ஆட்டுக்கிடாய்களின் மோதல்!

ஆட்டுக்கிடாய்களின் மோதல்!
Published on

இந்தியப் படங்களில் ஒரு பிரச்னை இருக்கிறது. உலகம் முழுக்கவும் இயல்பான கதைகளை எடுத்துக்கொண்டு நல்ல உணர்ச்சிகளோடு படங்கள் எடுத்தால், இந்தியாவில் நாம் அதே கதையைப் பாடல்கள், காமெடி, ஃபைட்டுகள் என்று மாற்றி, பயங்கரமான கமர்ஷியல் படமாக மாற்றிவிடுவோம். இதனாலேயே படத்தின் உணர்ச்சிகள் நமக்குள் செல்லாமல், கதாநாயகி ஆடும் குத்துப் பாடல், காமெடியன் அடிக்கும் பஞ்ச்கள், ஹீரோ உதிர்க்கும் தத்துவ முத்துகள் ஆகியவையே பெரும்பாலும் சென்று சேர்கின்றன. ஆனால் அவற்றையும் மீறி ஆங்காங்கே நல்ல படங்கள் வராமல் போவதில்லை. அப்படிப்பட்ட கன்னட கேங்ஸ்டர் படங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

கன்னடப் படவுலகம் கொஞ்சம் விசித்திரமானது. எப்படியென்றால், ஆரம்பகாலம் தொட்டே தேசிய விருதுகள் வாங்கும்வகையிலான பல தரமான படங்கள் ஒருபக்கம் வந்துகொண்டே இருக்கும். புட்டண்ணா கனகல், கிரீஷ் காசரவள்ளி, கிரீஷ் கர்நாட், பி.வி, கரந்த், ஜி.வி. அய்யர், பிரேமா கரந்த், டி.எஸ். நாகாபரணா (கொஞ்சம் கமர்ஷியல்), கவிதா லங்கேஷ் முதலானோர் வரிசையாக தேசிய விருதுகளை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த கதைகளையே எடுப்பார்கள். அதேசமயம் இதற்கு நேர் எதிராக, கொடும் கமர்ஷியல்களும் அங்கே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். சில காலம் முன்பு வரை இந்த இரண்டு வகைகளுக்கும் இடையிலான நார்மல் படங்களே கன்னடத்தில் இல்லை. இப்போதுதான் பவன்குமார், ரக்‌ஷித் ஷெட்டி முதலானோர் அந்த இடைவெளியை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

முதலாவதாக நாம் பார்க்கப்போகும் படம், ‘ஆ தினகளு‘ (2007). இது, கேங்ஸ்டராக இருந்து பின்னர் அதிலிருந்து வெளியே வந்த அக்னி ஸ்ரீதர் எழுதிய புத்தகம். அந்தப் புத்தகத்தை மையமாக வைத்து, கே.எம். சைதன்யா இயக்கிய படம். எண்பதுகளில் பெங்களூரில் தாதாயிசம் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் படம். எமர்ஜென்சி காலகட்டத்தில் உருவான ஜெயராஜ் என்ற தாதா (ஆசிஷ் வித்யார்த்தி), அதன்பின் சிறை சென்று வரும்போது வேறொரு தாதா அவனிடத்தில் இருப்பதைக் கவனிக்கிறான். இதைச் சுற்றி நடக்கும் கதை இது. இதில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் நிஜமானவை. இன்னொரு தாதாவாக  வரும் ஷரத் லோஹிதாஷ்வாவும் நன்றாக நடித்திருப்பார். வெறித்தனமான கமர்ஷியலாக இல்லாமல் ஓரளவு நிதானமான, உணர்ச்சிகரமான படமாக அமைந்து சில விருதுகளும் வாங்கியது ஆ தினகளு.

அடுத்து நாம் பார்க்கப்போகும் படம், ஆ தினகளு படத்துக்குப் பன்னிரண்டு வருடங்கள் முன்னர், 1995ல் வெளியான ‘ஓம்‘. 1992இல் டிபிகல் கன்னடக் காமெடிப்படம் ஒன்றை இயக்கி, இயக்குநராக அறிமுகமாகி இருந்த உபேந்திரா என்ற ஒடிசலான இளைஞர், இரண்டாவது படமாக ‘ஷ்ஷ்ஷ்ஷ்‘ என்ற ஹாரர் படத்தை இயக்கி, மூன்றாவதாக 1995இல் இயக்கிய படமே ஓம். இது, உபேந்திராவின் சகோதரரின் நண்பருக்கு நடந்த கதை என்று பிந்நாட்களில் உபேந்திரா சொல்லியிருக்கிறார். ராஜ்குமாரின் மகனான ஷிவ்ராஜ்குமார்தான் ஓம் படத்தின் ஹீரோ. படத்தின் கதை சிம்பிளானது. ஒரு கோயில் பூசாரியின் மகன் தாதாவாகிறான். ஆனால் எதனால் தாதா ஆகிறானோ, அந்தப் பெண்ணாலேயே புறக்கணிக்கப்படுகிறான். அவன் எப்படி தாதா ஆனான்? அதன்பின் அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் என்பதை நான் லீனியராக முன்னும் பின்னும் சொல்லும் கதை இது. கதையை விட, அது எடுக்கப்பட்ட விதம் உபேந்திராவுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. ஓம் படம் இன்றும் கன்னடத்தில் பல்வேறு சாதனைகளை வைத்திருக்கிறது. ஓம் அளவு மறுபடியும் மறுபடியும் ரீ ரிலீஸ் ஆன படங்களே இல்லை.

அடுத்த படம், 2005இல் வெளியான ‘ஜோகி‘. இதுவும் ஷிவ்ராஜ்குமார் நடித்ததே. இது தமிழில் ‘பரட்டை என்ற அழகுசுந்தரம்‘ என்று ரீமேக் செய்யப்பட்டது. தந்தை இறந்ததால் பிழைப்புக்காக நகரம் வரும் இளைஞன் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் எப்படி கேங்ஸ்டராகிறான்? அவனைத் தேடிவரும் அவன் அம்மாவுக்கும் அவனுக்கும் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. கர்நாடகாவில் பிய்த்துக்கொண்டு ஓடிய படங்களில் ஒன்று ஜோகி. பலகோடிகளை வசூல் செய்தது.

அடுத்த குறிப்பிடத்தக்க கேங்ஸ்டர் படம், துனியா. இது 2007ல் வெளியானது. கன்னடத்தில் தற்போது பிரபல இயக்குநராக இருக்கும் சூரியின் முதல் படம் இது. அதுவரை ஸ்டண்ட் காட்சிகளில் எக்ஸ்ட்ராவாக நடித்துக்கொண்டிருந்த விஜய், இந்தப் படம் மூலமாக ஹீரோ ஆனார். அம்மாவின் இறப்பில் சமாதி கூட வைக்க முடியாத அளவு ஏழ்மையில் இருக்கும் ஒருவன், பிழைக்க வழி தேடும்போது ஒரு பெண்ணை எதேச்சையாகக் காப்பாற்ற, இருவரையும் தவறாக நினைக்கும் ஹாஸ்டல் வார்டன் பெண்ணை விரட்டிவிடுகிறார். வேறு வழியில்லாமல் அடியாளாக மாறுகிறான் ஹீரோ ஷிவு. அவனுடன் இருக்கும் கேங்ஸ்டர்கள் ஹீரோயின் மீது கண் வைக்க, அவர்களுடன் மோதி, தலைவனையே கொன்றுவிடுகிறான். போலீஸ் துரத்துகிறது. அடியாட்களும் துரத்துகின்றனர். இறுதியில், அனைவராலும் துரத்தப்படும் ஹீரோவுக்குத் தேவையான நிம்மதியை ஹீரோயின் எப்படி அளிக்கிறாள் என்பதே க்ளைமேக்ஸ். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. காரணம், பருத்திவீரன் போன்ற வித்தியாசமான க்ளைமேக்ஸ். இன்றுவரை ஹீரோ விஜய், துனியா விஜய் என்றும், இயக்குநர் சூரி, துனியா சூரி என்றுமேதான் அழைக்கப்படுகிறார்கள்.

இதே துனியா சூரி, ஷிவ்ராஜ்குமாரை வைத்து கட்டிபுடி (தமிழ் கட்டிப்புடி அல்ல. ஓச்ஞீஞீடிணீதஞீடி. புகையிலைத் துகள் என்று பொருள்) என்று ஒரு படம் எடுத்தார்.  இதுவும் கேங்ஸ்டர் படம். ஹீரோ ஒரு கேங்ஸ்டர். ஒரு சக்திவாய்ந்த வில்லனிடம் வேலை செய்பவன். பல சம்பவங்களுக்குப் பின்னர் திருந்தி வாழ நினைக்கிறான். போலீஸ் துறையில் இருந்தே அதற்கும் உதவி கிடைக்கிறது. ஆனால் அவனால் திருந்தி வாழ முடியாமல் பல சக்திகள் தடுக்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதே கதை. இந்தப் படம் சரியாகப் போகாமல் இருந்தாலும், பிந்நாட்களில் இந்தப் படத்துக்கு ஒரு கல்ட் அந்தஸ்து கிடைத்தது.

அதே சூரி, மறுபடியும் அதே ஷிவ்ராஜுமாரை வைத்து, 2018ல் டகரு என்ற படம் எடுத்தார். அது பம்பர் ஹிட் ஆனது. அதில் ஹீரோவாக, போலீஸ் வேடத்தில் நடித்த ஷிவ்ராஜ்குமாரை விட, வில்லனாக நடித்த தனஞ்செய் மிகவும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பெயர் டாலி. வில்லனாக இருந்தாலும் ஓவியத்தில் விருப்பம் உள்ளவன் என்பதால் பிரபல ஓவியர் டாலியின் பெயர். ஆனால் ஈவு இரக்கம் இல்லாமல் அனைவரையும் வெட்டிக் கொல்லும் கேங்ஸ்டர். இவனையும், இவனுடன் இருக்கும் இன்னொரு பிரபல கேங்ஸ்டரையும் போலீஸ்காரராக வரும் ஷிவ்ராஜ்குமார் எப்படிப் பிடிக்கிறார் என்பது நான் லீனியராக சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு இதன் கொடூரமான வன்முறைக் காட்சிகள் ஒரு காரணம். டகரு என்றால் ஆட்டுக்கிடாய்களின் மோதல் என்று பொருள். பெயருக்கேற்ப, ஹீரோவும் வில்லனும் மோதிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘டாலி‘ என்ற பெயரில் வில்லன் டாலியை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டுவருகிறது. அதில் ஒரு வில்லனாக அடியேன் நடிக்கிறேன்.

அடுத்த படம், 2012ல் வெளியான ‘தண்டுபால்யா‘. இயக்கியவர் ஸ்ரீனிவாஸ் ராஜு.  பூஜா காந்தி முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த படம். நிஜவாழ்க்கை கேங்ஸ்டர்களான தண்டுபால்யா கும்பலைப் பற்றிய படம். இன்னும் இவைபோல, இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாசின் கணபா, கே.ஜி.எஃப் இயக்குநர் ப்ரஷாந்த் நீலின் முதல் படமான உக்ரம், தர்ஷன் நடித்து சூப்பர்ஹிட்டான கரியா, எடெகாரிகே, முஃப்தி, பெட்டனகெரே, டெட்லி சோமா, தாசா என்று பல கேங்ஸ்டர் படங்கள் கன்னடத்தில் உண்டு. ஏராளமான படங்கள் இருந்தாலும் நான் இங்கே கொடுத்திருப்பவை குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக கணபாவில் இருக்கும் வித்தியாசமான ட்விஸ்ட்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

பி.கு: - கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே பேசவில்லை. காரணம் அவை அனைவருக்கும் தெரிந்த படங்கள். தெரியாத படங்கள் பற்றிப் பேசுவதே நோக்கம்.

ஜூலை, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com