லை. மாலையில் நடைபெறும் கூட்டத்திற்கு மதியத்திலிருந்தே ஆர்வத்துடன் கூடியிருக்கும் மக்களை என்ன சொல்வீர்கள்? எந்த வழியாக போனாலும் அம்மா மக்கள் மன்றத்தில்தான் பேசுகிறார். அதனால்தான் அம்மா இருக்கும் இடம் தேடி மக்கள் குவிகிறார்கள். அம்மாவை மக்கள் நம்புகிறார்கள். அம்மா மக்களை நம்பி நேரில் சந்திக்கிறார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த இடது சாரிகளை ஏன் கூட்டணியிலிருந்து விலக்கினீர்கள்?

இடதுசாரிகளோடு என்றைக்கும் இணக்கமான உறவையே அதிமுக வைத்துக் கொள்ள விரும்புகிறது. இந்த இணக்கமான உறவின் அடிப்படையில்தான் கடந்த மாநிலங்களவை தேர்தலில் அவர்கள் கேட்காமலேயே டி.கே.ரங்கராஜனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தோம். இப்போதுள்ள நிலைமையில் இடதுசாரிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்க முடியாத நிலைமை எங்களுக்கும் வருத்தம்தான். அதற்குக் காரணம் எங்களது தேர்தல் நிலைப்பாடுதான். மத்தியில் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்கிற சூழல் அதிமுக வுக்கு இருக்கும் நிலையில் எங்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டிய தேவை உள்ளது.  எனவேதான் நட்பாகவே இணைந்தோம், நட்பாகவே பிரிவோம் என்கிற முடிவுக்கு வந்தோம்.

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com