முப்பதாண்டுகளுக்கு முன் ஆவேசமாக இலக்கியம் பேசி விடியவைத்த நாட்களில் ஒரு முறை ஒரு நண்பர் பூமணி ஓர் இடது சாரி எழுத்தாளர் என்றார். அறையில் அமர்ந்திருந்த பிறிதொரு நண்பர் மெல்லிய மதுமயக்குடன் எழுந்து ஆவேசமாகக் கூச்சலிடத்தொடங்கினார். “எந்த அடிப்படையில் அவரை இடதுசாரி என்று சொல்கிறீர்கள்? அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? அவர் கூட்டுறவுத்துறையில் அதிகாரி” என்றார். நான் “ஏன், அதிகாரிகள் இடதுசாரிகளாக முடியாதா?” என்றேன். அவர் என்னை நோக்கி மேலும் ஆவேசமாக அணுகி “இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும். இவர் சிறிய தவறுகள் செய்யும் தொழிலாளர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை அளிக்கிறார். இவர் ஒரு பூர்ஷ்வா அவர் எழுதுவது இடது சாரி இலக்கியமல்ல” என்றார். “சரி, யார் யார் இடதுசாரி எழுத்தாளர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.
அந்தக் கேள்வியின் எடையால் கொஞ்சம் தளர்ந்து நாற்காலியில் அமர்ந்து விரல்விட்டு எழுத்தாளர்களின் பட்டியலை சொல்லத் தொடங்கினார். பெரும்பாலும் அனைவருமே மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள். மேலும் சில பெயர்களைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். சற்றுத் தயங்கியபின் “அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்றார். அவர்கள் வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
“சரி, ஜெயகாந்தன்?” என்றேன். மீண்டும் கடும் சினத்துடன் இருகைகளாலும் நாற்காலியின் கைப்பிடியை அறைந்து எழுந்து “ஜெயகாந்தனை எப்படி இடதுசாரி எழுத்தாளர் என்று சொல்ல முடியும்? அவர் எழுதிய ‘ஜெய ஜெய சங்கர... நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதை எழுதியவர் எப்படி இடது சாரியாக முடியும்?” என்று கூவினார். அழுகை வேறு வந்துவிட்டது. விவாதம், அவர் மேலும் குடிக்க ஆரம்பிக்கவே, முடிவுக்கு வந்தது.
யார் இடதுசாரி எழுத்தாளர்? இந்தக் குழப்பம் எப்போதும் இலக்கியச்சூழலில் உள்ளது. கட்சி சார்பானவர்களுக்கு எந்தக்குழப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் கட்சியைச் சார்ந்தவர்கள் இடதுசாரி எழுத்தாளர்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ விலகிச் சென்றாலோ வலதுசாரி எழுத்தாளர்களாகிவிடுவார்கள்.
கட்சிக்கு வெளியே இருப்பவர் அனைவரும் வலதுசாரிகள்தான்.
இங்கே நான் முற்போக்கு என்ற சொல்லைத் தவிர்க்கிறேன். அது இடதுசாரி எழுத்தாளர்கள் தங்களைத்தாங்களே சொல்லிக்கொண்ட ஒரு சொல். எல்லா படைப்பாளிகளும் முற்போக்காளர்களே. எல்லா படைப்பும் மானுடப்பண்பாட்டில் முன்னகர்வையே நிகழ்த்துகிறது. ஆகவே இலக்கியமே முற்போக்குச் செயல்பாடுதான்.
உண்மையில் கருத்தியல் சார்ந்தும் அழகியல் சார்ந்தும் இடதுசாரி எழுத்து என்றால் என்ன என்று ஒரு வரையறையை நிகழ்த்திக்கொள்ள வேண்டுமென்றால் படைப்பின் இயல்புகளின் அடிப்படையில் சில நெறிமுறைகளைக் கண்டடைய வேண்டியுள்ளது. என்னுடைய பார்வையில் தமிழ் இலக்கியப்பரப்பு உருவாக்கிய மிகச்சிறந்த இடதுசாரி எழுத்தாளர் ஜெயகாந்தனே. அவரை ஒரு அடையாளமாகக்கொண்டு இடது சாரி எழுத்தென்றால் என்ன என்று நான் வரையறுப்பேன்.
ஒன்று: பொருளியல் அடிப்படையில் பண்பாட்டு சமூகவியல் மாற்றங்களை பார்க்கும் மார்க்ஸியப் பார்வை இருக்கவேண்டும். இதை பொருளியல்வாதம் என்கிறேன்.
இரண்டு: மனிதனை, பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அலகாகக் கொள்ளுதல். மனிதனின் வெற்றிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் தன் சிந்தனையை முதன்மையாகச் செயல்படுத்துதல். இதை மனித மையநோக்கு என்கிறேன்.
மூன்று: புதுமை நோக்கிய நாட்டம். உலகம் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை. பழமையிலிருந்து புதுமைக்குச் செல்வதை வளர்ச்சிஎன்றும் மானுடத்தின் வெற்றியென்றும் கருதும் பார்வை. எதிர்காலம் மீதான நம்பிக்கை. வரலாறு மானுடனையும் சமூகத்தையும் முன்னெடுத்தே செல்கிறது என்னும் தர்க்கப்பூர்வ நிலைப்பாடு. இதை மார்க்ஸிய வரலாற்றுவாதம் என்கிறேன்.
இந்த மூன்று கூறுகளும் கொண்ட ஒரு படைப்பாளி இடதுசாரித் தன்மை கொண்டவரே. அவர் கட்சி சார்ந்து இருக்கலாம், சாராமலும் இருக்கலாம். பெரும்பாலும் முதன்மையான படைப்பாளிகளுக்கு ஏதேனும் ஒரு இயக்கம் சார்ந்தோ, அமைப்பு சார்ந்தோ தங்களை கட்டுப்படுத்திக்கொள்வது இயல்வதில்லை. அவர்களின் சுதந்திரமான சிந்தனைக்கும் பேச்சுக்கும் வெளியே இருந்து ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுவது அவர்களைக் குறுகச் செய்வதாக உணர்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான இடதுசாரி எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள் பெரும்பாலும் அனைவருமே கட்சி அமைப்புக்குள்ளிருந்து வெளியேறியவர்களே. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், பிமல் மித்ரா, தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், நிரஞ்சனா என உதாரணங்களை அடுக்கலாம்.
மேலே கூறப்பட்ட மூன்று அடிப்படை விதிகளும் ஜெயகாந்தனுக்கு எச்சமின்றி பொருந்துவதைப் பார்க்கலாம். அதற்கு மேல் அவருடைய பேச்சோ, அரசியல் நிலைபாடுகளோ, எழுத்தாள னுக்குரிய சஞ்சலங்களோ அவரை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல. ஜெயகாந்தன் ஒரு தருணத்திலும் பொருளியல்வாதத்திற்கு அப்பாற்பட்ட உளவியல், இறையியல் கூறுகளை மனித வாழ்க்கையை புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்தியவரல்ல. மனிதனை மையமாக்கியே அவருடைய சிந்தனைகள் எழுந்தன. மானுடம் முன்னேறுகிறது என்பதில் அவருக்கு எந்த ஐயமும் இல்லை. அவருடைய பொற்காலங்கள் வருங்காலத்தில்தான் நிகழ்ந்தன. சென்ற காலத்தில் அல்ல.
இந்த அளவுகோலை வைத்துப் பார்க்கையில் யார் யார் இங்கு இடதுசாரி எழுத்தாளர்கள் என்று ஒருவாறு வகுத்துச் சொல்ல முடியும். புதுமைப்பித்தன் அல்ல. புதுமைப்பித்தனிடம் மனிதனை மையமாக்கிய நோக்கு இருந்ததில்லை. வரலாற்றின் பெரும் ஒழுக்கில் மனிதனை ஒரு சிறுகூறாகவே அவர் பார்க்கிறார். உண்மையில் மனித இனம் வளர்கிறதா என்பதில் அவருக்கு ஐயமே இருந்தது. பொருளியல் அடிப்படையில் மனித வாழ்க்கையை வகுப்பது குறுக்கல்வாதம் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததை அவரது கதைகள் காட்டுகின்றன. அவருடைய இயல்பான அவநம்பிக்கையும் கசப்பும், நையாண்டியும் இடதுசாரி எழுத்துக் குரிய குணங்கள் அல்ல.
கு.ப.ராஜகோபாலன். பிச்சமூர்த்தி, லா.ச.ரா, போன்றவர்கள் ஒருபோதும் இடதுசாரிகள் அல்ல. அவர்களுடைய கனவுகளில் பெரும்பகுதி இறந்த காலத்தில் இருந்தது. கடந்தகால விழுமியங்களை நோக்கி அவர்களின் ஆழ்மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. மௌனி? அவர் கடந்த காலத்திலிருந்து வெளிவரவே இல்லை.
தமிழில் இடதுசாரி இலக்கியத்தின் முதல் நான்கு வான்மீன்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன். ஜி.நாகராஜன். நால்வருமே கட்சியில் இருந்திருக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி தனது வெளியேற்றத் துக்கான சூழலை விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். அது மார்க்சியச் செயல் திட்டம் மற்றும் உலக நோக்கு மீதான அவநம்பிக்கை யையே வெளிப்படுத்தியது. மனிதனை அவனுடைய பொருளியல் காரணிகளைக் கொண்டு முழுமையாக மதிப்பிட்டுவிடலாம் என்ற எண்ணத்தை அவர் உதறுவது அதில் தெரிகிறது. அந்த விலக்கத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்தக் காலகட்டத்தில் ஒரு காரணமாக இருந்தார். தனது குழந்தையின் இறப்பைப் புரிந்துகொள்வதற்கு ஒரு தந்தைக்கு மார்க்சியம் எவ்வகையிலும் உதவாது என்று புரிந்துகொண்டபோது அதிலிருந்து தன் உள்ளம் விலகத் தொடங்கியது என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். அந்த வரி முக்கியமானது. இங்கு மனிதர்களின் உள்ளத்தைத் தீர்மானிக்கும் அடிப்படைகளில் ஒன்று இறப்பு. பிறிதொன்று ஊழ். இரண்டையுமே மார்க்சியம் விளக்காது என்பது இடதுசாரி எழுத்துக்களிலிருந்து அவரை விலகச்செய்தது. ஆனால் சுந்தர ராமசாமி, இறுதி வரைக்கும் மானுட மையநோக்கு கொண்டிருந்தார். மானுடம் வளர்கிறது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அவ்விரு கூறுகளால் அவர் வலதுசாரிகளை விட இடதுசாரிகளுக்கு அணுக்கமான எழுத்தாளராக இருந்தார். ஆயினும் அவருடைய பிற்காலப் படைப்புக்களை வைத்து அவரை இடதுசாரி எழுத்தாளர் என்று சொல்வது கடினம்.
கி.ராஜநாராயணன் இடதுசாரிக் கருத்தியலுக்குள் எப்போதுமே சென்றவர் அல்ல. ஒரு சமூக மாற்றத்துக்கான அலை என்று நம்பி அவர் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவருக்கு நன்கு பழகிய இடதுசாரிப் பின்புலம் கொண்ட கிராமிய வாழ்க்கை,சரியாகச் சொல்லப்போனால் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்து வாழ்க்கை, அவரைக் கவர்ந்து உள்ளிழுத்து வைத்துக்கொண்டது. அவர் பொருளியல்வாதத்தை நம்பியவர். அவருடைய படைப்புகளில் மானுடமைய நோக்கு உண்டு. ஆனால் மார்க்ஸிய வரலாற்றுவாதம் இல்லை. நிலப்பிரபுத்துவ வாழ்க்கை மீதான மோகம் ஒரு முழுமையான இடதுசாரி எழுத்தாளராக ஆக முடியாமல் கி.ராவைத் தடுக்கிறது. வாழ்க்கை முன்னேறுகிறது என்பதை விட விழுமியங்களில், வாழ்க்கைத்தரத்தில் ஒரு சரிவையே அவர் உள்ளம் காண்கிறது. ஆயினும் கூட அவரிடமிருக்கும் மானுடமைய நோக்காலும், பொருளியல்வாதத்தாலும் இடதுசாரிகளுக்கு அணுக்கமான படைப்பாளியாகவே கிரா இருக்கிறார்.
ஜி.நாகராஜன் கட்சி ஊழியராக இருந்து பின்னர் வெளியேறியவர். இடதுசாரி கொள்கைகளைக் கற்றவர்.அவருடைய எழுத்தில் பொருளியல்வாதமும், மானுடமையநோக்கும் இருந்தாலும் மார்க்சியத்தின் இலட்சியவாதத்தில் அவர் பின்னாளில் நம்பிக்கை இழந்தார். அதன் வரலாற்றுவாதத்தை எள்ளலுடன் அணுகுவதை நாளை மற்றுமொரு நாளே நாவலில் நாம் காணலாம். ஆயினும் அவர் இடதுசாரி களுக்கே நெருக்கமானவர். தமிழ் இடதுசாரி எழுத்தை இந்நால்வரையும் கொண்டு முழுமையாக மதிப்பிடுவது நல்ல தொடக்கமாகும். ஒவ்வொரு பிற்கால இடதுசாரிப் படைப்பாளியும் இந்தப் பட்டியலில் எவருடைய சாயல் கொண்டவர் என்பது ஒரு நல்ல கேள்வி.
மறுபக்கம் கட்சி எழுத்தாளர்கள். தொ.மு.சிதம்பர ரகுநாதனை தமிழ் இடதுசாரி எழுத்தின் முதன்மையான ஆளுமை என்றும் அவருடைய ‘பஞ்சும் பசியும்’ நாவலே தமிழ் இடதுசாரி எழுத்தின் தொடக்கம் என்றும் கூறுவது வழக்கம். மக்சிம் கார்க்கியின் எழுத்துக் களை முன்மாதிரியாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகள் அவை. அன்றைய சோவியத் ரஷ்யாவின் கோட்பாட்டாளர்கள் அறைகூவிய சோஷலிச யதார்த்தவாதம் என்னும் அழகியல் முறையை வழிகாட்டு நெறியாகக் கொண்டவை.
தொ.மு.சிதம்பர ரகுநாதனுக்குப்பிறகு கெ.முத்தையா ங்விளைநிலம், உலைக்களம்சி, டி.செல்வராஜ் ங்தேனீர்,தோல்சி, கு.சின்னப்பபாரதி ங்தாகம்சி, பொன்னீலன் ங்கரிசல், புதிய தரிசனங்கள்சி என்னும் நால்வரைச் சொல்லலாம். கட்சியின் செயல் திட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட பிரச்சாரப் படைப்புக்கள் இவை. ஆயினும் மானுடவாழ்க்கையின் சித்திரத்தை அளிப்பதனாலேயே தவிர்க்கமுடியாத இலக்கிய முக்கியத்துவம் கொண்டவை.
அதன் பின் இடதுசாரி எழுத்தாளர்களின் நிரை இங்கு உருவாகி வந்தது. அவர்கள் அனைவருமே சோஷலிச யதார்த்தம் எனும் அழகியல் வடிவை ஏற்றுக்கொண்டவர்கள். ஸ்டாலினால் முன்வைக்கப்பட்ட அந்த அழகியல் கொள்கை அதன் எதிரிகளால் கோவேறு கழுதை என்று வர்ணிக்கப்பட்டது. குதிரைக்கும் கழுதைக்குமான புணர்வில் பிறந்தது. மறு உற்பத்தி செய்யும் திறனற்றது. உண்மையில் இரு பொருந்தாச் சொற்கள் இணைவதே சோஷலிச யதார்த்தவாதம் என்பது. சோஷலிசம் என்பது அரசியல் கொள்கை. யதார்த்தவாதம் என்பது அழகியல்முறை.
நடைமுறையில் சோஷலிச யதார்த்தவாதம் என்பது ஒருவகை யதார்த்த எழுத்து. தன் அரசியல் நம்பிக்கையாக சோஷலிசத்தை முன் வைப்பது. சமூக ஆய்வுக்கருவியாக மார்க்சியத்தின் பொருளியல்வாதத்தையும் வரலாற்றுவாதத்தையும் கையாள்வது. மானுடமைய நோக்கை இலட்சியவாதமாகக் கொண்டது. நேரடியாகச் சொல்லப்போனால் -இங்கே இருந்த இடதுசாரிக் கட்சிகளில் ஒன்றின் அரசியல் செயல்திட்டத்தை ஒட்டி எழுதப்படும் யதார்த்த நோக்குள்ள படைப்பே சோஷலிச யதார்த்தவாதம் எனக் கூறப்ப்பட்டது. பிற அனைத்து படைப்புகளையும் கட்சி அதன் எழுத்தாளர் அணியினூடாகக் கடுமையாக எதிர்த்து நிராகரித்தது.
இடதுசாரிக் கட்சியின் சித்தாந்திகள் தங்கள் படைப்புகளை முன்னிறுத்தவும் மற்ற படைப்புகளைக் கீழிறக்கவும் கருத்தியல் போரொன்றையே ஐம்பதாண்டுகள் இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இங்கு சிந்தனையை வடிவமைக்கும் ஒரு முக்கியமான தரப்பாக இந்த அரசியல் -இலக்கியக் கூட்டணி செயல்பட்டிருக்கிறது. அதன் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மீண்டும் மூவர். ஆர்.கே.கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், நா.வானமாமலை. எழுத்தாளன் சமூகத்தை எப்படிப் பார்க்க வேண்டும். அவன் படைப்பின் இயல்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தொடர்ச்சியான வகுப்புகளூடாகவும் கட்டுரைகளினூடாகவும் இவர்கள் நிலை நிறுத்தினார்கள்.
அழகியல் ரீதியாக யதார்த்தவாதம் என்பது ‘உள்ளது உள்ளபடி கூறுவது’ என்பதுதான். ஆனால் இலக்கியம் ஒருபோதும் அப்படிக் கூறிவிட முடியாது. இதுவே யதார்த்தமென்று வாசகனை நம்பச்செய்யும் எழுத்துமுறை என அதை மறுவரையறை செய்யலாம்.
அடுத்த தலைமுறையில் க.கைலாசபதி, கா. சிவத்தம்பி சி.கனகசபாபதி, தி.க.சிவங்கரன் ஆகிய நால்வரையும் இங்கு இடதுசாரி அழகியலை வலியுறுத்திய விமர்சகர்கள் என்று சொல்லலாம். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த கைசலாசபதி, சிவத்தம்பி இருவரும் இலங்கையின் ஒட்டுமொத்த இலக்கிய சூழலையே பத்துப் பதினைந்து ஆண்டுகாலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இலங்கையின் இடதுசாரி எழுத்தின் முதன்மையான படைப்பாளி வ.அ.ராசரத்தினம்தான். கைலாசபதி இலங்கையின் செ.கணேசலிங்கன், செங்கை ஆழியான் போன்ற படைப்பாளிகளே சோஷலிச யதார்த்தவாத நோக்கில் எழுதிய முதன்மையான படைப்பாளிகள் என்று முன்வைத்தார். இவர்களில் இருவருமே எவ்வகையான அழகியல் அம்சமும் இல்லாத வெறும் கருத்துப் பிரச்சா ரகர்கள். எளிய அரசியல் விவாதச் சூழலுக்கு வெளியே அவர்களால் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.
இச்சூழலில்தான் தமிழில் நவ மார்க்ஸியக் குரல்கள் எழுந்து வந்தன. அவை மார்க்ஸியத்தின் எளிமையான பொருளியல்வாதத்தை மறுபரிசீலனை செய்தன. பண்பாட்டுக்கு அதற்குரிய தனித்த இயங்குமுறைகள் உண்டு என்று வாதிட்டன. மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை மிக விரிவான தளத்தில் முன்வைத்து பண்பாட்டை ஆராய முற்பட்டன. அதற்கு ஐரோப்பிய நவ மார்க்ஸியக் கொள்கைகளைக் கையாண்டன. எஸ்.என்.நாகராசன் அக்குரலை முன்வைத்த முன்னோடி மார்க்ஸியக் கோட்பாட்டாளர். அதை இலக்கியத் தளத்தில் விரித்தவர் ஞானி. அவர்கள் நடத்திய புதிய தலைமுறை, நிகழ் போன்ற இதழ்கள் இடதுசாரிகளின் நேரடியரசியல் சார்ந்த இலக்கிய அணுகுமுறையை மாற்றியமைத்தன.
தமிழ் இடதுசாரி எழுத்தில் சில இதழாளர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
சரஸ்வதி ஜெயபாஸ்கரன் இடதுசாரி எழுத்து தமிழில் வேரூன்ற அடித்தளம் அமைத்த முன்னோடி. வி.ஜீவானந்தம் தொடங்கிய தாமரை பின்னர் தி.க.சிவசங்கரன் ஆசிரியத்துவத்தில் இடதுசாரி எழுத்துக்களை உருவாக்கியது. எஸ்.ஏ,பெருமாள், அருணன் ஆகியோர் இடதுசாரி இதழியலில் முக்கியமான பங்களிப்பாற்றியவர்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் ஆகிய இரு அமைப்புக்களும் இடதுசாரி எழுத்துக் களை தொடர்ந்து பரப்ப முயன்று வருகின்றன. அமைப்பாக இணைவது எழுத்தாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக உதவுவதில்லை. ஆனால் அவர்களின் எழுத்துக்கள் வெளிவரவும் பரவலாகச் சென்றுசேரவும் அவை காரணமாக அமைகின்றன.
தமிழ் இடதுசாரி இலக்கியத்தில் சில மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு முக்கியமானது. நா.தர்மராஜன் ரா.கிருஷ்ணையா, பூ.சோம சுந்தரம் போன்றவர்கள் ரஷ்யப் பதிப்பகங்களுக்காக மொழியாக்கம் செய்த ரஷ்ய இலக்கியங்கள் இங்கே இடதுசாரி எழுத்துக்களை பெரிதும் வடிவமைத்தன. ஆனால் டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம் போன்றவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட தல்ஸ்தோயின் படைப்புக்கள் பெரிய செல்வாக்கைச் செலுத்தவில்லை. தமிழக இடதுசாரிகளைப் பெரிதும் கவர்ந்தவர்கள் சிக்கலற்ற இடதுசாரி எழுத்தாளர்களான லிர்மன்ந்தேவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றவர்களே.
அடுத்த தலைமுறையின் முதன்மையான இடதுசாரி நால்வர் பூமணி, ராஜேந்திரசோழன், கந்தர்வன், அம்பை. முதலில் குறிப்பிட்ட மூன்று வரையறைகளையும் கொண்டு பார்க்கையில் பூமணி எல்லா வகையிலும் ஒரு இடதுசாரி எழுத்தாளர். பொருளியல் நோக்கு மானுட மைய நோக்கு வரலாற்றுவாதம் ஆகிய மூன்றும் ஒருபோதும் பிறழாமல் அவர் படைப்புகளில் உள்ளன. ஒருவகையில் ஜெயகாந்தனுக்குப்பிறகு தமிழில் மிகச் சிறந்த இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர் என்று பூமணியை நான் சொல்லத்துணிவேன்.
ராஜேந்திரசோழன் இடதுசாரிக் கட்சி ஒன்றின் செயல் வீரராகவே வாழ்ந்தவர். ஆனால் அவருடைய படைப்புகளில் இடதுசாரி நோக்கின் அடிப்படையான பொருளியல்வாதம் பெரும்பாலும் இல்லை. அவை ப்ராடிய உளவியல் நோக்கிச் செல்கின்றன. ப்ராய்டிய அணுகுமுறை தன்னளவில் மார்க்சிய நோக்குக்கு எதிரானது. மனித உள்ளமென்பது பொருளியல் அடிப்படையிலான உற்பத்தி- நுகர்வு ஆகியவற்றால் ஆன நீண்ட வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது என்பதே மார்க்சிய நோக்காக இருக்கமுடியும். பண்பாட்டால் அடக்கப்பட்ட அடிப்படை உணர்வுகளின் வெளிப்படையாக மானுட உள்ளத்தைப் பார்க்கும் ப்ராய்டியம் மார்க்சியத்துக்கு எதிரான ஒரு கொள்கை ஆகவே செவ்வியல் மார்க்சியர்களால் அது எப்போதும் எதிர்க்கப்பட்டே வந்துள்ளது.
மார்க்சியத்துக்கும் ப்ராய்டியத்துக்குமான ஒருவகை ரகசிய உறவால் நிகழ்ந்தவை என்று ராஜேந்திரசோழனின் படைப்புகளைக் கூறலாம். இக்காரணத்தால் இங்கு அவை மார்சியர்களால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டன. ஆனால் அதை ஃப்ராய்டிய மறுப்பாக முன்வைக்காமல் வெறும் ஒழுக்கவாதமாகவே இங்குள்ள மார்க்சியர்கள் முன்வைத்தனர்.
கந்தர்வன் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கத்தில் இருந்தவர். வாழ்நாளின் கடைசியில் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதனால் கட்சி அணியினரால் விலக்கப்பட்டார். அவருடைய ஆரம்பகால எழுத்துக்கள் சம்பிரதாய மார்க்சியப் பிரச்சாரத் தன்மையையே கொண்டிருந்தன. எளியோரின் வாழ்க் கைச் சித்திரங்களை உருவாக்குவதாக அவை நின்றுவிட்டிருந்தன. பின்னாளில் அவை மார்க்சியச் சட்டகத்தை உதறி நுட்பமான மானுடக் கணங்களை அவதானிப்பவையாக மாறின. அதன் பின்னரே அவர் ஒரு முக்கியமான படைப்பாளியாக எழுந்தார். தமிழிலக்கியத்தில் கந்தவர்வனுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் இடதுசாரி எழுத்துக்களால் அல்ல.
அம்பை இடதுசாரி நோக்கு கொண்ட எழுத்தாளராக அறிமுகமானவர். பின்னர் பெண்ணியக் கருத்துக்களின் பிரச்சாரகராக ஆனார். அவருடைய பெண்ணிய நோக்கு மார்க்ஸியத்தையே ஆண்மைய தத்துவம் என்ற பார்வை நோக்கிக் கொண்டு சென்றது. நேரடியான பிரச்சாரத் தன்மை கொண்ட அவதானிப்புகளும், கலையம்சம் குறைவான படைப்புக்கள் அவருடையவை.
இடதுசாரிப் பார்வை கொண்ட படைப்பாளிகளில் ஒருசாரார் வெகுஜன ஊடகங்களில் தீவிரமாக இறங்கி எழுதினார். அவர்களை சரியான அர்த்தத்தில் இலக்கிய உலகுக்குள் நிறுத்த முடியாது. ஆனால் அவர்களின் இலக்கிய பங்களிப்பைப் புறக்கணிக்கவும் முடியாது. அவர்களின் முன்னோடி என்று விந்தனைத்தான் சொல்ல வேண்டும். கல்கியால் கண்டெடுக்கப்பட்ட விந்தன் பின்னர் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதினார். முறையான மார்க்சிய அறிவு ஏதும் அவருக்கில்லை. கருத்தியல் ரீதியாக அவர் ஈ.வெ.ராவைச் சார்ந்தவர்தான். ஈ.வெ.ரா முன்வைத்த ஒரு வகையான ஒழுக்கவியலும், மூர்க்கமான எதிர்ப்புணர்வும் அவரிடம் இருந்தது. ஆயினும் பொருளியல்வாதம், மனித மையநோக்கு ஆகியவை அவரை இடது சாரிகளுக்கு அருகே நிறுத்துகின்றன.
விந்தனுக்கு அடுத்த தலைமுறையில் சு.சமுத்திரம் விந்தனின் இயல்பான கசப்பு நிறைந்த அங்கதத்தையும், கரடுமுரடான எதார்த்தச் சித்தரிப்பையும் நேரடியான தாக்கும் தன்மையையும் கொண்ட படைப்புகளை எழுதினார். இடதுசாரிகளின் வரலாற்றுவாதத்துக்கு அவர் அணுக்கமானவரல்ல. ஆனால் மனிதமைய நோக்கும் பொருளியல்வாதமும் அவரை இடதுசாரி எழுத்தாளரென்று அடையாளப்படுத்த வைக்கின்றன. தனுஷ்கோடி ராமசாமியை கட்சி சார்பான எழுத்தை பிரபல ஊடகங்களுக்காக எழுதியவர் என்று கூறலாம்.
இடதுசாரி எழுத்தின் மூன்றாவது தலைமுறை தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி என இருமுகம் கொண்டது. இவர்கள் எழுந்து வந்த காலத்தில் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதை ஒட்டி உருவான விவாதங்கள் இடதுசாரிகள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கின. அன்றுவரை கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடன் ஒளிமிக்க எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் செல்லும் வழி சரிதானா என்ற ஆழமான ஐயத்தையும் அடையத் தொடங்கினார்கள்.
செவ்வியல் மார்க்சியம் பெரிய அளவில் அடிவாங்கத் தொடங்கியது. சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த மொழிபெயர்ப்பு நூல்களினூடாக உருவாக்கப்பட்ட அவர்களின் அழகியல் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமென்ற கட்டாயத்தை நோக்கிச் சென்றது.
அந்தக் கருத்தியல் அழுத்தம் இடதுசாரி எழுத்தை இரண்டாகப்பிரித்தது. தீவிரமான கட்சிச் சார்பும் பழகிப்போன வழிகளில் மேலும் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் செல்வதும் ஒரு தரப்பாக வெளிப்பட்டது. அதன் முகம் என்று மேலாண்மை பொன்னுச்சாமியைச் சொல்லலாம். அடித்தள மக்களின் வறுமை, அவ்வறுமையிலும் வெளிப்படும் அவர்களின் பண்பாட்டுச் செழுமை, அரசியல்படுத்தப்பட்ட அவர்கள் அடையும் சமூகப்பார்வை ஆகியவற்றை திரும்பத் திரும்ப அவர் எழுதினார். தேனி சீருடையான், சோலை சுந்தரப்பெருமாள், இரா.தே.முத்து, போன்றவர்களை அவ்வரிசையைச் சேர்ந்தவர்கள் எனலாம்.
மறுபுறம் தமிழ்ச்செல்வன் முதலியோர் முன்வைத்த இலக்கியப்பார்வை மார்க்சியத்தை ஒரு வழிகாட்டு நெறியாக எடுத்துக் கொண்டு மானுட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் ஓரளவு சுதந்திரமாக எதிர்கொள்ள முடியுமா என்று பார்ப்பதாக அமைந்தது. தமிழ்ச் செல்வனின் படைப்புகளை சரியான அர்த்தத்தில் மார்க்சியச் சட்டகத்தில் அடக்க முடியாது. மார்க்சியப் பார்வை கொண்ட ஒருவரின் பொதுவான உலகியல் நோக்கு என்று அதை சொல்லலாம். மானுட மையநோக்கும் வரலாற்றுவாதமும் அவற்றில் திகழ்ந்தாலும் கூட அவற்றில் பொருளியல் அடிப்படைவாதம் எப்போதும் அப்படியே இருந்ததென்று சொல்ல முடியாது. அவருடைய முன்னுதாரணமான பலகதைகள், உதாரணமாக வெயிலோடு போய் போன்றவை மரபான பண்பாட்டுநோக்கு கொண்டவைதான்.
தமிழ்ச்செல்வன் அடுத்த கட்ட இடதுசாரி எழுத்தாளர்கள் நடுவே ஆழமான ஒரு செல்வாக்கை உருவாக்கினார். தமிழ்செல்வனின் இலக்கியவாசிப்பு குறைவுடையது. கோட்பாட்டு அளவில் அவருடைய புரிதல் மேலும் எளியது. ஞானி முன்வைத்த ஐரோப்பிய நவமார்க்சிய கொள்கைகள், மார்க்சிய அமைப்புவாதம் ஆகியவற்றுடன் அவருக்கு எந்தவிதமான அறிமுகமும் இருக்கவில்லை. ஆனால் மாற்றுத்தரப்புகளை சற்று திறந்த மனத்துடன் நோக்கும் நெகிழ்வு அவரிடமிருந்தது. ஆகவே அவரால் ஒரு விவாதக்களத்தை உருவாக்க முடிந்தது.
இடதுசாரி இலக்கியத்தில் திருவண்ணாமலை ஒரு முக்கியமான மையமாக இருந்தது. 1990 களில் திருவண்ணாமலையை மையமாக்கி எழுந்த கலை இலக்கிய இரவு இடதுசாரிப் பார்வை பிற இலக்கிய போக்குகளை உள்ளிழுத்துக் கொண்டு தன்னை விரிவாக்கம் செய்யக் களம் அமைத்தது. அதன் மையவிசையாக விளங்கியவர் பவா செல்லதுரை. நாட்டாரியல் கதைகளின் விந்தைகளை புனைவுகளில் இணைத்துக் கொண்ட பவா செல்லத்துரையின் படைப்புக்கள் சோஷலிச யதார்த்த வாதத்தை மீறிச் சென்றன. ஆனால் அனைத்து வகையிலும் முற்போக்குப் படைப்புக்களாகவும் அமைந்தன.
அன்று தொடங்கியவர்களில் பலர் நின்றுவிட்டனர். தொடர்ந்து எழுதியவர்களில் உதயஷங்கர் முக்கியமானவர். எச்.ஜி.ரசூல், மீரான் மைதீன் என ஒரு நிரை உண்டு. மார்க்ஸிய தத்துவச் சட்டகமான வரலாற்றுவாதத்தை விரிவான தளத்தில் விவரித்த சு.வெங்கடேசன் இன்றைய இடதுசாரி எழுத்தாளர்களில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர். காவல் கோட்டம் நாவல் வரலாறு தன்னியல்பான பொருளியல் விசைகளின் மோதல்களினூடாக முன்னகர்ந்து மேலும்மேலும் சிறந்த சமூக அமைப்பு உருவாக்குவதைக் காட்டுகிறது.
மார்க்ஸியக் கோட்பாட்டாளராக தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் யமுனா ராஜேந்திரன் இலக்கியக் கருத்துக்களை முன்வைத்தாலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு எதையும் உருவாக்க அவரால் இயலவில்லை. இலக்கியச் செயல்பாட்டை எளிய அரசியல் செயல்பாடாகப் பார்க்கும் எழுபதுகளின் மனநிலையை மூர்க்கமாக முன்வைப்பவர். ஆகவே பெரும்பாலும் கசப்புகளையே அவர் வெளிப்படுத்துகிறார்.இடதுசாரி எழுத்துக்கள் மேல் வாசக கவனத்தைக் கொண்டுசெல்ல, புதிய வாசிப்புக்களை உருவாக்க அவர் முயல்வதில்லை.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் இடதுசாரி எழுத்தாளர் என்று எவரையேனும் சொல்ல முடியுமா என்று பார்த்தேன். அவ்வாறு தெளிவாகச் சொல்ல எவருமில்லை. ஆனால் புதுக்கவிதையில் இடது சாரிகளின் இருப்பு குறிப்பிடத்தகுந்தது. இடதுசாரிகள் புதுக்கவிதையை மிக வன்மையாக எதிர்த்தது வரலாறு. பின்னர் வானம்பாடி இயக்கம் எழுந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். வானம்பாடி இயக்கத்தினர் நேரடியாக வெளிப்படுத்திய முற்போக்குக்கருத்துக்களே அவ்வேற்புக்கு காரணமாயின.
வானம்பாடிக்கவிஞர்கள் முற்போக்கு கருத்துக்களையும் திராவிட இயக்க மொழியையும் இணைத்தவர்கள். அப்துல் ரகுமான், மீரா, நா. காமராசன் கங்கைகொண்டான் போன்ற படைப்பாளிகளை இடதுசாரிகள் தொடர்ந்து ஏற்றுக்கொண்டாலும் கூட அப்படைப்புகளில் மார்க்சியப் பார்வை என்பது மிக மங்கலாகவே வெளிப்படுகிறது. பெரும்பாலும் வெற்று உணர்ச்சிகளாகவே அவற்றை இன்று காண முடிகிறது.
தமிழ் புதுக்கவிதைக்குள் வலுவான இருப்பை உணர்த்திய இடதுசாரிக் கவிஞர் என்று சுகுமாரனைத்தான் சொல்லவேண்டும். இடதுசாரி இயக்கங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார். சுகுமாரனுடைய பாதிப்பு தொடர்ச்சியாக நவீனக் கவிதையில் ஒரு இடதுசாரிக் குரலை நிறுவியது. சுகுமாரனின் முன்னோடிகள் மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப் பிள்ளை, கே. சச்சிதானந்தன் போன்றவர்கள். கூடவே பாப்லோ நெரூதா, மயகோவ்ஸ்கி , பெர்டோல் பிரெக்ட் என மேலைநாட்டு இடதுசாரிகள். கூரிய நேரடியான சொற்களில் அரசியலுணர்வை வெளிப்படுத்தும் சுகுமாரனின் கவிதைகளின் எரியும் படிமங்கள் ஒருதலைமுறை செல்வாக்கை உருவாக்கின. ஆனால் மிக விரைவிலேயே தடத்திலிருந்து விலகிச் சென்று ஆழ்மன அவசங்களையும் காமத்தின் தடுமாற்றங்களையும் எழுதத்தொடங்கினார்.
தொண்ணூறுகளில் மார்க்சிய லட்சியவாதத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு இடதுசாரிக் கவிஞர்களின் ஓர் அணி தமிழில் உருவாகியது. அவர்கள் லட்சியவாதத்தை உணர்ச்சிகரமாகக் கூவி முன் நிறுத்தவில்லை. அறைகூவும் தோரணை அவர்களிடமில்லை. அவர்களைப் பெரிதும் பாதித்த கவிஞர்கள் ஆத்மாநாம் போன்ற இருத்தலியலை எளிய விளையாட்டுத்தனம் மூலம் முன்வைத்தவர்கள். மொழியாக்கம் வழியாக வந்த ழாக் பிரெவர் போன்ற ஐரோப்பியக் கவிஞர்கள். யவனிகா ஸ்ரீராம், லிபி ஆரண்யா இருவரையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டலாம்.
இடதுசாரிக் கட்சி அரசியல் அதன் இடத்தை மெல்ல இழந்துவருகிறது. அதன் பொருளியல்வாதம் இலக்கியத்தில் வெகுவாக மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால் மானுடமையநோக்கு ஓர் உயர் இலட்சியவாதமாகவே நீடிக்கும் என நினைக்கிறேன். அதன் வரலாற்றுவாதம் ஒரு தத்துவக் கருவியாக இன்னும் நெடுங்காலம் சிந்தனையில் வாழும். ஆகவே இடதுசாரி எழுத்து உருவாகி வந்துகொண்டேதான் இருக்கும்.
ஜூலை, 2017.