ஆகச் சிறந்த கல்வி!

ஆகச் சிறந்த கல்வி!
Published on

என் மகன், மகளுடன் நான் சொந்த ஊரில் படித்த அரசுப்பள்ளிக்குச் சென்றிருந்தேன்.  இருவருக்கும் பள்ளியின் வசதிகளைக் கண்டு பெரும் வியப்பு. இந்தப் பள்ளியிலா படித்தீர்கள்? இந்த வகுப்பறையிலா அமர்ந்தீர்கள்? என்று கேள்விகள். என்றைக்குமே வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் பெரும் சுகம்தான். அத்துடன் நம்மை ஏற்றிவிட்ட ஏணிப்படிகளுக்கு மறுபயணம் செய்வது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.

நான் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லியில் இருக்கும் அரசினர் மேனிலைப் பள்ளியில் படிப்பை முடித்தவன். ஐந்தாம் வகுப்புவரை அரசு தொடக்கப்பள்ளி ஒதியத்தூர்,  ஆறாம் வகுப்பு மட்டும் அரசு மேனிலைப்பள்ளி, சாத்தப்பாடி, அரசு மேனிலைப்பள்ளி, கெங்கவல்லி என மூன்று பள்ளிகளில் படித்துள்ளேன். என் தாத்தா வீட்டில் இருந்து ஆறாம் வகுப்பு படிக்குபோது மூன்று கிமீ நடந்து செல்லவேண்டி இருந்தது. பேருந்து இல்லை. எனவே அதன் பின்னர் பிற வகுப்புகளுக்கு எங்கள் சொந்த ஊரிலேயே சேர்த்துவிட்டனர்.

ஏழாம் வகுப்பில் கணக்குப் பாடம் எடுத்த அப்துல்லா சார், பழனிவேல் என்றொரு தமிழாசிரியர் ஆகியோர் நினைவில் இருக்கிறார்கள். பழனிவேல் சார் மிகவும் கண்டிப்புக்குப் பேர் போனவர். ப்ளஸ் டூவில் பாட்டனி எடுத்த காதருன்னிஸா டீச்சர்,  பிசிக்ஸ் எடுத்த அசோக்குமார் சார், வேதியியல் எடுத்த சண்முகம் சார், கணிதம் எடுத்த இளங்கோ சார், தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் சார் என எல்லோருமே ஊக்கப் படுத்துவார்கள்... நான் மாவட்ட ஆட்சித்தலைவராக பதவியிலிருந்தபோதும் இந்த ஆசிரியர்களை சந்தித்துப் பேசி இருக்கிறேன். பள்ளிக்கும் சென்றுள்ளேன். பள்ளி

சார்பாக உதவிகள் கேட்கப்பட்டபோதெல்லாம் அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதை கடமையாக நினைத்து செய்துவந்திருப்பதில் பெருமை அடைகிறேன். பள்ளியில் படிக்கையில் நடுத்தரமாகத் தான் மதிப்பெண்கள் எடுப்பது வழக்கம். இருப்பினும் அங்கு கிடைத்த அடித்தளம்தான் எனக்கு கல்லூரிப் படிப்பிலும் குடிமைத் தேர்வு பயிற்சியிலும் உதவி செய்தது எனக் கருதுகிறேன். இன்று பல்வேறு பாடத்திட்டங்கள் இருந்தாலும் அன்று இருந்த அரசுப்பள்ளிப் பாடத்திட்டம்

சிறந்ததாகவே நினைக்கிறேன். படிப்பு மட்டுமல்ல; வாழ்க்கைக் கல்வியையும் மனதைரியத்தையும் அங்கு பெற்றேன். படிப்பு என்றால் வேலைக்குப் போவதுதான் என்பதல்ல. அது இதன் ஒரு பகுதிதான் என்று சொல்லித் தந்ததைத்தான் நான் பெற்ற ஆகச் சிறந்த கல்வியாகக் கருதுகிறேன்.

மரு.எஸ்.பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.

நவம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com