தமிழின் மிகப்பெரிய வார இதழொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஆங்காங்கே இடறிய ஆங்கிலச்சொற்கள் சற்றே மிகுதியாகத்தோன்றின. திடீரென்று பிறந்த ஆர்வத்தில், அவற்றை எண்ணத்தொடங்கினேன்.
ஒரு கட்டுரையில் சுமார் இருநூற்றைம்பது சொற்கள், அதில் அறுபது ஆங்கிலச்சொற்கள் இருந்தன, கிட்டத் தட்ட 25%. கடந்த சில ஆண்டுகளில்தான் இந்தச் சதவிகிதம் படிப்படியாக அதிகரித்துவந்திருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. பேச்சிலிருந்து மொழிக்குக் கடத்தப்பட்ட நோய் இது என்று ஊகிக்கிறேன்.
இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால், முதலாவதாக, ஆங்கிலத்தில் பேசுகிறவர்களுக்குத் தனி மதிப்பிருப்பதாகப் பெரும்பாலான தமிழர்கள் (ஏன், இந்தியர்களே) எண்ணுகிறார்கள். முன்பு நம்மை ஆட்சிசெய்தவர்களுடைய மொழி என்பதாலோ என்னவோ, அதை ஓர் உயர்வு மனப்பான்மையுடன்தான் பார்க்கிறோம்.
இன்னொருபக்கம், ஆங்கிலம் உலகப்பொதுமொழியாக உள்ளது. அதைக் கற்றுக்கொண்டால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது உண்மை. ஆகவே, தமிழைக்காட்டிலும் ஆங்கிலம் உயர்வானது என்ற எண்ணம் வந்துவிடுகிறது: வீட்டில் சம்பாதிக்கிற சகோதரருக்கு மரியாதை அதிகமாக இருக்குமல்லவா?
கடந்த சில பத்தாண்டுகளில் இப்படிப் பல ஆங்கிலச்சொற்கள் மிக இயல்பாக நம் பேச்சில் கலந்துவிட்டன. ‘ஏர்ளி மார்னிங் எழுந்து காபி குடிச்சுட்டு வாக் போய்ட்டு வந்து ரேடியோ கேட்டபடி கார்டன்ல எல்லா ப்ளான்ட்ஸுக்கும் வாட்டர் செஞ்சா ஃப்ரெஷ்ஷா இருக்கு’ என்று மிகச்சாதாரணமாகச் சொல்கிறோம்.
இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசமே கிடையாது, இந்தியாவில் படிப்பறிவே இல்லாத ஒருவருக்குக்கூட, சுமார் நூறு ஆங்கிலச்சொற்கள் தெரிந்திருக்கும். எல்லாம் சுற்றியிருக்கிறவர்களிடம் கற்றுக்கொண்டதுதான்.
இந்தச் சொற்கள் அனைத்துக்கும் இணையான தமிழ்ச்
சொற்கள் இருக்கும்தான். அதைப் பலர் யோசிப்பதில்லை. காரணம், தாங்கள் தமிழல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. தங்களையும் அறியாமல் அச்சொற்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்திவிடுகிறார்கள், இது எழுத்திலும் பிரதிபலிக்கிறது. யாராவது வேலைமெனக்கெட்டு அச்சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதினால், அல்லது பேசினால், ‘என்னாச்சு உங்களுக்கு?’ என்பதுபோல் பார்க்கிறார்கள்.
‘உணவகம் எங்கே?’ என்று ஒருவர் கேட்கிறார், கொஞ்சம் யோசித்தால் எல்லாத் தமிழர்களுக்கும் இது புரியும். ஆனால், அவர்களுடைய காதுகள் அதிகம் கேட்டுப்பழகியது ‘ஹோட்டல்’தானே? ஆகவே, ‘உணவகம்’ என்பது புதிதாக இருக்கிறது. ‘அது எத்தனை பேருக்குப் புரியும்?’ என்று யோசிக்கிறார்கள், ‘அதிகப்பேருக்குப் புரியாது’ என்று இவர்களே தீர்மானித்துவிடுகிறார்கள்.
இன்றைக்குப் பெரும்பாலான பத்திரிகை எழுத்துகளில் இந்தப் பிரச்னையைப் பார்க்கமுடிகிறது. தூய தமிழில் எழுதினால் புரியாது, வாசிக்கச் சுவையாக இருக்காது என்று ஒரு மனத்தடையை உருவாக்கிக்கொண்டு, அதனால் ஆங்கிலத்தைக் கலக்கிறார்கள்.
வடமொழிக்கலப்புக்கு எதிராகத் தொடங்கப்பட்டது தனித்தமிழ் இயக்கம். இத்துணை ஆண்டுகளான பிறகும், அதற்கான தேவை இன்னும் இருக்கிறது.
சொல்லப்போனால், முன்பைவிட அதிகரித்திருக்கிறது.
தூய தமிழில் எழுதுவது எளிதல்ல. என்னுடைய இந்தக் கட்டுரையிலேயே பல வடமொழிச்சொற்கள் இருக்கின்றன, அவற்றை அடையாளம் காண்பதற்கு நான் இன்னும் கூடுதலாக உழைக்கவேண்டும்.
ஆனால் ஆங்கிலத்தை என்னால் எளிதில் அடையாளம் கண்டு தவிர்க்கமுடிகிறது. காரணம், வடமொழிச்சொற்கள் தமிழில் வேரூன்றிய அளவுக்கு ஆங்கிலம் இன்னும் கலக்கவில்லை. மேலாக எடுத்து வீசக் கூடிய அளவில்தான் உள்ளது. அதை இப்போது செய்யாவிட்டால், பிரச்னை பெரிதாகிவிடும், அதன்பிறகு எடுத்து வீசமுடியாது. அதற்காக, வடமொழிச்சொற்களைத் தவிர்க்கவேண்டியதில்லை என்று நான் சொல்லவரவில்லை. இதுவும் அதற்கு இணையான தேவை என்கிறேன்.
தொடக்கத்தில் சிரமமாகதான் இருக்கும். யோசித்து யோசித்து எழுதுவதற்குள் எரிச்சல் வரும், சொற்கள் சட்டென்று கிடைக்காது, ஆனால் பழகிவிட்டால் இதுவே இயல்பாகிவிடும், மிகவும் மகிழ்ச்சியாக உணர்வோம்.
முதலில் வினைச்சொற்களைத் தமிழில்மட்டுமே பயன்படுத்துவது என்று நாம் உறுதிகொள்ளவேண்டும். ‘வாக் பண்ணினேன்’, ‘திங்க் பண்ணினேன்’, ‘ஓபன் பண்ணினேன்’ என்றெல்லாம் ‘பண்ணி’த்தமிழை வளர்க்கவேண்டாம், இந்தச் செயற்கைப் பயன்பாடுகளோடு ஒப்பிடும்போது, நடந்தேன், சிந்தித்தேன், திறந்தேன் என்பவை எத்துணை அழகு என்று சொல்லிப்பாருங்கள்.
அதன்பிறகு, பெயர்ச்சொற்களுக்கு வரலாம். ‘டீ’ என்பது இயல்பாகவும், ‘தேநீர்’ என்பது ‘யாருக்கும் புரியாத சொல்’லாகவும் இருப்பது ஏன்? ‘தேத்தண்ணி’ என்று கிராமத்தில் சர்வசாதாரணமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்த சொல்லை ஏன் இழந்தோம் என்று யோசிக்கலாம்.
ஓர் ஆங்கிலச்சொல்லை, அது எத்துணை கடினமானதாக இருந்தாலும் நினைவில்கொள்கிறோம், அதனைச் சரியானநேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம், ஆனால், தமிழ்ச்சொல்லை ‘யாருக்கும் புரியாது’ என்று ஒதுக்குகிறோம். இந்த எண்ணம் மாறினால்தான் தமிழில் மட்டுமே பேசவேண்டும், எழுதவேண்டும் என்ற முனைப்பு வரும். ஆங்கிலம் படிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தாராளமாகப் படிக்கலாம், ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொள்ளலாம், ஆங்கிலத்திலேயே நிறையப் பேசலாம், எழுதலாம், அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேதனையான விஷயம், இந்தியாவில் பலர், குறிப்பாக இளைஞர்கள் இதை ஒழுங்காகச் செய்வதில்லை. பெருமை என்று நினைத்துக் கொண்டு இவர்கள் பேசும் ஆங்கிலம் பிழை மலிந்ததாக இருக்கிறது, அதனால்தான் சொற்களை ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு, இலக்கணத்துக்குத் தமிழை நாடுகிறார்கள்.
ஆக, ஆங்கிலம் கலந்து பேசும்/எழுதும் தமிழ் முற்றிலும் போலியானது. அதனால் எந்தப் பயனும் இல்லை. ஒன்று தமிழிலேயே எழுதவேண்டும், அல்லது, ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும், இரண்டையும் கலக்கும்போது, இரு மொழிகளுமே அவமானத்துக்குள்ளாகின்றன.
அதிகம் வேண்டாம், நம் குழந்தைகளிடம் மட்டுமாவது தமிழில் பேசலாம். அவர்கள் இயல்பாக ஆங்கிலச்சொற்களைப் பயன்படுத்தும்போது, உரிய தமிழ்ச்சொற்களைச் சொல்லித்தந்து திருத்தலாம். எந்தவொரு மொழிக்கும், சொற்களைத் தொலைப்பதுதான் பெரிய இழப்பு. அவற்றை மீட்டுக் காக்கிறவர்களுக்குத் தமிழன்னையின் முழு அன்புண்டு.
செப்டெம்பர், 2016.