ஆண் எனும் நோயாளி!

ஆண் எனும் நோயாளி!
Published on

ஆணிடம் பெண் முதலில் எதிர்பார்ப்பது புரிதலும் வெளிப்படைத்தன்மையும் தான். இன்றைக்கு பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்,  சிந்திக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பலம் தான். ஆனால், அதே தகுதியுடன் பெண்கள் குடும்பத்திற்குள்

செல்லும்போதுதான் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. குடும்ப அமைப்பிற்குள், பெண் என்ன நினைக்கிறாள் என்பதை உதாசீனப்படுத்தக் கூடிய ஆண்கள் இருக்கின்றனர்.

சமூக அமைப்பும், குடும்ப வெளியும் ஆணை ஒரு நிர்பந்தத்திற்குள்ளாக்குகிறது. திருமணத்திற்கு முன்பாக பெண்ணின் அழகை, மேக்கப்பை ரசித்த ஆண், திருமணத்திற்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிவிடுகிறான். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்களும் ஆண்களுக்கு இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை சொல்கின்றனர். அது எப்படி இருக்கும் என்றால்? ஆணை ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

அதேபோல், பெண் மனநிலை என்பதே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதுதான். இதே பகிர்தலை, ஆண்களும் தங்களிடம் செய்ய வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ஆண்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்துகொள்கிறார்கள்.

ஆண் தன்னை அறியாமலேயே ஆண் மன உளவியலுக்குள் சிக்குண்டு கிடக்கிறான். உளவியல் ரீதியாகவே ஆண் என்பவன் நோயாளிதான். அதேபோல், பெண்ணைப் புரிந்து கொண்டு நடக்கும் ஆண்களை இந்த சமூகம் கிண்டல் செய்யத் தயங்கியதில்லை.

உண்மையில் ஆண்கள் மனசாட்சி  உள்ளவர்கள் என்றால், யோசிக்கத் தெரிந்தவர்கள் என்றால், அரசியலை வழி நடத்த தகுதியுடையவர்கள் என்றால், தன்னுடைய எல்லா அகங்காரங்களையும் விட்டுவிட்டு மனைவியின் காலிலும், மகளின் காலிலும் சரணடைய வேண்டும். அது தான் பெண்ணியமே.

-கு.உமாதேவி

ஆண் பார்வை

கோபி நயினார்

ஆண் - பெண் உறவுச்சிக்கல் இரண்டு காரணங்களால் ஏற்படுகின்றது. ஒன்று பொருளாதாரத்தால் ஏற்படுவது. மற்றொன்று, ஆண் - பெண் என்ற உறவு நிலையிலிருந்து ஏற்படுவது.  இந்த இரண்டு சிக்கலுமே வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை ஒரே மாதிரியான ஒடுக்குமுறையைத்தான் கையிலெடுக்கிறது. அதில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பொருளாதாரத்தால் ஏற்படும் உறவுச் சிக்கல் என்பது, குடும்பத்தின் பொருளாதாரப் பற்றாக்குறையால் ஏற்படுவதாகும். ஆண், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றவில்லை என்றால், அவன் மீதான நம்பிக்கை பெண்ணுக்குப் படிப்படியாக குறையத் தொடங்குகிறது. அதையொட்டியே பின்னர் எல்லாச் சிக்கல்களும் ஏற்படத் தொடங்குகின்றன. அதேபோல், பெண் பொருளாதாரம் என்பது குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தக் கூடியது. பொருளாதாரம் சார்ந்து ஏற்படும் ஆண் - பெண் உறவுச்சிக்கலுக்கு நாடும் சமூகமும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆண் - பெண் உறவு நிலையிலிருந்து ஏற்படும் சிக்கல் (பெண்களைக் கண்காணிப்பது) என்பது ஆணாதிக்க வரலாற்றோடு தொடர்புடையது. இந்த வரலாற்றை சரிசெய்ய வேண்டும் என்றால்  மிகப் பெரிய சமூக மாற்றம் இங்கு ஏற்பட வேண்டும். ஆனால், ஒரு சமூகம் அவ்வளவு எளிதில் ஜனநாயகத்தைக் கைக்கொள்ளாது. இதன் தேவை ஒரு சமூகத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கும்போதுதான் அந்த சமூகம் ஜனநாயகத்தைப் பற்றியே  யோசிக்கத் தொடங்கும். அதுபோலத்தான் ஆண் -பெண் உறவுச்சிக்கலும்.

ஆண் - பெண் உறவு சிக்கலை பொத்தம்பொதுவாக பேச முடியாது. இது குடும்பத்திற்குள் நிகழ்கிறதா, சமூகத்தில் நிகழ்கிறதா, பணியிடத்தில் நிகழ்கிறதா என்று பார்க்க வேண்டியுள்ளது.  எல்லாம் வலிமையோடும், அதிகாரத்தோடும் தொடர்புடையவையாகத்தான் இருக்கின்றது. சமூகத்தில் ஒருவருக்கு என்ன வலிமை இருக்கின்றதோ, அதை வைத்துத்தான் அவருக்கான மரியாதை என்பது அளிக்கப்படுகிறது. தலித் ஒருவர் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், அவரை எப்படி கீழானவராக பார்க்கிறார்களோ அதேபோல் தான் பெண்களையும் பார்க்கின்றனர்.

பெண், பெண்களுக்கான விருப்பங்களோடும், ஆண், ஆண்களுக்கான விருப்பங்களோடும் இருப்பது தான் உலகம்.

நவம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com