"இங்கு (ஆட்டோ) பொன்மொழிகள் உருவாக்கப்படும்!''

Published on

இந்தி மொழியை திணிச்சா தமிழ் மின் மயானம் போய் மல்லாக்கா படுத்துக்குன்னும், இல்ல மச்சான் ஹிந்தி மொழியை மிதிச்சா, கோவத்துல அது போய் கட்டிலுக்கு அடில குப்புற படுத்துக்குன்னும், மாத்தி மாத்தி ஹிந்தி மொழியா தமிழ் மொழியான்னு கரை வேட்டி கிழிய கட்சிக்காரங்க அடிச்சுக்கிறாங்க, ஆனா இதுக்கிடையில வாட்ஸ்சப்பு பேஸ்புக்ன்னு குரூப்பா குட்மார்னிங் சொல்லுற கொடூர கும்பல் ஒண்ணு, கூர்க்காவே தூங்குற நேரத்துல கூட சத்தமே இல்லாம சைலண்டா பொன்மொழிகள் என்கிற பேருல புண்மொழிகளை போட்டு பாரத தேச கோட்டையிலே பாஷைகளின் மீது பரிதாபமே படாம, பத்து பக்கமும் ஓட்டைய போட்டுக்கிட்டு இருக்கு.

கோபிநாத்து கூட மாத்தி மாத்தி நாலு கோட்டு தான் போடுவாரு, ஆனா ஓசில நெட் தர ஜியோ சிம்ம வச்சுக்கிட்டு பொழுதுக்கும் ஏதாவது ‘Quote’ போட்டு  பயங்காட்டிக்கிட்டே இருக்கானுங்க.  செவுத்துல பார்க்கிற ‘இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்’ங்கிற வாக்கியத்துக்கு கூட ‘இப்படிக்கு விவேகானந்தர்’ன்னு சேர்த்தி பொன்மொழியாக்கி போடுறானுங்க; ‘இது பெண்கள் இருக்கை’ன்னு பேருந்துல எடுத்த வாக்கியத்தை கூட புத்தர் சொன்னாருன்னு சிரிக்கிறானுங்க.

செத்து போனவர்களை டிஸ்டர்ப் பண்ணனும்னா, அவங்க சமாதி போய் தியான டிராமா பண்ணலாம், இல்ல ஒரு படி மேல போய் சபதம் பண்ணலாம், ஆனா அவங்க எழுதாததை எழுதுன மாதிரி போட்டு பாவம் மட்டும் பண்ணக்கூடாது  மை டியர் சன். புத்தர், விவேகானந்தர், அப்துல் கலாம் - இந்த மூணு பேரை வச்சு தான் எவனோ எழுதுன எழுத்தை தரத்தரன்னு இழுத்து வந்து நம்ம கழுத்தை அறுக்கிறானுங்க. மவுலிவாக்கத்துல இடிச்ச கட்டிடத்துக்கும் மார்ட்டின் லூதர் கிங் விட்டுப்போன வெற்றிடத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்குமோ அதே மாதிரி இவனுங்க எழுதுற பொன்மொழிக்கும் பின்னால போடுற பேருக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ‘11 மாடிய இடிக்கிறத பார்க்க ஆயிரம் பேருண்டு, பஸ்ல ஏறுனா நம்ம ஆணிஞீதூய இடிக்கறானுங்களே அதை கேட்க யாருண்டு?’ - அப்துல் கலாம்’ன்னு அனுப்புறான் சார் ஒருத்தன், இந்த மாதிரி ஆட்களெல்லாம் ஸ்மார்ட்போன் வச்சு இருந்தா அப்புறம் எவர்சில்வர் கிண்ணத்தை வாங்கி தர மாதிரி தேர்தல்ல நிற்க  எவர்கிரீன் சின்னத்தை வாங்கித்தரேன்னு ஏமாத்தாமையா இருப்பானுங்க?

’ஏப்ரல் மாசம் பல பேரு ஆக மாட்டான் daddy, அதற்கு காரணம் ஆடி - புத்தர்’ன்னு பார்வேடட் மெசேஜ் ஒன்னு வருது. அடேய்களா, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு எதுக்குமே ஆசைப்படாம, கோவப்படாம உச்சா போயிட்டு ஓரமா படுத்திருந்தவரை எழுப்பி கூட்டியாந்து இப்படி அசிங்கப்படுத்துறீங்களேடா?  ‘மனுஷன் கண்டுபிடிச்சதுலையே மோசமானது மூணு; பணம், பரிட்சை மற்றும் பொண்டாட்டி’ன்னு விவேகானந்தர் சொன்னதா எழுதுறானுங்க; கடல்ல பாறை தேடி தியானம் பண்ணினவரை, எதோ கல்யாணத்தை வெறுத்து சந்நியாசம் போன சாமியார் மாதிரி மாத்தி வச்சிருக்கானுங்க. ஆக, விவேகானந்தர்  சொன்னது இவனுங்க எவனுக்கும் தெரில, ஆனா நல்லவேளை, இவனுங்க இப்ப இப்படியெல்லாம் சொல்வானுங்கன்னு விவேகானந்தருக்கும் தெரில. இப்படி விரல்ல நக்கல் பண்ணி படிக்கிறவனுக்கு வாயடைச்சு விக்கல் வர வைக்கிறது ஒரு டைப்புனா, படிக்கிறப்பவே Feeling வந்து ceiling Fan  தூக்குல தொங்க வைக்கிறது இன்னொரு டைப்பு.

‘தலையும் தலையும் முட்டிக்கிட்டா கொம்பு முளைக்கும், தண்ணி கலக்காம ஊத்திக்கிட்டா தலை வலிக்கும்’ன்னு காந்தி சொன்னதா நேத்து ஒரு பொன்மொழியை படிச்சு டென்ஷனாகி தலை நிமிர்வதுக்குள்ள, ‘எனக்கு 56 இன்ச் நெஞ்சு வேண்டாம், எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு அஞ்சாறு பெஞ்ச் போதும்’ன்னு நரேந்திர மோடி சொன்னதா இன்னையில இருந்து ஒன்னு ஒவ்வொருத்தர்  போன்லையும் பன்னு தின்னுக்கிட்டு இருக்கு.

நல்லா யோசிச்சு பார்த்தா, இப்படி பொன்மொழிகளுக்கு தமிழ்நாட்டுல அவசரத்துக்கு பிரசவம் பார்க்க ஆரம்பிச்சது திராவிட கட்சிகளின் மேடைகள் தான்னு தோணுது. ஆங்கில அறிஞர் ஆண்டர்சன் என்ன சொல்லியிருக்கிறார்ன்னு ஆரம்பிச்சு 'Earth is surrounded by sea water, but you can't mix that with local குவாட்டர்’ன்னு  சொன்னாலும் முக்கா போதையில மூணு நிமிஷம் கை தட்டுவாங்க நம்மாளுங்க. இப்படித்தான் இங்கர்சால் சொன்னாரு மோகன்லால் சொன்னாருன்னு இவங்க என்ன சொல்லணுமோ அதையெல்லாம் சொல்லிக்கிட்டுருப்பாங்கன்னு நினைகிறேன்.

தமிழ்நாட்டுல கையெழுத்து போட தெரியாதவன் கூட உண்டு, ஆனா கருத்தும் கவிதையும் எழுத தெரியாதவனில்லைன்னே சொல்லலாம். பாத்ரூம் முன்புறத்துல ஆரம்பிச்சு ஆட்டோ பின்புறம் வரைக்கும் எழுத இடம் இருந்தா போதும், ஏர்ல பூட்டுன எருமையாட்டம் கருத்தா உழுதுடுவானுங்க. கொஞ்சம் கேப் கிடைச்சா போதும், கவிதை கட்டுரை லட்சியம்! ஆனா கருத்தும் பொன்மொழியும் நிச்சயம். 

நாட்டுல வோட்டு திருடர்களுக்கு அப்புறம் அதிகமா இருக்கிறது Quote  திருடர்கள் தான். எவனோ இங்கிலீஸ்காரன் பெத்த பொன்மொழிக்கு, இன்ஷியலை மாத்திட்டு, அப்படியே டப்பிங் பண்ணி தன்னோட பொன்மொழியா உதிர்த்து கைதட்டலை வாங்கி கைப்பைல போட்டுக்கிட்டு போயிடுவாங்க பல பெரிய மனுஷங்க. Peg  போடாத பணக்காரன் கூட உண்டு, ஆனா நாட்டுல பொன்மொழிகளாலும் தலைகீழா நின்னாலும் தோணாத தத்துவங்களாலும் நிரம்பிய Book போடாத பணக்காரனே இல்ல. முந்தாநாள் வரைக்கும் போலீஸ் தேடுற கேடியா இருந்துட்டு பொசுக்குன்னு கல்வி Daddy யா மாறுற பல பேருக்கு முதல் புராஜெக்டே பொன்மொழிகளால் புள்ளி வச்சு கருத்துக்களால் கோலம் போட்ட புத்தகங்கள் தான்.

இனிமேல் நாட்டுல எவனாவது Quote களை எழுதனும்னா, அவனுங்களை ஒரு குயர் நோட்டு வாங்கி வீட்டுல எழுத சொல்லணும், இல்லை அவனுக்கே அவனை ஒரு fake id   உருவாக்க சொல்லி அது கூட Chat ல எழுத சொல்லணும், அதை விட்டுட்டு அடுத்தவன் கண்ல படுற மாதிரி எழுதுனா, அவன் அடுத்த ஜென்மத்துல அணையை மூட தெர்மாகோல் ஐடியா தந்த விஞ்ஞானியா பொறக்கணும்!

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com