ஆண்களே வெட்கப்படுங்கள் : வரலட்சுமி சரத்குமார்

ஆண்களே வெட்கப்படுங்கள் : வரலட்சுமி சரத்குமார்
Published on

வரலட்சுமி சரத்குமார் தனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பிரபல டிவி சேனல் ஒன்றின் தலைமை நிர்வாகியை வேலை நிமித்தமாக சந்தித்திருக்கிறார். அது முடிந்ததும் ‘வெளியே  சந்திக்கலாமா?’ என்று  அவர் அழைத்திருக்கிறார். ஆனால் வரலட்சுமி மறுத்துவிட்டார். கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த வன்முறைக்கு பின் இந்த விஷயத்தை அவர் பகிர்ந்திருந்தது கவனம் பெற்றது. இதுகுறித்து  பேசினோம்.

“இந்த விஷயங்களை எதுக்கு இந்த நேரத்துல ஏன் எழுதுனேன்னா நான் ஒரு விஐபியா இருக்கலாம் அல்லது சாதாரண பொண்ணா இருக்கலாம். இந்த பிரச்சினைகளுக்கு சமூக ரீதியாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும்னு நினைக்கிறேன். இந்த மாதிரி பாலியல் வன்முறைகளுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு.

ஒரு ஆண் எந்த உயர்பதவிக்கோ, வேலைக்கோ போகும்போது இந்த மாதிரி பாலியல் ரீதியா அணுகுறதில்லை. அதுவே பெண்ணுக்கு ரொம்ப மோசமா நேரடியாகவே நடக்குது. பெரும்பாலான ஆண்கள் ஒரு பொண்ணுக்கிட்ட பாலியல் ரீதியாக பேசுறது சாதாரணம்னு நினைக்கிறாங்க. அதுமட்டுமில்லை, ஒரு பொண்ணுக்கு இப்படியெல்லாம் பாலியல் ரீதியான தொல்லைகள் அல்லது பிரச்சினைகள் வர்றதெல்லாம் ரொம்ப இயல்பான ஒரு விஷயம்னு பாக்குறாங்க.  இதுக்கு நம்ம மனப்போக்கை மாத்திக்கணும். அதுக்கு சட்டம் மாறியே ஆகணும்.

தண்டனைகள் மூலமா தவறைத் திருத்த முடியுமானு கேக்குறாங்க. தண்டனைகள் கடுமையா இருந்தாதானே.. ஆனா இங்கே தண்டனைகளே இல்லையே. ஒரு வழக்கு பதிவு பண்ணா ரெண்டு வருஷம் கழிச்சு தீர்ப்பு கொடுத்தா அது யாருக்கு லாபம்? ரெண்டு வருஷம் வரைக்கும் அந்த பொண்ணோட நிலைமை என்ன? அந்த பொண்ணு அந்த நிலைமையிலிருந்து எப்படி மீள முடியும்? இங்க நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருக்கு. அதை கண்டிப்பா மாத்தியே ஆகணும். இந்த மாதிரி பாலியல் குற்றங்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு  சொல்லியாகணும்.

ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி கொடுமை நடந்துட்டா வெளிய  சொல்றத அவமானமா நினைக்கிறாங்க. ஆனா இதுல அவமானப்பட வேண்டியது அப்படி நடந்துக்க முயற்சி பண்ற அல்லது அப்படி நடந்துக்கிட்ட ஆண்கள்தான். அதை நாம உணர மறுக்கிறோம். பெண்கள் ஏன் முடங்கிப் போகணும். எதிர்த்து நிக்கணும். அதனாலதான் நான் எனக்கு நடந்த விஷயத்தைப் பத்தி எழுதிருக்கேன். பேட்டி கொடுத்திருக்கேன்.

பெண்களுக்கு நடக்குற வன்கொடுமைக்கு ஆண்கள்தான் வெட்கப்படணும். பெண்கள் வெட்கப்படவோ, அவமானப்படவோ அவசியம் என்ன இருக்கு? நம்ம நாட்டுல பெண்களுக்கு மட்டுமில்லை, எதுவுமே தெரியாத பச்சைக் குழந்தைகளுக்கு கூட இந்த கொடுமை நடக்குது. போரூர், எண்ணூர், எல்லா இடத்திலும் நடந்திட்டுதான் இருக்கு. இதுக்கு எல்லாத்துக்கும்  சேர்த்துதான் நான் குரல் கொடுக்குறேன்.

ஒரு பெண்ணா நான் சொல்ற விஷயங்கள் இதுதான். பெண்கள் ரொம்ப துணிச்சலா இருக்கணும். இதுல பயப்படுறதுக்கு ஒண்ணுமே இல்லை. எது நடந்தாலும் தைரியத்தைக் கைவிடக்கூடாது. பெண்கள் தப்பு பண்ணலை. அதனால தன்னைத்தானே தண்டிச்சுக்கக் கூடாது, ஆண்களைத்தான் தண்டனைக்குள்ளாக்கணும். அவமானத்தால தற்கொலை பண்ணிக்கிட்டு பெண்கள் தங்களோட வாழ்க்கையை ஏன் முடிச்சுக்கணும்?

இப்ப நான் எழுதுன விஷயத்தால என்கிட்ட அப்படி கேட்டவரு அவமானத்தை உணர்ந்திருப்பாரில்லையா? ஆண்களை பழிவாங்குறத விட்டுட்டு தன்னைத் தண்டிச்சுக்குறது என்ன நியாயம்?

வீடியோ எடுத்து மிரட்டுறது, குழந்தைங்களை வன்முறைக்குள்ளாக்குறது, பெண்களை வெறும் உடலா பாக்குறதுனு பேசுறதுக்கு எக்கச்சக்க விஷயங்கள் இருக்கு. ஆனா பேசுறத விட்டுட்டு செயல்ல இறங்கணும்.

இது தமிழ்நாட்டு பிரச்சினை, கேரள பிரச்சினைனு இல்லை. நாடு முழுக்க இருக்கிற பிரச்சினை. ஏற்கனவே ஏராளமான சட்டங்கள் இருக்கு. ஆனா அது வெறும் சட்டமாதான் இருக்கு. அதை முதல்ல நடைமுறைக்கு

சாத்தியமான முறையில மாத்தணும்” என்று கொந்தளிக்கிறார் வரலட்சுமி.   

–சரசுவதி

மார்ச், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com