ஆங்கிலத்தில் பேசியதால் அடித்த அதிகாரி!

ஆங்கிலத்தில் பேசியதால் அடித்த அதிகாரி!
Published on

பள்ளிக்குச் சென்றால்தான்  எனக்கு ஒருவேளை சாப்பாடு உறுதி; எனவே நான் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்! சாப்பாட்டுக்காக பள்ளிக்குச் சென்றேனா? படிப்புக்காக பள்ளிக்குச் சென்றேனா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை,'என்கிற கெனித்ராஜ், இன்று  டிரான்சென் டைனமிக்ஸ் (Transen Dynamics)  என்ற ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப  நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் படித்தது சென்னை மகாகவி பாரதி நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான புனித ஜோசப் மேனிலைப்பள்ளி.

வட சென்னையை சேர்ந்த இளைஞர் கெனித் ராஜை அயனாவரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

‘சிறுவயதில் படிப்பதற்கோ, வாழ்வாதாரத்திற்கோ நல்ல சூழல் இல்லை. கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே சிரமம். வீடு முழுவதுமே வறுமை.

மகாகவி பாரதி நகரில்  உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான செயின்ட். ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தான் முழு பள்ளிப் படிப்புமே. அங்கு போட்ட சத்துணவுதான் எனக்கு  உயிரளித்தது. வீட்டில் சாப்பாடு இருக்கிறதோ, இல்லையோ, பள்ளிக்கு சென்றால் ஒருவேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என்னைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். ஒன்பதாவது படிக்கும் போது  சுமார் ஆயிரத்து இருநூறு ரூபாய் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாததால் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன்.

நாங்கள் சென்னைக்கு குடிபெயர்ந்த குடும்பம். ஊரில் விவசாயம் செய்த என் தந்தைக்கு சென்னையில் என்ன வேலைகிடைத்துவிடும்? எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் மாலை பள்ளியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன், வழியில் பார்த்தால் ஓரிடத்தில் என் அப்பா மலம் அள்ளும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார். நான் பார்த்ததை அவர் பார்க்கவில்லை. எனக்கு திக்கென்று இருந்தது. ஆனால் நான் எதுவும் கேட்காமல் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவர் செய்யும் தொழிலைப் பற்றி எங்களிடம் சொன்னதே கிடையாது. பிறகு அவர் வேறு வேலைகளுக்கு மாறிவிட்டார்.

ஆரம்பத்தில் அப்பா பார்த்த வேலை, நான் வளரவளர எனக்குள் ஒரு மாதிரி உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டே இருந்தது. மற்றவர்கள் எல்லாம் நல்ல வேலைக்கு செல்லும்போது நாம் மட்டும் ஏன் இந்த வேலையை செய்ய வேண்டும்? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தேன். ஆனாலும், எதிர்காலம் குறித்து எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. அப்பா  அம்மா இருவரும் படிக்கவில்லை என்றாலும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தனர், பிள்ளைகளைப் படிக்க வைப்பதில். வருடத்திற்கு இரண்டு முறை தான் துணி எடுத்துக் கொடுப்பார்கள். அந்த துணியும் பள்ளிச்சீருடையாகத்தான் இருக்கும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது படிக்க நிறைய செலவு ஆகும் என்றார்கள். அதனால் பொறியியல் படிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது. பொறியியல் படித்தால் தொழில்நுட்ப ரீதியான அறிவை வளர்த்துக் கொண்டு, சிறு வயதில் கண்ட அவலத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நினைத்தேன்.

வீட்டில் எதாவது அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொன்னார்கள். எனக்கு அதில் உடன்பாடே இல்லை. வீட்டிற்குத் தெரியாமல் நானே வங்கியில் லோனுக்கு விண்ணப்பித்து, எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தேன். நான்கு வருட படிப்பை முடித்தாலும் துறை சார்ந்த அறிவு பெரிதாக இல்லை. அடுத்த ஒன்றரை வருடம் நூலகங்களுக்கு சென்று துறை சார்ந்த அறிவை படித்து வளர்த்துக் கொண்டேன். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் நேர்காணலுக்கு சென்ற போது, அங்கு எழுபது பேர் வந்திருந்தனர். அதில் நான் ஒருவன் மட்டுமே தேர்வாகி வேலைக்குச் சென்றேன்.

வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில், நான் டெவலப் செய்த ப்ராஜெக்ட் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற  ‘இந்தியன் ரோபோட்டிக் ஒலிம்பியா‘வில் இரண்டாம் இடம் பிடித்தது. அதே ப்ராஜெக்ட் 2015ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலக ரோபோட்டிக்ஸ் ஒலியம்பியாவில் ஆறாம் இடத்தை பிடித்தது.  நான் தனிப்பட்ட முறையில் முதன் முறையாக உருவாக்கிய  ரோபோ ‘கேஸ் அனலைஸிங்  சென்சார்'. மலக்குழிக்குள் விஷவாயு இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதற்கான ரோபோ இது. சமூகத்தின் மீதான கோபமும், தனிப்பட்ட பாதிப்புமே இந்த ரோபோவை உருவாக்கக் காரணம். மலக்குழி மரணங்களைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கில் உருவானது.

தினந்தோறும் பெண்கள் கடத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுவதையும் செய்தித்தாளில் படித்துவிட்டு யாரையோ குற்றம் சொல்லிவிட்டு கடந்துவிடுவோம். இதைத் தடுக்க வேண்டும் என நினைத்து இரண்டாவதாகக்  உருவாக்கியது Offline GPS Tracker. இணைய வசதி இல்லாதபோதும்  சாதாரண மொபைல் போன் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் மட்டும் போதும், கடத்தப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

மூன்றாவதாக ‘கிளாரா' என்ற ரோபோவை உருவாக்கினேன். இந்த ரோபோ அட்வான்ஸ்  நீட் கோச்சிங் அளிப்பதற்கு. கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கானது இது. என் பால்யத்தில் எதிர்கொண்ட எதையும் இப்போதுள்ள மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யாத எதன் மீதும் எனக்கு உடன்பாடே இல்லை. எல்லா தொழில்நுட்பமும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இன்னமும் கூட, நம்முடன் இருக்கின்ற மனிதர்களை வாழ வைக்காமல், நிலாவில் கால் வைப்பதை, செவ்வாய்க் கிரகத்தில் மண் எடுப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். 2017ஆம் ஆண்டு எனக்கொரு சம்பவம் நடந்தது. மிகப்பெரிய மக்கள் போராட்டத்தால் சென்னையே முடங்கியிருந்த சமயம். போக்குவரத்தே இல்லை. அதனால், வடபழனியிலிருந்து வியாசர் பாடிக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. போகிற வழியில் காவல் துறையினர் என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே வண்டியில் ஏற்றிவிட்டனர், காவல் நிலையத்திற்குக் கொண்டு  சென்றும் கடுமையாக தாக்கினர். பிறகு உயர் பொறுப்பில் உள்ள காவல் அதிகாரி ஒருவரிடம் அழைத்துச்

சென்றனர். நாம் படித்தவன் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தால் விட்டுவிடுவார்கள் என்று நினைத்து ஆங்கிலத்தில் நடந்ததையெல்லாம் சொன்னேன். ஆங்கிலத்தில் பேசியபிறகுதான் அடி கூடுதலாக விழுந்தது. என்னுடைய விவரங்களைக் கேட்டார்கள். அனைத்தையும் சொன்னேன். கடைசியாகத்தான் தெரிந்தது, நாம் படித்திருப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று. மற்றவர்களுக்கு கல்வி என்பது உயர்வதற்கான கருவி என்றால்; நமக்கு அது ஓர் ஆயுதம்! அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்,' என்று சொல்லும் இவர், ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருவதுடன், பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களின் கல்வியின் அவசியத்தையும், தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் உணர்த்தும் உத்வேக உரை அளிக்கவும் (motivational speech) செல்கிறார்.

நவம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com