விளம்பரத்துறையில் பணிபுரிந்த எனக்கு சினிமா மீது ஆர்வமும் உலகளாவிய படங்கள் அறிமுகமும் உண்டு. நிறைய விளம்பரப் படங்களில் பணிபுரிந்த அனுபவம் இருந்தும் வழக்கமான வணிகப்படங்கள் எடுக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இதைத்தொடர்ந்து சுயாதீனமாக படம் எடுக்கவேண்டும் என்று விரும்பினேன்.
சுயாதீனப் படம் என்பதை விட பரிசோதனை முயற்சி என்று செய்துபார்க்க விரும்பினேன். அப்படித் தொடங்கியதுதான் கர்மா. ஒரே ஒரு ஆள், ஒரே ஒரு லொகேஷன். ஒண்ணேகால் மணி நேரம் பார்வையாளரை கட்டிப்போடவேண்டும். கடைசியில் பார்வையாளருக்கு ஆச்சர்யம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இது என் வீட்டில் ஓர் அறையில் நான் மட்டுமே நடித்து எடுக்கப்பட்ட படம்.
இந்த படம் முடித்ததும் கொச்சியில் நடந்த ஆல் லைட்ஸ் இந்தியா ஃபிலிம் பெஸ்டிவலில் படத்தை திரையிட அனுப்பினேன். திரைவிழாவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இந்த படம் இரவுக்காட்சியாக திரையிடப்பட்டது. சுமார் 200 பேர் பார்த்தார்கள். அதுதான் இப்படம் பார்வையாளர்களுக்கு பொதுவில் திரையிடப்பட்ட முதல் தருணம். எல்லோரும் படம் முடிந்ததும் கை தட்டி ஊக்கப்படுத்தினார்கள். என்னிடம் அதன்பின் நிறையபேர் வந்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து எனக்கு இந்த படத்தை சர்வதேச திரை விழாக்களுக்கு அனுப்பலாம் என்று நம்பிக்கை வந்தது.
ஹாலிவுட் ஸ்கை என்ற விழாவில் செலக்ட் ஆகி திரையிடப்பட்டது. ஸ்பெயினில் மாட்ரிட் திரைப்பட விழாவில் தேர்வாகி திரையிடப்பட்டதுடன் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைபட இயக்குநர் விருதுக்கு என் பெயர் முன்மொழியவும் பட்டது. ஜப்பானிய, ரஷ்ய, கொரிய இயக்குநர்களுடன் நானும் முன்மொழியப்பட்டது ஆச்சர்யம். இங்கு சென்றபோதுதான் எனக்கு ஓடிடி தளங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. நெட்பிளிக்ஸ் அங்கே பிரபலமாக இருந்தது. அங்கிருந்து திரும்பி வருகையில் என்னுடைய படம் என்பது திரை அரங்குகளில் வெளியிடுவதற்கான படம் அல்ல என்பதில் தெளிவாக இருந்தேன். முதலில் யூட்யூபில் வெளியிடலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் ஓடிடி இந்தியாவில் நுழைகிறார்கள். எனக்கு அதுபற்றித் தெரிந்திருந்ததால் அமேசானைத் தொடர்புகொண்டேன். இந்தியாவில் என்ன படம் எடுத்தாலும் பிலிம் அக்ரிகேட்டர்கள் என்ற நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலமே அமேசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுடன் பேசமுடியும். இண்டியா விஸ்டா, பிலிம் கேரவான் ஆகிய இரு நிறுவனங்களே முக்கியமான பிலிம் அக்ரிகேட்டர் நிறுவனங்கள். பிலிம்கேரவான் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. அவர்களைத் தொடர்பு கொண்டபோது அமேசானுக்கு இந்த படத்தை அனுப்பினார்கள். அமேசானும் அப்போது படைப்புகளை வாங்கும் முயற்சியில் இருந்தது. அமேசான் என் படத்தை வாங்கினார்கள். அமேசா னில் மட்டும் இல்லாமல் கூகுள்ப்ளே, ஐடியூன்ஸ் ஆக மூன்று இடங்களிலும் நான் படத்தை வெளியிட முடிவுசெய்தேன். இதைத் தொடர்ந்து படத்துக்கு விளம்பரங்கள் செய்தேன். ஆன்லைனில் வெளியிடப்படும் முதல் தமிழ்ப் படம் என விளம்பரம் செய்தேன். இல்லையே ஏற்கெனவே ஆன்லைனில் தமிழ்ப்படம் வெளியாகி இருக்கே என்று கேட்டவர்களுக்கு, முதல்முதலாக கட்டணம் செலுத்தி பார்க்கும்படியான வணிக முயற்சியில் வெளியாகும் படம் இது என்று பதில் சொன்னேன்.
ஒரு படம் எடுத்து முடித்தாலே ஓடிடியில் வாங்கிவிடுவார்கள் என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அதற்கு சில தொழில்நுட்ப தரங்களும் தேவைப்படுகின்றன. சென்சார் சான்றிதழ், 5.1, சர்ரவுண்ட் சவுண்ட் போன்றவை தேவை. சென்சார் இல்லையென்றாலும் வாங்குவார்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. நிச்சயம் சென்சார் தேவை.
ரிலீஸ் பண்ணுவதற்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் மூலமாக ட்விட்டரில் என் படத்தைப் பற்றி எழுத வைத்தேன். விளம்பரங்கள் செய்தேன். படம் ஆச்சரியகரமாக நன்றாக உள்வாங்கப்பட்டது.
சாதாரண சினிமா ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் பரிசோதனை முயற்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்க வில்லை.
சினிமா துறையில் நிறைய பேர் இந்த படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஆச்சரியம். ஜியோ வந்து அமேசான் மேலும் வளர்ந்திருக்கும் நிலையில் இப்படத்தை நிறைய பேர் பார்க்கிறார்கள். சுவாரசியமான ஒரு விஷயம், இந்தப் படத்தை தமிழில் பார்த்துவிட்டு கன்னடத்தில் தயாள் பத்மநாத் என்ற இயக்குநர் ரீமேக் செய்தார். ஒரு சுயாதீனப்படம் இன்னொரு மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுதான் முதல்முறை.
அமேசானுக்கு அவுட்ரைட் முறையில் படத்தை விற்று இருந்தேன். கூகுள் ப்ளே, ஐட்யூன்ஸ் இரண்டிலும் பார்வைகளுக்கு ஏற்ப பணம் பெறும் முறையில் விற்பனை செய்து இருந்தேன். பெரிய பட்ஜெட் எதுவும் இல்லை. எனக்கு கிடைத்த தெல்லாம் லாபமே.
வருவாயை விட எனக்குக் கிடைத்த அங்கீகாரம், பெயர் முக்கியமாக இருந்தது. நிறைய பேர் என்னய்யா படம் எடுத்துருக்கே என திட்டவும் செய்தார்கள்தான். இருந்தாலும் இதுவும் முக்கியமே.
ஐஎம்டிபியில் அல்லது வேறு எங்காவது போய் விமர்சனங்களைப் பார்த்தால் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அதாவது நான் செய்த தவறுகளை மன்னித்து, அந்த முயற்சிக்காக நிறையபேர் பாராட்டி இருக்கிறார்கள்!
கடந்த இரு ஆண்டுகளில் ஓடிடியில் படங்கள் வாங்கும் முறை மாறிவிட்டது. நிறைய படங்கள் கிடைப்பதால் தேர்வு செய்து வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது கொடுப்பதென்றால் உயர்ந்த தரம் வேண்டும். நல்ல திரைக்கதை, நல்ல நடிப்பு, உயர்ந்த டெக்னாலஜி எல்லாம் தேவை.
மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பது இன்னொரு அவசியம். ஏனெனில் ஓடிடியில் படத்தைப் பார்க்கவேண்டுமென்றால் மற்றவர்கள் இதைப் பாருங்கள் என பரிந்துரை செய்யும் அளவுக்கு ஒரு விஷயம் அதில் இருக்கவேண்டும். ஓடிடியில் நிறைய சுதந்தரம் உண்டு. அப்படி என்றால் கெட்டவார்த்தை பாலியல் காட்சிகள் மட்டுமல்ல; பல்வேறுபட்ட கதைகளை எடுக்கலாம். நிறைய பரிசோதனை செய்துபார்க்கலாம். அதற்கான வாய்ப்புகள் உண்டு.
அடுத்ததாக இப்போது நான் நடிகை கல்கி கோச்லின் நடிக்கும் ஒரு படத்தை எடுத்துள்ளேன். இது முழுக்க மௌனப்படம். ஒரு நாய், ஒரு பெண் இருவருக்கும் இடையில் நடக்கும் கதை. ஆங்கிலப்படம். ஏனெனில் மௌனப்படம் இல்லையா? அப்படியே சொல்லிக்கலாம். இது உலகளாவிய பார்வையாளர்களைக் குறிவைத்து எடுத்துள்ளேன். முதலில் ஓடிடியில் நான் ஒரு படத்தை வெளியிட்டுவிட்டேன். திரும்பவும் நான் அங்கு போகும்போது அவர்கள் விரும்பும் எல்லா தரமும் அதில் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். இந்த படம் இப்போது தயாராகி விட்டது. விரைவில் நீங்கள் பார்க்கலாம்.
வெப்சீரீஸ், அமேசான் ஒரிஜினல்ஸ் எனப்படும் அவர்களே தயாரிக்கும் படங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட படங்களை மட்டுமே தயாரிப்பார்கள். அவர்களையும் 'பைபிள்' எனப்படும் திரைக்கதை விவரங்களை அக்ரிகேட்டர் நிறுவனங்களிடம் கொடுத் தால்தான் அணுகமுடியும். ஆஹா, ஜீ5 போன்ற தளங்களை நேரடியாகவே அணுகலாம்.
இந்த அக்ரிகேட்டர்ஸ் நாம் கொடுக்கும் திரைக்கதையை அமேசான் வேண்டாம் என்றால் நெட்பிளிக்ஸிலோ, ஆஹாவிலோ, ஜீ5 யிலோ கூட அணுகி படம் எடுக்க வாய்ப்புகளை நமக்காகத் தேடுவார்கள். நமக்கு வேலை மிச்சம்.
பொதுவாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகி, அவர்கள் மூலமாக இந்த வேலைகளை மேற்கொள்வது தனிநபராக முயற்சி செய்வதை விட எளிதானது.
இனி தியேட்டரில் பார்த்தால்தான் இந்த படம் நல்லா இருக்கும் என்ற ஈர்ப்புவிசையுடன் ஒரு படம் எடுத் தால்தான் திரையரங்குகளில் அதை வெளியிடுவதில் அர்த்தம் இருக்கும் என்கிற நிலை உருவாகிவிட்டது. தியேட்டர்களில் எதைப் பார்க்கவேண்டும் ஓடிடியில் எதைப் பார்க்கவேண்டும் என்று மக்களே முடிவுசெய்வார்கள்.
தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை செய்திகள், சீரியல்கள் என்று உள்ளன. அவற்றை ஓடிடியில் பார்க்கமுடியாது. தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது வேண்டுமானால் ஓடிடியால் பாதிக்கப்படலாம். ஆனால் டிவிகள் தங்களை, தங்கள் நிகழ்ச்சிகளை மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் பார்வையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.
என்னவெனில் உலகம் முழுக்க இருந்து எனக்கு மின்னஞ்சல் வரும். நிறைய பேர் என்னுடைய எண் அல்லது மின்னஞ்சல் கண்டுபிடித்து தங்களுடைய நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி, எனக்காக கருத்துகளை சொல்வது மிக சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த படம் இதுபோன்ற பார்வையாளர்கள் பாராட்டுகளைத் தரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
( நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)
மே 2021