அஹுஜாவும் நசிகேதாவும்

Published on

ப ஞ்சாப் மாநிலத்தில் உள்ள பந்திண்டா விமான தளத்தில் பணிபுரிந்தவர், அஜய் அஹுஜா.  விமானப்படையில் விமானி. அவருக்கு எட்டு வயதில் அங்கூர் என்ற மகன், அல்கா என்ற மனைவி.

1999&ல் கார்கில் போர் சூழ்ந்த நேரத்தில் அஜய் ஸ்ரீநகரில் போர்ப்பணிக்காக சென்றிருந்தார். ஏதோ சாதாரணமாக  உள்ளே வந்திருக்கிறார்கள் என்று நினைத்தால், பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையின் முக்கிய மலை உச்சிகளையெல்லாம் ஆக்கிரமித்து ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருந்தனர். விமானப்படை நடவடிக்கை தொடங்கிய முதல் நாள்,  இரு பிரிவுகளாக மிக் 21 விமானங்கள் எல்லையை நோக்கிப் பறந்தன. முதல் பிரிவில் நான்கு விமானங்கள் இடம்பெற்றன. இதன் பின்னால் இரு விமானங்கள் கொண்ட பிரிவு பறந்து சென்றது. இதில்  ஒரு விமானத்தை அஜய் அஹுஜா ஓட்டிச் சென்றார். முதல் நான்கு விமானங்களில் ஒன்றை நசிகேதா ஓட்டிச்சென்றார். எல்லையைத் தாண்டி பறந்து தாக்குதலில் ஈடுபடும் முன்பாக நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம் எந்திரக்கோளாறுக்குள்ளாகியது. வேறு வழியின்றி நசிகேதா விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியே குதித்துவிட்டார். அவரது பாராசூட் தரையிறங்குவதை பின்னால் பறந்து வந்த இருவிமானங்களும் பார்த்தன.

அஜய் இந்த விமானப்படை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பாக பந்திண்டாவில் இருந்து மிக் 21 ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த சக விமானி ஒருவரிடம் தன் மனைவியிடம் ஒரு பார்சல் வாங்கிவருமாறு தொலைபேசியில் சொன்னார். அவரும் அந்த கவரை வாங்கிவந்து அளித்தார். அதில் 5,600 ரூபாய் இருந்தது. மனைவியையும் மகனையும் ஸ்ரீநகருக்கு அழைக்க விமான டிக்கெட் வாங்கவேண்டும் என்று சொல்லி அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டார் அவர்.

மிக்21-ல் இதுபோன்ற தாக்குதல்களுக்குப் பறக்கும்போது ஜி சூட் என்ற ஆடையை வழக்கமான ஆடைக்குமேல் அணிவார்கள். அதில் ஒரு துப்பாக்கி, உள்ளூர் வரைபடம், கொஞ்சம் பணம் வைத்துக்கொள்ளலாம். அஜய் அஹுஜா, மனைவி கொடுத்த கவரை ஆடைக்குள் வைத்துக்கொண்டு விமானத்தில் ஏறியிருந்தார்.

எதிர்பாராதவிதமாக நசிகேதா, விமானத்தில் இருந்து குதிக்க நேர்ந்ததைக் கண்டதும்  அவரும் இன்னொரு விமானியும் அங்கே ஒரு மணி நேரம் மிதந்து நசிகேதாவைத் தேடினர். இடையில் விமானப்படை ஹெலிகாப்டரை அனுப்புமாறு உடனே செய்தி அனுப்பி இருந்தார் அஹுஜா. அது வந்து நசிகேதாவை மீட்டுச் செல்லும்வரை இங்கே பாதுகாப்பாகப் பறப்பது என்று திட்டமிட்டார் அஹுஜா. சக விமானியை எதிரிகள் கையில் சிக்கும் ஆபத்தில் இருந்து காப்பது முக்கியம் என்று விமானப்படை விமானிகள் கருதுவது வழக்கம். உடனிருந்த இன்னொரு விமானத்தில் அச்சமயம் எரிபொருள் தீர்ந்துவிட, அது ஸ்ரீநகர் நோக்கித் திரும்பியது. அஹுஜா, பொறுமையாகப் பறந்து நசிகேதாவைத் தேடினார். கீழே பாகிஸ்தான் ராணுவம் அவரைக் குறிபார்த்தது. அந்த விமானம் மெல்லப் பறந்துகொண்டிருந்தது, தோளில் இருந்து ஏவக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணையை ஏவப் போதுமான அவகாசத்தையும் துல்லியத்தையும் அளித்தது. எதிரியின் ஏவுகணை பறந்துசென்று அவரது விமானத்தின் எஞ்சினைத் தாக்கியது. அஹுஜா, பாராசூட் மூலம் குதித்துவிட்டார். அதன் பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

வனங்களிலும் பனிச்சிகரங்களிலும் எந்த உபகரணமும் இன்றி தனித்திருக்கும் போர்க்களப்பயிற்சிகளில் அஹுஜா முதலிடத்தைப் பிடித்தவர் என்பதால் அவர் எப்படியும் தப்பி வந்துவிடுவார் என்றுதான் நினைத்தார்கள். மூன்று நாட்கள் கழித்து ஓர் உடல் வந்து சேர்ந்தது. அதை அடையாளம் காட்ட ஒரு விமானி சென்றார். அவர்தான் அஹுஜாவுக்காக மனைவியிடம் இருந்து பணம் வாங்கிவந்து கொடுத்திருந்தவர். அது எப்படியும் அஹுஜாவின் உடலாக இருக்காது என்று நம்பிக்கொண்டே சென்றவரின் நம்பிக்கை சிதைந்தது. அஹுஜா உடலில், ஜி சூட் அகற்றப்பட்டிருந்தது. அவரது விமானப்படை அடையாளச் சின்னங்கள் இல்லை. அவரது சட்டைப்பையில் ஒரு கவர் பத்திரமாக இருந்தது. பிணவறையில் மருத்துவர் அந்த கவரை எடுத்தபோது, அதில் 5,600 ரூபாய் இருக்கும் என்று கண்ணீருடன் இந்த விமானி கூறினார். மருத்துவர்,'' இவருக்கு சவப் பெட்டி வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்,'' என்று கூறினார். விமானப்படை சார்பாக வந்த கோரிக்கை அல்ல அது என்பதால் ,அந்த விமானி கையிலிருந்துதான் கொடுக்கவேண்டும். அவர் பணமேதும் எடுத்துச் சென்றிருக்கவில்லை. அதற்கான 1,300 ரூபாயை அஹுஜாவின் கவரில் இருந்தே எடுத்துக் கொடுத்ததாக கண்ணீருடன் எழுதுகிறார், அந்த விமானியான பால் ரெட்டி.

மருத்துவர்,'' இவருக்கு சவப் பெட்டி வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்,'' என்று கூறினார். விமானப்படை சார்பாக வந்த கோரிக்கை அல்ல அது என்பதால் ,அந்த விமானி கையிலிருந்துதான் கொடுக்கவேண்டும். அவர் பணமேதும் எடுத்துச் சென்றிருக்கவில்லை. அதற்கான 1,300 ரூபாயை அஹுஜாவின் கவரில் இருந்தே எடுத்துக் கொடுத்ததாக கண்ணீருடன் எழுதுகிறார், அந்த விமானியான பால் ரெட்டி. 

அஹுஜாவின் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. நெஞ்சிலும் தலையிலும் மிக அருகில் இருந்து சுடப்பட்ட காயங்கள் இருந்தன.

அஹுஜாவின் உடல் பந்திண்டாவுக்குக் கொண்டுவரப்பட்டு சிதையேற்றப் பட்டபோது, அவரது மகன் அங்கூர் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.

நசிகேதா, சில நாட்கள் கழித்து பாகிஸ்தான் ராணுவத்தால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு இருந்த சாதகமான சூழல் அஹுஜாவுக்கு அமையாமல் போய்விட்டது.

அபிநந்தன் சமீபத்தில் விடுவிக்கப்பட்டபோது இந்த இரு விமானிகளும் திரும்பத் திரும்ப நினைவுகூரப்பட்டார்கள். இதுபோன்ற தியாகங்களின், இழப்புகளின் மத்தியில்தான் நாம் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஏப்ரல், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com